இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0087இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:87)

பொழிப்பு: விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று; விருந்தின் அளவினதாகும்.

மணக்குடவர் உரை: விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை. அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்.

பரிமேலழகர் உரை: வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு.
(ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: விருந்திடுவதற்கு இவ்வளவு அவ்வளவு என்ற கணக்கில்லை. எந்த அளவுக்குச் செய்தாலும் அந்த அளவுக்கு நல்ல காரியம் செய்த பலன் உண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் .


இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை :
பதவுரை: இனை-இன்ன; துணைத்து-அளவினையுடையது; என்பது-என்று சொல்லப்படுவது; ஒன்று-ஒன்று; இல்லை-இல்லை .

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை;
பரிதி: அறங்களில் மேலானது விருந்துபசரிப்பது; .
பரிமேலழகர்: விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று;

விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'விருந்தின் பயன் இதுவென்று அளக்க முடியாது ', 'விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவு உடையது என்று கூற முடியாது. ', 'விருந்தோம்பலாகிய உதவியின் பயன் இன்ன அளவுடையதென்று கூறமுடியாது ', 'விருந்திடுதலாகிய வேள்வியின் பயன் இன்ன பெருமையினையுடையது என்று கூற முடியாது. ',என்ற பொருளில் உரை தந்தனர்.

விருந்தின் பயன் இவ்வளவு என்று சொல்லப்படுவது இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்:
பதவுரை: விருந்தின்-விருந்தினது; துணைத்துணை-உதவியஅளவு; வேள்வி-வேட்டல்; பயன்-நன்மை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்
பரிதி: முற்காலத்துத் துணைவரும் தன்னுறவு துணைவரும் என்றவாறு.
பரிமேலழகர்: அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு.
பரிமேலழகர் கருத்துரை: ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.

விருந்தின் தன்மையளவே விருந்தோம்பலின் பயன் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள்' விருந்தினர் பெருமையே விருந்தின் பெருமை', 'அப்பயன் விருந்தினரின் தகுதியையே அளவாகக் கொண்டது ', '.விருந்தினரின் தகுதியே அதற்கு அளவாகும் ', விருந்தினரின் தகுதிக்கேற்பப் பெருமை மிகும்.' 'என்றபடி பொருள் உரைத்தனர்.

விருந்தளவிற்கு விருந்தோம்பலின் பயன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இல்லற வேள்வியான விருந்தோம்பல் பயன் இவ்வளவு என்று சொல்லக்கூடிய ஒன்று இல்லை என்று சொல்லும் பாடல்.

விருந்தின் பயன் இவ்வளவு என்று சொல்ல முடியாது; விருந்தளவிற்கு பயன் உண்டு என்பது பாடலின் பொருள்.
'பயன்' குறிப்பது என்ன?

இனைத்துணைத்து என்றது 'இன்ன அளவினது' என்ற பொருள் தரும்.
எனப்தொன்றில்லை என்பதற்கு 'என்று சொல்லக்கூடிய ஒன்றாக இல்லை' என்று பொருள்.
விருந்தின் என்பதற்கு விருந்தினது என்பது பொருள்.
துணைத்துணை என்றதற்கு உதவிஅளவு எனப் பொருள் கொள்வர்.
வேள்வி என்றது விருந்தோம்பல் குறித்தது.

விரும்பிச் செய்ய வேண்டியதாகலின் விருந்து வேள்வி எனப்பட்டது. இந்த வேள்வியின் பயன் இவ்வளவு என்று சொல்லக்கூடிய ஒன்று இல்லை. எல்லா விருந்தும் பயனுள்ளதே.

விருந்தோம்புதலுக்கு உண்டாய பயன் பற்றிக் கருத்தாடல் செய்கிறது இப்பாடல்.
விருந்தின் பயன் வரும் விருந்தினரின் தகுதியும் சிறப்பும் சார்ந்து அமையும். என இக்குறள் சொல்வதாகப் பெரும்பாலான உரையாளர்கள் எழுதினர். வேள்விப்பயன் விருந்தினரின் தன்மைக்கேற்ற அளவினது என்று கொள்வது விருந்தோம்பும் பண்பைச் சிறுமைப்படுத்துவதாகிறது.
விருந்து அன்பு முதிர்ந்த நிலையில் செய்யப்படுவது. தொண்டுள்ளம் கொண்டு விருந்து தரப்படுவதால் விருந்தோம்புவான் விருந்தினர் தகுதியை ஆராயமாட்டான். எனவே விருந்தினர் தகுதி-தகுதியின்மைகளைக் குறித்துப் பேசுதல் சாலாது
சிலர் இப்பாடல் .........உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து (குறள் 105) என்றது போல என்றனர். அக்குறளில் உதவி செய்யப்பட்டார் என்று தெளிவாக உள்ளது. ஆனால் இங்கு விருந்து என்று மட்டுமே சொல்லப்பட்டது. எனவே விருந்தினர் தனமை என்பதை விட விருந்தின் தன்மை என்று கொள்ளின் பொருந்தும்.
மற்றும் சிலர் விருந்தோம்பலின் பயன் விருந்தினரை உபசரிக்கும் அளவினதாகும் என்றனர். இதுவும் சிறப்பாக இல்லை.

