இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0121



அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:121)

பொழிப்பு (மு வரதராசன்): அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்திவிடும்

மணக்குடவர் உரை: மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும்.
மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.

பரிமேலழகர் உரை: அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும்.
( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: அடக்கம் ஒருவனிடமிருந்தால் அஃது அவனை விண்ணவரிடத்தே சேர்ப்பிக்கும். அடங்காமை நிறைந்த இருளினிடை செலுத்திவிடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.

பதவுரை: அடக்கம்- அடக்கமாக நடந்து கொள்ளுதல்; அமரருள்-சாகாதவரிடை; உய்க்கும்-சேர்ப்பிக்கும்; அடங்காமை-அடங்கியொழுகாதிருத்தல்; ஆர்-நிறை; இருள்-இருள்; உய்த்துவிடும்-செலுத்திவிடும்.


அடக்கம் அமரருள் உய்க்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்;
பரிதி: திரிவிதகரணங்களையும் அடக்கில் இகபரத்துக்கும் பயன்படும்; [திரிவிதகரணங்கள்-மனமொழி மெய்யாய மூன்று கருவிகள்; இகபரம் -இம்மை, மறுமை]
காலிங்கர்: நெஞ்சத்து அடக்கமுடைமையாகின்ற இது பின்பு அவனைத் தேவருலகத்துக் கடவுளாய்ச் செலுத்தும்;
பரிமேலழகர்: ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும்;
பரிமேலழகர் குறிப்புரை: "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.

'அடக்கமுடைமை ஒருவனைத் தேவருலகத்துச் செலுத்தும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அடக்கம் வீரருள் ஒருவனாக்கும்', 'அடக்கம் ஒருவனை வீரர்குழாத்துள் சேர்க்கும்', 'அடக்க முடைமை என்ற நற்குணம் ஒருவனுக்கு யாரும் வணங்கும்படியான தெய்வத்தன்மையை உண்டாக்கும்', 'உள்ளம், உரை, உடல்களால் அடங்கி இருக்கும் தன்மை உயர்ந்தோரிடையே வைக்கும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அடக்கம் ஒருவனை உயர்ந்தோரிடையே சேர்க்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும்.
மணக்குடவர் குறிப்புரை: மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.
பரிதி: அடக்கமின்றதால் நரகத்தைக் கொடுக்கும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அடங்காமையாகின்ற இது நரகமாகிய இருள்வழிச் செலுத்தும்.
காலிங்கர் கருத்துரை: அஃது அன்றியும் நாய், கோழி, பன்றி, புல், புழு முதலிய பிறவியுள் செலுத்தி விடும் என்றவாறு.
பரிமேலழகர்: அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.

'அடங்காமை நரகமாகிய இருள்வழிச் செலுத்தும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அடங்காமை பேதைக் கூட்டத்தில் சேர்க்கும்', 'அடங்காமை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கும்', 'அடங்காமை என்ற கெட்ட குணம் ஒருவனை அவன் இருப்பதைக்கூட யாரும் அறியமுடியாத அந்தகாரமான இருளில் தள்ளிவிடும்', 'அடங்காமை மிகுந்த துன்பத்துள் வைக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அடங்காமை நிறைஇருளான இடத்துள் செலுத்திவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அடக்கம் ஒருவனை உயர்ந்தோரிடையே சேர்க்கும்; அடங்காமை ஆரிருள் செலுத்திவிடும் என்பது பாடலின் பொருள்.
'ஆரிருள்' குறிப்பது என்ன?

அடக்கம் நல்லவர்பால் இட்டுச்செல்லும்; அடங்காமை தீநெறியில் சென்று சேர்க்கும்.

அடக்கம் ஒருவனுக்கு உயர்ந்த வாழ்வு தரும்; அடக்கமில்லாதிருத்தல் அவனைத் தீயவழியில் தள்ளிவிடும்.
எழுகின்ற எண்ண நிலையிலேயே நெஞ்சத்திலேயே அடக்குவதும், அந்த எண்ணம் வாய்வழி வரும்போதும் உடல்வழி செயலாக வரும்போதும் அவற்றைக் கட்டுப்படுத்துவதும் அடக்கம் எனப்படும்.
அமரர் என்ற சொல் சாவாதார் அதாவது இறந்தும் என்றும் நினைவில் வாழுபவர், வானுலகத்திலுள்ள தேவர், வீரர் என்ற பல பொருள் தரும். இங்கு முதற்பொருளான புகழ்நிலைத்தவர்கள் எனக் கொள்வது பொருந்தும். ஆரிருள் என்றது நிறைந்த இருள் சூழ்ந்த இடம் என்ற பொருளில் ஆளப்பட்டது.

