இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0085



வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:85)

பொழிப்பு (மு வரதராசன்): விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

மணக்குடவர் உரை: விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ?
தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.

பரிமேலழகர் உரை: விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ - வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா. [மிச்சில்-மீதமுள்ள எஞ்சிய உணவு]
('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம்: உரை: விருந்து செய்தபின் மிச்சத்தை உண்பவனது நிலத்துக்கு விதைகூட இட வேண்டுமா?


பொருள்கோள் வரிஅமைப்பு:
விருந்தோம்பி மிச்சின் மிசைவான் புலம் வித்தும் இடல்வேண்டும் கொல்லோ.

பதவுரை: வித்தும்-விதையும்; இடல்-தூவுதல்; வேண்டும் கொல்லோ-வேண்டுமோ? கொல்லோ- அசைச்சொல் (ஐயத்தை உணர்த்துவது). 'ஓ' எதிர்மறையைச் சுட்ட வந்தது. இரண்டும் ஒன்றுபட்ட 'வேண்டும் கொல்லோ' வேண்டாமையை குறிக்கிறது; விருந்து-விருந்தினர்; ஓம்பி--பேணி; மிச்சில்-மிஞ்சியது, மிகுந்தது அதாவது மீதமுள்ளது; மிசைவான்-உண்பான்; புலம்-நிலம், வயல்.


வித்தும் இடல்வேண்டும் கொல்லோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ?
மணக்குடவர் குறிப்புரை: பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.
பரிப்பெருமாள்: விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ?
மேற் செல்வமுண்டா மென்றார்; அஃதாமாறென்னை? ஈண்டிய பொருளை வழங்குவாராயின் என்றார்க்குப் பொருள் வருவாயாக இவன் இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்று கூறப்பட்டது. இவை மூன்றும் இம்மைப்பயன் கூறிற்று.
பரிதி: எருப்போட்டு நீர் தேக்கினது போல, ஒன்று நூறாயிரம் விளையும் என்றவாறு .
பரிமேலழகர்: வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா.
பரிமேலழகர் குறிப்புரை: 'கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம்.

'வித்திடுதலும் வேண்டுமோ?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'அவன் விதையும் விதைக்க வேண்டும்? (மிடல் வேண்டும் கொல்லோ எனக் கொண்டு வேலியும் போட வேண்டுமோ என்பர்)', 'விதை விதைத்தலும் வேண்டுமோ? (விதையாதே விளைவு உண்டாமென்று சிறப்புக் கூறியவாறு காண்க,)', ''தன் வயலுக்கு விதை தெளிக்கவும் விரும்பமாட்டான். விதைக்கென வைக்கப்பட்டுள்ளதையும் விருந்தினர்க்கெனச் செலவழிப்பான்', 'தன் நிலத்திற்கு விதை போடுதலையும் விரும்பான். (விதைப்பதனினும் விருந்துக்கே முதன்மை தருவான்.)',என்ற பொருளில் உரை தந்தனர்.

விதையும் தூவ வேண்டுமோ? என்பது இப்பகுதியின் பொருள்.

விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண்.
பரிப்பெருமாள்: விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண்,
பரிதி: விருந்து உபசரித்து மிஞ்சினதைப் புசிப்பது கழனிக்கு. [கழனிக்கு-வயலுக்கு]
பரிமேலழகர்: முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; [மிசைவித்து-உண்பித்து]
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.

'முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள்' விருந்தினரைப் பேணிப் பின் மிச்சத்தை உண்பானது நிலத்திற்கு', 'விருந்தினரை உண்பித்து மிஞ்சியதைத் தான் உண்ணுவானுடைய வயலுக்கு', 'முன்னால் விருந்தினரை உண்ணச் செய்து பின்னர் மிகுந்துள்ளதை உண்ணும் வழக்கம் உடையவன்', 'விருந்தினரைப் பேணி அவருண்ட பின் மீதமாகும் உணவை உண்பவன் 'என்றபடி பொருள் உரைத்தனர்.

