இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0083வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:83)

பொழிப்பு: தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

மணக்குடவர் உரை: நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.

பரிமேலழகர் உரை: வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்¢து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை.
(நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.)

இரா இளங்குமரனார் உரை: நாள்தோறும் தன்னிடத்து வரும் விருந்தினரைப் பேணுபவன் இல்வாழ்க்கை அவ்விருந்து செய்தல் வழியால் துன்புற்றுக் கெட்டுப் போவதில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.


வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை :
பதவுரை: வரு-வருகின்ற; விருந்து-விருந்தினர்;- வைகலும்-நாடோறும்; ஓம்புவான்-பேணுபவன்; வாழ்க்கை-வாழ்தல் .

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம்; ,
பரிப்பெருமாள்: நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம்;
பரிதி: வருகிற விருந்தைப் பார்த்து நாளும் உபசரிப்பது நன்று. அங்ஙனம் உபசரிக்கிறவன் வாழ்க்கை;
காலிங்கர்: தன்னில்லத்து வருகின்ற விருந்தினை நாடொறும் குறிக்கொண்டு பூசிக்கும்; அவன் இல்வாழ்க்கையானது;
பரிமேலழகர்: தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை;

'தன்னில்லத்து வருகின்ற விருந்தினை நாடோறும் போற்றுவானது இல்வாழ்க்கை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'நாளும் வருகின்ற விருந்தைப் போற்றுக', 'தம் இல்லம் நோக்கி வருகின்ற விருந்தினரை நாள்தோறும் பேணுவானது வாழ்க்கை', 'தினந்தினம் வருகிற விருந்தினர்களுக்கெல்லாம் உணவளித்து உபசரிகின்றவனுடைய வாழ்க்கை', 'நாடோறும் வருகின்ற விருந்தினரைப் பேணி வாழ்பவனது இல்வாழ்க்கையானது ',என்ற பொருளில் உரை தந்தனர்.

வருகின்ற விருந்தினை நாள்தோறும் பேணுவானது வாழ்க்கை என்பது இப்பகுதியின் பொருள்.

பருவந்து பாழ்படுதல் இன்று:
பதவுரை: பருவந்து-துன்புற்று; பாழ்படுதல்-கெட்டுப்போதல்; இன்று-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை
பரிப்பெருமாள்: வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை
பரிப்பெருமாள் குறிப்புரை: விருந்தோம்பலால் பயனென்னை? என்றார்க்குப் பயன் கூறுவார் முற்படச் செல்வங் கெடாது எனக் கூறினார்.
பரிதி: வருந்திப் பாழாதல் இல்லை என்றவாறு.
பரிதி கருத்துரை: அது எது எனில், சரீரத்தில் ஒரு பரு1 வந்து விதனமான2 காலத்துச் சீப்பரிய3 விதனம் மாறுவது போல வருவிருந்து உபசரிக்கில் வினையறும் என்றவாறு.
காலிங்கர்: துயருற்று நசிக்குமாறு4 வருதல் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.

'வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள்' வாழ்வு துன்பப்பட்டு அழியாது.', 'துன்புற்றுக் கெடுதல் இல்லை', 'அதனால் வறுமையுற்றுக் கெட்டுப் போகுமென்பது இல்லை.', 'வறுமையால் வருந்திக் கெடுவதில்லை 'என்றபடி பொருள் உரைத்தனர்.

துயருற்று கெட்டுப் போவதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
விருந்தினர் நாளும் வந்தாலும் அவர்களைப் பேணிக்கொள்ள வேண்டும். என்பதை உணர்த்தும் பாடல்.

வருகின்ற விருந்தினை நாள்தோறும் பேணுவானது வாழ்க்கை பருவந்து கெட்டுப் போவதில்லை என்பது பாடலின் பொருள்.
'பருவந்து'' என்றால் என்ன?

வருவிருந்து என்றது வருகின்ற விருந்தினரைக் குறிக்கும்.
வைகலும் என்ற சொல்லுக்கு நாள்தோறும் என்பது பொருள்.
ஓம்புவான் என்ற சொல் பேணுவான் என்று பொருள்படும்.
பாழ்படுதல் என்பதற்கு கெடுதல் என்று பொருள்.
இன்று என்றது இல்லை என்ற் பொருள் தரும்.

நாள்தோறும் இல்லத்திற்கு வரும் விருந்தினர்களை உண்பிப்பதால் ஒருவனுக்கு பொருட்குறை வந்து விடாது என்று சொல்லும் குறள்!

