இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0143விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார்

(அதிகாரம்:பிறனில் விழையாமை குறள் எண்:143)

பொழிப்பு: ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்.

மணக்குடவர் உரை: தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாகச் செத்தாரின் வேறல்லர்.
இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.

பரிமேலழகர் உரை: தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார், விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர்.
(அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்', என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.)

இரா சாரங்கபாணி உரை: நம்பியவர் மனைவியை விழைந்து தீமை செய்வோர் செத்தவரினும் வேறுபட்டவர் அல்லர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தெளிந்தார்இல் தீமை புரிந்தொழுகுவார் விளிந்தாரின் வேறல்லர் மன்ற .


விளிந்தாரின் வேறல்லர் மன்ற:
பதவுரை: விளிந்தாரின்-இறந்தவரைக் காட்டிலும்; வேறு-பிறர்; அல்லர்-ஆக மாட்டார்; மன்ற-திண்ணமாக.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மெய்யாகச் செத்தாரின் வேறல்லர்.
பரிப்பெருமாள்: மெய்யாகச் செத்தாரின் வேறல்லர்.
பரிதி: செத்தாரோடு ஒப்பான் என்றவாறு.
பரிமேலழகர்: உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர்.
பரிமேலழகர் குறிப்புரை: அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்', என்றும்;

'உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செத்தவரல்லது வாழ்பவர் அல்லர்', 'செத்த பிணத்துக்கு ஒப்பாவான்', 'இறந்தாரின் வேறாகார். (அது திண்ணம்.)', '(உயிருடையவரேனும்) இறந்தவரே ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

திண்ணமாக செத்தவரினும் வேறுபட்டவர் அல்லர் என்பது இப்பகுதியின் பொருள்.

தெளிந்தார்இல் தீமை புரிந்தொழுகு வார்:
பதவுரை: தெளிந்தார்-ஐயுறாதவர்; இல்-இல்லாள்; தீமை-கெடுதி; புரிந்து-விரும்பி; ஒழுகுவார்-நடந்து கொள்பவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.
பரிப்பெருமாள்: தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.
பரிதி: தம்மை நம்பினார் மனைவியை விரும்புவான்.
பரிமேலழகர்: தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார்.
பரிமேலழகர் குறிப்புரை: அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.

'தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நம்பினவர் வீட்டில் தீமை செய்பவர்', 'தன்னை மிகவும் நம்பியிருந்தவனுடைய மனைவியின் காம இன்பத்தை விரும்பியலைகிற ஒருவன்', 'நம்பினவரது மனைவியிடத்தே தீயன விரும்பிச் செய்தொழுகுவார் உயிருடைய ரேனும் அறிவிலராகலின்', 'தம்மைப் பற்றி ஐயம் கொள்ளாதார் தீய ஒழுக்கத்துடன் நடந்து கொள்பவர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தம்மை நம்பினவர் மனைவியை விரும்பியலைகிறவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நம்பியவரின் மனைவிமேல் காமம் கொண்டு வஞ்சனை செய்பவர்கள் செத்தவர்களாகத்தான் இருக்கமுடியும்.

தம்மை நம்பினவர் மனைவியை விரும்பியலைகிறவர் திண்ணமாக விளிந்தாரின் வேறுபட்டவர் அல்லர் என்பது பாடலின் பொருள்.
'விளிந்தார்' என ஏன் அவர் பழிக்கப்படுகிறார்?

வேறல்லர் என்றதற்கு வேறுபட்டவர் அல்லர் என்பது பொருள்.
மன்ற என்பது உறுதிப் பொருள் தரும் இடைச்சொல்.
தெளிந்தார் என்ற சொல்லுக்கு ஐயப்படாதார் அதாவது நம்பியவர் என்று பொருள்.
இல் என்ற சொல்லுக்கு இல்லத்தில் என்றும் இல்லாள் என்றும் பொருள் கொண்டனர்.
தீமை புரிந்து என்ற தொடர் தீமையைச் செய்தலை விரும்பி எனப் பொருள்படும்.
ஒழுகுவார் என்ற சொல் நடந்துகொள்பவர் என்ற பொருள் தருவது.

தம்மை நம்பினவர் மனைவியிடம் தகாது செய்தலை விரும்பி நடப்பவர்கள், உயிருடையரென்றாலும் திண்ணமாகச் செத்தாரேயாவர்.

