இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0150அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

(அதிகாரம்:பிறனில் விழையாமை குறள் எண்:150)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.

மணக்குடவர் உரை: அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும் பிறனிடத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று.
இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.

பரிமேலழகர் உரை: அறன் வரையான் அல்ல செயினும் - ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று.
(இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன் இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: எது அறம் எது அறமல்ல என்ற வரம்புகட்டிக் கொள்ளத் தெரியாமல் அறம் அல்லாதவைகளைச் செய்துவிட்டாலும், இன்னொருவன் வரைக்குந்தான் என்ற வரம்புக்கு உட்பட்ட அவனுடைய மனைவியுடன் காம இன்பத்தை விரும்பாதிருக்கும் ஒரு நல்ல காரியமே சிறப்புடையது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.

பதவுரை: அறன்வரையான்-அறம் என்பதை வரையறுக்காதவன்; அல்ல-அவை ஆகாதவை; செயினும்-செய்தாலும்; பிறன்-மற்றவன்; வரையாள்-வரம்பிலேயுள்ளவள், எல்லைக்கண் உள்ளவள்; பெண்மை-பெண்ணின் தன்மை; நயவாமை-விரும்பாமை; நன்று-நன்மையுடையது, நல்லது.


அறன்வரையான் அல்ல செயினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும்;
பரிப்பெருமாள்: அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும்;
பரிதி: தன்மத்தை நினையான் அதன்மமே செய்வானாகிலும் தோஷபரிகாரத்தால் பிழைப்பன்;
காலிங்கர்: ஒருவன் தனக்கு அறத்தைத் துணையாக அணைத்துக் கொள்ள அறியானுமாய் அறம் அல்லனவற்றைச் செய்து ஒழுகினும்;
பரிமேலழகர்: ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்;

'அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது அறமல்லாதன செய்யினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறங்கடந்து தீமைபல செய்யினும் செய்க', 'அறத்தைத் தனக்குரியதாகச் செய்யாமல் பாவங்கள் செய்தாலும்', 'ஒருவன் தான் செய்ய வேண்டிய அறங்களைச் செய்யாது தவறுகளையே செய்வானாயினும்', 'ஒருவன் அறநெறியில் செல்லாது, தீயனவற்றையே செய்தாலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறம் கடந்து தீயனவற்றைச் செய்பவனாயினும் என்பது இப்பகுதியின் பொருள்.

பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனிடத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று [ஆளாவளது - உரியவளது].
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.
பரிப்பெருமாள்: பிறனிடத்தானவளது பெண்மையை விரும்பாமை நன்று .
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.
பரிதி: பிறன்மனை விரும்பாமல் இருப்பானாகில் என்றவாறு.
காலிங்கர்: பிறன்வரம்பினது பெண்மையைத்தான் விரும்பாமை என்னும் பெருங்குணம் உடையனாயின் அதுவே சாலநன்று என்றவாறு [பிறன்வரம்பினது-அயலானது எல்லையின் உள்ளது].
பரிமேலழகர்: அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன் இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.

'பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறன் மனை விருப்பத்தை அறவே ஒழிக', 'பிறனுக்குரியவளது பெண்மையை விரும்பாதிருத்தல் நல்லது', 'பிறனை மணந்தவளுடைய பெண் நலத்தை விரும்பாமை (அவன்பால் உளதாயின் அஃது) அவனுக்குச் சிறப்புக் கொடுக்கும்', 'பிறனால் மணந்து கொள்ளப்பட்டவளின் பெண்மையை விரும்பாலிருந்தால் அஃதே பெருநன்மையைத் தரும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பிறனது எல்லையின்கண் உள்ள அவனது மனைவியின் பெண்மையை விரும்பாமை நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறம் கடந்து அல்ல செயினும் பிறனது எல்லையின்கண் உள்ள அவனது மனைவியின் பெண்மையை விரும்பாமை நல்லது என்பது பாடலின் பொருள்.
'அல்ல செயினும்' அதாவது 'தீயன செய்தாலும்' என்றா சொல்லப்பட்டது?

அறமல்லாதவற்றுள்ளும் பிறனை மணந்தவளுடைய பெண்மையை நயத்தல் பொல்லாதது.

