இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0157திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று

(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:157)

பொழிப்பு (மு வரதராசன்): தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து அறம் அல்லாதவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

மணக்குடவர் உரை: தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும் அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று.

பரிமேலழகர் உரை: திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று.
[உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி. 58) என்று பரிதல்.]

இரா சாரங்கபாணி உரை: செய்யத்தகாத தீங்குகளைத் தனக்குப் பிறர் செய்தாலும் அத்தீங்குகளை மனத்துட்கொண்டு நொந்து அறமல்லாத செயல்களை அவருக்குச் செய்யாதிருத்தல் நல்லது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று.

பதவுரை: திறன்அல்ல--செய்யத்தகாதவைகளை, முறையல்லாதவை; தன்பிறர்-தன்கண் மற்றவர், தமக்குப் பிறர்; செய்யினும்-செய்தாலும்; நோ-துன்பம்; நொந்து-வருந்தி; அறன்அல்ல--அறமல்லாதவற்றை, நற்செயல் அல்லாதவைகளை; செய்யாமை-செய்யாதிருத்தல்; நன்று-நல்லது, நன்மையுடையது.


திறன்அல்ல தன்பிறர் செய்யினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும்;
பரிப்பெருமாள்: தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும்;
பரிதி: தமக்குப் புகழல்லாத காரியத்தைத் தனக்கு உண்டானது செய்தாலும்;
காலிங்கர்: பொறையின் திறம் இதுவாகலால் செயப்படும் திறப்பாடல்லனவற்றைத் தன்னைக் குறித்துப் பிறர் செய்தாராகிலும்; [பொறையின் திறம் - பொறுத்தலின் தன்மை]
பரிமேலழகர்: செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை: சிறப்பு உம்மை.

'தகுதியல்லாதவற்றை/புகழல்லாத காரியத்தை/திறப்பாடல்லனவற்றை/செய்யத்தகாத கொடியவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் முறையல்லவற்றைச் செய்தாலும்', 'மன்னிக்க முடியாத குற்றத்தைத் தனக்குப் பிறன் செய்து உடனே தண்டித்துவிட்டாலும் குற்றமில்லை', 'செய்யத்தகாதவற்றைத் தனக்குப் பிறர் செய்தார் ஆயினும்', 'செய்யத்தகாத கொடிய செயல்களைத் தனக்குப் பிறர் செய்தாலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முறையல்லவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும் என்பது இப்பகுதியின் பொருள்.

நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று.
பரிப்பெருமாள்:['நோய் நொந்து'-பாடம்] அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று.
பரிதி: செய்தவனைக் கோபித்துத் தன்மம் அல்லாத காரியம் செய்வான் அல்லன் என்றவாறு.
காலிங்கர்: தான் அதற்கு எதிராக நெஞ்சம் நொந்து அறம் அல்லனவற்றைச் செய்யாமை சால நன்று என்றவாறு. [நொந்து-வருந்தி]
பரிமேலழகர்: அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: துன்பத்திற்கு நோதலாவது "உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி. 58) என்று பரிதல். [பரிதல் -இரங்குதல்]

'தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று' என்று அனைவரும் உரை கூறினர். நோ நொந்து என்பதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'துன்பத்தைத் தானும் செய்தால் பிறர்க்கு உண்டாகும் நோவுக்கு நொந்து' என்றும் 'செய்தவனைக் கோபித்து' என்று பரிதியும் 'அதற்கு எதிராக நெஞ்சம் நொந்து' என்று காலிங்கரும் 'அதனால் வரும் துன்பத்திற்கு நொந்து' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வருந்தி நீ அறமல்லவற்றைச் செய்யாதே', 'ஆனால் உடனே திருப்பித் தண்டிக்க தைரியமில்லாமல் சும்மா இருந்து விட்டுஅதை மனத்தில் வைத்து நொந்துகொண்டே இருந்து அவன் ஏமாந்த சமயத்தில் அதர்மமான முறையில் பழி வாங்காமல் இருப்பது நல்லது', 'அவருக்கு அதனால் வருந்துன்பத்திற்கு இரங்கித் தான் அறமல்லாத செயல்களை அவர்பால் செய்யாதிருத்தல் சிறந்தது', 'அத்தீமையைச் செய்ததனால் அவர்க்கு வரும் துன்பத்திற்கு வருந்தி, அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் நன்மை பயப்பதாகும் ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

துன்பத்தை நினைத்து நினைத்து வருந்தி அறம் அல்லனவற்றைச் செய்யாமை நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முறையல்லவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும் துன்பத்தை நினைத்து நினைத்து வருந்தி அறம் அல்லனவற்றைச் செய்யாமை நல்லது என்பது பாடலின் பொருள்.
'நோநொந்து' குறிப்பது என்ன?

