இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0130



கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:130)

பொழிப்பு: சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

மணக்குடவர் உரை: வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும்.
இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி - மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை, அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெறியின்கண் சென்று.
(அடங்குதல் - மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி - தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி முகங்கள் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம்: உரை: உள்ளக் கொதிப்பை அடக்கிய வல்லவனைக் காண்பதற்கு அறம் காத்துக் கிடக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.


கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி:
பதவுரை: கதம்-சினம்; காத்து-காப்பாற்றி; கற்று-பழகி; அடங்கல்-தன்வசமாதல்; ஆற்றுவான்-செய்ய வல்லவனது; செவ்வி-தகுந்த நேரம்..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு;
பரிதி: கோபத்தை விட்டுப் பலகாவியம் கற்றும், கற்றதின் வழியே அடக்கமுடைமையும் உண்டாமாகில்;
பரிமேலழகர்: மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை;
பரிமேலழகர் குறிப்புரை: அடங்குதல் - மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி - தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி முகங்கள் இனியனாம் ஆம் காலம்.

'மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளக் கொதிப்பை அடக்கிய வல்லவனைக் காண்பதற்கு', 'அற நூல்களைக் கற்றுச் சினம் வாராமல் காத்து அடங்கி ஒழுகுபவனைக் காண நல்ல சமயத்தை', 'சினத்தை மனத்தின்கண் தோன்றாது தடுத்துக் கற்பன கற்றுக் கற்றபடி அடங்க வல்லவனது வழியிலே சமயத்தை எதிர்பார்த்திருப்பான்', 'மனத்தின் கண் வெகுளி (கோபம்) தோன்றாமல் காத்து, கற்க வேண்டிய நூற்பொருள்களைக் கற்று அடங்கியிருக்கக் கூடியவனின் செவ்வியை (பார்க்கும் காலத்தை) ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சினம் மனத்தில் தோன்றாமல் அடக்கப் பழகி ஒழுகுபவனைக் காணச் சமயம் பார்த்து என்பது இப்பகுதியின் பொருள்.

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து:
பதவுரை: அறம்-அறக்கடவுள்; பார்க்கும்-நோக்கும்; ஆற்றின்-நெறியின்கண்; நுழைந்து-நுணுகிச் சென்று.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.
பரிதி: அவன்பக்கல் தன்ம தேவதை வரும் என்றவாறு.
பரிமேலழகர்: அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெறியின்கண் சென்று.
பரிமேலழகர் குறிப்புரை: இப்பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.

'அறக் கடவுள் அவனை அடையும் நெறியின்கண் சென்று பாராநிற்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறம் காத்துக் கிடக்கும்', 'அறக்கடவுள் வழி நுழைந்து எதிர் நோக்கும்.', 'அறக்கடவுள் புகுந்து நின்று', 'அறக்கடவுள் அடையும் வழியில் சென்று பாரா நிற்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அறக்கடவுள் அவன் வழி நுழைந்து எதிர் நோக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சினம் காக்கப் பழகி ஒழுகுபவனைக் காண அறமே காத்துக் கிடக்கும் என்னும் பாடல்.

கதம்காத்து அடக்கப் பழகி ஒழுகுபவனைக் காணச் சமயம் பார்த்து அறக்கடவுள் அவன் வழி நுழைந்து எதிர் நோக்கும் என்பது பாடலின் பொருள்.
'கதம்காத்து' என்றால் என்ன?

கற்று என்ற சொல்லுக்கு இங்கு பழகி என்பது பொருள்.
அடங்கல் ஆற்றுவான் என்ற தொடர் அடக்கத்துடன் ஒழுகுபவன் என்ற பொருள் தரும்.
செவ்வி பார்க்கும் என்றதற்கு ஏற்றகாலம் பார்த்திருக்கும் என்றும் செவ்வையான நிலை என்றும் பொருள் கொள்வர்.
அறம் என்ற சொல்லுக்கு அறக்கடவுள் என்று பொருள்.
ஆற்றின் நுழைந்து என்பது வழியில் நுழைந்து எனப் பொருள்படும்.

