இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0098சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

(அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:98)

பொழிப்பு: சிறுதனம் நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

மணக்குடவர் உரை: புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.

பரிமேலழகர் உரை: சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும்.
(மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: இழிவற்ற இனியசொல் மறுபிறவியிலும் இப்பிற்வியிலும் இன்பம் கொடுக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.


சிறுமையுள் நீங்கிய இன்சொல்:
பதவுரை: சிறுமையுள்-சிறுதன்மையுள்; நீங்கிய-தவிர்த்த; இன்சொல்-இனியமொழி..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள்;
பரிப்பெருமாள்: புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள்;
பரிதி: பாவம் நீங்கிய புண்ணியத்து இன்சொல்;
காலிங்கர்: ('சிறுமையினீங்கிய' பாடம்). குற்றத்தினின்றும் நீங்கிய இனிய சொற்களைச் சொல்லுவதால் ஒருவன்;
பரிமேலழகர்: பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்;

'சிறுமை நீங்கிய இன்சொல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். சிறுமை என்ற சொல்லுக்கு புன்மை என்று மணக்குடவர்/பரிப்பெருமாள், பாவம் என்று பரிதி, குற்றம் என்று காலிங்கர். பொருளால் பிறர்க்கு விளையும் நோய் என்று பரிமேலழகர் விளக்கம் சொன்னார்கள்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறுதன்மை இல்லாத இன்சொல்', 'குற்றமற்ற இன்சொல் ஒருவனுக்கு', 'மனத்தில் கெட்ட எண்னம் இல்லாமல் இனிய சொற்களையே பேசினால்', 'பிறரை இழிவுபடுத்தாத இனிய சொற்கள் ', என்ற பொருளில் உரை தந்தனர்.

சிறுதன்மை இல்லாத இன்சொல் என்பது இப்பகுதியின் பொருள்.

மறுமையும் இம்மையும் இன்பம் தரும்:
பதவுரை: மறுமையும்-மறுபிறப்பும்; இம்மையும்-இப்பிறப்பும்; இன்பம்-மகிழ்ச்சி; தரும்-பயக்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்
பரிப்பெருமாள்: இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்
பரிப்பெருமாள் குறிப்புரை: இன்பமாவது மக்களாயும் தேவராயும் நுகரப்படுவது.
பரிதி: இம்மைக்குச் செல்வமும் மறுமைக்கு முத்தியும் கொடுக்கும் என்றவாறு.
காலிங்கர்: இம்மை மறுமை இரண்டின் கண்ணும் இன்பத்தைப் பெறுவான் என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும்.
பரிமேலழகர் கருத்துரை: மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.

'இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எப்பிறப்பினும் இன்பம் தரும்', 'மறுமையிலும் இம்மையிலும் இன்பம் தரும்', 'அது இம்மை மறுமை இரண்டுக்கும் நன்மை உண்டாக்கும்', 'இவ்வுலகிலும் இறந்த பின்னும் இன்பம் தரும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

மறுபிறப்பிலும் இப்பிறப்பிலும் இன்பம் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இழிவுபடுத்தாத இனிய சொற்கள் பேசினால் இருமையிலும் இன்பம் கிடைக்கும் என்னும் பாடல்.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுபிறப்பிலும் இப்பிறப்பிலும் இன்பம் தரும் என்பது பாடலின் பொருள்.
'சிறுமையுள் நீங்கிய இன்சொல்' என்றால் என்ன?

இன்சொல் என்றது இனிய மொழி கூறுதல் என்று பொருள்படும்.
மறுமையும் இம்மையும் என்றது மறுபிறப்பும் இப்பிறப்பும் குறித்தது.
இன்பம் தரும் என்ற தொடர்க்கு இன்பத்தினை அளிக்கும் என்பது பொருள்,

கீழான சொற்கள் நீக்கி இன்சொல் பேசுபவனுக்கு இப்பிறவியிலும் மறுபிறவியிலும் இனிமை உண்டாகும்.