வருவிருந்து- என்றதற்கு வந்த,, வருகின்ற,, வரும் விருந்து என முக்காலத்தினும் விரித்துப் பொருள் கொண்டார்கள் என்றாலும் 'வருகின்ற விருந்தினர்' என்பதே பொருத்தமானதாகும் வருவிருந்து என்ற சொல்லாட்சியில் தம்மைப் பேணுவோன் நிலையுணர்ந்தே அவனை நோக்க விருந்தினர் மனங்கொள்வர் என்பது தொனிக்கிறது என்பார் திரு வி க..
வைகலும் என்றதால் உணவு வேண்டிவருவோரை நாள்தோறும் சலிப்பின்றி ஆதரித்தல் வேண்டும் என்பது பெறப்படும்..
இவ்விதம் நாள்தோறும் விருந்து ஓம்புவோனுக்கு பொருள்முடை ஏற்பட்டு. அதன் காரணமாக அவன் துன்புற நேரிடலாம். ஆனால் பாடல் அவன் துன்புற மாட்டான் என்கிறது. 'நாள்தோறும் விருந்தினரைப் பேணுபவனாயிருப்பவன் சோம்பலின்றி முயற்சியுடையவனாய் இருப்பான். எனவே அவனது ஆக்கத்தில் தேக்கம் இருக்காது' என்று ஏன் அவன் செல்வம் குறையாது என்பதற்கு விளக்கம் தருவர். விருந்தைப் பேணும் செயலுணர்வினாலும் தூண்டப்பெற்று மேலும் மேலும் வரவைப் பெருக்கிக்கொள்ளும் உயர் நோக்கில் பொருள் ஈட்டும் முயற்சியில் அவன் ஈடுபடுவதால் வறுமைப்படமாட்டான். விருந்தோம்பலால் வறுமைத் துன்பமோ பிற துன்பங்களோ உண்டாகா; மாறாகச் செழுமையே சென்று சேரும் என்பது உட்கருத்து;. அவன் வாழ்வு பெருமையடையுமே தவிரச் சிறுமையறாது எனவும் விளக்கினர்.

இப்பாடல் 'நாள்தோறும் வருகின்ற விருந்தினரைப் பேணுகின்றவரின் வாழ்க்கை கேடுறாது' என்று விருந்தோம்பலின் பயனையும் கூறுகிறது. ஆனால் விருந்தோம்புவான் இப்பய்ன் கருதி இவ்வறம் மேற்கொள்வதில்லை.

'பருவந்து'' என்றால் என்ன?

பருவந்து அல்லது பருவரல் என்பதற்குப் பொருள் -துன்புறுதல் ஆகும். பருவா என்பது வேர்ச்சொல் என்பர்..
இக்குறட்பாவில் பருவரல், வாழ்க்கை பற்றிய பருவரல் ஆதலால் அது ஒருவனுக்குக் குடும்ப சமுதாயச் சூழல்களினான் வரும் வறுமை, வகைமை, பொறாமை முதலிய இடையூறுகளைக் குறித்தது.என்பார் கா அப்பாத்துரை.
பருவந்து; என்ற ஒரு சொல்லைப் பரு, வந்து என இரண்டாகப் பிரித்து உடம்பிலே பருவானது தோன்றி எனப் பொருள் கூறி அதற்கு விளக்கமாக 'உடலில் பருவாக வந்து வருத்தம் விளைக்கின்றபோது பருவிலே உள்ளே உள்ள 'சீ' யானது வெளிப்பட, வருத்தம் மாறுவது போல, வருவிருந்தினை உபசரிக்க துன்பம் அறும்'' என்று பரிதி உரைத்தார். இது புதுமையாக இருந்தாலும் சிறப்பாக உள்ளது என்று சொல்ல முடியாது.
செல்வம் படைத்தோர் பொதுவாகப் பொருளைத் தவறான வழியில் செலவழித்து 'பருவந்துபாழ்படுவது' என்பது உலகியல். அத்தகையோர்க்கு ஒரு முற்காப்பாக அறுவுறுத்தும்படி இப்பாடல் அமைகிறது.. இதை விருந்தோம்புமாறு அவர்க்கு நல்லறிவு கூறியதாகவும் கொள்ளலாம்.

வருகின்ற விருந்தினை நாள்தோறும் பேணுவானது வாழ்க்கை துயருற்று கெட்டுப் போவதில்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

விருந்தோம்பல் செய்வதால் ஒருவன் குறைவுபட்டுப் போவதில்லை எனச் சொல்லும் பாடல்.

பொழிப்பு

நாள்தோறும் தம் இல்லம் நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேணுவானது வாழ்க்கை துன்புற்றுக் கெடுதல் இல்லைபின்னூட்டங்கள் இட்டவரது தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும், குறள்.திறன் அவற்றிற்கு பொறுப்பேற்காது.
கருத்துரைகள் சீர்மைப்படுத்த பின்னர் பதிப்பிக்கப்படும்.