இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0124நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

(அதிகாரம்: அடக்கமுடைமை குறள் எண்: 124 )

பொழிப்பு: தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய தோற்றம், மலையைவிட உயர்வாகும்.மணக்குடவர் உரை: தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது.
நிலை- வன்னாச்சிரம தன்மம்.

பரிமேலழகர் உரை: நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது - மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது.
(திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.)

இரா இளங்குமரனார உரை: கால இட நிலைகளுக்குத் தக்கவாறு அசையாத அடக்கத்தை உடையவனது உயர்வு, தன்னியற்கையால் உயர்ந்து தோன்றும் மலையினும் மிக உயர்ந்தது..


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.


நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்:
பதவுரை: நிலையின்-நிலையினின்றும்; திரியாது-வேறுபடாமல்; அடங்கியான்-அடங்கினவனது; தோற்றம்-காட்சி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி;
மணக்குடவர் குறிப்புரை: நிலை- வன்னாச்சிரம தன்மம்
பரிதி: தான் பிடித்த நிலைமையில் நிற்பவன் பெருமைக்கு;
பரிமேலழகர்: இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி;
பரிமேலழகர் குறிப்புரை: திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல்.

'தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி' என்றும் 'தான் பிடித்த நிலைமையில் நிற்பவன் பெருமைக்கு' என்றும் 'இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி' என்றும் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தரத்திலே குறையாது அடங்கியவன் தோற்றம்', 'தன் நிலையினின்று வேறுபடாது அடங்கி நடப்பவனது உயர்ச்சி', 'தன்னுடைய கொள்கையை விட்டு விடாமல் பிறரிடம் தணிவாகப் பேசி அடங்கி நடந்து கொள்கிறவனுடைய புகழ்', 'இல்வாழ்க்கை வழியில் வழுவாது நின்று அடங்கினவனது உயர்ச்சி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன் நல்லொழுக்க நிலையிலிருந்து மாறுபடாது அடக்கமாய் நடந்து கொள்பவனுடைய தோற்றப்பொலிவு என்பது இப்பகுதியின் பொருள்.

மலையினும் மாணப் பெரிது :
பதவுரை: மலையினும்-மலையைக் காட்டிலும்; மாண பெரிது-மிகப் பெரியது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மலையினும் மிகப் பெரிது.
பரிதி: மகாமேருவும் நிகரல்ல; மகாமேருவும் அளவுபடும்; இவன் பெருமை அளவுபடாது என்றவாறு.
பரிமேலழகர்: மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது.
பரிமேலழகர் குறிப்புரை: 'மலை' ஆகுபெயர்.

'மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'மகாமேருவும் அளவுபடும்; இவன் பெருமை அளவுபடாது' எனப் பரிதி விளக்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மலையினும் பார்வைக்குச் சிறந்தது', 'மலையினும் மிக உயர்ந்ததாகும்', 'மலையைவிட மிகப் பெரிதான தோற்றமுண்டாக்கும்', 'மலையின் உயர்ச்சியிலும் மிகப்பெரியது. (தானே உயர்வுடைய மலையினும் தமது ஆற்றலால் உயர்ச்சி பெற்றவன் பெரியவன் என்றவாறு)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மலையைவிட மிகப் பெருமை உடையதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
தன்னிலை திரியாது உள்ளடங்கி நிலைத்தவன் காட்சி மலையினும் மிகப் பெரியதாகும்; அடக்கத்தை மாறாத குணமாகக் கொள்க என்னும் பாடல் .

தன் நல்லொழுக்க நிலையிலிருந்து மாறுபடாது அடக்கமாய் நடந்து கொள்பவனுடைய தோற்றம் மலையைவிட உயர்ந்ததாகும் என்பது பாடலின் பொருள்.
'தோற்றம்' என்றால் என்ன?