'அடக்கம் வீரருள் ஒருவனாக்கும். அடங்காமை பேதைக் கூட்டத்தில் சேர்க்கும்' என இக்குறளுக்கு வ சுப மாணிக்கம் உரை செய்தார். இரா சாரங்கபாணி: 'அடக்கம் ஒருவனை வீரர்குழாத்துள் சேர்க்கும். அடங்காமை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கும்' என்று இக்குறளுக்குப் பொருள் கூறி 'அமரர் என்பதற்குத் தேவர் என்னும் பொருள் உளதாயினும், வீரர் என்ற பொருளும் உண்டு. அமரர்கண் முடியும் அறுவகை யானும்’ (புறத்திணையியல் 81) எனத் தொல்காப்பியத்தில் வீரம் என்னும் பொருளில் வருதல் காண்க. ‘அமர்’ போர் என்ற பொருளிலும் ‘ஒள்ளமர்க் கண்ணாள்’(1125) அமரகம்-போர்க்களம் என்ற பொருளிலும் அமரகத்து வன்கண்ணர் போல (1027) எனக் குறளில் வந்துள்ளது. அமர்-போர், அமரர்-போர் செய்யும் வீரர் எனக் கொள்ளுதல் இயல்பாகும். புலன்களையும் மனத்தையும் அடக்குதல் சிறந்த வீரர்க்கே முடியுமென்பதால் வீரரிற் சேர்க்கும் என்றெழுதிய உரை சிறக்கும். புத்தரை ‘மாரனை வெல்லும் வீர’ (11:61) என மணிமேகலை குறித்தல் காண்க. குறளும் பிறன் மனையை நோக்காமையைப் ‘பேராண்மை’ (148) எனக் குறித்தல் ஒப்பு நோக்கத்தகும்' என்று பல மேற்கோள்களுடன் விளக்கமும் தந்துள்ளார்.
அடக்கம் என்பது புலன்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் ஓர் உயர் பண்பு. அடக்கம் என்றால் அடங்கி ஒடுங்கி நிற்பதைக் குறிப்பது அல்ல. அடக்கமுடையோர் என்பவர் எந்நேரமும் தற்காப்பைப் பற்றியே எண்ணி அஞ்சி வாழ்பவர் என்பதும் அல்ல. அடக்கம் ஒருவரைக் கீழ்மைப்படுத்தாது; மாறாக அது அவரை மேன்மேல் உயர்த்தவே துணை செய்யும். அடக்கமானவர்கள் கோழைகள் அல்ல. மனம், மொழி, மெய் இவற்றை அடக்குதலுக்கு-கட்டுப்பாடற்று ஓடும் புலன்களை ஒடுக்குவதற்கு வீரப் பண்பு வேண்டும். இதனால்தான் அமரர் என்பதற்கு வீரர் என இங்கு பொருள் கண்டனர் போலும்.
வீரரும் புகழ்வாய்ந்தோருள் அடங்குவர். அடக்கமுடையோர் வீரர்; அவர் இறவாப் புகழ் படைத்தவர்; அவர் உயர்ந்தவர் உலகத்தில் வைக்கப்படுவார். அமரருள் உய்க்கும் என்ற தொடர்க்கு தொன்மங்களில் கூறப்பட்டுள்ள இன்பம் நிறைந்த தேவருலகத்தில் சென்று சேர்க்கும் எனத் தொல்லாசிரியர்கள் பொருள் கூறினர். அடக்கம் தேவருலகத்தில் கொண்டு செலுத்தும் என்பதினும் உயர்ந்தவர் உலகத்தில் வைக்கப்படும் என்ற பொருள் சிறக்கும்.