பழி தீர்த்தே ஆகவேண்டுமா? அதற்கு அறநெறி தவறாத வழிகளும் உண்டு.

செய்யத் தகாத கொடுமைகளைத் தனக்கு பிறர் செய்தாலும் அத்துன்பங்களை நினைந்து வருந்தி, சினம்கொண்டு அறமற்ற செயல்களை நாமும் செய்யாமல் இருத்தல் நல்லது.
இக்குறளிலுள்ள 'திறனல்ல செய்தல்' என்பது 'தீமையைச் செய்யக்கூடாத வழியிலும் செய்தல்' என்ற கொடுமையின் அளவு மிகுதியை உணர்த்திற்று என்பர். வேறு சிலர் இத்தொடர்க்குத் 'திறனல்லாதவனாக - உடற் குறை செய்து அதாவது கை, கால், கண்களைக் கெடுத்து - தன்னைச் செய்யினும்' எனவும் 'மன்னிக்கும் திறனில்லாததைத் தன்னிடம் பிறர் செய்துவிட்டாலும்' எனவும் பொருள் கூறினர்.
இத்தொடர்க்குச் செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும் என்பது பொருள்.

எவ்வகையான தீமையையும் தனக்குப் பிறர் செய்யினும், மனம் வருத்தத்தால் தூண்டப்பட்டு அறன் அல்லாததைச் செய்யாமல் இருத்தல் நன்று என்பது இக்குறள் தரும் செய்தி. எதிர்ச் செயல்பாடு, எந்த வகையிலும், அறம் மீறியதாக இருக்கக் கூடாது என்பது வள்ளுவரின் உளப்பாடு.
செல்வமும் செல்வாக்கும் கொண்டவன் எளியவன் ஒருவனுக்குத் அவன் உள்ளம் நோகும் அளவு ஒருவன் தீங்கு செய்துவிட்டான். உள்ளம் நைந்து வருந்தும் எளியன் வலியவனுக்கு நேருக்குநேர் வஞ்சம் தீர்க்க முடியாத நிலை. தீங்கை மன்னித்துவிட மனமில்லாமலும் ஒறுப்பதற்கு வலியில்லாமலும் கையறு நிலையில் உள்ளான். அவன் என்ன செய்யவேண்டும்? தீமை செய்த இடத்து அதற்கு ஏதாவது பதில் தீங்கு செய்தே ஆக வேண்டும் என்ற உள்ளக் குமுறலில் தீங்கிழைக்கப்பட்டவன் அறமல்லாத பிற செயல்களை வஞ்சம் தீர்ப்பதற்காகச் செய்யாமல் இருப்பது நல்லது என்கிறது இப்பாடல். தீமை செய்தவர்கண்ணோ, அல்லது வேறு யாரிடமோ, அல்லது வேறு எவற்றின் மீதோ அறமல்லாத செயல் புரிந்து தனது துன்பத்தை வெளிப்படுத்த வேண்டாம். ஒருவர் தமக்கு இழைத்த தீங்கிற்கு, அவரையோ அவரது சுற்றத்தையோ துன்பத்துக்குள்ளாவதும், ஊருக்குக் கெடுதல் செய்வதும், பொய்யுரை பரப்புவதும், மனிதர்களுக்குள் பிளவையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதும் போன்றவை அறனல்லாதவற்றைக் குறிக்கும். அறமற்றவை செய்வது அறிவுப் பிழையாய் ஆகி பெருந்தீமையாய் முடிந்துவிடும். அறனல்ல செய்யாது பொறுமை காக்க என்பது வலியுறுத்தப்படுகிறது.

