இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0095



பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

(அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:95)

பொழிப்பு (மு வரதராசன்): வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும், மற்றைய அணிகள் அணிகள் அல்ல.

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு அழகாவது தாழ்ச்சி யுடையனா யினிய சொற்களைக் கூற வல்லவ னாதல்: பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா.
இது தாழ்த்துக் கூறவேண்டு மென்பதும் அதனாலாம் பயனுங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் - ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற அல்ல - இவை இரண்டும் அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா.
(இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், பிற எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பணிவும் இன்சொல்லுமே உயிரணிகள்; பிறவெல்லாம் உடலணிகள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி; மற்றுப் பிற அல்ல .

பதவுரை: பணிவு-வணக்கம், தாழ்ச்சி; உடையன்-உடையவன்; இன்சொலன்-இனிய சொல்லையுடையவன்; ஆதல்-ஆகுதல், ஆக இருத்தல்; ஒருவற்கு-ஒருவர்க்கு; அணியல்ல-அணிகலம் ஆகமாட்டா; மற்று-மற்றுள்ள, மேலுள்ள, இன்னுமுள்ள, (அசை); பிற-பிற.


பணிவுடையன் இன்சொலன் ஆதல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாழ்ச்சி யுடையனா யினிய சொற்களைக் கூற வல்லவ னாதல்;
பரிதி: வணக்கமுடையவனுமாய் இனிய வசனம் சொல்பவனாகில்;
காலிங்கர்: யாவர் மாட்டும் தாழ்ச்சியுடையனுமாய் இனிய சொல்லினையும் உடையனாதல் என்கின்ற வினையில் ஆவார்;
பரிமேலழகர்: தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல்; [தாழப்படுவர்-வணங்கத் தக்கவர்]
பரிமேலழகர் குறிப்புரை: இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான்,

'தாழ்ச்சியுடையனாய் இனிய சொற்களைக் கூற வல்லவன் ஆதல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எல்லாரிடத்தும் பணிவுடையனாதலும் இனிய சொல்லை இயம்புதலும்', 'வணக்கமுடையவனாகவும் இனிய சொற்களே பேசுகின்றவனாகவும் இருப்பதுதான்', 'தாழ்மையுடையவனாய் இனியன சொல்பவனாயிருத்தல்', 'பணிவு உடைமையும் இன்சொல் உரைத்தலும் ஆம்.', என்ற பொருளில் உரை தந்தனர்.

வணக்கமுடையவனுமாய் இனிய சொல்லினையும் உடையனாதல் என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருவற்கு அணி அல்ல மற்றுப் பிற:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு அழகாவது; பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா.
மணக்குடவர் குறிப்புரை: இது தாழ்த்துக் கூறவேண்டு மென்பதும் அதனாலாம் பயனுங் கூறிற்று
பரிதி: அவனுக்கு நல்வாழ்க்கையே ஆபரணம் என்றவாறு.
காலிங்கர்: ஓர் அணிகலம் பெறுவதன்றி வேறுபிற நன்மைகளும் பெறுவர் என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவனுக்கு அணியாவது இவை இரண்டும் அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா.
பரிமேலழகர் குறிப்புரை: 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், பிற எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.

'ஒருவனுக்கு அணியாவது; அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா' என்ற பொருளில் மணக்குடவரும் பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி அவனுக்கு நல்வாழ்க்கையே ஆபரணம் என்றார். காலிங்கர் மாறுபாடாக 'ஓர் அணிகலம் பெறுவதன்றி வேறுபிற நன்மைகளும் பெறுவர்' என்றுரைக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவனுக்கு அணியாகும். பிறவெல்லாம் அணி ஆகா', 'மனிதனுக்கு அழகு. அதுமட்டுமல்ல. அதனால் வேறு பல நன்மைகளும் உண்டு', 'ஒருவனுக்கு அணிகலம் என்பது; மற்ற அணிகள் மெய்யான அணிகளாகா', 'ஒருவனுக்கு அணிகலன்; இவையன்றி வேறு நகைகள் உண்மையான அணிகலன்கள் ஆகா' என்றபடி பொருள் உரைத்தனர்.

ஓருவர்க்கு அணியாகும்; மற்றுள்ள பிறவெல்லாம் அணி ஆகா என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வணக்கமுடையவனுமாய் இனிய சொல்லினையும் உடையனாதல் ஓருவர்க்கு அணியாகும்; அல்ல மற்றுப் பிற என்பது பாடலின் பொருள்.
'மற்றுப் பிற' குறிப்பவை எவை?