மனத்தின் கண் எழும் சினம் காத்து, அடங்கியிருக்கக் கூடியவனைக் கண்டு மகிழும் நற்பொழுதுக்காக அறக்கடவுள் உரிய வழியைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

சீற்றத்தைக் கட்டுப்படுத்தும் அடக்கமுடைமை பற்றிய பாடல் இது.
சினம் காத்தல் பற்றி வெகுளாமை என்று ஒரு தனி அதிகாரமே குறளில் உள்ளது. சினமே எல்லா தீமைகளுக்கும் ஊற்றுக்கண் என்றும் சினம் சினங்கொண்டவரையே இறுதியில் அழிக்கும் என்றும் சினத்தை அடக்க முடியாதவரைப் பற்றி அங்கு சொல்லப்பட்டிருக்கிறது. சினத்தை அடக்கிக் காக்கப் பழகியவனைக் காண அறக்கடவுள் வழியில் நின்று காத்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், வெகுளியை அடக்குபவர்க்கு மிகப் பெரிய சிறப்புச் செய்யும் வகையில் இப்பாடல் அமைந்தது.
இப்பாடலில் உள்ள கற்று என்ற சொல்லுக்குப் பெரும்பான்மையோர் அறநூல்கள் போன்றவற்றைக் கற்று என உரை செய்தனர். சிலர் அடக்கமுடையவனாக இருந்து கல்வி கற்றவனாக இருப்பவன் என்று கற்றடங்கல் ஆற்றுபவன் என்பதற்குப் பொருள் கூறினர். அடங்கி நடப்பதற்குக் கல்வி கற்கத் தேவையில்லை. நாமக்கல் இராமலிங்கம் உரை இதில் தெளிவு பயக்கும். அவர் 'கதங்காத்து அதற்குப்பின் கல்வியறிவுடையவனாக வேண்டும் என்பதில் அர்த்தமில்லை' எனக் கூறுகிறார். 'கற்று கதங்காத்து அடங்கி' எனச் சொற்களை மாற்றிப் பொருள் கொண்ட வேறொரு உரையும் சிறப்பாக இல்லை.
'கதம் காத்து கற்றடங்கல் ஆற்றுவான்' என்றதற்குச் சினம் காத்து அதை அடக்கப் பயின்றொழுகுபவன் என்பதாகத்தான் கொள்ளவேண்டும்.

'செவ்வி பார்க்கும்' என்ற தொடர்க்குக் காலம் பார்க்கும், அவன் பக்கல் தன்மதேவதை வரும், வழி பார்க்கும், வழியில் பார்த்து நிற்கும், கோபத்தையடக்கிப் பழகியவனுடைய நலத்தை அறக்கடவுள் தானே பார்த்துக் கொள்ளும், கலந்து நின்று பேசும் உணர்வு நிலையைப் பாதுகாத்து வளர்த்துக் கொள்ளும் சூழலைக் கருதுவது எனப் பல வகையாக உரைகள் காணப்படுகின்றன. நல்ல காலம் பார்த்தலைச் செவ்வி அறிதல் என்று கூறுவது வழக்கு. இதைப் பரிமேலழகர் 'தன்குறை சொல்லிக் கொள்ளுதற்கு ஏற்ற மனமொழி மெய்கள் இனியனாம்காலம்' எனக் குறிக்கிறார்.
பாடலின் பிற்பகுதியான 'செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து' என்பது கவிதைச் சிறப்புடன் அமைந்துள்ளது. இப்பகுதியை வெவ்வேறு விதமாகச் சுவையாக விளக்கினர். அவற்றில் சில:

