இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0151



அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:151)

பொழிப்பு (மு வரதராசன்): தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம்போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

மணக்குடவர் உரை: தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம்.
இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.

பரிமேலழகர் உரை: அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம்.
(இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்)

வ சுப மாணிக்கம் உரை: குழிபறிப்பவரையும் நிலம் சுமப்பது போல நம்மை இகழ்வாரையும் பொறுப்பதே சிறப்பு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

பதவுரை: அகழ்வாரை-தோண்டுவாரை; தாங்கும்-சுமக்கும்; நிலம்-நிலம்; போல-ஒக்க; தம்மை-தம்மை; இகழ்வார்-இகழ்பவர்கள்; பொறுத்தல்-பொறுத்துக் கொள்ளுதல்; தலை-முதன்மை, சிறப்பு.


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போல;
பரிதி: பூமி வெட்டுகிற பேரையும் சுமக்கும்;
காலிங்கர்: தமது உருவினைப் புண்பட அகழ்வாரைத் தாங்கிப் பாதுகாக்கின்ற நிலத்தைப் போல;
பரிமேலழகர்: தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல;

'தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மண்ணைத் தோண்டுவாரைத் தாங்கும் நிலம்போல', 'குழி தோண்டுவதற்குத் தன்னையே வெட்டுகின்ற மனிதரைத் தானே சுமந்து கொண்டிருக்கிற நிலத்தைப் போல', 'தன்னைத் தோண்டுவாரை வீழாமல் தாங்குகின்ற நிலம்போல', 'தன்னைத் தோண்டுவாரைத் தாங்கிக் கொண்டிருக்கும் நிலம் போல' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன்னைத் தோண்டுவாரைச் சுமக்கும் நிலம் போல என்பது இப்பகுதியின் பொருள்.

தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.
பரிதி: அதுபோலத் தம்மை இகழ்வாரைத் தாங்குதல் தலைமையான காரியம் என்றவாறு.
காலிங்கர்: தமது உள்ளம் புண்படத்தம்மை வெஞ்சொற் கூறி அவமதிப்பாரையும் தாம் அதை நெஞ்சில் கருதாது பொறுத்து ஒழுகுதல், தமக்குத் தலைமைப்பாடாவது என்றவாறு.
பரிமேலழகர்: தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம்.
பரிமேலழகர் குறிப்புரை: இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்.

'தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம்மை இகழ்ந்து பேசுவாரைப் பொறுத்துக் கொள்ளுதல் தலையாய அறமாகும்', 'ஒருவன் தன்னை அவமதித்தவர்களிடம் பொறுமை காட்டி மன்னித்து, அவர்களுக்கு உதவியும் தானே செய்வது மிக உயர்ந்த பொறுயுடைமைக் குணம்', 'தம்மை அவமதிப்போரைப் பொறுத்துக் கொள்ளுதல் முதன்மையான அறம் ஆகும்', 'தம்மை அவமதிப்பவர்களைப் பொறுத்துக் கொள்ளுதல் தலைமையான அறமாகும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தம்மை இகழ்பவர்களைப் பொறுத்தல் சிறப்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன்னைத் தோண்டுவாரைச் சுமக்கும் நிலம் போல, தம்மை இகழ்பவர்களைப் பொறுத்தல் தலை என்பது பாடலின் பொருள்.
'தலை' என்ற சொல் குறிப்பது என்ன?

நெஞ்சைப் புண்ணாக்கும் வண்ணம் திட்டி இகழப்பட்டாலும் பொறுத்துக்கொள்க.

