இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0084அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:84)

பொழிப்பு: வந்தவரை முகமலர்ச்சி கொண்டு நல்ல முறையில் விருந்தோம்புவான் வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

மணக்குடவர் உரை: திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண்.
இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.

பரிமேலழகர் உரை: செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண்.
(மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.)

இரா இளங்குமரனார் உரை: விருந்தினரை முகமலர்ந்து வரவேற்று நன்முறையில் பேணுபவன் இல்லத்தில் செல்வம் என்னும் மகள் தன் முகத்தோடு அகமும் மலரத் தங்கியிருப்பாள் (விருந்தோம்பலால் செல்வம் குறையாது.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்.


அகனமர்ந்து செய்யாள் உறையும்:
பதவுரை: அகன் -உள்ளம்; அமர்ந்து-விரும்பி; செய்யாள்-திருமகள்; உறையும்-வாழும்..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: திருவினாள் மனம்பொருந்தி உறையும்;.
பரிதி: லட்சுமி உறையும்;.
காலிங்கர்: அகமகிழ்ந்து திருமகள் இனிது வாழும் எவ்விடத்து எனின்,;
பரிமேலழகர்: திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்;

'திருமகள் மனம் பொருந்தி வாழும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'அகம் மலர்ந்து திருமகள் தங்கிவிடுவாள் ', 'திருமகள் மனம் மகிழ்ந்து வந்து தங்குவாள்', 'திருமகள் மனமகிழ்ந்து தங்கியிருப்பாள்', 'செல்வக் கடவுளாம் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள்', என்ற பொருளில் உரை தந்தனர்.

திருமகள் மனம் மகிழ்ந்து உறையும் என்பது இப்பகுதியின் பொருள்.

முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்.:
பதவுரை: முகன்-முகம்; அமர்ந்து-மலர்ந்து; நல்-நல்ல; விருந்து-விருந்து;; ஓம்புவான்-பேணுவான்; இல்-மனை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண்.
மணக்குடவர் குறிப்புரை: இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது
பரிதி: மனமகிழ்ந்து விருந்து செய்வானிடத்தில்.
காலிங்கர்: முகமலர்ந்து இவ்வாறு நல்விருந்தினராகிய மறையோர்க்கும் வறியோர்க்கும் விருந்தைப் பேணி வழிபடுவான் இல்லிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண்.
பரிமேலழகர் குறிப்புரை: மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.

'தக்க விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி மனமகிழ்ந்து விருந்து செய்வானிடத்தில் என்றும் காலிங்கர் முகமலர்ந்து நல்விருந்தினராகிய மறையோர்க்கும் வறியோர்க்கும் வ்ருந்து பேணி வழிபடுவான் இல்லிடத்து என்றும் உர்ஐ செய்வர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முகம் மல்ர்ந்து விருந்து செய்பவன் வீட்டில்', 'முகமல்ர்ச்சியுடன் நல்ல விருந்தினரைப் பேணுவானது வீட்டில்' முக மலர்ச்சியுடன் தக்க விருந்தினரைப் பேணுவானுடைய வீட்டின்கண்', 'முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது வீட்டில்' என்றபடி பொருள் உரைத்தனர்.

முகம் மலர்ந்து நல்ல முறையில் விருந்து செய்வான் இல்லின்கண் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வருவோரை முகமலர்ச்சியுடன் பேணுவானது செல்வமும் மலரும் என்னும் பாடல்.

முகம் மலர்ந்து நல்விருந்து செய்வான் இல்லின்கண் திருமகள் மனம் மகிழ்ந்து உறையும் என்பது பாடலின் பொருள்.
'நல்விருந்து' என்றால் என்ன?

அகன் என்ற சொல்லுக்கு அகம் அதாவது உள்ளம் என்பது பொருள்.
முதலில் உள்ள அமர்ந்து என்பதற்கு மகிழ்ந்து என்றும் அடுத்து உள்ள அமர்ந்து என்பதற்கு மலர்ந்து என்றும் பொருள் கொள்வர்.
செய்யாள் என்ற சொல் செல்வத்தின் கடவுளான திருமகளைக் குறிக்கும்.
உறையும் என்ற சொல் தங்கும், 'நீங்காது நிலைத்திருக்கும், 'வசிக்கும் அல்லது, வாழும் என்று பொருள்படும் இச்சொல் இங்கு செய்யாள் என்ற தெய்வத்தைத் தழுவியதால் வீற்றிருக்கும் என்றும் சொல்வர்.
முகம் என்ற சொல்லே முகன் என்று வந்தது.
ஓம்புவான் என்ற சொல் பேணுவான் என்ற பொருள் தரும்.
இல் என்பது வாழும் இடமாகிய வீட்டைக் குற்ப்பது.

சென்ற பாடலில் (குறள் 83) வ்ருந்தோம்பல் செய்வதால் செல்வம் குறைவுபடாது என்று சொல்லப்பட்டது. இங்கு முக மலர்ச்சியுடன் விருந்திடுவோன் வீட்டில் செல்வக்கடவுளான திருமகள் விரும்பிக் குடிகொண்டிருப்பாள் என்று கூறப்படுகிறது. அவனது செல்வம் பெருகும் வளம் கொழித்து வாழ்வான் என்பது கருத்து.

