இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0127



யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:127)

பொழிப்பு (மு வரதராசன்): காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

மணக்குடவர் உரை: எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான்.
இது சோகத்தின்மாட்டே பிணிக்கப் படுவரென்பது.

பரிமேலழகர் உரை: யாகாவாராயினும் நாகாக்க - தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க, காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர்.
('யா' என்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணர நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம். 'அல்லாப்பர் செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல்.)

இரா சாரங்கபாணி உரை: ஒருவர் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவினைக் காப்பாராக. காக்கவிட்டால் சொற்குற்றப்பட்டு வருந்துவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சொல்லிழுக்குப் பட்டு சோகாப்பர் .

பதவுரை: யா-எவை; காவார்-காக்க மாட்டார்; ஆயினும்-ஆனாலும்; நா-நாக்கு; காக்க- காத்துக்கொள்க, அடக்குக; காவாக்கால்-காப்பாற்றாவிட்டால், அடக்காவிட்டால்; சோகாப்பர்-துன்பம் உழப்பர்; சொல்-பேச்சு, மொழி; இழுக்கு-குற்றம்; பட்டு-உற்று.


யாகாவார் ஆயினும் நாகாக்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக;
பரிப்பெருமாள்: எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக;
பரிதி: வாக்கும் மனமும் காயமும் அடங்காதபோது வாக்கையாகினும் பாதுகாக்க;
பரிமேலழகர்: தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க;
பரிமேலழகர் குறிப்புரை: 'யா' என்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணர நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.

'காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எவற்றை அடக்காவிடினும் நாக்கை அடக்குக', '(ஐந்து புலன்களில் மற்ற) எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கியாள வேண்டும்', 'காக்க வேண்டிய பிற எல்லாவற்றையுங் காவார் ஆயினும், மக்கள் தமது நாவினைக் காக்கக்கடவர்', 'எவற்றைக் காக்காது போயினும் நாவை மட்டும் காக்க', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எவற்றை காக்காது போயினும் நாக்கை அடக்குக என்பது இப்பகுதியின் பொருள்.

காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான்.
மணக்குடவர் குறிப்புரை: இது சோகத்தின்மாட்டே பிணிக்கப் படுவரென்பது.
பரிப்பெருமாள்: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல்நிலைமையின் திரியாமல் அடக்க வேண்டும் என்றார். அவ்வாறு செய்வது அரிதாயின், நா ஒன்றையும் அடக்க வேண்டும். அது பிறபயன் தருவதேயன்றிக் காலத்தே சோகத்தையும் தவிர்க்கும் ஆதலான் இது சோகத்தின் மாட்டே பிணிக்கப் படுவரென்பது
பரிதி: அப்படிக் காவாதபோது துன்பம் வரும் என்றவாறு.
பரிமேலழகர்: அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர்.
பரிமேலழகர் குறிப்புரை: சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம். 'அல்லாப்பர்ன்செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல்.

'அதனைக் காவாதபோது சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அடக்காவிடின் சொற்குற்றப்பட்டு வருந்துவாய்', '.நாக்கை அடக்கிப் பேசாவிட்டால் சொல் குற்றம் ஏற்பட்டுத் துன்பப்பட நேரும்', 'அதனைக் காவார் ஆயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் துன்புறுவர்', 'அதனைக் காவாராயின் சொல் குற்றத்தின்கண் பட்டுத் தாமே வருந்துவர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அதனைக் காவாராயின் சொல்குற்றத்தின்கண் பட்டுத் துன்புறுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:

எவற்றை காக்காது போயினும் நாக்கை அடக்குக; அதனைக் காவாராயின் சொல்குற்றத்தின்கண் பட்டு சோகாப்பர் என்பது பாடலின் பொருள்.
'சோகாப்பர்' என்பதன் பொருள் என்ன?

ஒருவரது சொல்லொழுக்கம் அவர் துன்பப்படாதவாறு காக்கும்.