இன்சொல் பேசி பணிவாக நட; அழகாகத் தோன்றுவாய்.

பணிவுடனும் இன்சொல் கூறுகிறவர் ஆகவும் இருப்பது ஒருத்தருக்கு அணியாகும். பிற எல்லாம் அழகைத் தாரா.
அணி தரித்தல் சமுதாய நாகரிக வாழ்வின் அடையாளம். இன்னது செய்தல் அழகியது, சிறந்தது எனக் கூற வரும்பொழுது அதனை 'அணி' என்ற சொல்லால் குறள் குறிப்பிடும். அணிகலன் என்பது அழகாகத் தோற்றம் தருவதற்கு அல்லது அழகுக்கு அழகு சேர்ப்பதற்காக ஒருத்தி அல்லது ஒருவன் உடலில் அணியும் வேலைப்பாடுடன் கூடிய ஆபரணம் ஆகும். அழகுபடுத்தும் அணிகலன்கள் பூணும் ஒருவர் பொலிவுடன் தோற்றம் தருவார். பணிவுடன் இன்சொல் கூறுவது மாந்தர்க்கு அழகு சேர்க்கும் ஆபரணம் என்கிறார் வள்ளுவர்.
ஒருவர் பணிவுடன் நடந்துகொண்டால் மிடுக்குக் குறைந்து தான் அழகற்றுத் தோற்றமளிப்பதாக நினைக்கலாம். மாந்தர் பெருமித உணர்வோடு நடந்து கொள்வதில் தவறேதுமில்லைதான், ஆனாலும் இன்சொல்லுடன் கூடிய பணிவும் யாவர்க்கும் அழகளிப்பனவே. பணிவு என்பது உரியோரை மதித்துத் தாழ்ந்து வணக்கம் செய்யும் குணம். பணிவு சொல்லிலும் தோன்றும்; அது இன்சொல்லோடு தொடர்புடையதுதான். பணிவும் இன்சொல்லும் ஒரு சேர உடையவன் எப்பொழுதும் விளங்கித் தோன்றுவதால் அது அவனது ஆளுமைக்கும் தாழ்வு உண்டாக்காது. இனிய சொல்லைப் பேசும் பழக்கம் என்ற எழில்மிகு அணிபூண்ட ஒருவர் அனைவரையும் ஈர்க்கக்கூடிய தோற்றம் பெறுவர். மற்ற ஆரவாரப் பண்புகள் ஒருவர்க்கு அழகு சேர்க்கா என்கிறார் வள்ளுவர்.

குறளில், அணி என்னும் சொல் அழகு, பெருமை, அணிகலன் என்னும் பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அணிகளை அகவணி, புறவணி என இருவகைப்படுத்தி பணிவுடைமையும் இன்சொல்லும் அக அணி எனக் கூறி அக அணி தற்கிழமைப் பொருளாய் என்றும் பிரியாதது; புறவணி பிறிதின் கிழமைப் பொருளாய்ப் பிரிவது என்று நயமுடன் கூறுவார் திரு வி க. 'பணிவும் இன்சொல்லுமே உயிரணிகள்; பிறவெல்லாம் உடலணிகள்' என்பார் வ சுப மாணிக்கம்.

இன்சொல் கூறுபவனுக்குப் பணிவுடைமையும் வேண்டும் என்பதால்தான் அடக்கமுடைமை அதிகாரத்தில் கூறவேண்டியது இவ்வதிகாரத்தில் கூறப்பட்டது என்று பணிவுப் பண்பு இங்கு இடம்பெற்றதற்குக் காரணம் சொல்வார் பரிமேலழகர். ௮டக்கமுடைமையை விதந்தெடுத்துக்‌ கூறுமதிகாரத்தில்‌ தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு (அடக்கமுடைமை 129 பொருள்:நெருப்பினால் சுட்ட உள்ளப்புண் ஆறிவிடும்; கடுஞ்சொல்லால் சுட்ட வடு ஆறாது) எனச் சொல்லடக்கம் கூறப்பட்டது நோக்குதற்குரியது.
இனி, தன்னால் பணியப்படத்தக்காரிடத்தில் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல் எனவும் பரிமேலழகர் பொருள் உரைக்கிறார். இது இன்சொல் தாழப்படாதார்-தாழப்படுவார் இருவர் கண்ணும் வழங்குவதற்குரியது எனவும் பணிவு தகுதி நோக்கிலே செய்யத்தக்கது எனவும் பாகுபடுத்தி உரைக்கப்பட்டதாகிறது.

'மற்றுப் பிற' குறிப்பவை எவை?

