இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0088பரிந்தோம்பிப் பற்றற்றெம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:88)

பொழிப்பு: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்களை வருந்திக் காத்து (பின்பு இழந்து) பற்றுக் கோடு இழந்தோமே என்று இரங்குவர்.

மணக்குடவர் உரை: விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார், வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர்.

பரிமேலழகர் உரை: பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் - நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார்.
("ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.)

சி இலக்குவனார் உரை: விருந்தினரை ஓம்பி அதனால் வரும் பயனை அடைய முடியாதார் ஈட்டிய பொருளை வருந்திக் காத்துப் பின் இழந்து உதவி அற்றேம் என்று வருந்துவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பரிந்தோம்பிப் பற்றற்றெம் என்பர் விருந்தோம்பி.வேள்வி தலைப்படாதார்/span>


பரிந்தோம்பிப் பற்றற்றெம் என்பர்:
பதவுரை: பரிந்து-வருந்தி; ஓம்பி-காத்து; பற்று-பற்றுக்கோடு; அற்றெம்=இழந்fதேம்; என்பர்-என்று இரங்குவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர்;
பரிதி: இந்த சென்மத்தில்1 தரித்திரராய் தமக்கு ஒருவர் துணையற்றாம் என்று வியாகூலப்படுவர்;
பரிமேலழகர்: நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்;
பரிமேலழகர் குறிப்புரை: "ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார்.

'பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ஓம்பி என்றதற்குப் பரிதியும் பரிமேலழகரும் பொருள் காத்தல் பற்றிச் சொல்ல, மணக்குடவர் உடம்பைப் பேணுவது பற்றிக் கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள 'காத்த பொருளையும் இழந்து பின் வருந்துவர் ', 'பொருளை வருந்திக் காத்துப் பின் இழந்து திக்கற்றவரானோம் என வருந்திக் கூறுவர். ', 'ஆசைகளையெல்லாம் விட்டுவிட்டோம் என்று மிகவும் கடினமான துறவறத்தை மேற்கொண்டு நோன்பு காப்பார்கள் ', 'தமது கைப்பொருளை வருந்திப் பாதுகாத்தும் அதனை யிழந்து ஆதரவற்ற்வராடினேம் என்று கூறி வருந்தி நிலையினராவர். ',என்ற பொருளில் உரை தந்தனர்.

பொருளை வருந்திக் காத்து பின் இழந்து ஆதரவற்றோம் என்று சொல்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்:
பதவுரை:விருந்து-விருந்தினர்; ஓம்பி; பேணி வேள்வி-வேட்டல்; தலைப்படாதார்-எய்தும் பொறியிலாதார்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார்,
பரிப்பெருமாள் குறிப்புரை: இது விருந்தோம்புவார்க்குக் குற்றம் என்னை என்றாற்க்கும் கூறப்பெற்றது.
பரிதி: தனத்தைத் தேடிக்கொண்டு தன்மம் செய்யாதவர் அதனால் தானமும் விருந்தும் செய்து உபசரிப்பதே நன்று என்றவாறு.
பரிமேலழகர்: அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார்.
பரிமேலழகர் குறிப்புரை: 'வேள்வி' ஆகுபெயர்.

விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயன் எய்தும் பொறியிலாதார் என வேள்விப்பயன் பற்றிக் குறிப்பிடுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள்' விருந்து என்னும் வேள்வியில் ஈடுபடாதவர் ' விருந்தினரைப் பேணி விருந்தோம்பலாகிய வேள்விப்பயன் எய்தார் ', 'வீட்டோடிருந்து விருந்தினரை உபசரிக்கும் நல்ல காரியத்தைச் செய்யத் தெரியாதவ்ர்கள்தாம் ', 'தன்னிடத்துள்ள பொருளைக் கொண்டு விருந்தோம்பி அதன் பயனை அடையாதவர்கள் 'என்றபடி பொருள் உரைத்தனர்.

விருந்தோம்புதல் என்னும் வேள்வியில் ஈடுபடாதவ்ர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செல்வம் இருந்தபோது உணவிட மனம் இல்லாது இப்பொழுது அதை நினைப்பது காலங்கடந்த புரிதலாகிறது என்னும் பாடல்.