நிலையின் என்ற சொல்லுக்குத் தான் வாழும் ஒழுக்கநெறி நிலையிலிருந்து என்பது பொருள்.
திரியாது என்ற சொல் மாறாது என்ற பொருள் தரும்.
அடங்கியான் என்ற சொல்லுக்கு அடக்கத்துடன் ஒழுகுபவன் என்று பொருள்.
மலையினும் என்றது மலையை விட எனப் பொருள்படும்.
மாண என்ற சொல் மிக என்ற பொருள் நல்கும். 'ஞாலத்தின் மாணப்பெரிது' (102). மட்பகையின் மாணத்தெறும் (883) என்ற இடங்களிலும் இப்பொருளில் வந்துள்ளன.
பெரிது என்ற தொடர் மிகவும் பெரியது என்ற பொருள் நல்கும்.

தன் நிலையில் மாறாது அடங்கி நடப்பவன் மலையைவிட உயர்ச்சியும் வீறும் கொண்டவனாகக் காட்சி அளிப்பான்.

வெளிப்படையாய்ப் பெருத்த அளவில் தெரியக் கூடியதும் காண்போரை மலைக்கச் செய்யும் வகையில் ஓங்கி உயர்ந்திருப்பதும் மலை ஆகும்; நீண்ட காலத்திற்கு நிலைத்திருப்பதும் அதுவேயாகும். அதன் பெருமை அளப்பரிது. மலையினை அருகில் நின்று நோக்குவார்க்கும், பாராது கேட்போர்க்கும் உயர்ச்சியும் பெருமையும் இன்னும் சிறந்து தோன்றும். மலையின் தோற்றத்தைப் புகழும் பழம் பாடல் இதை நன்கு விளக்கும்:
அளக்கலாகா அளவும் பொருளும்
துளக்கலாகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே
( நன்னூல்: 28 )
(பொருள்: அளக்க முடியாத அளவு, பொருள், அசைக்கமுடியாத உருவத்தின் நிலையும், காட்சியும், வறட்சியிலும் வளத்தைக் கொடுக்கும் கொடை மலைக்கு உள்ள சிறப்புகள் ஆகும்.)
மலை ஆடாமல் அசையாமல் ஆரவாரமில்லாமல் அமைதியாக காட்சி அளிக்கிறது. அதன் வலிமையை அளக்க இயலாது. அதன் நிலையும் தோற்றமும் அசைக்க முடியாதது. அது பலவகையான பருவ மறுதல்களை எதிர்கொண்டு காலங்கள் பல கடந்தும் தன் நிலை மாறாமல் தான்மட்டும் அசையாமல் நிற்கின்றது. நிலையிற் திரியாத அடக்கமானவன் இக்குணங்களையும் கொண்டு அம்மலையைவிட மிகப் பெரிதாக தோற்றம் தருவான்.

தன் நிலை மாறாது தன்னடக்கத்துடன் ஒழுகுபவரது தோற்றம் மலையைவிடப் பெரியதாகும் என்கிறது இக்குறள். வாழ்வில் புகழ், செல்வம். செல்வாக்கு இவற்றில் மாற்றங்கள் உண்டாகும்போது ஒருவரது அடக்கக் குணத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள. ஆனால் இவ்வகை மாற்றங்கள் நிகழும்போதும் மாறாத அடக்கத்தன்மையை மேற்கொள்பவர் மேலும் உயர்கிறார். மாற்றங்களால் இவர் மன ஊசலாட்டமின்றி, நிலையில் திரியாமல் இருப்பர். கால ஓட்டத்தில் புதிதாய் உருவாகியுள்ள இன்ப துன்ப அலைகள் இவரது மனநிலையில் தாக்குறவு ஏற்படுத்தா. மொழி மாறாது. ஒழுங்கு பிறழாதிருப்பர். சினம் தவிர்த்து புலனடக்கமும் உடையராயிருப்பர். மாறிய நிலை காரணமாக ஆகுலங்கள் (ஆரவாரங்கள்) செய்யார்.
'நிலையின் திரியாது' என்பதற்குத் தமிழண்ணல் 'தனது பெருமித நிலையினின்றும் சிறுதும் திரிவுபடாது' எனக் கூறி 'பெருமையை விடுவதன்று அடக்கம்; பெருமை விளங்கத் தோன்றத் தற்கட்டுப்பாடாயிருப்பதே அது. அடக்கம் என்பதற்காகத் தன்னையே தாழ்மைப் படுத்திக்கொள்வதுமன்று இது. அதற்காகவே நிலையில் திரியாது என்றார்' என விரித்தும் கூறுவார்.
கா சுப்பிரமணியம் பிள்ளை 'தானே உயர்வுடைய மலையினும் தமது ஆற்றலால் உயர்ச்சி பெற்றவன் பெரியவன்' என மாணப் பெரிது என்பதை விளக்குவார்.

