இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0093முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொல் இனதே அறம்

(அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:93)

பொழிப்பு: முகத்தால் விரும்பி - இனிமையுடன் நோக்கி - உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்

மணக்குடவர் உரை: கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.

பரிமேலழகர் உரை: முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம்.
('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: ஒருவனைக் கண்டபோது முகத்தால் விருப்பத்தோடு இனிமையாக நோக்கி மனம் ஒன்றிய இன்சொல்லை இயம்புவதே அறம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் .இன் சொலினதே அறம்


முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி:
பதவுரை: முகத்தான்-முகத்தினால்; அமர்ந்து-விரும்பி; இனிது-இனிதாக; நோக்கி-பார்த்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி;
பரிப்பெருமாள்: கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி;
பரிதி: யாரையும் கிருபையினாலே பார்த்து;
காலிங்கர்: கேட்டவர்க்குச் சில சொல்லுமிடத்துத் தம்முகத்தினால் இனிதாக நோக்கி;
பரிமேலழகர்: கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி;

'தம்முகத்தினால் இனிதாக நோக்கி' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முகமலர்ந்து இனிமையாகப் பார்த்து, ' (தர்மம் என்பதே இனியவை கூறுவதில் அடங்கிவிடும்.) முகமலர்ச்சியோடு இனிமை தரப் பார்த்து', 'முகமும் முகமும் மலர இனிமையாகப் பார்த்து ', 'கண்ட பொழுதே முகத்தான் விரும்பி இனிமையாகப் பார்த்து,', என்ற பொருளில் உரை தந்தனர்.

முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து என்பது இப்பகுதியின் பொருள்.

அகத்தானாம் இன்சொல் இனதே அறம்:
பதவுரை: அகத்து-மனத்துடனாகிய; ஆன்-(3ம் வேற்றுமை உருபு)கருவிப் பொருளில் -ஆம்-ஆகும் இன்--இனிய சொலினதே-சொல்லின் கண்ணதே; அறம்-நல்வினை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.
பரிப்பெருமாள்: மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.
பரிப்பெருமாள் கருத்துரை: ஆம் என்பதனை இறுதியிற் கூட்டுக. இதனானே மனத்தோடு கூடாத இன்சொல் அறமாகாது என்றவாறாயிற்று. இனிமை சொல்லுங்கால் மனத்தோடு கூறுதலும், நல்லன ஆராய்ந்து கூறுதலும் தாழ்ந்து கூறுதலும் யார் மாட்டும் கூறுதலும், குணத்தொடு கூறுதலும் வேண்டுமாகலின் மனத்தொடு கூறவேண்டும் என்பதூஉம் அதுதானே அறமாவது என்பதூஉம் கூறினார்
பரிதி: மனமகிழ்ந்து சொல்லின், அதுவன்றோ தன்மம் என்றவாறு.
காலிங்கர்: பதறாது தனித்திருந்து இருவர் நெஞ்சமும் அமையாத இனிமையத் தருவதாகிய இன்சொற்களைச் சொல்லின் மற்று அதுவே அறமாவது என்றவாறு
பரிமேலழகர்: பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம்.
பரிமேலழகர்: குறிப்புரை: 'நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.

'மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுவெ அறமாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளத்தோடு சொல்லுக; அதுவே அறம்', 'மனப்பூர்வமாக இனிய வார்த்தைகளைச் சொல்லுவதே அறங்களின் அடிப்படை', 'உள்ளத்தோடு கூடிய இனிய சொற்களைச் சொல்வதே இனியவை கூறும் அறமாகும்', ' பின்னர் உள்ளன்போடு இனிய சொற்களைச் சொல்லுதலின் முறைமையில் அறம் உள்ளது' என்றபடி பொருள் உரைத்தனர்.

உள்ளன்போடு இனிய சொற்களைச் சொல்லுவதே அறமாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உள்ளன்போடு இன்சொற்கள் கூறுவது ஓர் அறமாகும் என்னும் குறள்.

முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து அகத்தானாம் இன்சொலினதே அறமாகும் என்பது பாடலின் பொருள்.
'அகத்தானாம் இன்சொலினதே' என்றால் என்ன?

முகத்தான் என்ற சொல்லுக்கு முகத்தால் என்று பொருள்.
அமர்ந்து என்ற சொல் விரும்பி என்ற பொருள் தரும்.
இனிது நோக்கி என்ற தொடர்க்கு இனிதாகப் பார்த்து என்பது பொருள்.

முகமலர்ச்சியோடு இனிமையாகப் பார்த்து அகக்கனிவோடு இன்சொல் பேசுவது அறம் ஆகும்.

இதுதான் அறம் என்று குறிப்பிட்டு சொல்லப்படும் குறட்பாக்களுள் ஒன்று இது. இங்கு கூறப்படுவது சொல்லினால் வரும் அறம். முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து மனத்திலும் ஒன்றி நின்று இனிமையான சொல்லைக் கூறுதலும் அறம் என்று கூறுகிறது இப்பாடல்..இனியவை கூறும் பண்பு வள்ளுவருக்கு விருப்பமான ஒன்று அதை குறள் நூலில் அடிக்கடி கூறி மகிழ்வார்.