முதலில் 'இனைத்துணைத் தொன்றில்லை' என்று விருந்தின் பயன் இன்ன அளவினது என்று சொல்லவியலாது என்று கூறிவிட்டு அடுத்து வேள்விப்பயன் 'விருந்தின் துணைத்துணை' என்று அளவு சொல்லப்படுகிறது. ஏன்? இதற்கு விளக்கமாக திரு வி க இவ்விதம் கூறுகிறார்:' முன்னையது அளவிறந்தது போலத் தோன்றுகிறது. பின்னையது அளவுடையது போலத் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றே. முறை மட்டும் வேறு. இறைவன் பெருமை அளவு கடந்ததென்று மறை முழங்குகிறது. அவனை வேறு முறையிலுங் கூறுதல் கூடும். எப்படி? இறைவன் பெருமை மறைமுழங்கும் அளவினதன்று. இதன் பொருளென்ன? அளவிறந்ததென்பதே. இது போன்றதே இத்திருக்குறளின் நுட்பமுமென்க.'

துணை என்ற சொல்லுக்கு உதவி என்றும் அளவு என்றும் பொருள் உள. இங்கு துணைத்துணை என்றதால் உதவியின் அளவு எனக் கொண்டு உதவியின் அளவு பயன் என அதற்குப் பொருள் கொள்ள்லாம். விருந்தினருக்கு எந்த அளவு உதவியதோ அந்த அளவு விருந்தின் பயன் உண்டு, என்பது பெறப்படும்.
குறள் நடையை நோக்கும்போது பயன்கருதி விருந்து செய்யப்படுவதில்லை என்ற கருத்தும் எல்லா விருந்தளித்தலும் பயன் தருவதே; விருந்தினர் எந்த அளவு உதவி பெற்றாரோ அந்த அளவு பயன் என்ற கருத்தும் பெறப்படுகின்றன.. .

விருந்தோம்பலை இங்கும் இதற்கு அடுத்த பாடலிலும் வேள்வி என்ற சொல்லால் குறிக்கிறார் வள்ளுவர். தீ வளர்த்துத் தேவர்களுக்கு விருந்து படைப்பதும் வேள்வி என்றே சொல்லப்படுகிறது. கண்காணாத தேவர்களுக்குச் செய்யும் வேள்வியைவிடக் கண்கண்ட மானிடர்க்குச் செய்யும் விருந்தாம் வேள்வி சிறந்ததென்பது வள்ளுவர் கருத்து' என்பார் தமிழண்ணல்:

'பயன்' குறிப்பது என்ன?

பயன் என்பதற்குப் பலவாறாக உரையாளர்கள் பொருள் கூறினர்,'
'விருந்தின் பயன் இதுவென்று அளக்க முடியாது. விருந்தினர் பெருமையே விருந்தின் பெருமை'. என்றும்'
'விருந்தின் பயனுக்களவில்லை. ஒவ்வோர் விருந்தும் ஒரு யாகத்தின் பயனைத் தரும்.; ஒருவேளையிட்ட விருந்து ஒரு வேள்வியென்க' என்றும்'
விருந்தோம்பலின் பயன் விருந்தினரின் நற் குண நற் செயல் களுக்குத் தக்க அளவு பெருமை யுடையது. என்றும்'
'விருந்தளிப்போர், விருந்தேற்பார், விருந்தோம்பற் பண்பு ஆகிய முத்திறத்தின் பெருக்க அளவாக உடையது'' என்றும்'
சாதாரண விருந்தாளியானால், புண்ணியம் மட்டும் பயன். அறிஞனானால், அறிவுத் தெளிவு பயன். அனுபவசாலியானால், வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தீர்வு கூறுவான். செல்வன் ஆனால், இவனுக்கும் செல்வம் சேர வழி செய்வான். தவமுனிவன் ஆனால், தவ வலிமையால் இவனுக்கு வேண்டியவற்றை அளிப்பான். அல்லது இவனையும் தவநெறியில் செலுத்துவான். இவனது வாழ்க்கைப் பாதையை மாற்ரியமைப்பான். என்றும்'
உரைகள் காணக்கிடக்கின்றன. இவற்றுள் விருந்தினர் தகுதி பற்றிப் பேசும் உரைகள் சிறப்பானவை அல்ல.

'இங்குப் பயன் என்பது செல்வம், செல்வாக்கு, புகழ் போன்றவற்றைக் குறிப்பதன்று. இத்தகைய பயன்களை நாடலாகாது' .என்பார் காமாட்சி சீனிவாசன். '
திரு வி க வேள்விப் பயன் -என்பது விருந்தோம்பலால் விளையும் இன்பம் குறித்தது என்பார்..'
நாமக்கல் இராமலிங்கம் :எந்த அளவுக்குச் செய்தாலும் அந்த அளவுக்கு நல்ல காரியம் செய்த பலன் உண்டு. என்ரு பொருள் கூறுவார்.'
விருந்தினர் உவக்கும் உவகையின் அளவே விருந்தின் பயனாகும்' என்பது குழந்தையின் உரைப்பொருளாகும்.'
இவ்வுரைகள் தெளிவைப் பயப்பன. எந்த விருந்தானாலும் எப்படிப்பட்டவர்க்குச் செய்வதானாலும் பசியாற்றச் சோறிடுதல் பயனுள்ளதே.

விருந்தின் பயன் இவ்வளவு என்று சொல்ல முடியாது; விருந்தளவிற்கு விருந்தோம்பலின் பயன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

விருந்தோம்பல் பயன் அடைவதற்கு யாருக்கு எப்படியெப்படி விருந்திட வேண்டும் என்ற வகை ஒன்றுமில்லை.என்னும் பாடல் .

பொழிப்பு

விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவு உடையது என்று ஒன்றும் இல்லை. விருந்து உதவும் அளவு பயன்.