விருந்தோம்புதல் என்னும் வேள்வியில் ஈடுபடாதவ்ர் வருந்திக் காத்துப் பின் இழந்து ஆதரவற்றேம் என்று சொல்வர் என்பது பாடலின் பொருள்.
விருந்தோம்பாமைக்கும் இழப்பு ஏற்படுதற்கும் என்ன தொடர்பு?

பரிந்தோம்பி என்ற தொடர்க்கு 'வருந்திக் காத்து' என்பது பொருள்.
பற்றற்றேம் என்றது 'பற்றுக்கோடு இழந்தேம்' எனப் பொருள்படும். தொடர்பு இழந்தோம் என்றும் கொள்வர்..
என்பர் என்ற சொல் 'என்று சொல்வர்'' என்ற பொருள் தரும்.
விருந்தோம்பி என்றது விருந்தினரைப் பேணி எனப் பொருள் தருவது.
வேள்வி என்ற சொல் உதவிசெய்வது என்ற் பொருளில் ஆளப்பட்டது.
தலைப்படாதார் என்ற சொல் ஈடுபடாதவர் எனப் பொருள் தரும்.

முன்னாட்களில் விருந்தோம்பல் செய்ய விரும்பாதார், தான் கட்டிக் காத்த பொருள்களை இழந்து, ஒரு பற்றுக்கோடும் இல்லாமல் இன்று உள்ளோமே என்று கழிவிரகத்துடன் கூறுவதாக உள்ல பாடல் இது.

அன்று அவனிடம் செல்வம் இருந்தது. மிகுந்த துன்பப்பட்டு அதைக் காத்து வந்தான். அந்நாளில் பசியாற்றல் அறம் அறிந்திருந்தும் அதைச் செய்ய விரும்பவில்லை. காலப்போக்கில் செல்வம் எல்லாம் மறைந்தது. அதன் தொடர்ச்சியாகச் சமுதாயத் தொடர்புகளும் விலகின. இன்று அவன் நான் விருந்தோம்பல் உதவி செய்யாமல் போனேனே. இன்று எந்த ஆதரவுமின்றி தனிமைப்பட்டு நிற்கிறேனே' என்று நொந்த உள்ளத்துடன் நினைக்கிறான்..

இக்குறளுக்கு வேறுவிதமாகவும் பொருள் கூறுவர்.
விருந்தினரைப் பேணுதலை மேற்கொள்ளாதவர்களே, மிக வருந்திக் துன்பமடைந்து 'பற்றற்றேம்' என்று துறவு பூண்டு இடர்ப்படுவர் என்றும்
விருந்தினர்க்கு உபசாரம் செய்வதை மேற்கொள்ளாதவர்கள் பரிவோடு பல நோன்புகளைக் காத்து பற்றுகளை விடுவிட்டோம் என்பார்கள். என்றும்
விருந்தோம்பாதார் காசின்மையால் இரந்தோ, எப்படியோ வயிறுவளர்த்து உடம்பை மட்டும் பேணி எமக்குப் பொருட்பற்றுச் சிறுதுமில்லை என்று பேசித்திரிவர் என்றும்
சோம்பேறிகள் விருந்தோம்பலுக்கு அஞ்சிப் புறத்துறவு பூண்டொழுகலைக் கண்டு எள்ளி நகையாடுகின்றது இப்பாடல் என்றும்.
உரை கண்டனர்.
நிலையாத பொருள் நிலையும் போதே விருந்தோம்பலை மேற்கொள்க என்பது இக்குறட் கருத்தாதலின் செல்வம் இருக்கும்போதே விருந்தொம்பல் செய்யாமல் இழந்தபின் வருந்தி என்ன பயன் என்று முந்திய பகுதியில் சொல்ல்ப்பட்ட உரையே சிறந்து காணப்படுகிறது.

