இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0086



செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:86)

பொழிப்பு (மு வரதராசன்): வந்த விருந்தினரைப் போற்றி அனுப்பிவிட்டு, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

மணக்குடவர் உரை: வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன்.
வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.

பரிமேலழகர் உரை: செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம்.
('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: தன்னிடம் வந்துசெல்லும் விருந்தினர்க் குதவி புரிந்து அனுப்பிவிட்டுப் பின் வரக்கூடிய விருந்தினை எதிர்பார்த்திருப்பவன் விண்ணுலகத்தார் விரும்பி எதிர்கொள்ளத்தக்க விருந்தினன் ஆவன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் வானத்தவர்க்கு.நல்விருந்து .

பதவுரை: செல்விருந்து--(தன் வீட்டில் உண்டு) செல்லுகின்ற விருந்தினர்; ஓம்பி-பேணி; வருவிருந்து--வரப்போகிற விருந்தினர்; பார்த்துஇருப்பான்-எதிர் நோக்கி இருப்பவன்; நல்-நல்ல; விருந்து-விருந்தாளி; வானத்தவர்க்கு-வான் உலகில் உள்ளவர்கட்கு.


செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன்;
மணக்குடவர் குறிப்புரை: வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.
பரிதி: விருந்தாற்றிப் போகிறபேர்க்கு உபசரித்து, வருகிற விருந்தை உபசரிப்பான்;
காலிங்கர்: தன் மாட்டுச் சென்ற விருந்தினரைப் பேணிப் பூசித்துப் பின்னும் வரும் விருந்தினரைக் குறிக்கொண்டு பார்த்திருப்பன் யாவன்?;
பரிமேலழகர்: தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்;
பரிமேலழகர்: குறிப்புரை: 'வருவிருந்து' என்பது இடவழு அமைதி.

'வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வந்தாரைப் போற்றி வருவாரை ஏற்பவன்', 'தன்னிடம் வந்த விருந்தினரைப் பேணி காத்துப் பின் இனிவரும் விருந்தினருக்காக எதிர்பார்த்திருப்பவன்', 'தன் வீட்டுக்கு ஏற்கனவே விருந்தாக வந்திருந்து போக விரும்புகின்றவர்களை விடைகொடுத்து அனுப்பிவிட்டு இன்னும் வரக்கூடிய விருந்தாளிகளை எதிர்ப்பார்த்திருப்பான்', 'உண்டுவிட்டுச் செல்கின்ற விருந்தை நல்முறையில் ஓம்பி வழி விடுத்துவிட்டு வர இருக்கும் விருந்தை எதிர்நோக்கி உள்ளவன்' என்ற பொருளில் உரை தந்தனர்.

தன்னை நாடி வந்த விருந்தைப் பேணி இனி வரப்போகும் விருந்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.

நல்விருந்து வானத் தவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வானத்தவர்க்கு நல்விருந்தாவன்.
பரிதி: நல்விருந்தாவான் தேவர்க்கு என்றவாறு.
காலிங்கர்: மற்றவன் வானின்கண் வாழும் தேவர்க்கு நல்விருந்து என்றவாறு.
பரிமேலழகர்: மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.

'வானத்தவர்க்கு நல்விருந்தாவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தேவர்க்கு நல்விருந்து ஆவான்', 'விண்ணகத்துள்ளார்க்கு நல்ல விருந்தாவான்', 'அப்படிப்பட்டவனை தேவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு அவர்களுடைய விருந்தாளியாக ஏற்றுக்கொள்ளுவார்கள்', 'வானில் உள்ள தேவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான். தேவரால் நன்கு போற்றப்படுவான் என்பதாம்' என்றபடி பொருள் உரைத்தனர்.

வானின்கண் வாழும் தேவர்க்கு நல்விருந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:

தன்னை நாடி வந்த விருந்தைப் பேணி இனி வரப்போகும் விருந்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவன் வானத்தவர்க்கு நல்விருந்து ஆவான் என்பது பாடலின் பொருள்.
'வானத்தவர்' என்பவர் யார்?

நாள் முழுவதும் இடையறாது விருந்து போற்ற விழைவானை வரவேற்க இன்பம் மட்டுமே நிறைந்த வேறோர் உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.

