இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0144எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்

(அதிகாரம்:பிறனில் விழையாமை குறள் எண்:144)

பொழிப்பு (மு வரதராசன்): தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?

மணக்குடவர் உரை: எல்லாவமைதியினையும் உடையவராயினும், தினையளவுந் தேராது பிறனுடைய இல்லிலே புகுதல் யாதாய்ப் பயக்குமோ?
பிறனில் விழைவால் வருங் குற்றங் கூறுவார் முற்பட வெல்லாக் குணமுமிழியுமென்று கூறினார்.

பரிமேலழகர் உரை: எனைத்துணையர் ஆயினும் என்னாம் - எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும், தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகல் - காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல்.
(இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி, 'என்னாம' என்றார். 'என் நீர் அறியாதீர் போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்' (கலித்.பாலை 6) என்புழிப் போல உயர்த்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் 'தம்மை ஐயுறாத பிறன்' என்று உரைப்பாரும் உளர்.)

தமிழண்ணல் உரை: பிறன் மனை நயத்தலால் வரும் இழிவைத் தினையளவும் சிந்தியாமல், பிறன் மனைவியை விரும்பி அவன் மனைக்கண் புகுவரேல், அவர் எத்துணைப் பெரியவராய் இருந்தாலும் என்ன பயன்? பெருமை அனைத்தும் இழப்பர் என்பதாம்.
செல்வம் செல்வாக்கு பதவி கல்வியறிவு உடைய உயர்ந்தவர்களிடையே காமத்தால் இது மிகுந்து காணப்படுவலின் 'எனைத் துணையாராயினும் பயன் என்ன என்று வினவுகிறார்,


பொருள்கோள் வரிஅமைப்பு:
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்.

பதவுரை: எனைத்துணையர்-எவ்வளவு பெரிய பெருமையுடையவர்; ஆயினும்-இருந்தாலும்; என்-என்ன; ஆம்-ஆகும்; தினை-தினை; துணையும்-அளவும்; தேரான்-எண்ணிப்பாராதவனாக; பிறன் -மற்றவன்; இல்-இல்லம்; புகல்-நுழைதல்..


எனைத்துணையர் ஆயினும் என்னாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாவமைதியினையும் உடையவராயினும் யாதாய்ப் பயக்குமோ? [அமைதி-அமைந்திருக்கும் தகுதிகள்]
பரிப்பெருமாள்: எல்லாவமைதியினையும் உடையவராயினும் யாதாய்ப் பயக்குமோ?
பரிதி: குலத்தாலும் செல்வத்தாலும் பெரியவனாகிலும் ஏதாம்?
காலிங்கர்: ஒருவர் வாழ்வு இறந்த நன்மையை உடையவர் அன்பினராயினும் யாதாம்? [வாழ்வு இறந்த நன்மை - வாழ்க்கை வேண்டிய அளவுக்கும் விஞ்சிய நன்மைகள்]
பரிமேலழகர்: எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும்?
இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி, 'என்னாம்' என்றார்.

எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும்? என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எவ்வளவு பெரியவனாயினும் என்ன?', 'எவ்வளவு பெருமையுடையவராயினும் என்ன பயன் உண்டு?', 'வேறு என்ன சிறப்புடையவனானாலும் என்ன பயன்?', 'எவ்வளவு பெருமையுடையவனாயிருப்பினும் மிகமிக வெறுக்கத்தக்கது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எவ்வளவு பெருமையுடையவராயினும் என்ன? என்பது இப்பகுதியின் பொருள்.

தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தினையளவுந் தேராது பிறனுடைய இல்லிலே புகுதல். [தேராது- தமக்கு வாய்த்துள்ள தகுதிகளின் அமைதியை ஆயாமல்]
மணக்குடவர் குறிப்புரை: பிறனில் விழைவால் வருங் குற்றங் கூறுவார் முற்பட வெல்லாக் குணமுமிழியுமென்று கூறினார்.
பரிப்பெருமாள்: தினையளவுந் தேராது பிறனுடைய இல்லிலே புகுதல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பிறனில் விழைவால் வருங் குற்றங் கூறுவார் முற்பட வெல்லாக் குணமுமிழியுமென்று கூறினார்.
எவ்வளவு பெருமையிருந்தாலும் என்ன? பெருமைக்கு அழகு தம்மை ஐயுறாத பிறனில்லாளிடம் புகாமையே என்றது.
பரிதி: தன்மநெறியைத் தினையத்தனையும் விசாரியாமல் பிறர்மனை விரும்புவானாகில் நரகம் புகுவான் என்றவாறு.
காலிங்கர்: தினையளவிலும் அற்பமாத்திரமே யாயினும் இது தகாது என்று சிறிதும் ஆராயானாய்க் கொண்டு, பிறனொருவன் இல்லின்கண் சேறல் என்றவாறு. [அற்பமாத்திரமேயாயினும் - சிறிதளவேயாயினும்]
பரிமேலழகர்: காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல். [ஓராது - ஆராயாமல்]
பரிமேலழகர் குறிப்புரை: 'என் நீர் அறியாதீர் போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்' (கலித்.பாலை 6) என்புழிப் போல உயர்த்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் 'தம்மை ஐயுறாத பிறன்' என்று உரைப்பாரும் உளர்.

தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவின்றி அயலான் மனைவியை விரும்புபவன்', 'தன் குற்றத்தைத் தினையளவும் ஆராய்ந்து பாராது பிறர்மனையில் நுழைந்தால்', 'சிறிதேனும் எண்ணிப் பார்க்காமல் இன்னொருவனுடைய மனைவியின்மேல் காமங்கொண்டு அவனுடைய வீட்டுக்குள் நுழைகிறவன் ', '(மயக்கத்தால்) தினையளவும் தன் குற்றத்தை ஆராய்ந்து அறியாதவனாய்ப் பிறன் மனைவியை விரும்பி அவன் வீட்டினுள் நுழைதல்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

இது தகாது என்று சிறிதும் எண்ணமாட்டாதவனாய் பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லின்கண் நுழைதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இது தகாது என்று சிறிதும் எண்ணமாட்டாதவனாய் பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லத்திற்குள் நுழைதல் எனைத்துணையர் ஆயினும் என்ன? என்பது பாடலின் பொருள்.
'எனைத்துணையர்' என்பதன் பொருள் என்ன?

யாராக இருந்தாலும் என்ன? பிறன் மனைவியை நாடிச் செல்பவன் சிறுமையுடையவனே.

செய்வது இழிதகைமையானது என்பதைச் சிறிதளவும் எண்ணிப்பாராது பிறன் மனைவியை நாடி அவன் வீட்டிற்குள் நுழைதல், எவ்வளவு பெருமையுடையவரையும் தாழ வைப்பதன்றி வேறு என்னவாகும்?
ஒருவர் எல்லாவகையான தகுதிகள் அமைந்தவராய் இருந்தும் தமக்கு வாய்த்துள்ள தகுதிகளின் அமைதியைச் சிறிதும் எண்ணாமல் காமத்தால் மயங்கிப் பிறர் மனையில் புகுபவாரானால் அந்தப் பெருமையெல்லாம் போய்ச் சிறுமையே வந்து சேரும். அவ்வாறு பிறன்மனை நுழைதலால் உண்டாகக்கூடிய இழிதகைமையைப் பற்றித் தினையளவுகூட நினையாது, புலனின்பம் மட்டுமே கருதி, தனக்கு உரிமையில்லாத இல்லாளைக் கூடுபவனது மற்றச் சிறப்புகளினால் என்ன பயன்? அவனது வானுயர் தோற்றமும் எவன் செய்யும்? பிறனில் புகுந்த உடனே உலகோர் பார்வையில் அவன் சிறியவனாகிவிடுகிறான். செல்வம், செல்வாக்கு, பதவி, கல்வியறிவு, புகழ் இவற்றில் பெருமை சேர்த்திருந்தாலும் அடுத்தவன் மனைவியைக் கூடச் சென்றவன் இழிவையும் வெறுமையையுமே எய்துவான். அவன் சேர்த்துவத்த அத்துணைச் சிறப்புகளும் அவன் செய்த இழிசெயலை மறைத்துவிட முடியாது.
பெரிய மனிதர்களின் காம விழைவால், செயல்களால் ஏற்பட்ட சமூகக் களங்கமும் இழிவும் எக்காலத்திலும் மறையாது. செல்வம், பதவிகள் வழியும் வரலாற்றில் பதியப்பெற்ற தீராப் பழியை அழித்துவிட முடியாது. ஒழுக்கமின்மைக்கு ஒரு பெரும் அடையாளம் பிறர் மனைவியை விரும்பும் கீழ்மைக் குணம். அத்தகைய குணமுடையவன் சமூகத்தில் பிற துறைகளில் வெற்றியாளனாகக் காட்சியளிப்பானாயினும் பகையும் அச்சமும் தீச்செயல் புரிந்த குற்றவுணர்வும் இருந்துகொண்டே இருக்கும். இந்திரன் தேவர்களுக்கே தலைவனாயினும் கௌதமரின் மனைவி அகலிகையை விழைந்து கூடியதால் மிக உயர்ந்த இந்திரபதவியையும் பெருமையையும் இழந்ததை இக்குறளுக்குச் சான்று காட்டுவார் பரிமேலழகர்.