இக்குறளில் பயிலப்பட்டுள்ள வேள்வி என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் வேள்விப்பயன் எனப் பொருள் கொண்டார். அவர் உரைப்படி, நெருப்பு வளர்த்து அவி சொரிந்து வேண்டுதல் செய்வதால் உண்டாகும் பயன் விருந்தொம்புவதால் கிடைக்கும் என்பது. ஆனால் வள்ளுவர் குறிப்பிடுவது தெய்வத்தின் பெயரால் உணவு, மற்றும்ற விலைமதிப்புள்ள பொருள்களனைத்தையும் தீயிலிட்டு பலவேறுபட்ட வேண்டுதல்கள் குறித்துச் செய்யப்படும் யாகம் எனப்படும் வேள்வியை அல்ல. அவர் குறிப்பிடுவது தொண்டு விருப்பமுடன் செய்யப்படும் .பசியாற்றும் விருந்தோம்பல் என்ற வேள்வியேயாகும். பொருள்களை வீணடிக்காமல் அவற்றை உணவு வேண்டி இருப்பவர்களுக்கு உதவலாம் என்ற நோக்கில் வேள்வி என்ற சொல்லை அவர் பயன்படுத்தியிருக்கலாம்.... ... விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு ’குறள் (81) என்ற பாடலில் விருந்தோம்பல் வேளாண்மை -உதவி செய்தல் என்ற பொருளில் வந்தது. இக்குறளிலும் விருந்தோம்பல் வேள்வி எனப்படுவதால் இங்கும் அப்பொருள் அமையும்..

விருந்தோம்பாமைக்கும் இழப்பு ஏற்படுதற்கும் என்ன தொடர்பு?

அற்றேம் என்ற சொல்லுக்கு இழந்தேம் என்பது பொருள். பற்றற்றேம் என்றுள்ளதால் வேறு பல இழப்புகளும் உரை பொருளாகக் கூற்ப்பட்டாலும் பொருள் இழப்பு பற்றியே இக்குறள் பேசுகிறது என்பதே பொருத்தம்.
செல்வம் நிலையற்றது. செல்வத்தின் சிறந்த பயன் உணவிடுதல். எனவே பொருள் இருக்கும்போதே உணவு நாடி வந்தோர்க்கு விருந்திடல் வேண்டும். விருந்தோம்ப மனமின்றி பொருளை என்னதான் காத்து வைத்தாலும் அது போகும் வேளையில் யாராலும் தடுக்க முடியாது. அப்படி இழந்தபின் எவ்விதம் விருந்தோம்புவது? விருந்தோம்பாமைக்கும் இவ்விழப்புக்கும் நேர் தொடர்பு ஒன்றும் இல்லை என்பது உண்மைதான். பொருள் இழப்பு மிக்கச் செலவு செய்ததால் ஏற்பட்டிருக்கலாம். தொழிலில் பண இழப்பு ஏற்பட்டிருக்கலாம். கொள்ளை போயிருக்கலாம். இவைபோன்ற வேறு காரணங்கள் இருந்தாலும், இங்கு சொல்லப்படும் செய்தி விருந்தோம்பாமையால் செல்வம் இழந்தான் அல்லது விருந்தோம்பல் செய்திருந்தால் இழப்பு ஏற்பட்டிருக்கது என்பதல்ல. விருந்தோம்பி இழந்திருந்தால் அறம் செய்தோமே என்ற மனநிறைவாவது ஏற்பட்ட்டிருக்கும். இப்போழுது அதற்கும் வாய்ப்பு இல்லை. ஐயோ, நாடி வந்தோர்க்கு உணவிட்டிருக்கலாமே என்று இப்பொழுது வருந்தி பயன் இல்லை. காலம் கடந்துவிட்டதே.!.
எனவே வாய்ப்பு கிடைக்கும்போதே பசியாற்றல் போன்ற அறங்கள் செய்து பின்னாளில் வருந்துவததைத் தவிர்க்கலாம் என்பது கருத்து.

விருந்தோம்புதல் என்னும் வேள்வியில் ஈடுபடாதவ்ர் பொருளை வருந்திக் காத்து பின் இழந்து ஆதரவற்றோம் என்று சொல்வர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பசியாற்றுதல் என்னும் விருந்தோம்பல் செய்யாமலேயே செல்வம் எல்லாம் தொலைத்து விட்டோமே எனப் பின்னாள் வருந்துபவர் பற்றிய பாடல்./p>

பொழிப்பு

விருந்தோம்பல் வேள்வியில் ஈடுபடாதவர் வருந்திக் காத்த பொருளையும் இழந்தோமே எனச் சொல்வர்.