நிலம் தன்னைத் தோண்டுபவரையும் சுமந்து தாங்கிக் கொள்கிறது. அதுபோலத் தம்மை இகழ்வோரைப் பொறுத்துக் கொள்வது சிறந்த பொறையுடையாம்.
தன் மீது நின்று கொண்டே தன்னைக் குத்தித் தோண்டுவாரையும், உழுவோரையும், வெட்டுவோரையும், சுரண்டுவோரையும், கீழே விழாமல் நிலம் தாங்கிக் காக்கிறது. அதுபோலத் தம் உள்ளம் அறுபடும்படி நேருக்கு நேர் இகழ்ந்து கூறுவதைப் பொறுத்திருப்பது தலையாய பொறுமையாம். பலவகைக் கருவிகளைக் கொண்டு தன்னை அகழ்கின்ற மக்களுக்கு அவர்கள் வாழ்க்கைக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருள்களையும் கொடுத்துக் காப்பாற்றுகின்ற நிலத்தைப் போன்று, தமது உள்ளம் நோகத் தம்மை வெஞ்சொற் கூறி அவமதிப்பதையும் தாம் அதை நெஞ்சில் கருதாது பொறுத்து ஒழுகுதல் தலையாயது.

நிலம் என்பது பொறுமையின் அடையாளமாகச் சொல்லப்படுவது; தன்னைக் காயப்படுத்துவாரையும் எதிர்த்து ஒன்றும் செய்வதில்லை நிலம். அதன் பொறுமையான குணம் போல, பொறுத்தற்கு உரியதன்றாயதாய்த் தன் மனம் நொறுங்கும்படி இகழ்ந்து உரைப்பார் சொற்களையும் தாங்கிக்கொண்டு அமைதி காக்கச் சொல்கிறது இக்குறள். பொறுத்துக் கொள்வது கடினம் என்று எண்ணுவோர் நிலத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் காட்டப்படுகிறது. இவ்வளவு பொறுமையாளனாக இருக்கின்றானே இது மடமை ஆகாதோ எனக் கேட்போர்க்கு எந்நிலையிலும் பொறுமை காக்கப்படவேண்டும்; பொறுமையில் மடப்பொறுமை என்று ஒன்று கிடையாது; பொறுமைக்காகவே பொறுமை போற்று என்பது அறிவுரை. பொறுத்துக் கொள்ளுதல் எளிதல்ல. இகழ்வாரைப் பொறுக்கும் ஆற்றலானது உண்மையிலேயே மிகப்பெரிய ஆற்றலாம். பொறுமை காத்தல் என்பது கோழைத்தனத்தாலோ அச்சத்தினாலோ உண்டானது இல்லை என்பது உணரப்படவேண்டும். பிறர் இகழ்ந்து தூற்றிப் பேசுவதால் நம்முடைய சிறப்பு குறைந்து போவது இல்லை; அது இகழ்வாரது அறியாமை என்று உதறித் தள்ளிவிடவேண்டும். இகழ்பவன் தானே திருந்தி உண்மையுணர்வான் என்பதும் உறுதி.

இப்பாடல் பொறுமையின் மாண்பையும் மன்னித்தலின் பண்பையும் வலியுறுத்துவது. மனித உறவை வளர்ப்பதில் பொறையுடைமைக்குப் பெரும் பங்குண்டு. ஒருவரை ஒருவர் பொறுத்து, புரிந்து கொண்டு, மன்னித்து, விட்டுக் கொடுத்து, வாழ்வதுவே ஒருவரை மேலும், மேலும் மாண்புறச் செய்யும். எவ்வளவோ பொறுமையாக இருந்தும் சிலர் ஏதோ ஒரு வகையில் இகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்; பதிலுக்கு ஏதாவது செய்தால்தான் அவர்கள் தாங்கள் செய்வதை நிறுத்துவார்கள் என்ற எண்ணம் வரும்போதும், பொறுமையாக இருப்பதை ஏதோ ஏமாளித்தனம் என்று நினைத்து விடக் கூடாது என்று நினைப்பதாலும் பொறுமை இழக்க நேரிடலாம். பொறுமையிழந்தோர் ஏதாவது எதிர்வினை ஆற்ற வேண்டும் என எண்ணினால் அதற்கும் ....தகுதியான் வென்றுவிடல் (158) என்றும் .....அவர் நாண நன்னயஞ் செய்துவிடல் (314) எனவும் பிறவிடங்களில் வழிகள் சொல்லியுள்ளார் வள்ளுவர்.