அடங்காத தன்மை ஒருவரை துன்பம் நிறைந்த இருளில் சேர்த்துவிடும்.
அடங்காமை என்பது அடக்கம் குன்றித் தருக்கித் திரிவதைக் குறிக்கும். ஒருவனுக்கு ஆணவத்தால் எல்லாம் எனக்குத் தெரியும் எனும் மனோபாவம் தோன்றும்போது ஆராய்ந்து பார்க்கும் திறன் குறைந்து அறியாமை பெருகும். அறியாமை மூடத்தனத்துக்கும், முரட்டுத்தனத்துக்கும் வழிவகுக்கும். நல்லோர் உறவு கிடைக்காது, இருள்போன்ற கயமை செறிந்த தீய வழியில் செல்லத் தொடங்குவர். அவர்கள் வாழ்க்கை துன்பமயமாகும். எந்நேரமும் தற்காப்பைப் பற்றியே எண்ணி அஞ்சி வாழும் இருள் வாழ்க்கை நடத்துவர். உய்க்கும் என்பது சேர்ப்பிக்கும் என்ற பொருளது. உய்த்துவிடும் என்பது விரைவும் நிறைவும் உணர்த்தும்; இத்தொடர் நிறைந்த இருளில் விரைவில் செலுத்தப்படுவது திண்ணம் என்பதைக் குறிக்கும்.

'ஆரிருள்' குறிப்பது என்ன?

'ஆரிருள்' என்ற சொல்லுக்கு நரகத்திடை, நரகம், நகரமாகிய இருள்வழி, தங்குதற்கு அரிய இருள் (நரகம்), இருள் சூழ்ந்த உலகம், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கை, பேதைக் கூட்டம், பெருந்துன்பம், மிகுந்த இருட்டான இடம், இருள் சேர்ந்த இன்னாவுலகம், மிகுந்த துன்பத்துள், இருள் சூழ்ந்த இடம், இருள் நிறைந்த இடம், துன்பம் நிறைந்த இடம், நரக லோகம், இருள்சூழ் நிலை, கெடுதல் என்னும் இருட்டு, அறியாமை, வறுமை ஆகிய அரிய இருள், அறிவு ஒளியும் உணர்வு ஒளியும் சென்று எட்டமுடியாத நிறை இருட்டும் பண்பாகிய கயமைச் செறிவு எனப் பலவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'ஆர்' என்ற சொல், அருமை என்ற உயர்பொருளைத் தருவது ஆர் இருள் என்பது அரிய இருள் எனப் பொருள் தருவது. அரிய இருள் என்பதை விளக்குவது கடினம். இதனாலேயே பரிமேலழகர் தங்குதற்கு அரிய இருள் அதாவது தங்கவே இயலாத இடம் எனப் பொருள் கூறினார். 'ஆரிருள்' என்பதற்கு இருண்ட வாழ்வு என்றும் நரகம் என்றும் பொருள் கொள்வர். இச்சொல்லைத் தேவநேயப் பாவாணர் 'பண்டைக் காலத்தில் இருட்டறையுள் அடைப்பதும் ஒருவகைத் தண்டனையாயிருந்தமையின், நரகம் இருளுலகம் எனப்பட்டது; ஆர் இருள் என்பது திணிந்த இருள் என்றுமாம்' என விளக்கினார். ஆர் இருள் என்பதற்கு நிறைந்த இருள் என்றும் பொருள் கூறுவர்.
'அமரர்’ என்பதற்கு வீரர் எனப் பொருள் கூறியவர்கள் ‘ஆரிருள்’ என்பதற்குப் பண்பாக உரையாது அறியாமை உடையோர் (பேதைக் கூட்டம்) எனப் பொருள் கண்டனர். இது அடங்காமை ஒருவனை அறிவிலிகள் உள்ள உலகத்தில் சென்று சேர்க்கும் என்ற பொருள் தருகிறது.
அடக்கம் இல்லாதவன், புலன்கள் போன வழியில் போவான், என்ன செய்கிறோம், எங்கே போகிறோம் என்று அவனுக்குத் தெரியாது. இதனால் அடக்கம் இன்மை அவனை விரைவில் இருட்டான தீய வழியில் தள்ளி விடும்.
ஆரிருள் என்பதற்கு நிறை இருட்டு என்ற பொருள் பொருந்தும். இது அறம் சாரா ஒழுகலாறு அதாவது தீய வாழ்க்கைநெறியைக் குறிப்பதாம்.

‘ஆரிருள்’ என்பது நிறை இருட்டான இடம் அதாவது தீயவர்கள் உலகு என்ற பொருள் தரும்.

அடக்கம் ஒருவனை உயர்ந்தோரிடையே சேர்க்கும்; அடங்காமை நிறைஇருளான இடத்துள் செலுத்திவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அடக்கமுடைமை ஒருவரை மேன்மேலும் உயர்த்தவல்லது.

பொழிப்பு

அடங்கி இருக்கும் தன்மை ஒருவரை உயர்ந்தோர் உலகில் சேர்ப்பிக்கும்; அடங்காமை நிறைஇருளான இடத்துள் செலுத்திவிடும்.