அறநெறிக்குள் அடங்காமல் தீய செயல்கள் பலவற்றைச் செய்பவனாக இருந்தாலும், பிறன் வரம்புக்குள் உள்ள பெண்மையை விரும்பாமல் இருப்பது நன்று.
அறன் வரையான் என்பதற்கு அறத்தை வரையாதே, தன்மத்தை நினையாது, அறத்தைத் துணையாக அணைத்துக் கொள்ள அறியாது, அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது, அறம் எது? அறம் அல்லது எது என்றது வரம்பு கட்டிக் கொள்ளத் தெரியாமல், அறங்கடந்து, அற எல்லைக்கண் நிற்காது, அறத்தின் கடைக்கோடி எல்லையில் நின்று, செய்ய வேண்டிய அறங்களைச் செய்யாது, அறத்தின் எல்லை தாண்டி எனப் பொருள் கூறுவர். இவற்றுள் அறத்தைத் துணையாக அணைத்துக் கொள்ள அறியான் என்ற காலிங்கர் உரை பொருத்தமாகப் படுகிறது.
'பிறன்வரையாள்' என்றதற்குப் பிறனிடத்து ஆளானவள், பிறன்மனை, பிறன்வரம்பினள், பிறன் எல்லைக்கண் நிற்பாள், பிறனுடைய பெண்சாதி, பிறன்மனையாள், பிறனுக்கு உரியவள், பிறனது எல்லைக்கண் நிற்பாள், இன்னொருவன் வரைக்குத்தான் என்ற வரம்புக்கு உட்பட்ட அவனுடைய மனைவி, பிறனை மணந்தவள், பிறனால் மணந்து கொள்ளப்பட்டவள், பிறனாட்சிக் குட்பட்டவள், பிறனுக்கு என்று வரையறுக்கப்பட்ட உரிமையுடையாள், பிறனுடைய வரைக்கண் நின் றொழுகுவாள் எனப் பொருள் கூறுவர் உரையாசிரியர்கள். கா சுப்பிரமணியம் பிள்ளை, சி இலக்குவனார் ஆகியோர் பிறனை மணந்தவள் எனப் பொருள் கூறுகின்றனர். வரைவு என்ற சொல் மணம்செய்து கொள்வதைக் குறிக்கும் என்ற அடிப்படையில் இவர்கள் மணந்தவள் எனப் பொருள் கொண்டார்கள் போலும். பிறன்வரையாள் என்றதற்குப் பிறனை மணந்தவள் என்ற பொருள் பொருந்துகிறது.
ஒருவன் மற்றவகையில் அறமல்லாத செயல்கள் புரிந்து வாழ்கிறான்; ஆனால் அவன் பிறனுக்கு உரிய பெண்ணை நாடாதவன். பிறன்மனை நோக்காதவன் என்ற நன்மை கொண்டு அவனது தீச்செயல்களைப் பொறுத்தருளாலாம் என்று சொல்வதாக உள்ளது இப்பாடல். சி இலக்குவனார் 'அறங்கள் ஒன்றையுமே செய்யாமல் பாவங்கள் செய்வானாயினும் இந்த ஒரு செயலே பெருநன்மையைத் தரும்' என்று இக்குறளுக்குக் கருத்துரைத்தார். தேவநேயப்பாவாணர் 'பிறன்மனை நயவாமையாகிய குணம் அத்தனைக் குற்றங்களையும் ஓரளவு மறைக்கும்' என்றார். இவர்களது உரைகள் ஒருவன் செய்யும் தீச்செயல்களை, பிறனுக்குரியவளது பெண் நலத்தை விரும்பாத நற்செயல், சமன்செய்வதாகக் காண்கின்றன.

தீயசெயல்களை செய்யும் நிலையிலும் பிறன் இல் விழையாதிருந்தாலே நல்லது என்று சொல்லுவதிலிருந்து பிறன்மனை விழைதல் மிகவான தீச்செயல் என்பதை அறியலாம். பிறன்மனைவியை விரும்புதலைத் தீமை புரிதலுக்கு ஒப்பிடுகிறார் வள்ளுவர்.

பிறன்வரையாள் என்றதற்குப் 'பிறன் எல்லைக்கு உட்பட்டவள்' என்ற பொருளும் உள்ளதால் இச்சொல் பெண்களை அடிமையாகக் குறிக்கிறது என்றனர் சிலர். ஆனால் தெ பொ மீனாட்சிசுந்தம் 'கணவனது எல்லையே தனது எல்லையாக உடையாள்' என்று விளக்கம் கூறி அதை மறுப்பார். இருவருமே அன்பால் ஒருவராயினர். ஆதலின், ஒருவர் எல்லை மற்றொருவர் எல்லையாயிற்று. ஒருவன் இவ்வெல்லை கடந்து பிறன் மனைவியை அடைய விரும்பினால் அவர்களது இல்லறம் சிதறும் என்றும் அவர் விளக்குவார்.

