நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்
(அதிகாரம்:பிறனில் விழையாமை
குறள் எண்:149)
பொழிப்பு: கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
|
மணக்குடவர் உரை:
நலத்துக்கு உரியார் யாரெனின் நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார்.
நலக்குரியார்- விரும்புதற்குரியார்.
பரிமேலழகர் உரை:
நாம நீர் வைப்பின் - அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின் - எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின், பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார்.
(அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக்குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
அச்சந்தருந் தோற்றத்தையுடைய கடலாற் சூழ்ப்பட்ட உலகத்தின்கண்ணே எல்லா நன்மைகளையும் பெறுதற்கு உரியவர் யாரென்றால், பிறர்க்குரியாளது தோள்களைச் சேராதவர்களே.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குரியாள் தோள்தோயாதார்.
|
நலக்குரியார் யாரெனின்:
பதவுரை: நலக்கு-நன்மைக்கு; உரியார்-உரிமையுடையவர்; யாரெனின்-யார் என்றால்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நலத்துக்கு உரியார் யாரெனின்;
மணக்குடவர் குறிப்புரை: நலக்குரியார்- விரும்புதற்குரியார்.
பரிப்பெருமாள்: நலத்துக்கு உரியார் யாரெனின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: நலக்குரியார்- விரும்புதற்குரியார்.
பரிதி: நல்லவர் என்னும் பேர்பெறுவார் ஆர் எனில்;
பரிமேலழகர்: எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின்;
பரிமேலழகர் குறிப்புரை: 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக்குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.
'எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எந்நன்மைக்கும் உரியவர் யார்?', 'நன்மைக்குரியவர் யாவர் எனில்', 'மெச்சத் தகுந்தவர்கள் யாரென்றால்', 'எல்லா நன்மைகளும் அடைதற்குரியார் யார் என்றால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
எந்நன்மைக்கும் உரியவர் யார் என்றால் என்பது இப்பகுதியின் பொருள்.
நாமநீர் வைப்பின் பிறற்குரியாள் தோன்தோயா தார்:
பதவுரை: நாமநீர்-அச்சந்தரும் கடல்; வைப்பின்-உலகத்தில்; பிறற்கு-மற்றவனுக்கு; உரியாள்-உரிமையுடையவள்; தோள்-தோள்; தோயாதார்-சேராதவர்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார்.
பரிப்பெருமாள்: நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லாரானும் விரும்பப்படுவர் என்றவாறு.
பரிதி: உலகத்தில், பிறற்குரியாள்தோள் விரும்பாதவர் என்றவாறு.
பரிமேலழகர்: அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார்.
பரிமேலழகர் குறிப்புரை: அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர' என்றார்.
'பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். நாமநீர் வைப்பின் என்பதற்கு 'நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை தர, பரிமேலழகர் 'அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து' என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'உலகில், பிறனுக்கு உரியவளை அணையாதவரே', 'அச்சந்தரும் கடலால் சூழப்பெற்ற உலகில், பிறனுக்குரியவளது தோளை முயங்காதாரே', 'அச்சந் தரக்கூடியதாக உள்ள இந்த உலகத்தில், இன்னொருவனுடைய மனைவியைக் காம ஆசையினால் தீண்டாதவர்களே', 'அச்சம் தரும் பெரிய கடலார் சூழப்பட்ட உலகில், பிறனுக்கு உரிமையான மனைவியினைக் கூடாதாரே' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
அச்சந்தரும் கடலால் சூழப்பெற்ற உலகில், பிறனுக்குரியவளது தோளை அணையாதவரே என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
எல்லா நலத்துக்கும் உரியவர் யாரென்றால் அச்சம் தரும் கடல் சூழ்ந்த இவ்வுலகில் மற்றவனுக்கு உரியவளது தோளைத் தழுவாதவரே.
எந்நன்மைக்கும் உரியவர் யார் என்றால், நாமநீர் வைப்பின், பிறனுக்குரியவளது தோளை அணையாதவரே என்பது பாடலின் பொருள்.