தம்மை நல்லவனென்று நம்பிக் கள்ளமில்லாமல் தெளிந்த மனதுடன் பழகுபவருடைய இல்லாளோடு தீய விதத்தில் உறவு கொள்ள விரும்பியொழுகுவார் பிணமே அல்லாமல் வேறல்ல, இது உறுதி என்கிறது பாடல். அவர் உயிரோடு நடமாடிக்கொண்டிருந்தாலுங்கூட விளிந்தார் கூட்டத்துடன் சேர்க்கத்தக்கவர்; அவரை பிணம் போல் கருதி ஒதுக்க வேண்டும் என்பது பொருள்.
நம்பிக்கைக்கு மாறாக நடவாதவருக்குக் காட்டாக மகாபாரத நிகழ்வு ஒன்றை நினைவிற்குக் கொண்டு வரலாம். சொக்கட்டான் ஆட்டத்தில் தோற்றுக்கொண்டிருக்கும் துரியோதனது மனைவி பானுமதி பாதியிலேயே எழுந்து செல்லமுற்பட, துரியோதனின் நண்பனான கர்ணன், அவள் கையை உரிமையுடன் பிடித்துத் த்டுத்த பொழுது அவளுடைய மேகலையையும் தவறுதலாகப் பற்றி இழுத்துவிட்டான். மேகலையில் கோர்த்திருந்த மணிகள் அறுந்துவிழுந்து விட்டன. அப்பொழுது அங்கே வந்த துரியோதன் அம்மணிகளைப் பொறுக்கக் குனிந்து, “எடுக்கவோ, கோக்கவோ” என்று கேட்கிறான். இங்கு சொல்லப்பட்ட காட்சியில் களங்கம் இல்லை. நண்பனின் நடத்தையில் ஐயம் கொள்ள இடமில்லை. எனவேதான் துரியோதனன் சினம் கொள்ளவில்லை; நண்பனின் முறையற்ற செயலை ஒரு பொருட்டாகவும் கருதவில்லை.
ஆனால் எல்லோரும் கர்ணன்போல் நல்லவராக இருப்பதில்லை. சிலர் தம்மை நல்லவர் என்று தெளிந்து ஐயப்படாமல் வீட்டில் இடம் கொடுத்தவரின் மனைவியை அடைய முனைந்து நம்பிக்கைக்கு உரிய இடத்தை வஞ்சனைக்கு உரிய இடமாய் மாற்றி விடுகின்றனர். அப்படிப்பட்டவர்களை வெறுத்து வள்ளுவர் நடமாடும் பிணங்கள் எனக் கடிகின்றார்.
இப்பாடலில் வரும் 'மன்ற' என்ற சொல்லை தெளிந்தார் என்பதுடன் இயைத்து அதாவது திண்ணமாக நம்பியவர் என்பதாகச் சிலர் பொருள் கூறினர். மன்ற என்ற சொல்லின் முன்வரும் தொடரோடு இயைத்துப் பொருள் காண்பதுதான் குறள் வழக்கு. எனவே விளிந்தார் என்பதுடன் இயைத்து திண்ணமாக இறந்தவரே எனக் கொள்வதே இயல்பு.

'விளிந்தார்' என ஏன் அவர் பழிக்கப்படுகிறார்?

விளிந்தார் என்பதற்கு இறந்தவர், மாண்டவர் என்று பொருள். இங்கு விழித்துக்கொண்டு உயிருடன் இருக்கிறார். அவ்வளவே மற்றப்படி மாந்தர்க்குள்ள பண்புகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. உரைகாரர்கள் இச்சொல்லுக்கு மெய்யாகச் செத்தார், செத்தவர், செத்தாரோடு ஒப்பான், செத்தவர், செத்த பிணங்களுக்கு சமானமானவர், இறந்தவர், பிணங்களுக்குச் சமமானவர், சவம் எனப் பொருள் கூறினர்.

மணக்குடவர்/பரிப்பெருமாள் அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்பர் எனப்பட்டனர் எனக் காரணம் காட்டுவர். விளிதல் உறுதி. அதுவும் விரைவில் நிகழும் என்று கருதிய சிலர் 'உடையவனுக்குத் தெரிந்தபோது இவன் உயிர்க்கு இறுதி வருதல் துணிபாதலின் விளிந்தாரின் 'வேறு அல்லர்' என்றார்' என்றனர். உயிர் அடையவேண்டிய அறம்பொருளின்பங்களை அடையாமை பற்றியும், தீமை செய்யாரென்று நம்பிப் பழகவிட்ட நிலைமையையே தீமை செய்தற்குப் பயன்படுத்தியது பற்றியும், உயிருடையவரேனும் செத்தவரே என்றார் என்பது தேவநேயப்பாவாணர் கருத்து. தெ பொ மீ 'அவன் பிறனது இல்லறத்தினையே கெடுக்கின்றான்; பிறனொருவனுக்கு அறத்தானொன்றும் இல்லாதவாறு செய்து பெரும்பழி சூழ்கின்றானே என்று மனம் எரிந்தே திருவள்ளுவர் இறந்தாரோடு பிறர்மனை நயந்தாரையும் வைத்து எண்ணுகின்றார்' என விளக்கம் தருவார். நம்பியவரின் இல்லத்தில் தீமை செய்தவர் "அறமற்றதைச் செய்வதை விடச் செத்துப்போகலாம்' என்றும் விளிந்தார் என்ற சொல்லாட்சிக்கு விளக்கம் தருவர். இன்னும் சிலர் அவனைப் பிணம் என்று கருதி ஒதுக்கி அவனை மறந்து விடுங்கள் என இக்குறள் கூறுவதாக உரை செய்தனர்.
தன்னை நம்பியவரின் மனைவியை விரும்புகிறவன், உடல் இன்பம் ஒன்றையே மனதில் கொண்டு, தன் மனச்சான்றை உறைய வைத்துவிடுகிறான். காமம் மட்டும் சார்ந்த உறவில் காதல் இருப்பதில்லை. காதல் இல்லாக் காமம் என்பது பிணம் உடல் உறவுக்கு முயல்வதை ஒக்கும். எனவே பிணம் என்றார்.

தம்மை நம்பினவர் மனைவியை விரும்பியலைகிறவர் திண்ணமாக செத்தவரினும் வேறுபட்டவர் அல்லர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நம்பியவன் வீட்டில் வஞ்சகத்துடன் நுழைபவனைப் பிணம் என்று கருதுக என்னும் பிறனில் விழையாமை பாடல்.

பொழிப்பு

நம்பினவர் இல்லாளை விழைந்து தீமை செய்வோர் செத்தவரினும் வேறுபட்டவர் அல்லர்.