'அல்ல செயினும்' அதாவது 'தீயன செய்தாலும்' என்றா சொல்லப்பட்டது?

ஒருவன் நெறியற்ற செயல்களையே செய்தாலும் கூட, பிறன்மனையை நயக்கும் பெரும் தீமையைச் செய்யாமலிருக்கவேண்டும் என்ற பொருளிலேயே அனைத்து உரையாசிரியர்களும் இக்குறளுக்கு உரை கண்டனர். இது 'ஒருவன் தீயனவற்றைச் செய்தாலும் பரவாயில்லை' என்றாகிறது. வள்ளுவர் இப்படிச் சொல்லுவாரா?
'மற்றவற்றைச் செய்யவில்லையென்றாலும் சரி, இதை மட்டும் செய்' என்பதை ஓர் உத்தியாகக் கையாள்வது வள்ளுவர் வழக்கம். அவ்விடங்களிலெல்லாம் மற்றவற்றைச் செய்யாவிட்டாலும் இதை மட்டும் செய்தால் போதும் என்பார். இதன் உள்கருத்து 'இதையொன்றாவது இப்பொழுது செய்; மற்றவற்றைப் பிறகு செய்யலாம்; இதை முதலில் செய்வதின் மூலம் மற்ற நல்ல செயல்களுக்கும் இது துணையாக அமையும்' என்பது. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று (வாய்மை குறள் 297: பொருள்: பொய் சொல்லாதிருத்தலைத் தவறாது ஒருவன் மேற்கொண்டு ஒழுக வல்லனாயின், மற்ற அறங்களை அவன் தொடர்ந்து செய்யாதிருத்தல் வாய்மை யறத்தை செவ்வனே நடத்தற்கு இடந்தருவதால் நல்லதாகும்.) என்ற பாடலில் மற்ற அறங்களை ஒருவன் செய்யாதிருத்தலும் நல்லது என்று சொல்லப்படுகிறது.
நல்லன செய்யாவிட்டாலும் அல்லன செய்யாதே என்பது வேறு. என்ன தீயன செய்தாலும் சரி; இந்தத் தீமையச் செய்யாதே என்று சொல்வது வேறு. முதலில் உள்ளதில் கெடுதி ஒன்றும் இல்லை. பின்னதில் மற்ற எல்லாத் தீச் செயல்களும் மன்னிக்கப்படலாம் என்பதுபோல் அமைந்துள்ளது. இது ஏற்கக் கூடியதாகத் தோன்றவில்லை. வள்ளுவர் மனதில் கொண்டது வேறாகத்தான் இருக்க வேண்டும். 'அல்ல செயினும்' என்று சொல்லப்பட்டதற்கான அமைதியைக் காலிங்கர் உரையிலும் நாமக்கல் இராமலிங்கம் உரையிலும் காணலாம். காலிங்கர் உரை 'ஒருவன் தனக்கு அறத்தைத் துணையாக அணைத்துக் கொள்ள அறியானுமாய்..' எனச் சொல்கிறது. நாமக்கல் இராமலிங்கம் 'எது அறம் எது அறமல்ல என்ற வரம்புகட்டிக் கொள்ளத் தெரியாமல்...' என உரைக்கிறார். இது 'நல்லது கெட்டது தெரியாதவனாக இருப்பினும் பிறன்மனையாளை விரும்பாத குணம் என்ற நன்மை அவனது எல்லா அறியாமையையும் ஈடுசெய்யும்' என்ற கருத்தைத் தருவது. இப்விருவருமே ஏதோ ஒருவகையில் அவன் அறியாமல் தீயன செய்வதாகக் கூறுகிறார்கள். ஆனால் 'அறியாமல்' என்ற குறிப்பு இப்பாடலில் எங்கும் இல்லை; அது வருவித்துரைக்கப்பட்டது. எனினும் இவர்கள் உரைகளின்படி வள்ளுவர் தீயன செய்தலை நேரடியாக ஒப்பவில்லை என்றும் அறியாமல் செய்த அல்லவைகளையே அவர் குறிப்பிடுகிறார் என்றும் கொள்ளலாம்.

அறம் கடந்து தீயனவற்றைச் செய்பவனாயினும் பிறனது எல்லையின்கண் உள்ள அவனது மனைவியின் பெண்மையை விரும்பாமை நல்லது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றிருப்பவனாயிருந்தாலும் பிறனில் விழையாமை நன்று.

பொழிப்பு

அறத்தின் எல்லை அறியாமல் அறமல்லாதவை செய்தாலும் பிறனை மணந்தவளது பெண்மையை விரும்பாமை நல்லது.