இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0123



செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:123)

பொழிப்பு (மு வரதராசன்): அறியவேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப் பெற்றால், அந்த அடக்கம் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

மணக்குடவர் உரை: அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின் அவ்வடக்கம் நன்மை பயக்கும்.
அறியப்படுவன- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்: அடக்கப் படுவன- மெய் வாய் கண் மூக்கு செவி.

பரிமேலழகர் உரை: அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் - அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும்.
(இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.)

இரா இளங்குமரன் உரை: அறிய வேண்டியவற்றை அறிந்து அதன்படி அடக்கத்தைக் கொண்டால் அவ்வடக்கம் அமைந்துள்ள அளவுக்குத் தக்க சிறப்பை அது தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் செறிவறிந்து சீர்மை பயக்கும் .

பதவுரை: செறிவு-அடக்கம், (அடக்கத்தின்) தன்மை, (அடக்கத்தின்) அளவு; அறிந்து-தெரிந்து; சீர்மை-சிறப்பு, மேன்மை, விழுப்பம்; பயக்கும்-தரும்; அறிவுஅறிந்து-அறிவன அறிந்து, அறிய வேண்டியவற்றை அறிந்து, (அடக்கும் திறன்) அறிந்து; ஆற்றின்-நெறியால்; அடங்கப்பெறின்-அடங்கி ஒழுக நேர்ந்தால்.


செறிவறிந்து சீர்மை பயக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வடக்கம் நன்மை பயக்கும்;
பரிப்பெருமாள்: அவ்வடக்கம் நன்மை பயக்கும்;
பரிதி: இன்னார் என்ற கீர்த்தியும் உண்டாய் செல்வமும் தரும்; [கீர்த்தி-புகழ்]
காலிங்கர்: அஃது எல்லா மேம்பாட்டையும் தரும் என்றவாறு;
பரிமேலழகர்: அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும்; [விழுப்பம் - பெருமை]

'அடக்கம் நன்மை பயக்கும்/கீர்த்தியும் புகழும் முண்டாக்கும்/ மேம்பாட்டைத் தரும்/ விழுப்பத்தைக் கொடுக்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதனை உலகம் தெரிந்து சிறப்பிக்கும்', 'அவ்வடக்கம் உயர்ந்தோரால் அறியப்பட்டு மேன்மையைத் தரும்', 'அந்த அடக்கம் எவ்வளவு மிகுந்திருக்கிறதோ அவ்வளவுக்குச் சிறப்புண்டாகும்', 'அவ்வடக்கம் நல்லோரால் அறியப்பட்டுப் பெருமை தரும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அடக்கத்தின் தன்மை உணரப்பட்டு மேன்மை உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின். [நெறியினாலே - வழியாலேயே]
மணக்குடவர் குறிப்புரை: அறியப்படுவன- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்: அடக்கப் படுவன- மெய் வாய் கண் மூக்கு செவி.
பரிப்பெருமாள்: அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவறிந்தாற்றினடங்கப் பெறின் செறிவறிந்தெனக் கூட்டுக. அறியப்படுவன- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்: அடக்கப் படுவன- மெய் வாய் கண் மூக்கு செவி. ஆற்றினடங்குதலாவது தத்தம் நிலைமைக்கும் இல்லறத்திற்கும் சொல்லுகின்ற நெறியினானஏ சுவைமுதலான ஐந்தின் கண்ணும் மெய் முதலான பொறிகள் வழியாகச் செல்லும் காதலை அடக்குதலும் அக்காதல் காரணமாகச் செல்லும் வெகுளியை அடக்குதலும் முதலாயின. நன்மை பயக்கும் என்று பொதுப்படக் கூறினார். எல்லா நன்மையும் பயக்கும் என்றதற்கு மேல் அடக்கம் வேண்டும் என்றார். இஃது அடக்கும் திறன் கூறிற்று. .
பரிதி: அறிவறிந்த நெறியிலே அடங்குவானாகில் என்றவாறு. [அறிவறிந்தநெறி - அறியவேண்டியன அனைத்தையும் அறிந்தமையால ஆன முறைமை]
காலிங்கர்: இவ்வடக்கம் உடையானை நன்மையும் தலையளியாது; அது தங்குதற்கு ஓராங்குநின்று கருதி இகன் பாட்டு அறியத் தகுவனவற்றறை எல்லாம் குறிக்கொண்டு அறிந்து மற்றிங்கனமறிந்து நெறியின் வழுவாதே அடங்கி ஒழுகப் பெறின் மற்று. [தலையளியாது- கருணை செய்யாமல்; இகல் - பகை]
பரிமேலழகர்: அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்.
பரிமேலழகர் குறிப்புரை: இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல். [தன்வயத்தவாதல்- சுதந்தரமுடைமை]

'அறியப்படுவன அறிந்து நெறியினால் அடங்கிநடந்தால்' என்றும்' 'அடங்குதலே நமக்கு அறிவாவது என்றறிந்து நெறியானே அடங்கப் பெறின்' என்றும் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவன அறிந்து முறையோடு அடங்கின்', 'அறிவினால் அறியப்படுவனவற்றை அறிந்து ஒருவன் நெறிப்படி அடங்கி நடப்பானாயின்', 'கற்க வேண்டியதைக் கற்று அறிய வேண்டியதை அறிந்து அக்கல்வியறிவின் நெறியில் அடக்கமுள்ளவனாக இருந்தால்', 'அடங்கியிருத்தலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நல்ல வழியில் ஒருவர் அடங்கி இருந்தால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அறிவன அறிந்து முறையோடு அடங்கி நடப்பானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறிவன அறிந்து முறையோடு அடங்கி நடப்பானாயின் அதன் தன்மை உணரப்பட்டுச் சீர்மை பயக்கும் என்பது பாடலின் பொருள்.
'சீர்மை பயக்கும்' குறிப்பது என்ன?