காக்க வேண்டியவற்றுள் மற்றெவற்றைக் காத்துக்கொள்ளாது போயினும், ஒருவர் பேசுவதில் குற்றம் நிகழாதவாறு காத்துக் கொள்ளல் வேண்டும்; நாவினைக் காக்கத் தவறுவாரானால் அவர் சொற்குற்றத்திற்கு உள்ளாகித் துன்புறுவர்.
காக்கப்படுவன எல்லாம் காத்தற்குப் பெரும் முயற்சி தேவை. இங்கு காக்கப்படுவன எனக் குறிக்கப்பெறுவது மனம், மெய், மொழி ஆகியன. இவற்றுள் மிகவும் காக்கப்படவேண்டியதான மொழியை அடக்கியாளவேண்டும். நாக்கு அடங்காத தன்மை கொண்டது; அது மிகவும் கொடூரமான ஆயுதம் போன்றதாதலால், அதை ஆளமாட்டாதவர் சொற்குற்றத்தில் சிக்குண்டு துயருறுவர் என்கிறது பாடல்.
வாயில் இருந்து வரும் சொல் என்பது வில்லில் இருந்து எய்த அம்புபோன்றது; ஒருமுறை எய்துவிட்டால், அதை திரும்பப் பெற முடியாது. அதன் பாதிப்பையும் நேராக்க முடியாது. காட்டுபாடின்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசினால் இன்னல் வந்து சேரும். செருக்குடன் யாரையும், எதையும் மதிக்காமல் கூறப்படும் சொற்கள் தீமை உண்டாக்கும். இழிவாகப் பேசுதல், ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றித் தவறான கருத்து உண்டாகுமாறு செய்திகளைக் கூறல், ஒருவரைப்பற்றி மற்றொருவரிடத்தில் பொய்யானவற்றைச் சொல்லித் தவறான எண்ணத்தை உருவாக்கிப் பிரித்தல், பகை கொள்ளச் செய்தல், எள்ளல் செய்வது, மனம் புண்படும்படி பேசுவது, இவைபோன்றவை சொற்களால் உண்டாகும் குற்றங்களாகும்.
மனிதர்கள் தம் உறவுகளை இழப்பதற்கு, அவர்கள் பேச்சே மிக முக்கிய காரணமாக அமைகிறது. எதையும் பொருட்படுத்தாத மனப்போக்காலோ அல்லது உணர்ச்சி வசப்பட்டோ, பொறுமையிழந்து, சிந்திக்காமல் சில கடும் சொற்களை மனிதர்கள் உதிர்த்து விடுவதால், அது தீராத பகை உணர்வை வளர்த்துவிடுகிறது; இழந்த உறவுகளை ஒருவர் மீண்டும் பெறுவது என்பது கடினமாகி விடுகிறது. இவற்றின் பின்விளைவுகளால் சோகமே வந்தடையும். பழிச்சொல் உண்டாகும்.
சொற்செலவில் பதட்டம் காட்டாது காத்துக் கொள்ளவேண்டும். நாம் மற்றவர்களிடம் எதைப்பேசுவது, எப்படிப் பேசுவது, எந்த அளவுக்குப் பேசுவது போன்றவற்றை முன்கூட்டியே சிந்தித்துப் பார்த்துப் பேசினால் பெரும்பாலான தீய எதிர்வினைகள் வாராமல் காத்துக் கொள்ள முடியும். இல்லையேல், துன்பங்களைத்தாம் எதிர்கொள்ள நேரிடும். அளவறிந்து பேசினால் நல்ல நாவடக்கப் பயிற்சி கிடைக்கும்.

நாக்கை அடக்காததால் இன்னலுக்காட்பட்ட இரண்டு நிகழ்வுகளைச் சிலப்பதிகாரத்திலிருந்து காட்டலாம்.
கண்ணகியும் கோவலனும் கவுந்திஅடிகளுடன் மதுரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது இரு வம்பப்பரத்தையர் 'யார் இவர்கள்?' என்று கண்ணகி-கோவலனைச் சுட்டி அடிகளை அணுகிக் கேட்க 'இவர்கள் என் மக்கள்' என்று கவுந்தியடிகள் கூறினார். உடனே அவர்கள் உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ கற்று அறிந்தீர் என வம்பப்பரத்தையர் எள்ளலாகக் கேட்க, அடிகள் அவர்களை 'முதுநரி ஆகுக' எனச் சினந்துரைத்தார்.
மற்றொரு நிகழ்வில் காவா நாக்குக் கொண்ட கனகன், விசயன் என்னும் சிற்றரசர் இருவர் வடநாட்டரசர் பலர் குழுமியிருந்த சபையில் தமிழ் நாட்டரசருடைய வீரத்தைப் பழித்துரைத்தனர். அதைக் கேள்வியுற்ற சேரன் செங்குட்டுவன் அவர்கள் மீது படையெடுத்து வென்று கண்ணகிக்குச் சிலை செய்வதற்கான கல்லை அவர்கள் தலையில் சுமக்கச் செய்தான்.

'சோகாப்பர்' என்பதன் பொருள் என்ன?

