இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0097நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

(அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:0097)

பொழிப்பு: நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், இன்பம் தந்து அறம் விளைக்கும்.

மணக்குடவர் உரை: பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும், குணத்தினின்று நீங்காத சொல் என்றவாறு.

பரிமேலழகர் உரை: நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல்.
(நீதி: உலகத்தோடு பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.)

சி இலக்குவனார் உரை: பயனைக் கொடுத்து இனிய பண்பினின்றும் நீங்காத சொல், பிறர் விரும்பும் இயல்பை அளித்து நன்மையைக் கொடுக்கும்..


பொருள்கோள் வரிஅமைப்பு:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.


நயன்ஈன்று நன்றி பயக்கும்:
பதவுரை: நயன்-விரும்பப்படுதல்; ஈன்று-விளைத்து; நன்றி-நன்மை; பயக்கும்-உண்டாக்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து;;
பரிப்பெருமாள்: பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து,
பரிப்பெருமாள் குறிப்புரை: நயனீன்று பயனீன்று எனக் கூட்டுக, .
பரிதி: இனிய வசனம் இம்மைக்கு நல்லோர் என்னும்; மறுமைக்கு முத்தியும் கொடுக்கும்;
காலிங்கர்: ('நயனின்று' 'பயனின்று' 'தலைப்பிரியார்' பாடம்.) தாம் ஒழுகுகின்ற ஒழுக்கம் நழுவாது நிலைபெற்று, மற்றுமுள்ள நன்மையும் பயக்கும்; அது யாதோவெனில்;
பரிமேலழகர்: ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்;
பரிமேலழகர் குறிப்புரை: நீதி: உலகத்தோடு பொருந்துதல்.

இப்பகுதிக்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'பிறர் விரும்புவர்; பொருள் கிடிஅக்கும்; அறம் விளையும்' என்ற் உரைத்தனர். பரிதி இம்மையில் ந்ற்பெயர்ய்ம் மறுமையில் வீடுபேறும் கிடைக்கும்' என்று பொருள் கூறினார். காலிங்கர் நயனின்று, பயனின்று என்று பாடம் கொண்டமையால் மாறுபாடான உரை தருகிறார். பரிமேலழகர் 'இம்மைக்கு நீதி, மறுமைக்கு அறம் பொருளால் பிறர்க்கு நன்மை கிடைக்கும்' என்று உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் பிறர்க்கு நன்மையைத் தந்து ஒருவர்க்கு இன்பம் நல்கி ', ' பேசுகிறவனுக்கு அருள் குணத்தை உண்டாக்கி ', 'பயனைக் கொடுத்து , பிறர் விரும்பும் இயல்பை அளித்து நன்மையைக் கொடுக்கும்', 'நன்மை விளைப்பனவாய் ஒருவனுக்கு நியாய வாழ்க்கையையும் ', என்ற பொருளில் உரை தந்தனர்.

விரும்பப்படுதல் விளைத்து, நன்மை உண்டாக்கி, என்பது இப்பகுதியின் பொருள்.

பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்:
பதவுரை: பயன்-பயன்,; ஈன்று-கொடுத்து; பண்பின்-குணத்தினின்றும்' தலைப்பிரியா-நீங்காத; சொல்-மொழி.

இப்பகுதித் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறத்தினையும் பயக்கும் குணத்தினின்று நீங்காத சொல் என்றவாறு
பரிப்பெருமாள்: அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல் என்றவாறு
பரிப்பெருமாள் குறிப்புரை: இது குணத்தோடு கூறல் வேண்டும் என்பதூஉம். அதனானே அறம் பொருள் இன்பம் மூன்றும் எய்தலாம் என்பதூஉம் கூறிற்று.
பரிதி: விருந்துக்கு இனியவை சொல்வானாகில் என்றவாறு.
காலிங்கர்: தன் நாவானது பயனில்லாதனவற்றைச் சொல்லாமை. பிறர்க்கு நிலைபெறும். அதன் பொருட்டுப் பயனான இனிய மரபுடையார் சொல்லானது என்றவாறு.
பரிமேலழகர்: பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.

'குணத்தினின்று நீங்காத சொல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் அறத்தினையும் தரும் இனிமைப் பண்பின் நீங்காது இன்சொல்'', 'பிறருக்கு நன்மை உண்டாகும்படி சொல்லுவதன் பண்பு கெடாதபடி பேசுகின்ற இனிய வார்த்தைகள்', பல நன்மைகளை செய்யும் 'இனிய பண்பினின்றும் நீங்காத சொல் ', 'அறப்பயனையும் தரும் இனிமை நீங்காதனவாயுள்ள சொற்கள் ' என்றபடி பொருள் உரைத்தனர்.

பயன் தரும் பண்பின் நீங்காத சொல் என்பது இப்பகுதியின் பொருள்.

'

நிறையுரை:
இனிமைப் பயன் நல்கும் சொல்லானது விரும்புதல தந்து, நன்மை உண்டாக்கும் என்னும் பாடல்..

பயன் தரும் பண்பின் தலைப்பிரியா சொல்லானது விரும்பப்படுதல் விளைத்து, நன்மை உண்டாக்கும் என்பது பாடலின் பொருள்.
'பண்பின் தலைப்பிரியா' என்றால் என்ன?