இருமையிலும் (இம்மையிலும் மறுமையிலும்) இனிய வாழ்வு பெற சொல் மட்டுமே போதும்; அது சிறுமையின் நீங்கிய சொல்ல்லாக இருக்கவேண்டும் என்கிறது குறள் சொல்லின் சிறுமை அதன் பொருள் விளைக்கும் துன்பத்தால் தெரியும். எனவே பேசப்படும் மொழி இழிவுபடுத்தாதாக இருத்தல் வேண்டும்; கேட்பவர் மட்டுமன்றி எவரையுமே இகழ்ந்துரையாத இன்சொல்லாக இருக்கவேண்டும்.
வள்ளுவர் எங்கும் எதிலும் தூய்மை வேண்டும் என்பவர். இங்கு மாசு மறுவற்றுத் தூய்மையான உள்ளத்துடன் பேசவேண்டும் என்கிறார். அகமும் புறமும் ஒத்து, சொல்லளவிலும் பொருள் அளவிலும் பிறருக்கு நோய் செய்யாத அதாவது மனவருத்தம் தராததாகப் பேசுதல் வேண்டும்.
வஞ்சனையில்லாமல் இயல்பாக இனியவை கூறல் வேண்டும்.. நல்லுரை பகரும்போதும் தூற்றும் வகையிலோ, புண்படுத்தும் முறையிலோ சொல்லவேண்டாம். வன்சொல் இன்றி ஏளனம் நீக்கி, பழி அகற்றிப் பேசுக; தீயன நீக்குவதற்கு துன்புறுத்தாத இனிய முறைகளே நிலையான பயன் தரும் என்று அறிவுரை தரப்படுகிறது.
கீழ்மை விரவாமல் பேசும் இன்சொற்கள் உடையவர் அறநெஞ்சு கொண்டவராக இருப்பர். உலகில் யாவரும் நண்பாய்க் கட்டுப்படுவர். ஆகவே நன்மைகள் எய்தி இன்புறலாம். அவர்க்கு பிறப்புகள் எல்லாம் இனிதாக அமையும்.

இப்பிறப்பு நாம் இப்பொழுது வாழ்வது அதை இம்மை என்று அழைப்பர். இறப்புக்குப்பின் உள்ளது மறு வாழ்வு. அதை -இனிவரும் பிறவியை- மறுமை என்பர். உறக்கமும் விழிப்பும் போலப் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நிகழ்கின்றன என்பது ஒரு நம்பிக்கை. மக்களிடம் உள்ள பல விதமான நம்பிக்கைகளை அவர்கள் சொல்நடையிலேயே கூறி தமது கருத்துக்கு அழுத்தம் சேர்ர்க்கப் பயன்படுத்திக் கொள்வது வள்ளுவர் கையாளும் ஒரு உத்தியாகும். அந்த வகையில் இம்மை, மறுமை என்ற சொற்கள் இங்கு ஆளப்பட்டன. இம்மை மறுமையை மண்ணுலக வாழ்வு விண்ணுலக வாழ்வு என எளிமைப்படுத்திப் புரிந்து கொள்ளலாம்.
இம்மையிலும் மறுமையிலும் இன்பத்துடன் மேவுதற்கு உரிய செயல் இன்சொல் புகலுதல் என்கிறது குறள். ஒரே செயலால் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் உண்டாகின்றது என்றால் அதன் சிறப்பு மிகப் பெரிது. அச்செயல் சிறுமை நீங்கிய இன்சொற்கள் பேசுவதாம்.
பரிதி 'இம்மைக்குச் செல்வமும் மறுமைக்கு முத்தியும்' என கிடைக்கப் பெறும் இன்பத்தை விளக்குவார். மறுமை என்பதை இனிவரவிருக்கும் நிலைபேறுடைய இன.ப்பெரு வாழ்வு என்றும் இம்மை என்பதை அணிமைநிலையிலுள்ள சமுதாய் குடும்ப வாழ்வு என்றும் கூறி இவ்விரு வாழ்வுகளிலும் கிடைக்கும் இன்பம் சொல்லப்படுகிறது என்பது கா அப்பாத்துரை தரும் உரை..

'சிறுமையுள் நீங்கிய இன்சொல்' என்றால் என்ன?

சிறுமை என்ற சொல்லுக்கு புன்மை, குற்றம், நோய் (துன்பம்) சிறு தன்மை பாவம், பெருமிதம், இகழ்ச்சி எனப் பலபொருள்கள் கூறப்பட்டன. சொல்லில் இனிமை வைத்து அகத்தில் வஞ்சனையோடு பேசுவது சிறுமைக் குணமாகும். கடுமை, பொறாமை, புறங்கூறுதல், சிடுசிடுப்பு, செருக்கு இவற்றோடு சொற்கள் வழங்குதலும் சிறுமைக் குணத்தின் பாற்பட்டனவே.. சிறுமையை இழிதகைமை, சின்னத்தனம், அற்பத்தனம், கீழான தன்மை, அவமதிப்பான தன்மை எனவும் கூறலாம். பிறரை ஏளனப்படுத்தும் தன்மையிலோ அல்லது மாற்றாரைப் பழிப்பது போன்றோ பேசுதல் இகழ்ச்சி என்ற சிறுமைக்குணம் கொண்டது.. சிறுமை என்பது இழிதகைமையான குணம்.

இழிதகைமை இல்லாத இன்சொல் என்பது ''சிறுமையுள் நீங்கிய இன்சொல்' என்ற தொடர்க்குப் பொருள்.

சிறுதன்மை இல்லாத இன்சொல் மறுபிறப்பிலும் இப்பிறப்பிலும் இன்பம் தரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கேட்பவருக்கு மனவருத்தம் தராத இனியவைகூறல் எப்பிறவிக்கும் இன்பம் தரும் என்னும் பாடல்.

பொழிப்பு

சிறுதன்மை இல்லாத இன்சொல் மறுமையிலும் இம்மையிலும் இன்பம் தரும்.