இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0094துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

(அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:0094)

பொழிப்பு: யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வெறுப்புணரச்சி என்பது இல்லையாகும்

மணக்குடவர் உரை: துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும். யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.

பரிமேலழகர் உரை: யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். >
(நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.)

ஜி வரதராஜன் உரை: நட்பு, பகை, அயலார் என்ற மூவகையினரிடத்தும் இனிமை பயக்கும் இன்சொற்களையே பேபவர்க்கு அவர்களைத் துன்புறுத்தும் துன்பச் செயலகள் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்


துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்:
பதவுரை: துன்பு-துயரம்; உறூஉம்-மிகுவிக்கும்; துவ்வாமை-வெறுப்பு; இல்லாகும்-இல்லாததாகும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும்;
பரிப்பெருமாள்: துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும்;
பரிதி: தரித்திரமேற்கொண்டு துயர் உறுந் துன்பமில்லை;
காலிங்கர்: தம்மைத் துன்புறுத்துவதாகிய வறுமை இலதாகும். யார்க்கெனின்;
பரிமேலழகர்: துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம்.
பரிமேலழகர்: நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார்.

'துன்புறுத்துவதாகிய வறுமை இலதாகும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பந்தரும் வறுமை வாராது', 'துன்பம் தருகிற பசிப்பிணியே வராது', 'துன்பத்தை மிகுவிக்கும் வறுமை இல்லையாம்', 'துன்பத்தைக் கொடுக்கும் வறுமை இல்லை ', என்ற பொருளில் உரை தந்தனர்.

துன்பம் மிகச் செய்யும் வெறுப்புணர்ச்சி இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு:
பதவுரை: யார்மாட்டும்-எல்லாரிடத்தும்; இன்பு-மகிழ்ச்சி; உறூஉம்-மிகுவிக்கும்; இன்-இனிய; சொலவர்க்கு-சொல்லையுடையவர்க்கு..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.
பரிப்பெருமாள்: யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லார்மாட்டும் இன்சொற் கூறவேண்டும் என்பதூஉம் அதனானே பொருளுண்டாம் என்பதூஉம் கூறப்பட்டது.
பரிதி: யாரிடத்திலும் இன்சொல் கூறுவானாகில் என்றவாறு.
காலிங்கர்: யாவர்மாட்டும் நேரொக்க மற்றவர் நெஞ்சத்து இன்பம் உறுத்தும் இனிய சொல்லினை உடையார்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு.
பரிமேலழகர் குறிப்புரை: யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.

யாவர்மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யார்க்கும் இன்பச் சொல்லைச் சொல்லுக', 'யாரிடத்திலும் இன்பம் உண்டாக்கக் கூடிய இனிய சொற்களையே பேசுகின்றவர்களுக்கு ', ' எல்லாரிடத்தும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல் கூறவல்லார்க்கு', 'எவரிடத்தும் இன்பத்தைக் கொடுக்கும் இனிய சொற்களைப் பேச வல்லார்க்கு' என்றபடி பொருள் உரைத்தனர்.

எல்லாரிடத்தும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல் பேசுகின்றவர்களுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

:

நிறையுரை:
இன்சொற்கள் பேசுவாரிடையே வெறுப்பு நிலவாது என்னும் பாடல்.

எல்லாரிடத்தும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல் பேசுகின்றவர்களுக்குத் துன்பம் மிகச் செய்யும் துவ்வாமை இல்லை என்பது பாடலின் பொருள்.
'துவ்வாமை' என்றால் என்ன

துன்புறூஉம் என்ற சொல் துன்பத்தை மிகச் செய்யும் என்ற பொருள் தரும்.
இல்லாகும் என்ற சொல் இல்லாததாகும் எனப் பொருள்படும்.
யார்மாட்டும் என்றது எவரிடத்தும் என்ற பொருளது.
இன்புறூஉம் என்ற சொல்லுக்கு இன்பம் மிகுவிக்கும் என்பது பொருள்.
இன்சொலவர்க்கு என்ற சொல் இனிய சொற்களை உடையவர்களுக்கு என்ற பொருள் தரும்.