விருந்துண்டபின் செல்ல விரும்புவோரை வழியனுப்பிக்கொண்டு இனி வரப்போகும் விருந்தைக் குறிக்கொண்டு பார்த்திருப்பவன் விண்ணுலகத்திலுள்ளவர் எதிர்கொள்ளக் காத்திருக்கும் நல்ல விருந்தாளி ஆகிறான்.
விருந்து நாடி வருவோரும் உணவருந்தி போவோருமாக இடையறாது விருந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும் விருந்தோம்புவான் இல்லத்துக் காட்சி இங்கு வரையப்பட்டுள்ளது. இவன் எவ்வளவு விருந்தினர்கள் வந்தாலும் வரவேற்றுக்கொண்டே இருப்பவன். நாளும் தொடர்ந்து இவ்விதம் விருந்தோம்பும் பண்பு கொண்ட இவனுக்கு வானுலகத்தின் தேவர்கள் நல்ல விருந்து படைக்கக் காத்திருக்கிறார்கள் என்கிறது இக்குறள்.
வந்த விருந்தினர்களை ஏற்றுப் பேணியதால் ஏற்பட்ட களைப்பினால் மனச் சோர்வு அடையாமல் மேலும் விருந்தினர்களை எதிர்பார்த்து இருந்து வரவேற்கும் அருள் நெஞ்சமும், ஊக்கமும் உடைய விருந்தோம்புவான் தேவர்களால் சிறப்புச் செய்யப் பெறுவான். இவன் விருந்தினரை வரவேற்கக் காத்திருப்பது போன்று வான் உலகில் உள்ளவர்கள் இவனை வரவேற்கக் காத்திருப்பார்களாம்.

வரம்பு குறிக்காமல் விருந்து பேணுவானது செயற்பாடும் அவன் எய்தப் போகும் பயனும் பேசப்படுகின்றன. விருந்தோம்பல் ஒரு விழுமிய பண்பாகக் கருதப்படுவது. முன்பு புதியவர்களே விருந்தினர்கள் என அறியப்பட்டனர்.
'விருந்து' 'விருந்து' 'விருந்து' என்று மறித்து வந்தது விருந்தோம்பலின் பருமன்களை விளக்குவதற்காக. இவற்றுள் முடிவில் உள்ள 'நல்விருந்து' என்ற சொல் மிகுந்த அழுத்தத்துடன் அமைந்துள்ளது நோக்கத்தக்கது.
விருந்துண்டவர்கள் உடன் வெளியேறிவிடுவார்கள். ஆனால் இங்கு வானுலகம் அவனுக்காகக் காத்திருக்கிறது என்ற பொருளிலே அமைந்துள்ளதால், நல்விருந்து என்பதை நல்ல வரவேற்பு எனக் கொள்ளவேண்டும்.

'வானத்தவர்' என்பவர் யார்?

வானத்தவர் என்பதற்கு வான் உலகத்தில் உள்ளவர் என்பது பொருள். இவர் தேவர் என்றும் அறியப்படுபவர் ஆவார்.
தொன்மங்களில் கற்பனையாகப் படைக்கப் பெற்றதே விண்ணுலகம். அதுபோலவே வானத்தவர் என்போரும் அவ்வுலகில் வாழ்வோராகக் கற்பனையில் உருவாக்கப்பட்டவர்களே. இங்கு நற்செயல் ஆற்றுவோர், இறந்த பின்னர், வான உலகை அடைந்து வானவர்களுள் ஒருவர் ஆகிவிடுவர் என்பதும் கற்பனையே. மக்களை நல்லவர்களாக வாழச் செய்வதற்காகப் தொன்ம மரபினர் இக்கற்பனையைப் படைத்தனர் போலும்! அந்தக் கற்பனை வானுலகில் துன்பமே இல்லை; எல்லாம் இன்பமே என்று சொல்லப்பட்டுள்ளது.
மறுபிறப்பு, வானோர் போன்றவற்றின் மீது பொதுவாக மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளை அறிந்த வள்ளுவர் அவற்றின் வழியே செய்திகளைக் கூறினால் எளிதாக அவை அவர்களைச் சென்று அடையும் என்று அதை ஒரு உத்தியாகத் தன் பாடல்களில் வள்ளுவர் பயன்படுத்துவார். அப்படித்தான் இங்கும் 'வானத்தவர்' பயன்படுத்தப்பட்டது.

வந்த விருந்தினரை உபசரித்து வரப்போகும் விருந்தினரை எதிர்பார்ப்பவர் விண்ணக மக்களுக்கு நல்ல விருந்தாளி என்பது தொன்ம நோக்கு கொண்டதே. இதன் உட்கிடக்கை வானுலகம் பற்றியது அல்ல. அயர்ச்சி அடையாமல் விருந்தோம்புவானுக்கு நல்ல எதிர் காலம் உண்டு; நல்லவர்களால் பாராட்டப்படுவான்; அது உயர்ந்த பயன்களைத் தரும் என்பதே. ஒருவன் விருந்தோம்பி வாழ்வானாயின் அவனே இன்னும் சிறந்த நிலைமையுடையாருக்கு விருந்தினன் ஆவான் என்பது கருத்து.

தன்னை நாடி வந்த விருந்தைப் பேணி இனி வரப்போகும் விருந்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவன் வானின்கண் வாழும் தேவர்க்கு நல்விருந்து என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வந்தவனுக்கு உணவு வரப்போகிறவனுக்கு உலை என்று விருந்தோம்பலில் சிறந்தாரைப் பற்றிய பாடல்.

பொழிப்பு

வந்த விருந்தைப் பேணி காத்து வரப்போகும் விருந்துக்காகக் காத்திருப்பவன் விண்ணகத்துள்ளார்க்கு நல்ல விருந்தாவான்.