'நாமநீர் வைப்பின்' என்ற தொடர் ஆளப்பட்டதில் ஏதாவது சிறப்பு உண்டா?
|
நலக்குரியார் என்பது நலத்திற்கு உரியவர் அல்லது நன்மைக்குரியவர் என்பதன் சுருக்கம்.
யாரெனின் என்ற தொடர்க்கு யார் என்றால் என்பது பொருள்.
பிறற்குரியாள் என்ற தொடர் மற்றவனுக்கு உரிமையான அவனது மனைவி என்ற பொருள் தரும்.
தோள் தோயாதார் என்றடற்குத் தோள்களை அணையாதவர்கள் என்று பொருள்.
|
நற்பேறுகள் அடைவதற்குரியவ்ர் யார் எனின் அச்சம் தரும் கடல்சூழ் உலகில் பிறன் மனைவியின் தோளைத் தழுவாதவர் தாம்
நிலத்துக்குப் பொறை என்பது ....நிலக்குப் பொறை என்று குறள் 572-இல் குறைந்து நின்றது போல, நலத்துக்கு உரியர் என்ற தொடர் நலக்குரியர் என வந்துள்ளது. நலம்-கு என்பது நலக்கு என்று ஆயிற்று. நலக்குரியார் என்பதற்கு விரும்புதற்குரியார் எனப் பொருள் உரைத்தார் மணக்குடவர். இதை 'இஃது எல்லாரானும் விரும்பப்படுவர்' என்று பரிப்பெருமாள் விளக்கினார். ஏனையோர் நலக்குரியர் என்பதற்கு நன்மைக்கு உரியவர் என்று பொருள் கொள்வர். எல்லா நன்மைக்கும் உரியர் யார் என்றால் பிறன்மனைவியைச் சேராதவன் என்று வினா-விடை நடையில் இக்குறள் அமைந்துள்ளது. இங்கு சொல்லப்பட்ட நன்மை என்பது கடவுளின் அருளால் கிடைப்பதைக் குறிப்பது; இச்சொல்லுக்குப் புண்ணியம் என்றும் இங்கு பொருள் கொள்ளலாம்.
பிறர் உரிமைக்கு இடையூறு செய்யாதவர்களுக்கே உலக நன்மையில் உரிமை உண்டு; ஆகையால், இந்தப் பரந்த உலகத்தில் நன்மைக்கு உரிமை உடையவர் யார் என்றால் பிறனுக்கு உரியவளாகிய ஒருத்தியின் தோளைச் சேராதவரே ஆவர் என்று இக்குறளுக்கு விளக்கம் தருவா மு வ.
இக்குறளில் வரும் 'பிறற்குரியாள்' என்ற தொடரை அடிப்படையாகக் கொண்டு, மனைவி என்பவள் அடிமையா என்று கேள்வி எழுப்பினர் சிலர். 'பிறர்க்குரியாள்' என்பது அடிமைப் பொருளைக் குறிக்காது. யார்ருக்கு வாழ்க்கைப்பட்டவளோ அவனுக்கு உரியவள் என்பதே இதன் பொருள்; அவன் இவளுக்கு உரியவன், இவள் அவனுக்கு உரியவள்.
புணராதவர் என்பது தோள் தோயாதார் என்று இடக்கர் அடக்கலாகச் (அருவருப்புத் தோன்றாமல் அடக்கிச் சொல்வது. சொல்வதற்குக் கூச்சப்படக்கூடிய சொற்களை மறைத்து வேறு சொல்லால் கூறுதல் இடக்கரடக்கல் எனப்படும்)சொல்லப்பட்டது.
|
'நாமநீர் வைப்பின்' என்ற தொடர் ஆளப்பட்டதில் ஏதாவது சிறப்பு உண்டா?