'தோற்றம்' என்றால் என்ன?

தோற்றம் என்ற சொல்லுக்குக் காட்சி என்பது நேர்பொருள். இச்சொல்லுக்கு உயர்ச்சி என்று பெரும்பான்மை உரையாளர்கள் பொருள் கூறினர். மற்றவர்கள் பெருமை, மதிப்பு, பிறர் மதிக்கும்படி ஒருவன் எய்திய வாழ்க்கை நிலை மனத் தோற்றம் பிறர் மனத் தோற்றம் என்றும் பொருள் கூறினர். இவை அனைத்தும் ஏற்கத்தக்கனவே. பெருமை என்ற பொருள் சிறந்தது.
'அடங்கியவன் தோற்றம் மலையினும் பார்வைக்குச் சிறந்தது' என்று பொருத்தமான குறளுரை கூறினார் வ சுப மாணிக்கம். இவர் உரைப்படி தோற்றம் என்பதற்குப் பார்வைக்கு என்றாகிறது.
'உயிரும் உணர்வும் ஒழுக்கமுடைய பெரியார்க்கு சடப் பொருளான மலையை உவமை காட்டுவது பொருந்தாது என்று கருதியவர் போல, வெறும் தோற்றத்தால் மட்டுமே பெரியார்க்கு மலையைஉவமை காட்டுகின்றார்' என்பது தோற்றம் என்ற சொல் ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு ம பொ சிவஞானம் தரும் விளக்கம்.

அடக்கமுடையவனது பொலிவு மலைபோன்று எழும்பி நிற்கும் மேன்மையான எழில் கொண்டது. தொலைவில் நின்று காண்பார்க்கும் அருகில் நின்றார்க்கும் உயர்வானதும் பெருமையானதுமான தோற்றம் தருவது மலை என்ற கருத்தைச் சொல்ல வந்த பாடலாதலால் தோற்றம் என்ற சொல் பயன்பட்டது.
தோற்றம் என்றதற்கு ஆங்கிலத்தில் உள்ள Image என்ற சொல் இணையாகலாம். ஒருவர் பற்றிய கருத்து உருவம் அல்லது கருத்துப்படிவம் எப்படி இருக்கும் என்பதைக் குறிப்பது இச்சொல். அவர் உலகத்தாரால் எப்படி மதிப்பீடு செய்யப்படுகிறார் என்பதை உணர்த்துவது. அவரை மனத்தில் உருவங் கற்பித்துக்காண்பதாகும். இத்தகைய மனத்தோற்றத்தையே தோற்றம் என்ற சொல் குறிக்கிறது.

தன் நல்லொழுக்க நிலையிலிருந்து மாறுபடாது அடக்கமாய் நடந்து கொள்பவன் மற்றவர் பார்வையில் மலையைவிட மிகப் பெரியதாகத் தோன்றுவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அடக்கமுடைமையின் மாண்பான மலைக்க வைக்கும் தோற்றம் காட்டும் பாடல்.

பொழிப்பு

ஒழுக்கநிலையில் ஊசலாட்டமின்று, அடக்கமான குணம் கொண்டவன் நெடிதாய் நிற்கும் மலையைவிட உயர்வான தோற்றம் தருவான்.