எல்லோரிடத்திலும் இன்பத்தை மிகச்செய்யும் இனிய சொற்களைப் பேசுபவர்களுக்குத், துன்பத்தை மிகுவிக்கும் வெறுப்புணர்ச்சி இல்லாதொழியும்.

“துவ்வாமை” என்ற சொல் வெறுப்பு, பொறாமை, வறுமை என்ற பல பொருள்களைக் கொண்டது, இவை எல்லாமே துன்பத்தை விளைவிக்கக்கூடியன.
தொல்லாசிரியர்கள் அனைவரும், .இன்றைய ஆசிரியர்களில் ஓரிருவர் நீங்கலாக எல்லோரும் துவ்வாமை என்றதற்கு வறுமை என்ற பொருளையே கொண்டனர். இன்சொல் கூறலுக்கும் வறுமை அணுகாதிருப்பதற்கும் தொடர்பு இருக்க முடியும் என்பதை ஒத்துக் கொள்வது கடினமாக இருக்கிறது.. துவ்வாமை என்ற சொல் வெறுப்பு என்ற பொருளிலேயே ஆளப்பட்டதாகக் கொள்வதே பொருத்தம்.
இன்சொல் பேசுகின்றவர்களை எல்லோரும் விரும்புவார்கள்; இனிய சொற்கள் நயன் ஈனும் என்கிறது இவ்வதிகாரத்து இன்னொரு பாடல். இன்சொற்களையே எப்பொழுதும் பேசுவோர் நட்பினர், பகைவர், அயலார் என்று எவரிடத்தும் வெறுப்பு கொள்ளமாட்டார்கள். அதுபோலப் பிறரும் இனிமையாகப் பேசுவோரிடம் வெறுப்புணர்ச்சி கொள்ள ஏதுக்கள் இல்லை. ஒருவர் மீது ஒருவர்கொள்ளும் காழ்ப்புணர்ச்சி துன்பம் விளைக்கும் தன்மையது. இன்சொல் பேசுவதால் வெறுப்பு இருபக்கமும் மறைந்து நல்லிணக்கம் ஏற்படுகிறது. அதனால் துன்பமும் இல்லாமல் போகிறது.

'துவ்வாமை' என்றால் என்ன

துவ்வாமை என்ற சொல்லுக்கு வெறுப்பு, வறுமை, வேண்டாமை என்ற பொருள்களை அகராதி கூறுகிறது.
இக்குறளிலுள்ள துவ்வாமை என்ற சொல்லுக்கு மணக்குடவர் தொடங்கி இன்றைய ஆசிரியர்கள் வரை அனைவரும் நுகராமையாகிய நல்குரவு அதாவது வறுமை என்றே பொருள் கொண்டனர். பரிமேலழகர் 'நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், துவ்வாமை'' என இச்சொல்லுக்கு விளக்கம் தந்தார். துவ்வாமை என்பது அனுபவியாமையைக் குறிப்பதால் அது வறுமையாயிற்று என்றனர். மேலும் எப்படி வறுமை தீண்டாது என்பதற்கு 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து. என்றார் பரிமேலழகர். இன்சொல் உடையார்க்கு யாவரும் நண்பராவர். நண்பர்கள் மிகுத்திருப்பராதலால், அவர்களுக்கு வறுமை வந்தபோதும், கேளாமலேயே உதவியும் வரும், வறுமையால் வரும் துன்பம் இருக்காது என்பது இக்குறளுக்கு உரையாளர்கள் வழங்கிய பொதுவான கருத்தாகும். .
துவ்வாமை இல்லாகும் என்றதற்கு 'பசிப்பிணி நீங்கும்' என்ற பொருள் கொள்ளாத உரைகள் மிகச் சிலவே. அவற்றிலிருந்து சில
* நட்பு, பகை, அயலார் என்ற மூவகையினரிடத்தும் இனிமை பயக்கும் இன்சொற்களையே பேசுபவர்க்கு அவர்களைத் துன்புறுத்தும் துன்பச் செயலகள் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும்.
* இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு 'நட்பில் வறுமை' (நண்பர் இல்லாது போவது) எனும் துன்பமில்லை.
* இன்புறத்தக்க இனிய சொல் பேசுபவர்களுக்கு துணையற்ற துன்புறுத்தும் தனிமை எப்போதுமில்லை