வ உ சிதம்பரம் பிள்ளை 'அறனல்ல தற்பிறர் செய்யினும் நொந்து திறனல்ல செய்யாமை நன்று' எனக் குறளமைப்பை மாற்றி 'பிறர் செய்த தீங்குகளைப் பொறுத்தல் திறனுடைய செயலாம்' என விளக்கினார்.

'நோநொந்து' குறிப்பது என்ன?

'நோநொந்து' என்றதற்கு அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து, செய்தவனைக் கோபித்து, தான் அதற்கு எதிராக நெஞ்சம் நொந்து, அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, அவர் அடையும் அந்நோவுக்குத் தாம் நொந்து, வருந்தி, அத்தீங்குகளை மனத்துட்கொண்டு நொந்து, அந்த வேதனையை மனதில் வைத்துக் கொண்டிருந்து, அதற்காக மிக வருந்தி, அவருக்கு அதனால் வருந்துன்பத்திற்கு இரங்கி, அத்தீமையைச் செய்ததனால் அவர்க்கு வரும் துன்பத்திற்கு வருந்தி, அதனால் அவருக்குத் தீங்கு நேருமே என்று வருந்தி, செய்தவனது அறியாமைக்கு நொந்தும் தனக்குற்ற தீமைக்கு வருந்தாதும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நோ-நோய்-துன்பம். 'நோநொந்து' என்ற தொடர்க்கு நோவுக்கு நொந்து என்பது பொருள். அதாவது துன்பத்திற்கு வருந்தி எனப் பொருள்படும். யார் உறும் துன்பம் பேசப்படுகிறது? பெரும்பான்மையர் 'அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து' என்பதற்குத் 'தீமை செய்தவனுக்கு அதற்கான துன்பம் உண்டாகுமே அது' என்று விளக்கினர். பரிமேலழகர் தீங்கிழைத்தவனுக்கு உண்டாகும் மறுமைத் துன்பத்தைக் குறிக்கிறார். இக்கருத்துக்கு நாலடியார் பாடல் ஒன்று துணை செய்யும் என்றார் பரிமேலழகர். அப்பாடல்:
தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி, 'மற்று
எம்மை இகழ்ந்த வினைப் பயத்தான், உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்!என்று
பரிவதூஉம், சான்றோர் கடன்.
(நாலடியார் 58: பொருள்: காரணமின்றித் தம்மைப் பிறர் இகழ்ந்தமையைத் தாம் பொறுத்துக் கொள்வதல்லாமல் எம் போல்வாரை இங்ஙனம் இகழ்ந்த தீவினையின் பயனால், மறுமையில், ஒரு கால் அழலிடமான நரகத்தில் அவர் வீழ்வரோ என்று இரங்குவதும் தவம் நிறைந்தவரது கடமையாகும்). மற்றவர்கள் மறுமைத் துன்பம் எனச் சொல்லாமல் செய்த தீங்கிற்காக வேறுவகையில் துன்பம் எய்துவானே என்ற பொருளில் உரை செய்தனர். இவர்கள் அனைவரும் தீங்கு செய்தவர்க்கு ஏதோ ஒருவகையில் துன்பம் நேருமே என்று வருந்தி அறனல்லாதவற்றைச் செய்யாதிருத்தலே நல்லது என்றனர். இவை அனைத்தும் இயல்பாக இல்லை,

இக்குறள் ஒருவன் தனக்குச் செய்யப்பட்ட தீங்கிற்கு வருந்தி, அறமல்லாத வழிகளில், தீமை செய்தவனுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்பதைச் சொல்ல வந்தது. அங்ஙனம் செய்யாதிருப்பதும் பொறுமை காத்தலின் பாற்படும் என்பதால் பொறையுடைமையில் கூறப்பட்டது.

'நோநொந்து' என்பதற்கு துன்பத்தை நொந்துகொண்டு அதாவது துன்பத்தை மனத்திற் கொண்டு வருந்தி என்பது பொருள்.

முறையல்லவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும் துன்பத்தை நினைத்து நினைத்து வருந்தி அறம் அல்லனவற்றைச் செய்யாமை நல்லது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அறமற்ற முறையில் வஞ்சம் தீர்க்காமல் பொறையுடைமை காக்க.

பொழிப்பு

பிறர் தனக்கு முறையல்லவற்றைச் செய்தாலும் அதற்காக மனம் நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.