நாமம் என்ற சொல் ஈறு திரிந்து நாம எனநின்றது. நாமம் என்ற சொல்லுக்குப் பெயர் என்று ஒரு பொருள் உள்ளது. 'நாமநீர் வைப்பின்' என்பதற்கு நினைத்ததைத் தருகின்ற நீர் ஆகிய கடல் என்று உரை வரைந்தார் மணக்குடவர். ஆனால் மற்ற உரையாசிரியர்கள் அனைவரும் நாமம் என்பதற்கு அச்சப் பொருள் கொண்டு 'அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து' என்று உரை காண்பர். பரிமேலழகர் 'அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர' என்றார்' எனப் பொருளுரைப்பார். கடல் அகலம், ஆழம், கொந்தளிப்பு , நிலமுழுக்கு ஆகியவற்றால் அஞ்சத்தக்கது. இளங்கோவடிகள் தம்முடைய சிலப்பதிகாரத்தில் பல இடங்களில், நாமநீர் என்றதை அச்சம் என்ற பொருளில் பயன்படுத்தி உள்ளார். அச்சம் என்ற பொருளில் நாமம் என்ற சொல்லாட்சி தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், கமபராமாயணம் இவற்றில் பயன்பட்டு வந்தது. இப்பாடலிலும் நாமம் என்றது அச்சம் என்ற பொருளிலேயே வந்துள்ளது.
நலத்திற்கு உரியவர் யார் என்றால், நாமநீர் வைப்பில், பிறருக்கு உரியவள் தோளைப் பொருந்தாதவரே என்று இப்பாடலில் 'நாமநீர் வைப்பு' அதாவது 'அச்சம் தரும் கடல்' என்று இவ்வுலகை குறிப்பிடப்பட்டதற்குத் தேவையென்ன?
நாமக்கல் இராமலிங்கம் நீர் என்பதற்கு நீர்மை அதாவது தன்மை எனக் கொண்டு 'அச்சமுண்டாக்கும் தன்மையான உலகத்தில்' என்று புதுப் பொருள் கண்டார். மேலும் அவர் ''நாமநீர்' என்பதற்கு இங்கே 'அச்சந்தரும் தண்ணீர்' அல்ல. 'அச்சந்தரும் தன்மை'. உலகத்தில் காமத்தினால் நிகழும் குற்றங்களே மிகுதி. அதிலும் ஒருவன் இன்னொருவனுக்கு உரிமைப் பொருளான மனைவியைக் காமுறுவதனால்தான் அச்சமுண்டாக்கத் தகுந்த பல தீமைகள் உண்டாக்குகின்றன. அப்படி அச்சமுண்டாக்கும் தன்மையுள்ளதான இவ்வுலகில் பிறன் மனைவியின் காம இன்பத்தை நாடாதவனே போற்றத் தகுந்தவன் என்ற பொருள் உண்டாக்கவே நாம நீர் வைப்பு எனப்பட்டது' என விளக்கமும் தந்தார்.
இல்வாழ்க்கை, கடலைப்போல, அச்சந்தருவனவற்றை உள்ளடக்கியது. பிறன்மனையை நயத்தல் போன்ற தீச்செயல்களைத் தூண்டக்கூடியது. அச்சுறுத்தும் குணநலனகள் நிறைந்த உலகில், அவற்றையெல்லாம் உறுதியுடன் எதிர்கொண்டு, பிறழாமல் ஒழுகுபவனுக்கு, எல்லா நற்பேறுகளும் உரியன. இதுவே உலகிற்கு அச்சம்தரும் எனும் அடை கொடுக்கப்பட்டது என்பதற்கான காரணமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.
|
எந்நன்மைக்கும் உரியவர் யார் என்றால், அச்சந்தரும் கடலால் சூழப்பெற்ற உலகில், பிறனுக்குரியவளது தோளை அணையாதவரே என்பது இக்குறட்கருத்து.
பிறனில் விழையாமை எல்லா நன்மைக்கும் தகுதி பெறும்.
எந்நன்மைக்கும் உரியவர் யார் என்றால் அச்சந்தரும் கடலால் சூழப்பெற்ற உலகில், பிறனுக்குரியவளது தோளை அணையாதவரே.
|