இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0145எளிதென இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

(அதிகாரம்:பிறனில் விழையாமை குறள் எண்:145)

பொழிப்பு: இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறிதவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

மணக்குடவர் உரை: தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்.
இது பழியுண்டா மென்றது.

பரிமேலழகர் உரை: எளிது என இல் இறப்பான் - 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும்.
(இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.)

இரா சாரங்கபாணி உரை: எய்துதல் எளிதென என்று பிறன் மனைவியிடம் நெறி கடந்து நடப்பவன் எப்பொழுதும் அழியாது நிற்கும் பழியை அடைவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எளிதென இல்இறப்பான் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி எய்தும்.


எளிதென இல்இறப்பான்:
பதவுரை: எளிது-வருந்தாமல் கிட்டக்கூடியது; என-என்று கருதி; இல்இறப்பான்-இல்லின்கண்ணே நெறி கடந்து நடப்பவன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன்;
பரிப்பெருமாள்: தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன்;
பரிதி: பிறர் மனையாள் இன்பம் எளிது என விரும்புவான்;
பரிமேலழகர்: 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான்;
பரிமேலழகர் குறிப்புரை: இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.

'எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே எல்லைகடந்து செல்பவன்' என்று மணக்குடவரும் 'பிறர் மனையாள் இன்பம் எளிது என விரும்புவான்' என்று பரிதியும் ''எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லாள்கண் நெறிகடந்து சேர்பவன்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எளிதென்று கருதிப் பிறன்மனை நுழைபவன்', 'இவளைச் சேர்தல் எளிதென்று நினைத்துப் பிறன் மனையாளிடம் முறை கடந்து போகின்றவன்', 'மதித்துப் பிறனுடைய மனைவியிடத்துக் கொண்ட காம ஆசையினால் நெறி கடந்து நடந்து கொள்ளுகிறவன்', 'மிக எளிது என்று கருதி பிறன் மனைவியிடம் செல்பவன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எளிதென்று கருதிப் பிறன் மனையாளிடம் முறை கடந்து போகின்றவன் என்பது இப்பகுதியின் பொருள்.

எய்தும் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி:
பதவுரை: எய்தும்-அடைவான்; எஞ்ஞான்றும்-எப்போதும்; விளியாது-மாய்தலின்றி; நிற்கும்-நிலைத்திருக்கும்; பழி-குடிப்பழி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்.
மணக்குடவர் குறிப்புரை: இது பழியுண்டா மென்றது
பரிப்பெருமாள்: எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பழியுண்டா மென்றது.
பரிதி: மரணாந்த மட்டும் பழியும் பாவமும் எய்துவான் என்றவாறு.
பரிமேலழகர்: மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும்.

'எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'இறக்கும்வரை பழியும் பாவமும் எய்துவான்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்றும் தீராத பழியை எய்துவான்', 'என்றைக்கும் நீங்காது நிற்கும் குடிப்பழிப்புக்கு உள்ளாவான்', 'எளிதாகக் கிடைக்கிறதென்று இலேசாக என்றும் நிலைக்கக் கூடிய பழியை அடைவான்', 'எப்பொழுதும் நீங்காத பழியை அடைவான்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

என்றும் நீங்காத பழியை அடைவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அடைவது மிக எளிது என்று கருதிப் பிறன் மனை கடந்து செல்பவன், என்றும் நீங்காத பழியை அடைவான்.

எளிதென்று கருதி இல்இறப்பான் என்றும் நீங்காத பழியை அடைவான் என்பது பாடலின் பொருள்.
'இல்இறப்பான்' என்றால் என்ன?

எளிதென என்ற சொல்லுக்கு அடைதல் 'எளிது என்று' கருதி என்பது பொருள்.
எய்தும் என்ற சொல் அடையும் என்ற பொருள் தரும்.
எஞ்ஞான்றும் என்ற சொல் என்றும் எனப்பொருள்படும்.
விளியாது என்ற சொல் இறவாது அல்லது அழியாது என்ற பொருள் தருவது.
நிற்கும் பழி என்ற தொடர்க்கு நிலைத்திருக்கும் பழி என்று பொருள்.

தனக்கு எளிதாகக் கிட்டும் என்று பிறன் மனையிடத்துக் கடந்து செல்பவன் என்றும் அழியாப் பழியை அடைவான்.

