இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0090



மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:90)

பொழிப்பு (மு வரதராசன்): அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்; அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.



மணக்குடவர் உரை: எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது: விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர்.
இது முகம்நோக்கி யினிமை கூறவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: அனிச்சம் மோப்பக் குழையும் - அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்து முகம் திரிந்து நோக்கக்குழையும் - விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர்.
(அனிச்சம் ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.)

நாமக்கல் கவிஞர் உரை: (பணம் இருந்தோ இல்லாமலோ விருந்தினர்கள் முகங்கோணாமல் உபசரிக்க வேண்டும்.) அனிச்சம் என்ற மலர் மனிதன் அதை மோந்தவுடன் வாடிப்போகும். அதைப்போல விருந்தாளிகளை விருந்திடுவோன் முகங்கோணிப் பார்த்தாலும் கூட விருந்து கெட்டுப்போகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அனிச்சம் மோப்பக் குழையும்; விருந்து முகம் திரிந்து நோக்கக் குழையும்.

பதவுரை: மோப்ப-முகர்ந்தால், மோந்தால், முகப்பதனால்; குழையும்-வாடி விடும்; அனிச்சம்-ஒருவகை நுட்பமான மலர்; முகம்-முகம்; திரிந்து-வேறுபட்டு; நோக்க-பார்க்கும்போது; குழையும்-சுருங்கும்; விருந்து-விருந்தினர்.


மோப்பக் குழையும் அனிச்சம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது;.
பரிதி: அனிச்சமலர் நாசியிலே நுகர வாடும்;
காலிங்கர்: உலகத்து மலர்கள் பலவற்றிலும் மென்மையாற் சிறந்த அனிச்சமலர் ஒருவர் பறித்து மோப்ப வாடுமதுபோல்;
பரிமேலழகர்: அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது;
பரிமேலழகர் குறிப்புரை: அனிச்சம் ஆகுபெயர்.

'அனிச்சப்பூ மோந்தால் வாடும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'அனிச்சப்பூ மோந்தால் வாடும்', 'அனிச்சப்பூ மோந்தால்தான் வாடும்', 'அனிச்சப்பூவானது மோந்தவுடன் வாடிவிடும்', 'அனிச்சப்பூ மோப்பத்தினால் வாடும்', என்ற பொருளில் உரை தந்தனர்.

அனிச்சப் பூவானது முகர்ந்தால் வாடிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது முகம்நோக்கி யினிமை கூறவேண்டுமென்றது.
பரிதி: அதனினும் மிருது விருந்து; அஃது எங்ஙனம் எனில் பிரியமில்லாமல் பார்க்க முகம் வாடும் என்றவாறு.
காலிங்கர்: விருந்தை ஒருவர் முகம்மாறிப் பார்க்க மிகவும் வாடும் என்றவாறு.
பரிமேலழகர்: விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர்.
பரிமேலழகர் குறிப்புரை: சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.

'விருந்தினரை முகம் வேறுபட்டு நோக்க அவர் வாடுவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விருந்தோமுகமாறிப் பார்த்தாலே வாடிப் போம்', 'ஆனால், விருந்தினரோ முகம் மாறி நோக்கிய அளவிலே வாடி வதங்குவர்', 'அதுபோல விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கிய அளவிலே வாட்டம் அடைவர்', 'ஆனால் விருந்தினரோ முகம் வேறுபட்டுப் பார்த்தாலே வாடிவிடுவர்' என்றபடி பொருள் உரைத்தனர்.

முகம் வேறுபட்டுப் பார்க்க விருந்தினர் வாடுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

.

நிறையுரை:
அனிச்ச மலர் மோந்தால் வாடும்; முகம் திரிந்து நோக்க விருந்தினர் வாடுவர் என்பது பாடலின் பொருள்.
'முகந்திரிந்து நோக்க' என்றால் என்ன?