விருந்தளிக்கும் முறையும் இங்கு கூறப்பட்டுள்ளது. இன்முகம் காட்டல் வந்த விருந்தினருக்கு மகிழ்வை உண்டாக்கும் விருந்தினர் வேண்டுமளவு உண்ணுகிற காட்சியைப் பார்த்து விருந்தோம்புவன் மேலும் மகிழ்வதால் மனநிறைவு பெறுவான்.
செல்வத்திற்கு உரிய கடவுளாக திருமகளைக் கூறுவது மர[பு. அத்தெய்வம் வாழும் இடத்தில் செல்வம் தழைக்கும் என்பது நம்பிக்கை. செல்வம் மிகுந்து அது (நிலைத்திருக்கும்) என்ற கருத்து புலப்படுத்தப்படுகிறது. பொருள் கிளைத்தற்குக் காரணம் -திருமகள் நல்விருந்து ஓம்புவான் இல்லத்தில் உளம் உவந்து தங்குவதால் என்பது. விருந்தோம்புவான் அகமலர்ச்சியை முகமலர்ச்சியான் அறிதல் போலத் தெய்வமாகிய செய்யவள் அகமலர்ச்சியை அவள் உறைதலால் அறிவித்தவாறு (தண்டபாணி தேசிகர்).
எப்பொழுதும் நீங்காதிருத்தல் என்ற குறிப்புணர்த்தவே 'உறையும்' என்ற சொல்லாட்சி.
செல்வம் பெருகும் என்று சொல்வதைவிட 'அகனமர்ந்து செய்யாள் உறையும்'' என்னும்போது செல்வம் மகிழ்ச்சியாகத் தங்கும் என்ற கூடுதல் கருத்து பெறப்பட்டு விருந்தோம்பலின் பயன் அழுத்தம் பெற்ற ஓசைநயம் கூடிக் கவிதை என்ற தகுதியைப் பெறுகிறது. என்பார் செ வை சண்முகம்.

'நல்விருந்து' என்றால் என்ன?

'நல்விருந்து' என்றதை 'நல்ல விருந்தினர்', 'தக்க விருந்தினர்', 'தகுதியுள்ள விருந்தினர்' என்று பலவாறாக விளக்கினர். இத்தொடர் விருந்து படைத்தற்குத் தகுதியுடையாரைக் குறிக்கிறது என்றும் நல் விருந்தினர் என்போர் அறிவும் ஒழுக்கமும் தன்மானமும் உள்ளோர் என்று உரைத்தனர்.. நல்விருந்தினர் என்பது மறையோர், வறியோர், ர்ஷிந்திரர்' (முனிவர்களின் தலைவர்) இவர்களைக் குறித்தது என்றும் பொருள் தந்தனர். இவையாவும் 'நல்' என்பது விருந்தினருக்கு அடையாக நிற்றலைத் தெரிவிக்கின்றன. .

'நல்' என்றதை விருந்தோம்புவானுக்கு அடையாகக் கொண்ட உரைகள் மிகச் சில.
'இவ்வதிகாரம் விருந்தோம்பலைப் பற்றியது. விருந்தினரைப் பற்றியதன்று. ஆதலின் 'நல்' என்பது விருந்தோம்புவான் தன்மையை விளக்குதற்கு ஏதுவாய் நிற்கிறதென்று சொல்வது பொருத்தமுடையதாகும்' எனத் .திரு வி க நல்விருந்து என்பதற்கு விளக்கம் தந்தார். இவர் 'நல்விருந்தோம்புவோன் - நல்ல விருந்தோம்புவோன். நல்ல முறையில் விருந்தோம்புவோன்; விருந்தினர் மனம் சிறுதும் எக்காரணம் பற்றியும் திரியும் முறையில் விருந்தோம்புவோன் என்று விளக்கி 'நல்' என்பது பயன் கருதாமையையும் குறிக்கொண்டு நிற்கின்றது என்று மேலும் தெளிவுபடுத்தினார்.
முகமலர்ந்து வரவேற்று நன்முறையில் பேணுபவன் (இரா இளங்குமரனார்), இனியனாய் நன்றாக விருந்தினரைப் போற்றுபவன் (குழந்தை) என்பன 'நல்' என்றது விருந்தோம்புவானைத் தழுவிய சொல் எனக் கூறும் மற்ற உரைகள்..

விருந்தினரை நல்லவர், தக்கவர் என்று பொதுமையில் கூறியவர்கள். தவிர்த்து விருந்தோபுவானின் நிலைக்கு மேம்பட்ட நிலையில் உள்ளவர்களாக மறையோர்,, சான்றோர், சமயத் துறவிகள், முனிவர்கள், கல்வியாளர்கள் ஆகியோர், 'விருந்தினருள் உயர்ந்தவர்கள் (நல்விருந்தினர்) எனவும் விருந்தோம்புவான் நிலைக்குச் சமமான நிலையுடையவர்களாக வணிகர், புலவர், உறவினர், , தொழில் காரணமாகப் பயணிப்போர் எனவும் பிரித்துக் கூறுவோரும் உள்ளனர்.
விருந்தினரைப் பாகுபடுத்தி வகைப்படுத்தி வள்ளுவர் கூறியிருப்பார் என்று தோன்றவில்லை. அதற்கான குறிப்பும் இல்லை. எனவே நல்வுருந்து என்பது நல்ல விருந்து தருபவனை அதாவது விருந்தோம்புவானைக் குறிப்பதாகக் கொள்வதே சிறக்கும்.

முகம் மலர்ந்து நல்ல முறையில் விருந்து செய்வான் இல்லின்கண் திருமகள் மனம் மகிழ்ந்து உறையும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நல்ல விருந்தோம்பல் செய்வான் இருப்பிடம் திருமகள் உறையும் தெய்வீக இல்லமாகும் என்னும் பாட்ல.

பொழிப்பு

முகம் மலர்ந்து விருந்து செய்பவன் வீட்டில் மனம் மகிழ்ந்து திருமகள் தங்கிவிடுவாள்.