சோகாப்பர் என்ற சொல்லுக்குச் சோகிப்பார், துன்பம் வரும், துன்புறுவர், துக்கம் அடைவார்கள், சோம்பிப் போவார், மீளா இனத்துயரில் அழுந்தி அழிவார்கள் எனப் பொருள் கூறினர்.
சோகாப்பர் என்பதற்கு மணக்குடவர் சோகிப்பார் எனப் பொருள் உரைத்தார். சோகிப்பார் என்றதற்கான பொருள் சோகம் உறுவார் அதாவது வருந்துவார் என்பது.
துன்பம் என்னும் பொருளை உணர்த்தும் சோகம் என்பதன் விகாரமாகிய சோ என்னும் சொல், காப்பர் என்னும் சொல் ஆகிய இரண்டும் சேர்ந்து சோகாப்பர் என்றாயின என்பது பொதுவான விளக்கம். ஆனால் இதை ஒப்பாது 'அல்லாப்பர் செம்மாப்பர் என்பன போலச் சோகாப்பார் என்பது ஒருசொல்' என்று கூறப்பட்டது எனப் பரிமேலழகர் இச்சொல்லுக்கு வேறொரு விளக்கம் தருவார்.
தேவநேயப் பாவாணர் சோ- காத்தல், சிறையிற் காத்திருத்தல், நா காவாவிடின் சொற்குற்றப்பட்டுச் சிறைத் தண்டம் அடைவர் என விளக்கினார். சோகாப்பர் என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு மற்றவர்கள் பொருள் கூற, இவர் இரு சொல்லாகக் கொண்டு இவ்வாறு கருத்துரைத்தார். சோ என்பது அரிய பொறிகள் ஏற்றப்பட்ட சிறந்த அரண் எனக் கொண்டு அரண் காத்தல் எனவும் பொருள் கூறினார்.
'அல்லா-செம்மா-சோகா என்ற பகுதிகள் தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கொழிந்தமை கருதியே தேவநேயர் இருசொல்லாக்கிச் சிறைப்படுவர் என்றார். சோ-மதிலை யல்லது சிறையைக் குறிக்கும் தனித்தமிழ்ப் பெயர்ச்சொல். எங்ஙனமாயினும் சோகா என்ற தமிழடியாக வந்த வினைமுற்று என்றலே சிறத்தல் காண்க' எனச் சொல்லிப் பாவாணர் உரையைத் தண்டபாணி தேசிகர் ஏற்றார்.
இரா சாரங்கபாணி இதற்கு 'நா காவாதவர் சொல்லிழுக்கப்பட்டு சிறைத் தண்டனை ஒன்று மட்டும் அடைவர் எனக் கூறுவதினும் பொதுவாகத் துன்புறுவர் என்று கூறுவது சிறக்கும். சிறைத் தண்டனையும் துன்புறுவதில் அடங்கும். பாவாணர் கொண்டபடி, சோகாத்தல் எனத் தமிழ்ச் சொல்லாகவே கொண்டு முதலில் அச்சொல் மதில் காத்தல், அதாவது சிறைத் தண்டனையைக் குறித்ததாகவும் பின் அது தன் தனித்தன்மையிழந்து பொதுத்தன்மை எய்தித் துன்புறுதலைக் குறித்ததாகவும் கொள்ளல் ஏற்புடையது. மொழியியலின்படி சொற்கள் தனித்தன்மையிழந்து பொதுத்தன்மை அடைதலும் இழிதன்மை நீங்கி உயர்தன்மை எய்துதலும் போன்றன இயல்பே. வேளாண்மை, நாற்றம் முதலிய சொல் காண்க. வேளாண்மை முன் பயிர் செய்தலைக் குறித்துப் பின் உதவி செய்தலைக் குறித்தது போலச் சோகாத்தல் முன் சிறைத்த தண்டனையைக் குறித்து இப்போது துன்புறுதலைக் குறித்ததாகக் கொள்ளுதல் தகும்' என விரிவான விளக்கம் தந்தார்.

சோகாப்பர் என்ற சொல்லுக்குத் துன்புறுவர் என்பது பொருள்.

எவற்றை காக்காது போயினும் நாக்கை அடக்குக; அதனைக் காவார் சொல்குற்றத்தின்கண் பட்டுத் துன்புறுவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பேச்சில் அடக்கமுடைமை மிகத் தேவை என்னும் பாடல்.

பொழிப்பு

எவற்றைக் காக்கா விட்டாலும் நாக்கை அடக்குக; அடக்க முடியாதவர் சொற்குற்றப்பட்டுத் துன்புறுவர்.