உள்ள நெகிழ்ச்சியைக் காட்டுவது முகமாதலால் முகத்தான் அமர்ந்து எனக் கூறப்பட்டது. முகமும் முகமும் கலத்தல் முதற்கண் நிகழ்கிறது. அம்மலர்ச்சி கண்வழியே தெரியும் என்பதால் மணக்குடவர் கண்ணாலே பொருந்தி,என என உரை வரைகிறார்.
நோக்கும் பார்வையில் இனிமை காட்டப்படுகிறது. நோக்கி' என்னும் சொல்லிற்குக் 'கண்னால் பார்த்து' என்று பொருள் கூறும் அளவில் நில்லாது 'கண்ணாலும் கருத்தாலும் பார்த்து' என்று பொருள் கூறுவார் திரு வி க.
உள்ளன்போடு பேசும் இன்சொல் கூறப்படுகிறது.
மாசில்லா மனதில்தான் அன்பு மலர்ந்து; அது இன்சொற்களைப் பேசவும் வைக்கும். இன்முகம் காட்டலும் உடன் இன்சொற் சொல்லுதலும் மக்களைப் பிணித்து மகிழ்விக்குந் தன்மையன. எல்லாராலும் பின்பற்றக்கூடிய இந்த எளிய அறம் அன்பும் இனிமையும் கலந்ததாகும். இனிமை சொல்லிலும் மனத்திலும் உண்டாகி செவிக்கும் மனத்துக்கும் இன்பம் தருகிறது.

'இன்சொல் சொல்லுதனிடத்து அறம் என்பதிலுள்ள நுணுக்கம் நெஞ்சைக் கவர்கிறது. இப்பாவிலுல்ல சொல் அமைவும், கருத்து நுணுக்கும் பொருளாழமும், இவைகள் ஈனும் அமைதியும் அகத்திணையார்க்கு விருந்தாவன. முகத்தானமர்தல்-மலர்தல்; இனிது நோக்கல்-மணங்கமழ்தல். இன்சொல்-தேன்பிலிற்றல். இன்சொல்லினிடத்தாகிய அறம் -சுவைத்தல். முகனமர்தலில் அன்பும் இனிது நோக்கலில் அருளும் ஒன்றி அகத்தானாம் இன்சொல்லினதாகிய அறமாய்க் கனிந்து நிற்றல் காண்க' என இப்பாடலைப் பாராட்டி உவப்பார் திரு வி க.

'அகத்தானாம் இன்சொலினதே' என்றால் என்ன?

அகத்தானாம் இன்சொலினதே என்பதற்கு உள்ளத்தால் கூடி இனிய சொல் சொல்லுதலே என்பது பொருள்.

பரிப்பெருமாள் 'மனத்தோடு கூடாத இன்சொல் அறமாகாது' எனச் சொல்லி 'இனிமை சொல்லுங்கால் மனத்தோடு கூறுதலும், நல்லன ஆராய்ந்து கூறுதலும் தாழ்ந்து கூறுதலும் யார் மாட்டும் கூறுதலும், குணத்தொடு கூறுதலும் வேண்டுமாகலின் மனத்தொடு கூறவேண்டும்' என இத்தொடரை விளக்கினார்.

காலிங்கர்:.'இருவர் நெஞ்சமும் அமையாத இனிமையைத் தருவதாகிய இன்சொல்லின்'’ என இத்தொடர்க்கு உரை செய்துள்ளார். இவர் அகத்தானாம் என்பதற்கு 'அகத்தானா' எனச் சொற்சிதைவு செய்து பொருள் கண்டிருப்பார் என்பர். காலிங்கர் உரைக்குத் தண்டபாணி தேசிகர் 'சொல்வானும் கேட்பானும் ஆகிய இருவர் நெஞ்சமும், இன்சொல்லைச் சொல்லிப் போதும் என்றும், கேட்டுப் போதும் என்றும் அமையாத வண்ணம் இன்சொல்லலச் சொல்லின்' என விளக்கம் தந்து 'அமுதங்கூட உண்பார்க்குப் போதும் என்ற தெவிட்டலை உண்டாக்கும். இன்சொல் அத்தகைய அமைதியைத் தராது.. மேலும் மேலும் சொல்ல வேண்டும், கேட்க வேண்டும் என்ற எழுச்சியை இருவர் மாட்டும் தரும் என்று ஒரு புதுமைக் கருத்தைப் பொதுமையின் வழங்குகிறார்' என விரிப்பார்..

முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து உள்ளன்போடு இனிய சொற்களைச் சொல்லுவது அறமாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இனியவைகூறல் ஒரு இனிமையான காட்சியாக்கப்பட்டு வழங்கப் பெறும் பாடல்

பொழிப்பு

முகமலர்ந்து இனிமையாகப் பார்த்து உள்ளன்போடு இன்சொல் இயம்புவதே அறம்