விருந்தினர் உள்ளம் பூவினும் மென்மையானது.

அனிச்ச மலரானது மோந்தால் வாடிப் போகும்; விருந்தினரோ, விருந்தோம்புவான் முகம் வேறுபட்டு நோக்கவே சுருங்கிப்போவர்.
எல்லா மலருமே மென்மையானவை. அவற்றுள்ளும் மிக மென்மையானது அனிச்சப்பூ. இலக்கியங்களில் பெண்களின் மென்மைத் தன்மை அனிச்சத்தோடு ஒப்பிடப்பட்டது. அனிச்சமானது முகர்ந்த அளவிலேயே வாடிவிடும் இயல்பு கொண்டது. அனிச்சப்பூப் போலவே விருந்தினர் உள்ளமும் மிக மென்மையானது; எளிதில் புண்படக்கூடியது; விருந்து கொடுப்பவன் முகம் மலராது திரிந்து பார்த்தாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடும் என்கிறது இப்பாடல்.
தொட்டாற்சுருங்கிச் ('தொட்டாற் சிணுங்கி' எனவும் இதைச் சொல்வர்) செடி பரவலாகக் காணப்படும் ஒன்று. இச்செடியைத் தொட்டவுடன் சுருங்கிப் போகும். அது போல அனிச்ச மலர் மோந்தவுடனே வாடிவிடுமாம். 'மோப்ப' என்ற சொல் மூக்கின் அருகில் வைத்து முகர்தலைச் சொல்வது. இது நெருக்கத்தையும் இடைவெளி இல்லாததையும் குறிக்கும். 'நோக்க' என்றது தொலைவிடத்துக் கண்டதையும் உள்ளடக்கியது. சிறிது தூரத்தில் வரும்போதே விருந்தோம்புவான் மனநிலையை விருந்தினர் எளிதில் உணர்ந்து கொள்வர் என்பது கருத்து.
அனிச்சத்தின் மென்மை வள்ளுவரின் உள்ளத்தைக் கவர்ந்ததால் குறளில் அதை நான்கு பாக்களில் (90, 1111, 1115, 1120) பாடி மகிழ்ந்தார்.

அனிச்ச மலர் என ஒன்று உண்மையிலேயே இருந்ததா? இப்போதும் உள்ளதா?
சங்கத் தொகை நூலான பத்துப்பாட்டில் குறிஞ்சிப்பாட்டு (62) குறிப்பிடும் 99 மலர்களுள் ஒன்றாக அனிச்ச மலர் "ஒன் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்" என்று பாடப்பட்டுள்ளது. கலித்தொகைப் பாட்டில்(91) "அவிழ்நீலம் அல்லி அனிச்சம்" என்று வருகிறது. மேலும் "பஞ்சியட ரனிச்ச நெருஞ்சியின்ற பழமாலென் றஞ்சு மலரடிகள்", "அம்மெல் லனிச்சம் மலருன்னத் தூவியும்", "அனிச்சத்தம் போது போலத் தொடுப்பவே குழைந்து மாழ்கி" என்று சிந்தாமணியிலும் பின்வந்த மற்ற இலக்கியங்களிலும் அனிச்சமலர் பற்றிக் குறிப்புகள் உள்ளன.
எனவே அனிச்சம் பூ என்று ஒன்று இருந்ததாகத் தெளிவடையலாம். ஆயினும் மேற்சொன்ன பாடல்களில் விளக்கமான வருணனை இல்லாததால் அனிச்சமலரின் நிறம், தோற்றம் பற்றி அறிய முடியவில்லை. அது எந்த வகைப் பூ -கொடிப் பூவா? கோட்டுப் பூவா? நீர்ப் பூவா? என்பதும் தெரியவில்லை.
அனிச்சத்தின் புலனுணர்வுத் தன்மைக்குக் (வாடுதல்) மோப்பவர் வெளிவிடும் மூச்சிலே இருக்கும் வெப்பமோ அல்லது, அதன் வேதியியல் (கரியமில வாயு) இயல்போ காரணமாக இருந்திருக்கலாமெனக் கூறுவர். தொலைவில் மேகம் நீர் முகந்து கறுக்கும்போது தரைமீதுள்ள அனிச்ச மலர் வாடிவிடும் என்று இன்றைய தாவர இயல் அறிஞர் விளக்குவர்.
குறளில் சொல்லப்படும் அனிச்ச மலர் இக்காலப் பயிரியல் நூல்களில் பதிவு பெறவில்லை என்கின்றனர்; அது இன்று அழிந்தொழிந்து விட்டது என்பது ஆய்வாளர்களின் முடிவு

