இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0142அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்

(அதிகாரம்:பிறனில் விழையாமை குறள் எண்:142)

பொழிப்பு: அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

மணக்குடவர் உரை: காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும், பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப் போல் அறியாதாரில்லை.

பரிமேலழகர் உரை: 'அறன்கடை' நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்- பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை.
(அறத்தின் நீக்கப்பட்டமையின் அறன்கடை என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார், எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பிறனது வாயிலில் நிற்பவனைப் போலப் பெரும்பாவியும் பெரும்பேதையும் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்.


அறன்கடை நின்றாருள் எல்லாம்:
பதவுரை: அறன்கடை-அறத்தின் நீக்கப்பட்டவை; நின்றாருள்-நின்றவர்களுள்; எல்லாம்-அனைத்தும், எவையும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும்;
பரிப்பெருமாள்: அறனும் பொருளும் அறியாது இன்பமே கருதிப் பெண்வழிச்சென்றும், விலைமகளோடு கலந்தும், இழிகுலத்தாரைத் தழுவியும் ஒழுகும் எல்லாரினும்;
பரிதி: கடையாகிய பாவத்தில் நிற்பவர்க்குள்ளே;
பரிமேலழகர்: காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்;
பரிமேலழகர் குறிப்புரை: அறத்தின் நீக்கப்பட்டமையின் அறன்கடை என்றார்.

'காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பாவம் செய்தவர் எல்லாருள்ளும்', 'இல்லற ஒழுக்கத்தில கடை கெட்டவர்கள் எல்லாரிலும்', 'பாவ நிலையில் நிற்பார் எல்லாருள்ளும்', 'அறத்திற்குப் புறம் போகின்ற கயவர்களுள்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறமற்ற தீச்செயல்கள் புரிவார் எல்லாருள்ளும் என்பது இப்பகுதியின் பொருள்.

பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்:
பதவுரை: பிறன்-மற்றவன்; கடை-வாயிலில்; நின்றாரின்-நின்றவர் போல; பேதையார்-அறிவிலார்; இல்-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப் போல் அறியாதாரில்லை.
பரிப்பெருமாள்: இவரைப்போல அறியாதாரில்லை. அவர்கள் இன்பந்தன்னைப் பெறுவர். இவர்கள் அதுதானும் பெறாராதலின் என்றவாறு. பெறாமை என்னை எனின், அச்சமுடையார்க்கு இன்பம் இன்றாம்; புக்கவிடத்து அச்சம் எக்காலும் அச்சமாதலின்.
பரிதி: பிறன்மனையாளை விரும்புவரைப் போலப் பேதையார் இல்லை.
பரிதி குறிப்புரை: தன்மத்தின் கண்ணே நின்றவர்க்குள்ளே பெரியவர் ஆர் எனில், பிறர்மனை நோக்காமல் இருப்பவரே என்றவாறு.
பரிமேலழகர்: பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார், எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.

பிறனது தலைவாசலில் நின்றவரைப் போல் அறியாதார் இல்லை என்று மணக்குடவ்ர் இப்பகுதிக்குப் பொருளுரைத்தார். பரிபெருமாள் இன்பமே கருதிப் பெண்வழிச்சென்றும், விலைமகளோடு கலந்தும், இழிகுலத்தாரைத் தழுவியவரைப் போல அறிந்தாரில்லை எனச் சொல்லி அவர்கள் பெறும் இன்பம் போலி இன்பம் என்றும் கூறுகிறார். பரிதியும் இவர்கள் பேதையார் எனக் கூறி அறம் செய்பவர்களில் பெரியார் பிறன்மனை நோக்காதாரே எனவும் கூறினார். பரிமேலழகர் உரை பெரிதும் பரிப்பெருமாள் உரை தழுவியதாய் உள்ளது.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறன் மனைவியை விரும்பி அவன் வாயிற்படியில் சென்று நின்றவர் போல அறிவிலிகள் இல்லை', 'இன்னொருவனுடைய மனைவியின்மேல் காம ஆசைகொண்டு அவனுடைய வாசலுக்குப் போகிறவனைவிட மூடன் வேறு யாருமில்லை', 'அயலான் வாயிலில் போய் அவன் இல்லாளை விரும்பி நிற்பாரைப் போல் அறிவிலிகள் இல்லை', 'பிறன் மனைவியை விரும்பி அவன் வாசலில் சென்று நின்றவர்கள் போல அறியாமையுடையார் இலர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பிறன் மனைவியை நயந்து அவன் வாயிலில் சென்று நிற்பார் போல அறிவிலிகள் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறத்திற்குப் புறம்பாக வாழ்வோருள் பிறன்மனைவியை விரும்பிப் புறக்கடையில் சென்று நிற்பவர்களைவிட அறிவிலிகள் யாரும் இல்லை.

அறத்தின் கடை எல்லையில் நின்றார் எல்லாருள்ளும் பிறன்கடை நின்றாரின் அறிவிலிகள் இல்லை என்பது பாடலின் பொருள்.
'பிறன்கடை நின்றார்' யார்?

அறன்கடை நின்றாருள் எல்லாம் என்ற தொடர் 'அறத்திற் கடையவராக நிற்பவர் எல்லாருள்ளும்' என்ற பொருள் தரும்.
பேதையார் இல் என்ற தொடர் அறிவிலிகள் இல்லை எனப்பொருள்படும்.

அறத்திற் கடையவராக உள்ள எவருள்ளும் இன்னொருவன் மனைவியின் வாயிலிலே நின்றவரைப் போல அறிவில்லாதவர் யாருமில்லை.

