இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0089உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:89)

பொழிப்பு: செல்வ நிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்; அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்

மணக்குடவர் உரை: உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.

பரிமேலழகர் உரை: உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: செல்வமுடைய காலத்து வறுமை யாதெனின் விருந்தோம்புதலைக் கைக்கொள்ளாது இகழும் பேதைமை யாகும். அஃது அறிவில்லாதவ்ரிடத்து உள்ளதே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு..


உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை;:
பதவுரை: உடைமையுள்-செல்வத்தில்; இன்மை-இல்லாமை; விருந்து-விருந்தினர்; ஓம்பல்-புறந்தருதல்; ஓம்பா-புறக்கணிக்கும் மடமை-அறியாமை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை,
பரிதி: செல்வத்துள் இல்லின் தன்மையாவது விருந்து ஓம்பல். அங்ஙனம் ஓம்பாத மடமை சில பெண்களிடம் உண்டு.
பரிமேலழகர்: -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை;
பரிமேலழகர் குறிப்புரை: உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம்.

'உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் உடைமையின் கண்ணே இல்லாமைபோல என்று உவமையாகக் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள 'செல்வத்தில் வறுமை விருந்திடா மடமையாம். ', 'செல்வக்கால்த்து வறுமையாவது விருந்தோம்புதலைச் செய்யாத பேதைமை ', ' பணம் இருந்தும் விருந்தோம்பாவிட்டால்) விருந்தினரை உபசரிக்காதவர்கள் பணக்காராக இருந்தாலும் அவர்கள் தரித்திரர்கள்தாம்..', ' செல்வம் உள்ள காலத்தும் வறுமை உள்ளவராகுதல் விருந்தினரை ஓம்பாத அறியமையால் உண்டாகும்..',என்ற பொருளில் உரை தந்தனர்.

செல்வநிலையில் இல்லாமையாய்த் தோன்றுவது விருந்தோம்பல் செய்யாப் பேதைமையாம் என்பது இப்பகுதியின் பொருள்.

மடவார்கண் உண்டு.:
பதவுரை: மடவார்கண்-அறிவிலிகள் மாட்டு; உண்டு-உளது..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதைமையார் மாட்டேயுளதாம்.
பரிதி: ஸ்தீரியும் புருஷனும் ஒரு மனமாகச் செய்வது விருந்து. அல்லது பிரயோசனம் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.

'பேதைமையார் மாட்டேயுளதாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள்' இக்குணம் முழுதும் அறிவிலியிடமே இருக்கும்', 'அது அறிவிலிகளிடையே காணப்பெறும் ', 'அவர்களுக்கு முட்டாள்தனந்தான் மிச்சம் ', அறியாதாரிடம் இந்நிலைமை யுண்டாகும். அறிந்தவரிடம் இராது ' 'என்றபடி பொருள் உரைத்தனர்.

அறிவிலிகளிடையே உள்ளதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செல்வமிருந்தும் விருந்து தலைப்படாதது மூடத்தனம்.என்னும் பாடல்.

உடைமையுள் இன்மையாவது விருந்தோம்பல் செய்யா பேதைமையாம்; அது அறிவிலிகளிடையே உள்ளதாகும் என்பது பாடலின் பொருள்.
'உடைமையுள் இன்மை' என்றால் என்ன?

விருந்தோம்பல் என்றது விருந்தினரைப் பேணுதல் என்ற் பொருள் தரும்.
ஓம்பா என்ற சொல்லுக்குச் செய்யாத அல்லது புறக்கணிக்கும் எனப் பொருள் கொள்வர்.
மடமை என்றது அறியாமை என்று பொருள்படும்.
மடவார்கண் என்றதற்கு அறிவிலிகளிடத்து என்று பொருள்.

பொருள் இருந்தும் வறிய நிலை என்பது விருந்தோம்பல் பண்பு இல்லாமை.. செல்வர் இவ்விதம் வறிய நிலையில் இருப்பது அவரது அறியாமையாகும். அது மூடர்களிடத்து உள்ள குணமாகும்.

செல்வத்தைப் பயனுள்ள வழியில் செலவிடாததால் பொருளுடைமையும் வறுமையாயிற்று.
விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் செல்வர்களை எண்ணும்போது வள்ளுவர் மிகுந்த சினம் கொண்டவராகிவிடுகின்றார். விருந்தோம்பாமையை மடமை என்றும், விருந்து பேணாதாரை மடையர்கள் என்றும் நேரடியாகவே கடுஞ்சொற்களால் சாடுகின்றார்.. மன அளவில் வறுமையில் வாடுகிறார்கள் என்று சொன்னதோடு விட்டுவிடாமல் 'மடமை" என்றும் "மடவார்" என்றும் ஒரே குறளில் ஒன்றிற்கு இரண்டாகச் சொல் பயின்று விருந்தோம்பாமையின் அறிவுகெட்ட தன்மையை அவர் அழுத்திச் சொல்வது புலனாகும்.
இத்தகையோர் பொருளியல் தெரியாதவர்கள். வாழ்வியல் பொருள் புரியாதவர்கள். மாந்த நேயம் அறியாதவர்கள் ஆவர் என்பதும் பெறப்படும்.

'உடைமையுள் இன்மை' என்றால் என்ன?

பரிதி இத்தொடரை செல்வத்துள் இல்லின் தன்மை எனக் கொள்கிறார். இன்மை என்பதை இல்லின் தன்மை என விரித்து 'விருந்தோம்பாத மடமை சில இல்லப் பெண்களிடம் உண்டு; மனைவியும் கணவனும் ஒரு மனமாகச் செய்வது விருந்து; அப்படிச் செய்யவில்லையானல் பயன் இல்லை' என உரை செய்கிறார். புதிய கோணத்தில் பார்க்கப்பட்ட இவ்வுரை சிறக்கவில்லை.
உடைமையுள் இன்மை என்பதற்கு நேர் பொருள் செல்வத்துள் வறுமை என்பது. கையில் பணமிருந்தும் வறுமையில் வாடுவது என்ற கருத்துத் தருவது. இப்பொருளிலேயே இக்குறளுக்கு உரை காண்பது பொருத்தம்..
பொருளுடைமையுள் இல்லாமை அதாவது வளமையில் வறுமை என்பது இத்தொடரின் பொருள்..

செல்வநிலையில் இல்லாமையாவது விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் பேதைமையாம்; அது அறிவிலிகளிடையே உள்ளதாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பணம் இருந்தும்விருந்தோம்பல் செய்ய மனம் இல்லையே இந்த முட்டாள்களுக்கு என்னும் பாடல்.

பொழிப்பு

செல்வத்தில் வறுமை விருந்தோம்புதலைச் செய்யாத மடமையாம்; அது அறிவிலிகளிடையே இருக்கும்