விருந்தினரை உண்பித்து மிஞ்சிய உணவை உண்பவன் நிலத்திற்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
விருந்தினரை உண்பித்து மிஞ்சிய உணவை உண்பவன் நிலத்திற்கு வித்தும் இடல்வேண்டும் கொல்லோ? என்பது பாடலின் பொருள்.
'வித்தும் இடல்வேண்டும் கொல்லோ' குறிப்பது என்ன?

விருந்தோம்புவான் செய்த நல்லதுக்கு அவனது வருவாய் தானாகப் பெருகும்.

வந்தவர் அனைவரும் உண்டனரா என்று உறுதி செய்தபின் மிகுந்திருந்ததைத் தான் உண்பவனது நிலத்தில் விளைச்சல் பெருகும்.
வந்துகொண்டே இருக்கும் விருந்தினரை, இருக்கும் உணவைக் கொண்டு முதலில் பசியாறச் செய்வதும், பின்னர் மீதம் இருந்தால் தான் உண்பது என்பதும் மிகச் சிறந்த விருந்தோம்பல் பண்பு. நாளும் அவ்விதம் மிஞ்சுவதை உண்ணும் அல்லது ஒன்றும் மிஞ்சாவிட்டால் உண்ணாமல் உறங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் விருந்தோம்புவானைச் சிறப்பித்துச் சொல்லும் வகையில் அவனது விளைநிலத்தில் விதையிடாமலேயே விளைச்சல் கிடைக்கும் என்று புகழ்ந்தேத்துகிறார் வள்ளுவர்.

விருந்தோம்பலின் பயனை உயர்வு நவிற்சியாக உரைக்கப்பட்ட குறட்பா இது. .....பெய்யெனப் பெய்யும் மழை' (குறள் 55........'பொழியட்டும்' என்று சொன்னவுடன் மழை பெய்யும்), ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்.... (ஊக்கமுடைமை 594 பொருள்: செல்வம் வழி கேட்டுச் செல்வம் சென்றடையும்.....) போன்ற நடையில் உணர்ச்சியுடன் கற்பனை கலந்து கூறப்பட்டது.
விருந்தோம்பல் பெருவாழ்வு அளிக்கவல்லது என்றதைப் படிப்போர் உள்ளத்தில் ஆழப் பதியும் பொருட்டே 'வித்தும் இடல் வேண்டும் கொல்லோ' என உயர்த்திக் கூறப்பட்டது.

விருந்தொடு உண்ணலும் மரபு என்றாலும் திருமணம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் அழைக்கப்பட்ட அனைவரும் உண்ட பின்னரே விருந்து கொடுப்பவர் உண்பர்; அதுசமயம் சுவையான சிறப்பு உணவுகள் எதுவும் மீதமிருப்பது இல்லை. ஆனாலும் மிச்சம் இருப்பதையே அவர் உண்ண வேண்டிவரும்.
'மிகுந்தது மிச்சில் எனப்பட்டது. இதை மிச்சம்‌ எனவும்‌ கூறுவர்‌. எச்சம் என்ற சொல்லும் இதே பொருள் தரும்‌; எஞ்சியது எச்சம்‌, எஞ்சுதல்‌-குறைதல்‌. மிகுதல்‌ குறைதல்‌ என்னும்‌ நேர்மாறான இரு வினைகள்‌ ஒரே பொருளைக்‌ குறித்தல்‌ இருவேறுவகைப்பட்ட கருத்து நோக்கத்தால். வேண்டுமளவுபோக அவ்வளவிற்கு மிகையாய்‌ நின்றது மிச்சம்‌ ௮ல்லது மிச்சில்; மிகுதியுமாம். உள்ள பொருளிற்‌ கொள்‌வது கொள்ளக்‌ குறைந்தது எச்சம்‌ அல்லது எச்சில்‌, மிச்சில்‌ என்பது கொள்ளப்பட்ட பகுதி நோக்கி நின்றது. எச்சில்‌ என்பது முழுப்பொருளை நோக்கி நின்றது.' (சொ தண்டபாணிப்பிள்ளை). 'மிச்சில் அடுகலத்தில் அல்லது பெட்டியில் மிஞ்சுவது தூய்மையாயிருப்பது. எச்சில் உண்கலத்தில் அல்லது இலையில் எஞ்சுவது; எச்சிலோடு கூடியது. இவ்வேறுபாடறிக.' என்பது தேவநேயப் பாவாணர் விளக்கம்.