தன் உப்பைத் தின்று வளர்ந்தவனே தன்னை இகழ்ந்து வருத்தினாலும், தன் துணைமேல் வாழ்ந்துகொண்டே தன்னைத் துன்புறுத்துகிறவனையும், தம்மால் வளர்ந்துகொண்டே தம்மைக் கீழறுப்பவனையும், தம்மைக் கொலை செய்வதை ஒத்த குற்றம் செய்வாரையும் பொறுக்க வேண்டும் என்றும் இப்பாடலுக்கு விளக்கம் தருவர். நிலம் பள்ளம் வெட்டியவனையும் விழாமல் தாங்குகின்றதானாலும் அவன் வெட்டிய பள்ளத்தில் அவனே வீழ்வதைத் தடுக்காது; ஆனால் பொறுமைக்குணம் உடையவர் உதவியும் செய்வர் எனவும் உரைப்பர்.

'பல சொற்களுக்குத் தெளிவாகப் பொருள் கூறிய உரைகாரரான பரிமேலழகர் ஓர் அகராதிக் கலைஞராகவும் விளங்குகின்றார்' எனச் சொல்லி, 'இகழ்தல்: மிகையாயின செய்தலும் சொல்லுதலும்' என்ற இக்குறளுக்கான அவரது பதவுரையை இ சுந்தரமூர்த்தி மேற்கோள் காட்டினார். இகழ்தல் என்ற சொல் புகழ்தலுக்கு எதிர்ப்பொருள் தரும் சொல். அது இங்கு இகழ்ந்து சொல்வதை மட்டுமன்றித் தீங்கான செயலையுங் குறிக்கிறது என்பது பரிமேலழகரது உரைக்கருத்து.

'தலை' என்ற சொல் குறிப்பது என்ன?

இக்குறளில் கூறப்பட்டுள்ள 'தலை' என்ற சொல்லுக்குத் தலைமையாம், தலையாய அறம், தலைமையான காரியம், தலைமைப்பாடு, சிறந்த தருமம், தலைமையாய தவம், உச்சிதமான புண்ணியம், தலையாய பண்பு, சிறப்பு, தலை சிறந்த குணம், சிறந்த பண்பு, முதன்மையான அறம், தலைமையான அறம், தலைமையாகிய அறம், தலையாய பொறுமை என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவர் 'இவ்வளவு பொறுமை காட்டுகின்றானே என்று பொறுமையாளனை இகழ்வார் இல்லை; உலகோர் அதனைத் தலைமையாகக் கொள்வார்' என்கிறார். 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல' என ஒப்பிற் கூறினும், அந்நிலத்தைக் காட்டினும் இகழ்வாரைப் பொறுத்தல் தலையாயது எனச் சிறப்பு வேற்றுமையும் தோன்ற நிற்றலைக் காணலாம் என்பார் தண்டபாணி தேசிகர்.
வரம்பு மீறிய செயல்களைப் பொறுத்தல், அறிவிலார் செயலைப் பொறுத்தல், திறன் அல்ல செய்தாரைப் பொறுத்தல், மிகுதியான் மிக்கவை செய்தாரைப் பொறுத்தல், இறந்தார்வாய் இன்னாச்சொல் பொறுத்தல் எனப் பொறுமையிடங்கள் பல இருந்தாலும் தன் துணைமேல் வாழ்ந்துகொண்டே ஒருவன் தன்னை இகழ்வானாயின், அந்தக் கடினமான சூழலிலும் பொறுத்துக் கொள்வது என்பது பொறுத்தல்கள் எல்லாவற்றுள்ளும் தலைமையான பொறுத்தல் என்பதை 'தலை' என்ற சொல் குறிக்கிறது. நிலத்தின் பொறுமை உவமையாகக் காட்டப்பட்டது இதனால்தான்.

தலை என்றது 'தலை'யாய பொறுமை குறித்தது.

தன்னைத் தோண்டுவாரைச் சுமக்கும் நிலம் போல, தம்மை இகழ்பவர்களைப் பொறுத்தல் தலையாய பொறுமை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொறையுடைமைக்கு நிலம் காட்டும் பொறுமையை நோக்குக.

பொழிப்பு

குழிபறிப்பவரையும் நிலம் சுமப்பது போலத் தம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளுதல் தலையாயது.