இயற்கை உவமை கொண்டு பொருளாலும் ஓசை நயத்தாலும் செம்மையான சொற்களால் உருவாக்கப்பட்ட பாடல் சிறந்த மொழியமைப்புடன் அமைந்ததால் மரபான விருந்தோம்பல் முறையைச் சொல்வதானாலும் இக்குறள் மனதில் நிலைத்து நிற்கிறது.

'முகந்திரிந்து நோக்க' என்றால் என்ன?

'முகந்திரிந்து நோக்க' என்ற தொடர் முகம் வேறுபட்டுப் பார்க்க என்ற பொருளது.
மனித முகம், குறிப்பாகக் கண்களின் பார்வை, அகத்தில் உள்ள உணர்ச்சியைக் காட்டிவிடும். விருந்தினரைத் தொலைவில் காணும் பொழுதே அவரை வரவேற்பது விருந்தோம்புவானது இனிய பார்வைதான். விருந்திற்குவருவோர் கூர் உணர்வுடையவராகவே இருப்பர். விருந்துதருவோரின் மனதைப் புரிந்து கொள்ளும் திறன் அவர்களிடம் நிறையவே உண்டு. இனிய முகத்தையே அவர்கள் எதிர்நோக்கி வருவர். இன்முகம் கண்டால் விருந்துக்காக வருபவரின் உள்ளம் குளிரும். விருந்திடுவோர் சற்று முகம் மாறுபட்டு விருந்தினரை நோக்கினாலே வந்தவர் மிகவும் வாடிவிடுவர். விருந்தினர்களுக்கு உணவுகொடுப்பது மட்டுமன்றி அவர்களை வரவேற்பதில் இருந்து விருந்துண்டு செல்வது வரை அவர்கள் மனம் வருந்தாதபடி நடந்து கொள்வதில்தான் விருந்தின் சிறப்பே அமைந்திருக்கிறது. இடையில் எந்த வேளையிலும் முகம் வேறுபட்டாலும் விருந்தினர் வாடிவிடுவர்.
ஏன் விருந்தோம்புவான் முகம் திரிந்து நோக்க வேண்டும்? விருந்து உபசரிக்க இயலாமை, ஐயப்பாட்டுணர்வு, விருப்பமின்மை, நேரம் கடந்து விருந்தினர் வந்தமை, வேண்டாவிருந்து எனக் கருதுதல் போன்ற பல காரணங்களால்.விருந்தோம்புவான் முகம் திரியலாம். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அவனது மனநிலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இன்முகத்துடன் இன்சொல் பேசி விருந்தினரைப் பேணவேண்டியது அவனது கடமையாகும். பார்வையில் அன்பும், குளிர்ச்சியும், இனிமையும் காட்டி வரவேற்று விருந்தினரைப் பேணுதல் வேண்டும்.

அனிச்ச மலர் மோந்தால் வாடும்; முகம் வேறுபட்டுப் பார்க்க விருந்தினர் வாடுவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இன்முகம் காட்டி வரவேற்பது சிறந்த விருந்தோம்பல் முறையாகும்.

பொழிப்பு

அனிச்சப்பூ முகர்ந்த அளவில் வாடும். விருந்தினர் முகம் மாறிப் பார்க்க வாடிவிடுவர்.