எப்பொழுது எங்கு யாரிடம் எவ்விதம் அடங்கிநடக்க வேண்டும் என்பதற்கு உன் அறிவைப் பயன்படுத்துக.

அடங்கியிருத்தலின் தன்மை அறிந்து நன்னெறியில் அடங்கி ஒழுகினால் அவ்வடக்கம் மேன்மை தரும்.
அறியவேண்டியவற்றை அறிந்து முறையான வழியில் அடங்கி நடந்தால் மேன்மை உண்டாகும். அடங்கி ஒழுகும் திறன் அறிந்து செயல்பட்டால் அது நன்மை பயக்கும் என்பது செய்தி.
அறிவறிந்து ஆற்றின் அடங்கப்பெறின் என்ற பகுதிக்கு அடங்கி நடக்கவேண்டும்முறை அறிந்து அந்நெறியில் அடங்கி ஒழுகினால் என்பது பொருள். அறிவறிந்து என்றதற்கு அறிவன அறிந்து எனப் பொருள் கூறுவர். எங்கு அடக்கம் காட்டப்பட வேண்டுமோ அங்கு அடங்கி நடக்கவேண்டும். அடக்கம்உடைமை தன்னளவில் நன்மை அளிக்காது; அடக்கும் திறன் அறிய வேண்டும்; அடக்கம் என்றால் எப்பொழுதும் அடங்கி நடப்பது என்பதல்ல. ஒன்றும் செய்வதறியாது அடங்கியிருத்தலும் அடக்கமாகாது; அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப்பெறின் என்பது அறிவு அடங்கப் பெறின் எனப் பொருள்படாது; ஆரவாரம் இல்லாமல் அடங்கி இருக்க வேண்டும். ஆனால் எஞ்ஞான்றும் எல்லா இடங்களிலும் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியதில்லை. சில இடங்களில் உரிமையை நிலைநாட்ட வேண்டிய இடங்களில் அடங்காமை பயன் தருமானால் அதற்கேற்றவாறு நடந்து கொள்ளலாம். தான் மற்றவர்களைக் காட்டிலும் தேர்ந்தவன் என்று எண்ணாமல் பணிவாக நடந்து கொள்க. அதே வேளையில் தன் மானத்தையும் கொள்கைகளையும் விட்டுத் தாழ்ந்து விடக் கூடாது.
செறிவறிந்து என்பதற்கு (அடக்கத்தின்) தன்மை உணரப்பட்டு என்பது பொருளாம்.
அறிவைப் பயன்படுத்தி அது காட்டும் நல்ல நெறியில் அடங்கி ஒழுகினால் அடக்கத்தின் தன்மை உணரப்பட்டு பயன் கிடைக்கும் எனச் சொல்லப்பட்டது.

'சீர்மை பயக்கும்' குறிப்பது என்ன?

'சீர்மை பயக்கும்' என்றதற்கு நன்மை பயக்கும், கீர்த்தியும் உண்டாய், எல்லா மேம்பாட்டையும் தரும், விழுப்பத்தைக் கொடுக்கும், பெருமையைக் கொடுக்கும், செல்வத்தைக் கொடுக்கும், மேன்மை பயக்கும், சிறப்பைத்‌ தரும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மேலே கூறப்பட்ட பொருள் அனைத்தும் 'சீர்மை பயக்கும்' என்பதற்குப் பொருந்துவனவே.
சீர்மை சிறப்பொடு.... (பயனில சொல்லாமை 195 பொருள்: விழுப்பம் சிறப்புடன்......) என்னும் பாடலிலும் விழுப்பம் அல்லது மேன்மை என்ற பொருளிலே சீர்மை என்னும் சொல் ஆளப்பட்டது.
அடங்கி நடப்பதால் பெருமையோ மேம்பாடோ குன்றிவிடும் என எண்ணவேண்டாம்; அது மேன்மையையே தரும்.

'சீர்மை பயக்கும்' என்பதற்கு சிறப்பைத் தரும் என்பது பொருத்தமான பொருள்.

அறிவன அறிந்து முறையோடு அடங்கி நடப்பானாயின் அடக்கத்தின் தன்மை உணரப்பட்டு மேன்மை உண்டாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சூழல் அறிந்து காட்டப்படும் அடக்கமுடைமை நன்மை தரும்.

பொழிப்பு

அறிவன அறிந்து முறையோடு அடங்கின் அது உணரப்பட்டு சிறப்பு கிடைக்கும்.