இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0096அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

(அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:96)

பொழிப்பு: நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்

மணக்குடவர் உரை: நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.

பரிமேலழகர் உரை: நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும்.
(தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: நல்லவற்றைக் கண்டு இனிமையாகக் கூறின் தீமை தேயும்; அறம் வளரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்லவை நாடி இனிய சொலின் அல்லவை தேய அறம்பெருகும் .


அல்லவை தேய அறம்பெருகும்:
பதவுரை: அல்லவை-அறமல்லாதன; தேய-குறைய; அறம்-நல்வினை; பெருகும்-மிக வளரும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறமல்லாதன தேய அறம் வளரும்;
பரிப்பெருமாள்: அறமல்லாதன தேய அறம் வளரும்;
பரிதி: பாவங் குறையும், புண்ணியம் பெருகும்;
காலிங்கர்: அல்லவையாகிய பாவமானது மிகவும் தேய்ந்து அறமானது மிகவும் பெருகும். அஃது யாதோ எனின்;
பரிமேலழகர்: அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும்.
பரிமேலழகர் குறிப்புரை: தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல்.

'அறமல்லாதன தேய அறம் வளரும்' என்று தொல்லாசிரியர்களௌள் மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை செய்தனர். 'பாவங் குறையும், புண்ணியம் பெருகும்' என்றார் பரிதி. 'பாவங்கள் தேய அறம் வளரும்' என்றபடி காலிங்கரும் பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீயவை தேய அறம் வளரும் ', 'பாவங்கள் குறைந்து புண்ணியம் அதிகமாகும் ', 'அவனது குற்றம் குறைந்து குணம் வளரும். ', 'தீமை தருவன குறைய அறமானது வளரும்', என்ற பொருளில் உரை தந்தனர்.

தீமை தருவன குறைய அறம் வளரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நல்லவை நாடி இனிய சொலின்:
பதவுரை: நல்லவை-நன்மை பயப்பன; நாடி-ஆராய்ந்து; இனிய-இனிமையானவையாக; சொலின்-சொன்னால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே.
பரிப்பெருமாள்: நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நல்லவை ஆராய்ந்து கூறவேண்டும் என்பதும் அதனாற் பயனும் கூறிற்று.
பரிதி: இனிமையாகிய இன்சொல் சொல்லின் என்றவாறு
காலிங்கர்: தனக்கும் பிறர்க்கும் இம்மை மறுமை பயக்கும் இனிய சொற்களை ஆராய்ந்து சொல்ல வல்லனாயின் என்றவாறு.
பரிமேலழகர்: பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.

'நல்ல சொற்களை ஆராய்ந்து இனிமையாக சொன்னால்' என்று மணக்குட்வர்/பரிப்பெருமாளும் 'இன்சொல் சொல்லின்' என்று பரிதியும் தனக்கும் பிறக்கும் இம்மை மறுமை பயக்கும் இனிய சொற்களை ஆராய்ந்து சொல்லவல்லனாயின் என்று காலிங்கரும் பொருளால பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை ஆராய்ந்து இனியவாகச் சொன்னால்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நன்மை தரும் சொற்களை ஆராய்ந்து ஒருவன் தேன் ஒழுகப் பேசுவானாயின், அவனுக்கு ', 'நல்ல எண்னத்தோடு நல்ல சொற்களையே பேசினால்', 'ஒருவன் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை ஆராய்ந்து அவற்றை இனிய முறையில் சொல்லுவானாயின் ', 'நன்மை பயக்கும் சொற்களை ஆராய்ந்து இனியனவாகச் சொன்னால் ' என்றபடி பொருள் உரைத்தனர்.

'நன்மை தரும் சொற்களைக் கண்டு ஒருவன் இனிமையாகப் பேசுவானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இனியவை கூறக் கூற தீயன குறைந்து நன்மைகள் வளரும் என்னும் அறக்குரல் ஒலிக்கும் பாடல்.

நன்மை தரும் சொற்களைக் கண்டு ஒருவன் இனிய சொலின் தீமை தருவன குறைய அறம் வளரும் என்பது பாடலின் பொருள்.
இனிய சொலின் எப்படி அறம் வளரும்?

அல்லவை என்ற சொல்லுக்கு அறமல்லாதன தீயன அல்லது பாவங்கள் என்பது பொருள்.
தேய என்ற சொல் குறைய என்ற பொருள் தரும்.
அறம்பெருகும் என்ற தொடர் அறம் வளரும் என்று பொருள்படும்.
நல்லவை நாடி என்ற தொடர் நல்லனவற்றை வேண்டி என்ற பொருளது.