'மற்றுப் பிற' என்றதற்குப் பிறவாகிய அழகெல்லாம், வேறுபிற நன்மைகளும் பெறுவர், இவை இரண்டும் அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள், இஃது அல்லாத மற்ற ஆபரணங்கள் எல்லாம், மற்றைய அணிகள் அணிகள் அல்ல, (அஃதில்லாவழி, பொன்னிலும்‌ மணியினுமாய) மற்றவை, பிற உடம்பில் அணியும் அணிவன, மற்றுப் பொன்னணிகள், பிறவெல்லாம் உடலணிகள், பிறவெல்லாம், மற்றை அணிகலன்கள், மற்ற அணிகள், இவையன்றி வேறு நகைகள், இவையல்லாத மற்றவை, வேறு எவையும், மற்ற பொன்னாலும் மணியாலும் செய்யப்பட்ட அணிகள், பொன்னாலும் மணியாலும் அழகு செய்துகொள்ளும் அணிகள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மற்று என்றதற்கு அசை என்றும் பிற என்ற சொல்லுக்கு 'இவை இரண்டும் அல்லாத மெய்க்கு அணியும் பிற அணிகள்' என்றும் பலர் பொருள் கூறினர்.
காலிங்கரும் நாமக்கல் இராமலிங்கமும் மற்று பிற என்பதற்கு பிற நன்மைகளும் உண்டாம் என்னும் கருத்துப்பட உரை வரைவர். இவர்கள் உரை வணக்கமுடையவனாகவும் இனிய சொற்களே பேசுகின்றவனாகவும் இருப்பது மனிதனுக்கு அணிமட்டுமல்ல. அதனால் வேறு பல நன்மைகளும் உண்டு என்றபடி அமைகின்றன. நாமக்கல் இராமலிங்கம் வேறு நன்மையாக- அடுத்துவரும் குறள்களிலுள்ள அல்லவை தேய அறம் பெருகும்... (96), நயனீன்று நன்றி பயக்கும்... (97), ....மறுமையும் இம்மையும் இன்பம் தரும் (98) ஆகியவற்றைக் குறிப்பார். ஆனால் ‘ஆதல் என்னும் ஒருமை எழுவாய்க்கு அணியல்ல என்னும் பன்மை வினை முடிபு ஏலாது; இராமலிங்கம் பிள்ளை அணியல்ல என்பதனை ஒரு தொடராக வைத்து அணிமட்டுமல்ல என ஒரு சொல்லை (மட்டும்) இடையில் வருவித்து உடன்பாடாகப் பொருள் கொள்ளுதல் தகாது; ‘ஒருவற்கு அணியல்ல மற்றுப்பிற’ என்பது ....ஒருவற்கு மாடல்ல மற்றையவை (400) என்னும் நடை போன்றது. ஆதலின், பணிவுடையனும் இன்சொலனும் ஆதலே ஒருவற்கு அணி; பிற அணியல்ல எனக் கூட்டிப் பொருளுரைப்பதே பொருந்துவதாகும்' என மறுப்பார் இரா சாரங்கபாணி.

பணிவும் இன்சொல்கூறலும் பண்புகள். எனவே பிற என்று சொல்லுக்குப் பிற பண்புகள் எனக் கொள்ளலாம். செல்வமிகுதி, செல்வாக்குச் செருக்கு, பதவியின் மயக்கம் இவற்றால் ஆணவ நடை, எடுத்தெறிந்த பேச்சு, ஏளனச் சொற்கள், போலிப் புன்னகை இன்ன பிறவும் தங்களுக்கு அடையாளம் தந்து அழகு சேர்க்கும் அணிகள் எனச் சிலர் கருதுவர். ஆனால் வள்ளுவர் பணிவற்று சொற்சிலம்பு ஆடுதல் ஒருவர்க்கு அழகு செய்யா என்கிறார். இவற்றில் அழகிருப்பதாக மயங்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.

'மற்றுப்பிற' என்பவை வணக்கமில்லாமை, இனியவல்லாத சொல் வழங்கல் முதலியவற்றைக் குறிக்கும்.

வணக்கமுடையவனுமாய் இனிய சொல்லினையும் உடையனாதல் ஓருவர்க்கு அணியாகும்; மற்றுள்ள பிறவெல்லாம் அணி ஆகா என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இனியவைகூறலையும் பணிவுடனே செய்க.

பொழிப்பு

பணிவுடையனாதலும் இனிய சொல்லை இயம்புதலும் ஒருவர்க்கு அணியாகும்; மற்றுள்ள பிறவெல்லாம் அல்ல