ஒருவருடைய பிற உயர்வினை நோக்கிச் சிறப்பு ஒருமையாற் குறிப்பிட்டு (எனைத்துணையர்), அவன் பிறர்மனை நயந்த வெறுக்கத்தக்க பண்பினை ஆற்றமாட்டாத நெஞ்சினராய் வள்ளுவர் அவன் தாழ்ந்து விட்டதை உணர்த்துவதற்காக அவனை ஒருமையாற் (தேரான்) இழித்துரைத்தார்.

'எனைத்துணையர்' என்பதன் பொருள் என்ன?

'எனைத்துணையர்' என்பதற்கு எல்லாவமைதியினையும் உடையவர், குலத்தாலும் செல்வத்தாலும் பெரியவன், வாழ்வு இறந்த நன்மையை உடையவர், அன்பினர், எத்துணைப் பெருமையுடையார், எவ்வளவு உயர்ந்த நிலையினர், எவ்வளவு பெருமையுடையவர், எவ்வளவு பெருமையுடையவன், எத்தகைய பெருமையும் சிறப்பும் உடையவர், எத்துணை உயர்ந்தோர், எத்துணைப் பெருமையுடையவர், எத்தனைப் பெருமை உடையவன், எவ்வளவு பெரிய மனிதன், எவ்வளவு மேம்பாடு உடையவர் என்று உரைகாரர்கள் பொருள் கூறினர்.

காலிங்கர் உரை 'ஒருவர் வாழ்வு இறந்த நன்மையை உடையவர் அன்பினராயினும்...' என்கிறது. பாடலிலுள்ள 'எனைதுணையராயினும்' என்பதற்கு 'எவ்வளவு பெரிய துணையை உடையராயினும்' என்ற கருத்தமையக் காலிங்கர் எழுதினார் என்று கூறி, தண்டபாணி தேசிகர் 'ஏனையோர் உரைகள் 'எவ்வளவு பெருமையுடையனாயினும் அதனாற் பயனில்லை' என்பதை மட்டும் கருதின. இவர் உரை எவ்வளவு பெரியோனாயினும், எவ்வளவு சிறியோனாயினும் இரு திறத்தார்க்கும் இல்லிறத்தலின் பயன் ஒன்றே என்ற கருத்தை வழங்குகிறது. ஏனைய உரையாசிரியர்கள் உள்ள சிறுமையில் பிறர்மனை நயத்தலால் வரும் சிறுமை தோன்றாது ஆதலின் அதனை யொழித்து எத்துணைப் பெரியராயினும் என ஒன்றே கூறிய நயம் இன்புறுதற்குரியது. 'துணைவலி பெரிதாயினும்' என்ற காளிங்கர் உரை புதுமையானது' என்று விளக்கமும் தருவார்.
பின்னால் வரும் மானக்கேட்டினைச் சிறுதும் தேர்ந்தறியாது பிறன் மனை விழைதல் எவ்வளவு பெருமை கொண்டவாராயினார்க்கும் இழிவானதே. மற்றவகையில் எத்துணைச் சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் - நாட்டின் தலைவரோ, சமயக் குரவரோ, விளையாட்டு வீரரோ எவராக இருந்தாலும்- அவர்களின் சிந்தனையற்ற காம இச்சையால், செயல்களால் ஏற்பட்ட கறை எக்காலத்திலும் மறைந்துவிடாது. கோடிகளைக் கொட்டியோ செல்வாக்கை மிகச் செலுத்தியோ, என்ன செய்தாலும் மங்கிய பெயரை மீட்டெடுக்க முடியாது. பெருமை பொருந்தியவர்கள் பிறன் மனை புகாதிருந்து தங்கள் மதிப்பை காத்துக்கொள்ள வேண்டும் என்பது கருத்து.

'எனைத்துணையர்' என்பதற்கு எவ்வளவு பெரியவர் என்பது பொருள்.

இது தகாது என்று சிறிதும் எண்ணமாட்டாதவனாய் பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லின்கண் நுழைதல் எனைத்துணையர் ஆயினும் என்ன? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பிறனில் விழையாமை பெருமை காக்கும்.

பொழிப்பு

தன் குற்றத்தைச் சிறிதளவும் எண்ணிப்பாராமல் பிறன்மனையில் நுழைதல் எவ்வளவு பெரியவனாயினும் என்னவாம்?