தீயன அகலவும், அறச் செயல்கள் பெருகவும் இன்சொற்கள் பேசப்படவேண்டும்,

நல்ல சொற்கள் தீய சொற்கள், இனியவை, இன்னாதவை இவற்றைப் பகுத்து, அல்லாதவற்றைத் தவிர்த்து, நன்மைதரக்கூடியவற்ரை இனிமையாகப் பேசினால், தீயன தேய்ந்து அறம் பெருகும்.என்கிறது இக்குறள். நல்லவற்றை எண்ணிப் பேசவேண்டும். அவற்றையும் இனிய பொருள் பொதிந்த சொற்களால் பேசினால் தீயவை மறைந்து நன்மைகள் பெருகும்.
இப்பாடலில் சொல்லப்படும் நன்மை யாருக்கு கிடைக்கிறது? இன்சொல் கூறூவோர்க்கா? கேட்போர்க்கா? அல்லது பொதுநன்மை பேசப்படுகிற்தா? இன்சொல் கூறலானது சொல்பவர்க்கு மட்டுமல்லாமல் அதனைக் கேட்போர்க்கும் நலந்தரும் தன்மையதாகும். குறள் நடையை நோக்கும்போது இனிய சொற்களைப் பேசுவதனால் தனக்கும் பிறர்க்கும் உலகுக்கும் உண்டாகும்- பொது நன்மை பேசப்ப்படுவதாகத் தோன்றுகிறது..
தீயவை தேய என்று சொல்லாது அல்லவை என்று இன்சொல்லை வள்ளுவர் ஆள்வது இனிமை தருகிறது. அல்லவை தேய என்பது நல்லவை அல்லனவாகிய செயல்கள் குறைய என்ற பொருளில் வந்தது..
அல்லவை தேய அறம் பெருகும் என்பதற்குக் குற்றம் குறைந்து குணம் பெருகும்' என்றொரு உரையும் உள்ளது.

இதற்கு முந்தின குறளில் இனிய சொல்லோடு பணிவுடைமையாயிருத்தல் அழகு எனக் கூறப்பட்டது. இங்கு இனிய சொல்லும் நல்ல நோக்கத்துட்ன் அமைந்தால் அது அறமாகிரது என்று சொல்லப்படுகிறது.

இனிய சொலின் எப்படி அறம் வளரும்?

இனிய சொலின் என்பதற்கு இனிய சொற்களைச் சொன்னால்' என்பது பொருள். இத்தொடரமைவு மக்கள் பெரும்பான்மையாக அவ்வாறு சொல்வதில்லை என்பதை விளங்க வைக்கிறது.. இனிய பயனுள்ள சொற்களை எப்பொழுதும் சொல்வது ஒரு கடிய முயற்சிதான், ஆனாலும் தொடர்ந்து அதைப் பயில்வார்க்கு அதுவே அவருடைய இயல்பாக மாறிவிடும். இப்பண்பை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொண்டால், அல்லவை மறைந்து விடும். நல்லவற்றைச் சொல்லும்போது இன்சொல்லால் கூறவேண்டும் என்றதால் கடுஞ்சொற்கள் களையப் பெறுகின்றன. நா காக்காமல் வீசப்படும் வன்சொற்களே மறச் செயல்கள் நேர்வதற்கு பெரிதும் ஏதுக்கள் ஆகின்றன. மனம் எண்ணி இன்சொல் பேசுபவன் பொய் கூறமாட்டான். பொய்யாமையே மிகச் சிறந்த புகழுடையது. அது எல்லா உயர்ந்த அறங்களையும் தரும்
இன்சொல்லால் நிகழும் செயல்கள் முன் செய்த தீவினையின் பயன்களை நீக்கவல்லன. இன்சொல் பேசுவதின் விளைவு நன்மைகள் விளைவது மட்டுமல்ல. 'தீமைகளும் அழியும்.

பரிமேலழகர் உரையில் சுட்டப்பெறும் நாலடியார் பாட்டு அறநெறியில் நிற்பார்முன் தீமைகள் நிற்கா' எனக் கூறுகிறது. அப்பாடல்:
விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு, ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம்; விளக்கு நெய்
தேய்விடத்துச் சென்று இருள் பாய்ந்தாங்கு, நல் வினை
தீர்விடத்து நிற்குமாம், தீது.
நாலடியார் அறத்துப்பால் 6. துறவு பாடல் 51.
(பொருள்: ஓரிடத்தில் விளக்கொளி வர அங்கே இருந்த இருட்டு நீங்கினாற்போல, ஒருவனது தவமுயற்சியின் முன் அவன் அதற்குமுன் செய்ததீவினை நில்லாது, விளக்கின் நெய் குறையுமிடத்தில், சென்று இருட்டு மீண்டும் போய்ப் பரவினாற்போல, நல்வினை நீங்குமிடத்தில் தீவினை சென்று சூழ்ந்து நிற்கும்.)
இனிய சொல் கூறுவது அறச்செயல் ஆதலால் தீமைகள் விலகி நன்மைகள் பெருகும்.

நன்மை தரும் சொற்களைக் கண்டு ஒருவன் இனிமையாகப் பேசுவானாயின் தீமை தருவன குறைய அறம் வளரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அறம் தழைக்க இனியவைகூறல் வேண்டும் என்னும் பாடல்.

பொழிப்பு

நல்லவற்றைக் கண்டு இனிமையாகக் கூறினால் தீயவை தேய அறம் வளரும்.