இன்னொருத்தன் மனைவியை அடைவது தனக்கு எளிதென்று நினைத்து அவனுடைய இல்லின் கண்ணே எல்லைகடந்து செல்பவன் என்றும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்.
நாமக்கல் இராமலிங்கம் எளிதென என்பதற்கு 'சுலபமாகக் கிடைக்கிறதென்றோ, வெகு சாதாரண காரியந்தானே என்றோ இலேசாக மதித்து' என உரை தந்தார். இதற்கு விளக்கமாக 'சுலபமாகக் கிடைக்கிறதென்று எண்ணியோ என்ற தொடர், பிறன் மனைவி பிறன் பொருளாக இன்றி, நிலைகுலைந்தவளாக இருத்தல், தன் முயற்சிக்கு இடையீடாகக் காலம் இடம் முதலியன ஒத்திருத்தல் ஆகிய இவைகளைக் கருதி நிற்கிறது. அவளைக் காப்பவன் செல்வம், செல்வாக்கு, உடல்வலி முதலியவற்றால் குறைந்தவனாக, எளிதென எண்ணியோ எனவும் கருதலாம்' என விரித்தார் தண்டபாணி தேசிகர்.
'எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி' என்பதற்கு மரணாந்தமட்டும் பழியும் பாவமும் எய்துவான் என்றும் இறப்புக்குப் பின்னும் பழி நிலைத்து நிற்கும் என்று பொருள் கூறுவர். பழி என்றதனால் அதனொடு ஒருங்குவைத்தெண்ணப்படும் பாவத்தையும் சேர்த்துச் சொல்வர். மரணம் மட்டும் என்பதைவிட இறந்த பின்னரும் பழி நிலைத்து நிற்கும் என்பது பொருத்தமானது. பழி என்பதற்குச் சிலர் குடிப்பழி என்று உரை செய்வர்.

பிறனில் விழைகின்றவன் எப்போதும் அழியாமல் நிற்கும் பழியை அடைவான் என்கிறது பாடல். பழி வந்து சேர்கிறது என்பது உண்மைதான். ஆனால் பிறனில் விழையும் குற்றம் உடையவர்கள் சிலர் பழிக்கு ஆளாவதில்லை; அவர்களில் செல்வமும் செல்வாக்குமுடையவர்கள் சிலரது பழி மறைக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்டு அவர்கள் புகழும் பெறுகின்றார்கள் என்பதையும் நாம் பார்க்கின்றோம். ஆனாலும் இவர்கள் மீது உண்டான சமூகக் கறை (Social stigma) எளிதில் நீங்குவதில்லை என்பதையும் காண்கிறோம்.

'இல்இறப்பான்' என்றால் என்ன?

'இல்இறப்பான்' என்ற தொடர்க்கு இல்லின் கண்ணே எல்லைகடந்து செல்பவன், இல்லாள்கண் நெறிகடந்து செல்லல், வீட்டின்கண் எல்லைகடந்து செல்பவன், மனைவியின்கண் தீச்செயல் செய்தொழுகுபவன், பிறன்மனை நுழைபவன், பிறன் மனைவியிடம் நெறி கடந்து நடப்பவன், பிறனுடைய மனைவியிடம் எல்லை கடந்து நடந்து கொள்ளுகிறவன், பிறன் மனைவியிடத்துக் கடந்து செல்பவன், பிறன் மனையாளிடம் முறை கடந்து போகின்றவன், பிறன் மனைவியிடம் செல்பவன், பிறன் மனையின் எல்லை தாண்டுபவன், பிறன் மனைவியின்கண் நெறிகடந்தொழுகுபவன், பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன், பிறன் மனையாளிடம் வரைகடந்து நடக்கும் தீயோன், பிறன் இல்லினுள் செல்பவன் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.
இல் என்ற சொல்லுக்கு இல்லம் என்றும் இல்லாள் என்றும் பொருள் கொள்ளலாம். எனவே உரைகளிலும் வேறுபாடு காணப்படுகின்றது. சிலர் வீட்டின்கண் எல்லைகடந்து செல்பவன் என்றும் மற்றவர்கள் பிறன் மனைவியிடம் வரை கடந்து நடக்கும் தீயோன் எனவும் உரை பகன்றனர்.

'இல்இறப்பான்' என்றதற்கு பிறன்மனை நுழைபவன் என்பது பொருள்.

எளிதென்று கருதிப் பிறன் மனையின்கண் முறை கடந்து போகின்றவன் என்றும் நீங்காத பழியை அடைவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நிலையாத காம இன்பம் கருதி மறையாது நிற்கும் பழியைத் தேடிக்கொள்வான் மற்றவன்மனை நுழைபவன் என்னும் பிறனில் விழையாமை பாடல்.

பொழிப்பு

எளிதென்று கருதிப் பிறன் மனையின்கண் நெறி கடந்து செல்பவன் என்றும் அழியாது நிற்கும் பழியை எய்துவான்.