நயன்ஈன்று என்ற தொடர்க்கு விரும்புதலைத் தத்து என்பது பொருள்.
நன்றி பயக்கும் என்ற தொடர் நன்மை உண்டாக்கும் என்ற பொருள் தரும்.
பயன்ஈன்று என்ற தொடர்க்கு இன்பப்பயன் நல்கி என்ற பொருள் பொருந்தும்.

இனிமை மாறாமல் சொற்களைக் கூறுதல் விருப்பத்தைத் தந்து, நன்மை உண்டாக்கும்.

இனிய சொற்களானது பேசுபவனை விரும்பத்தக்கவ்னாக ஆக்கி நன்மைகளை விளைக்கும்..
நயன், நன்றி என்ற சொற்கள் பலபொருளுக்கு இடமளிப்பதால் வெவ்வேறு வகையான உரைகள் எழுந்தன.
குணத்தினின்று நீங்காத சொல் நயன்ஈன்று, நன்றிபயந்து, பயன்ஈன்று எனக் கூட்டிப் பொருள் காண்பதைவிட பயன்ஈன்று பண்பான சொல் நயன்ஈன்று, நன்றிபயக்கும் எனக் கொள்வது சிறப்பாக அமையும்.

‘நயன்’ என்பதற்கு விரும்பப்படுதல், நீதி, ஒழுக்கம், இன்பம், நியாய வாழ்க்கை, அன்பு, சித்தகத்தி, நன்மை, செல்வம் என்ற பொருள்கள் காணப்பெறுகின்றன. இவற்றுள் நீதி என்பது பரிமேலழகர் கொண்ட பொருள். நீதி என்பது உலகத்தோடு பொருந்துதல் என்று அதற்கு வீளக்கமும் தருகிறார். இதனால் நயன் என்ரது அற நூல்களில் விதிக்கப்பட்டன மட்டும் அல்லாமல் உலகத்திற்கு ஒத்து நடத்தலுமாம் என்பது பொருளாகிறது.. இங்கு மணக்குடவர் கொண்ட விரும்பப்படுதல் என்ற பொருள் மேலானது. நன்றி’ என்பதற்கு அறம், நன்மை, துறவறம், புகழ்ச்சி, இன்பம் எனப் பொருள் கூறினர். இவற்றுள் அறம் என்பது பொருந்தும் என்றாலும் நன்மை என்பது சிறக்கலாம். பயன் என்பதற்கு இன்பப் பயன் என்றது பொருத்தமான பொருளாகும். அதாவது இன்பம் நல்குவது பேசப்படுகிறது. பண்பின் தலைப்பிரியாச் சொல் என்றதை இனியவை கூறல் என்னும் அதிகாரத்திற்கு ஏற்ப இனிமை என்னும் சிறப்புப் (குணத்தின்) பண்பின்மேல் நின்றதாகக் கொள்வர். இதற்கு இனிமை மாறாத சொல் என்பது பொருள்.
இக்குறளுக்கான உரைகளுள் 'பிறர்க்கு நற்பயன் தரும் உயர்பண்புச் சொல் தனக்கும் நயமும் நலமும் தரும்' என்ற வ சுப மாணிக்கம் உரை நயமாக உள்ளது..

இனபப் பயன் தரும் சொற்கள் பேசுபவன் எல்லோராலும் விரும்பப்படுகிறான். இனியவை கூறலானது அல்லவை தேய்ந்து அறம் பெருகுமாறு பல நன்மைகளையும் உண்டாக்கும்.

'பண்பின் தலைப்பிரியா' என்றால் என்ன?

பண்பின் தலைப் பிரியாச் சொல் என்ற தொடர்க்கு பண்பிலிருந்து நீங்காத சொல் என்பது பொருள் இதில் சொல்லப்பட்டுள்ள பண்பு இனிமைக் குணத்தைக் குறிக்கும். இனியவை கூறல் என்பது அதிகாரமாதலின், அதிலிருந்து இனிமைப் பண்பு வருவித்து உரைக்கப்பட்டது.
தலைப்பிரிதல் என்பது இரண்டு சொல்லாகத் தோன்றினாலும் அது இங்கு நீங்குதல் என்னும் ஒரு பொருளை உணர்த்தும் ஒரு சொல்லின் தன்மையதாகும். ஈண்டுத் தலை என்பது பொருள் உணர்த்தாது நின்ற முன்னொட்டு எனப்படும் என்பர் இலக்கண ஆசிரியரகள்.
இன்சொல்லின் மாண்பை விளக்குவதற்காக .இன்சொல் என்று வாளா கூறாது, பண்பின் தலைப்பிரியாச் சொல்' என்று சொல்லப்பட்டது.

இனிமைப் பயன் தரும் பண்பு நீங்காத சொல்லானது விரும்பப்படுதலை விளைத்து, நன்மைகள் பல உண்டாக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இனியவைகூறல் மிக விரும்பப்படுவது; நன்மைகள் தருவது என்னும் பாடல்.

பொழிப்பு

இனிமைப் பயன் தரும் பண்பான சொல்லானது விரும்பப்படுதலை உண்டாக்கி நன்மைகள் விளைக்கும்.