  • அடங்கி ஒழுக வல்லவனை அறம் தானே தேடிச்செல்லும்; உரிய வழியில் சென்று அவனுடைய செவ்வியை அறம் பார்த்துக்கொண்டிருக்கும்.
  • மனம் அடங்கும் வகை கண்டு அதில் வெற்றி பெறுபவன் செல்லும் வழிதேடிப் புகுந்து, அவன் வரும்போது அவனை எளிதில்கண்டு எதிர்கொண்டு வரவேற்றுப் பாராட்டுவதற் குரிய சரியான இட நேர வாய்ப்புக்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு நிற்கும்.
  • அடங்கி நடப்பவன் வெற்றியைப் பார்க்க சமயம் பார்த்து தருமதேவதை வீடு தேடி வரும்.
  • தன்னடக்கத்தோடு இருப்பவனுடைய செம்மை மிகவும் சிறப்புடையது. எனவே அறமானது செம்மலின் பாதையிலேயே பின்சென்று அவனைப் பாதுகாத்திருக்கும்.
  • அறமாவது அத்தகைய நல்லோனுக்குமெய் காப்பாளான இருக்கும் என்பதாம்.
  • சினம் தவிர்த்து, பொறுமை கற்று, அடக்கத்துடன் காரியம் ஆற்றுவானின் எழிலை, அழகை, அறமாகிய நல்லொழுக்கம் அவனது செயலாற்றலின் வழியே நுழைந்து பார்த்து நிற்கும்.
  • அடங்க வல்லவனது வழியிலே அறக்கடவுள் புகுந்து நின்று அவன் சமயத்தை எதிர்பார்த்திருப்பான்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை. (ஊக்கமுடைமை 594 பொருள்: அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு பொருள் தானே வழி வினவிக்கொண்டு செல்லும்) என்ற குறள்நடையில் அமைந்த பாடல் இது. அங்கு செல்வம்தான் தேடிச் செல்கிறது. இங்கோ தெய்வமே வழியில் நின்று காத்திருக்கும் என்று சொல்லப்படுவதால் அடக்கமுடையவன், குறிப்பாக, சினத்தை அடக்கியவன் பற்றி எவ்வளவு உயர்வான கருத்தை வள்ளுவர் கொண்டுள்ளார் என்பது எளிதில் புலனாகும்.

அறத்தினைத் தெய்வமாக உருவகப்படுத்திக் கூறப்பட்டுள்ளது. அறக்கடவுளை அறம் என்னும் சொல்லால் சுட்டுகிறது குறள். அறக்கடவுள் பற்றிய மற்ற குறட்பாக்கள்:
* என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம் (அன்புடைமை 77 பொருள்:எலும்பு இல்லாத உடலோடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதைப் போல, அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்' )
* மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ் சூழும் சூழ்ந்தவன் கேடு (தீவினை அச்சம் 204) பொருள்: பிறனுக்குக் கேட்டைத் தருகின்ற தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால் அவ்வாறு நினைத்தவனுக்கு கேடு விளையுமாறு அறக்கடவுள் எண்ணும்) .

ஆற்றின் உழைந்து என்பதனை, ஆற்றின் உழைந்து என்றும் ஆற்றின் நுழைந்து என்றும் பிரிக்கலாம். உழைந்து எனப் பிரித்து மணக்குடவர் வருந்தி எனப் பொருள் கொள்வர். ‘ இதன்படி 'அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும்' என உரை அமைகிறது. இதுவும் சிறப்பாகவே உள்ளது.

'கதம்காத்து' என்றால் என்ன?

சினமுற்றார் உடம்பு சூடேறிக் கதகதப்பாய் (இளஞ்சூடாய்) இருத்தலின், சினம் 'கதம்' எனப்பட்டது என்பர். கதம் என்ற சொல்லுக்குச் சினம், வெகுளி, கோபம், உள்ளக் கொதிப்பு எனப் பொருள் வழங்கினர். கதம் காத்து என்பது சினம் காரணமாக தீய வழியில் செல்லாமல்.காத்து எனப் பொருள்படும்.

கதங்காத்து என்பதற்குக் கடுங்கோபம் தனக்கு வாராது காத்து என்பது பொருள்.

சினம் மனத்தில் தோன்றாமல் அடக்கப் பழகி ஒழுகுபவனைக் காணச் சமயம் பார்த்து அறக்கடவுள் அவன் வழி நுழைந்து எதிர் நோக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சினம் காத்த அடக்கமுடைமை கொண்டவனை அறக்கடவுள் காத்திருந்து காண விழையும்.

பொழிப்பு

சினம் வாராமல் அடங்கி ஒழுகுபவனைக் காண அவனுக்குத் தகுந்த நேரம் வரும்வரை அறக்கடவுள் வழிமீது காத்துக் கிடக்கும்.