சங்க இலக்கியங்களான குறுந்தொகை, குறிஞ்சிப்பாட்டு, பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை ஆகியவற்றிலும் மிச்சில் உண்பது குறித்து கூறப்பட்டுள்ளன. அப்பாடல்கள்:
யாவரும் வருகவென் றிசைத்துட னூட்டி
உண்டொழி மிச்சிலுண் டோடுதலை மடுத்துக்
கண்படை கொள்ளுங் காவலன் றானென்.
(மணிமேகலை, 13: 113-)
(பொருள்: அனைவரும் வருக என்று கூறி யழைத்து ஒருங்கு உண்ணச் செய்து, அனைவரும் உண்டு எஞ்சிய உணவை யுண்டு, அவ்வோட்டினைத் தலைக்கு அணையாகக் கொண்டு, -உறங்குதல் செய்வான் அவ் வாபுத்திரனாகிய காப்போன் என்க.)
உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும் (குறுந்தொகை 233:4-5 பொருள்: பெரியவர்களுக்கு நீரொடு தானம் பண்ணி எஞ்சிய பொருளையும்,....)
பைந் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை,
நின்னோடு உண்டலும் புரைவது" என்று, ஆங்கு,
அறம் புணை ஆகத் தேற்றி,
(குறிஞ்சிப் பாட்டு 204-206 பொருள்: பசுத்த நிணமொழுகின நெய்மிக்க அடிசிலை நீ இடுகையினாலே, குற்றமில்லாத உயர்ந்தகுலத்திற்பிறந்த உயர்ந்தோர் தமது சுற்றத்தோடே விருந்துண்டு மிக்க அடிசிலை பெரிய தகைமைப்பாடுடையவன், நீ இடுகையினாலே யான்உண்டலும் உயர்ந்ததென்று சொல்லி அப்பொழுது இல்லறம் தங்களைக் கரையேற்றுவதாகத் தெளிவித்து.)

'வித்தும் இடல்வேண்டும் கொல்லோ' குறிப்பது என்ன?

உழவர் நிலத்தை உழுது, விதை விதைத்து, நீர்ப்பாய்ச்சி, களையெடுத்துக் கருத்தோடு காத்துவந்தால்தான் அவருடைய நிலத்தில் பயிர் செழித்து வளரும். எனவே விளைச்சலுக்கு மூலகாரணமாக இருப்பது விதைகளை விதைப்பதாகும். விதைக்காமல் எந்த நிலத்திலும் விளைச்சல் உண்டாகாது. ஆனால், விருந்தினரை ஊட்டிப் பின் எஞ்சியதை உண்பான் நிலத்தில் அவன் விதையும் விதைக்கவும் வேண்டுமோ? என்று கேட்கிறது இக்குறள். தானே விளையும் என்பது குறளகத்து இல்லையானாலும் அதுதான் பதில். அப்படி விளையவேண்டும் என்று எந்த உழவரோ அல்லது விருந்திடுவாரோ விரும்புவதுமில்லை. பின் ஏன் வள்ளுவர் இவ்விதம் கூறுகிறார் என்பதற்கு உரையாளர்கள் பலவாறாக விளக்கம் அளித்தனர்.