அறத்தைவிட்டுத் தீ நெறியில் ஒழுகுபவர் பலவகையானவர்கள்; அவர்களுள் பிறன்மனைவியை விரும்பிப் அவன் கடைவாயிலில் சென்று நிற்பவர்களே தாழ்வானவர்கள்; அவர்களைப் போல் அறிவிலிகள் வேறு எவரும் இல்லை. ஏன் அறிவிலிகள் என்று சொல்லப்படுகிறார் என்பதற்குப் பரிப்பெருமாள் தரும் விளக்கமாவது: 'இன்பமே கருதிப் பெண்வழிச்சென்றும், விலைமகளோடு கலந்தும், இழிகுலத்தாரைத் தழுவியும் ஒழுகும் எல்லாரினும் இவரைப்போல அறியாதாரில்லை. அவர்கள் இன்பந்தன்னைப் பெறுவர். பிறன்மனை நயந்தார் அதுதானும் பெறாராதலின் என்றவாறு. பெறாமை என்னை எனின், அச்சமுடையார்க்கு இன்பம் இன்றாம்; புக்கவிடத்து அச்சம் எக்காலும் அச்சமாதலின். முற்கூறியவாறு ஒழுகுவான் இன்பமாயினும் பெறுவான். இவன் அதனையும் பெறான்'.

அறன்கடை நின்றார் என்பதற்கு உரையாளர்கள் காமத்தின்கண்ணே நின்றார், காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார், அறத்தினைச் செய்யாது வாழும் மாந்தரில் கடைசியில் நிற்போர், இல்லற தர்மங்களில் கீழ்க்கடையானவர்கள், அறத்திற் கடையவராக, பாவ நிலையில் நிற்பார் எல்லாருள்ளும், அறத்திற்குப் புறம் போகின்ற கயவர்கள், அறத்தின் எல்லையைக் கடந்த தீயவர்கள், தீமையின்கண் நின்றவர், காமம்பற்றித் தீவினை செய்தார், அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்கள், பாவ வழியில் நடக்கும் மனிதர்கள், அறத்தை விட்டுத் தீய நெறியில் ஒழுகும் கொடியவர்கள், மறத்தின்கண் நின்றவர்கள், அறனற்ற காமத் தீநெறி நின்றார் எனப் பொருள் கூறினர். அனைத்தும் கருத்தளவில் ஒத்தனவே.
அறன்கடை என்பது பாவம் எனப்பொருள்படும். அறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்னும் கருத்தால் பாவம் அறன்கடை எனப்பட்டது. அறன்கடை நின்றார் என்றது அனைத்துப் பாவமும் அடங்கக் கடையாகிய பாவத்தில் நிற்பவர் எனப்பொருள்தரும்.
அறன்கடை என்பதற்கு அறத்திற்குக் கடையாவது காமம் என்றும் பொருள் கூறுவர். அதன்கண் நிற்றல் அதாவது காமத்தின் க்ண் நிற்றல் என்பது இழிந்த மகளிரையும் விலைமாதையும் புணர்தல் என்று சொல்லி அதனினும் கடையாய பேதைமை பிறன் கடைவாயிலின் நிற்றல் எனவும் கருதுவர். காம இன்பத்தை விரும்பிப் பிறன் மனைவியை நாடுபவன், அறவழியில் செல்வதை விட்டுவிட்ட அறிவிலிகளுள், மிகவும் தாழ்ந்தவன் என்பது பொருள்.

'பிறன்கடை நின்றார்' யார்?

பிறன்கடை என்ற சொல் பிறனுடைய வாயில் என்ற பொருள் தரும். பிறன்கடை நின்றார் என்ற சொல்லுக்கு பிறனுடைய வாயிலில் நின்றவர் என்று பொருள்.
பிறன் (வீட்டுப்) புறவாயி லின்கண் நின்றவர் என்றும் பொருள் காண்பர். வ உ சி 'பிறன் மனையாளிடம் செல்பவர் அவன் வீட்டு முன்வாயில் வழியாகச் செல்லாமல் ஒளிந்து பின் வாயில் வழியாகச் செல்வது வழக்காகலின், ‘பிறன்கடை நின்றார்’ என்றார்' என உரைத்தார். பிறன் கடைநிற்றல் என்பது இரப்போன் நிலை போன்ற இழிவையும் உணர்த்திற்று இத்தொடர்க்கு பிறன் வாசலில் திருட்டுத்த்னமாக நிற்பவன் என்றும் பொருள் கூறினர். மற்றவன் மனைவியின் பின் செல்பவர்கள் இழிவும் கள்ளத்தன இயல்பும் உடையவர் என்பதைச் சொல்வது இத்தொடர்.

'பிறன்கடை நின்றார்' என்பது பிறன் வாசலில் நின்றவர் என்ற பொருள் தருவது.

அறமற்ற தீச்செயல்கள் புரிவார் எல்லாருள்ளும் பிறன் மனைவியை நயந்து அவன் வாயிலில் சென்று நிற்பார் போல அறிவிலிகள் இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அறங்கெட்டவரிலும் கேடு கெட்டவர் பிறர் மனைவியை நாடி புறவாயிலில் நிற்பவர் என்னும் பிறனில் விழையாமை பாடல்.

பொழிப்பு

அறம் நீங்கியவை செய்தவர் அனைவரிலும் பிறன் மனைவியை நயந்து அவன் வாயிலில் சென்று நின்றவர் போல அறிவிலிகள் இல்லை.