யாவர்மாட்டும் இன்சொற் கூறவேண்டும்; அதனாலே பொருளுண்டாகும் என்பது இக்குறளுக்குப்[ பெரும்பான்மை உரையளர்கள் கூறிய உரையாகும். வறுமையைப் போக்குவது செல்வப் பொருளா அல்லது இன்சொல் கூறலா என்று வினா எழுப்பினால் எவரும் செல்வப் பொருளே என்று உடன் விடையிறுப்பர். வணிக,நிறுவனங்களில் பணிபுரிவோர் இன்சொல் பேசுதலால் நிறுவனத்திற்குப் பொருள் பெருகலாம். ஆனால் தனிப்பட்ட மாந்தர் இன்சொல் கூறினால் பொருள் பெருகி வறுமை நேராது என்பதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.
இக்குறளுக்குப் பொருள் உரைத்தவர்களில் ஒரு சிலரே வறுமை ஏன் வாராது என்று விளக்க முன்வந்தனர் அவர்களும் யாவரும் நட்பாதலின் எல்லாச் செல்வமும் எய்தும் என்று பரிமேலழகர் உரைத்த கருத்தை ஒட்டியே பொருள் கூறினர். இது ஓர் நலிந்த வாதம் ஆகும் பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. .(குறள் 227). என்றவிடத்து 'பசிப்பிணி போக்கியவன் பசியால பாதிக்கப்படமாட்டான்' என்ற அறச்செய்தி சொல்லப்பட்டது அது எளிதில் புரிந்து கொள்ளப்படுகிறது. அதுபோல 'எல்லோரையும் இன்சொற்கூறி மகிழச் செய்கிறவன் பிறரால் துன்பப்படமாட்டான் என்ற வகையில் இக்குறளுக்கு உரை அமைந்திருந்தால் பொருத்தமாக இருக்கும். ஆனால் இன்சொல் பேசினால் வறுமை வாராது என்பது பொருந்துவதாக இல்லை.

துவ்வாமை என்பதற்கு வறுமை) என்னாமல் வெறுப்பு எனக் கொண்டால் .பொருள் சிறக்கிறது. வெறுத்தல் இல்லாதார்க்கு இன்சொல் கூறல் இயல்பாக அமையும், இன்சொல் பேசி மகிழ்விப்பவர்களிடம் பிறரும் வெறுப்புக் கொள்ள மாட்டார்கள். எல்லோரிடத்திலும் இன்சொற்களையே பேசுவோருக்கு யார்மீதும் வெறுப்பு இல்லையாதலால், அதனால் வரும் பகையும் இல்லை; துன்பமும் ஒன்றுமில்லை.
எல்லாரிடத்தும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல் பேசுகின்றவர்களுக்குத் துன்பம் மிகச் செய்யும் வெறுப்பு இல்லை என்பது இக்குறளுக்கான உரையாகிறது.
துவ்வாமை என்பதற்கு வெறுப்பு என்பதே பொருந்திய பொருளாகும்.

எல்லாரிடத்தும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல் பேசுகின்றவர்களுக்குத் துன்பம் மிகச் செய்யும் வெறுப்புணர்வு இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இன்சொல் உடையவன் யாரையும் வெறுக்க மாட்டான்; வெறுக்கப்படவும் மாட்டான் என்னும் இனியவைகூறல் பாடல்.

பொழிப்பு

எல்லோரிடத்தும் இன்பம் தரும் இன்சொல் கூறுபவர்களுக்குத் துன்பத்தை மிகுவிக்கும் வெறுப்பு இராது.