  • விதையாதே விளைவு உண்டாமென்று சிறப்புக் கூறியவாறு.
  • விருந்தோம்புவான் தானே சென்று விதைக்க வேண்டாம்; இவன் பிறர்க்குப் பயன்படுவதால் ஊரவர்கள் இவனுக்காகப் பாடுபடுகின்றனர் அதாவது அவன் விளைபுலத்தை ஊரார் உழுது பயிர் செய்து விளைவினை நல்குவர்.
  • அவன் செய்த கொடையே கோடியாய் விளையுமே.
  • (மிடல் வேண்டும் கொல்லோ எனக் கொண்டு) வேலியும் போட வேண்டுமோ.
  • விருந்து ஓம்புகின்றவன் முதலில் விருந்தினரையே உண்பிப்பான்; விருந்தினர்கள் அனைவரும் உண்ட பின்னர் மிகுந்துள்ளதைத்தான் உண்பான். அவ்வாறு விருந்தினரைப் போற்றுபவன், உணவுப் பொருள் அற்றகாலை விதைக்காக வைத்திருப்பதையும் எடுத்துப் பயன்படுத்துவான். வயலுக்கு விதைப்பதற்கு விதை வேண்டுமே! விதையை உணவுக்குப் பயன்படுத்தலாமா? என்று எண்ண மாட்டான். நிலம் வித்திடப்படாமல் கிடப்பினும் குற்றமில்லை என்று கருதி விருந்தினரைப் போற்றுவதில் உள்ளம் செலுத்துவான்.
  • உள்ள உணவை விருந்தினருக்கு இட்டு மிச்சமிருந்தால் உண்பது என்ற மனப்பண்புள்ளவனுக்கு தானியம் அவனுடைய நிலத்திலிருந்து வரவேண்டுமென்பதில்லை.
  • ‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்பது மரபு காட்டும் ஒரு பழமொழி.
  • விருந்தோம்புவானது நற்பண்பினால் இறையருள் துணையாக வயலில் விதைக்காமல் தானே விளையும் என்பது கருத்தாகக் கொள்ள வேண்டும்.
  • விருந்தோம்புவன் இல்லத்தில் செல்வம் பெருகும். வறுமை தலைகாட்டாது.

இக்குறள் விருந்தோம்புவோர் உயர்வு குறித்த கருத்து அழுத்தம் பெற, எளிய மக்கள் பேசும் மொழிநடையில் ('அவன் நிலத்தில் விதை தூவியா விளைய வேண்டும்?') யாக்கப்பட்டது. விருந்தோம்புவான் செய்த அறத்தின் வலியால் தானே முளைத்து விளைவேறும் என்று, கற்போர் கருத்தை ஈர்க்கும் வகையில், அவன் சிறப்பு கூறச் சொல்லப்பட்டதேயன்றி வித்தில்லாமல் எந்த நிலத்திலும் எதுவும் விளைவது இல்லை. 'வித்திடாமல் பயிர் வளர்வது' அதாவது எல்லாம் தாமே நடக்கும்' என்று சொல்வது கடவுளின் அருளால் நடப்பது அல்லது மற்றவர் முயற்சியால் நடப்பது இவற்றைக் குறிக்கலாம்.
'வித்தும் இடல்வேண்டும் கொல்லோ' என்றதற்குப் பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படும் என்பது தொல்லாசிரியரான மணக்குடவர் தரும் இயல்பான உரை. சிறந்த விருந்தோம்புவான் புலத்தில் போட்ட வித்துக்குப் பெரு விளைச்சல் கிடைக்கும் என்பது அவன் நிலத்தில் ஒன்றுக்குப் பத்தாக விளையும் என்ற கருத்தாகலாம். .

விருந்தினரை உண்பித்து மிஞ்சிய உணவை உண்பவன் நிலத்திற்கு விதையும் தூவ வேண்டுமோ? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

விருந்தோம்பல் பண்ணிய பயன் பயிரிலே தெரியும்.

பொழிப்பு

விருந்தினரைப் பேணிப் பின் மிச்சத்தை உண்பானது நிலத்திற்கு விதைகூட இட வேண்டுமா?