இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0082விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:82)

பொழிப்பு: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று..

மணக்குடவர் உரை: விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.

பரிமேலழகர் உரை: சாவா மருந்து எனினும் - உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் ; விருந்து புறத்ததாத் தானுண்டல் - தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று - விரும்புதல் முறைமையுடைத்து அன்று.
(சாவா மருந்து : சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: சாவை நீக்கும் அமிழ்தமாக இருந்தாலும் தன்னைக் கருதி வந்த விருந்தினர் வீட்டுக்குப் புறத்தேயிருப்பத் தான் மட்டும் அதனை உண்ணுதல் விரும்பத் தக்கதன்று.


பொருள்கோள் வரிஅமைப்பு:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா.மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.


விருந்து புறத்ததாத் தானுண்டல்:
பதவுரை: விருந்து-விருந்தினர்; புறத்ததா-வெளியில் இருப்ப; -தான்-தான்; உண்டல்-உண்ணுதல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல்;
பரிப்பெருமாள்: விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல்;
பரிதி: விருந்து புறத்திலே இருக்கத் தான் உண்பது நன்றல்லது;
காலிங்கர்: விருந்து தன்கடைப் புறத்ததாகப்பெற்று வைத்துத்தான் அகத்திலிருந்து உண்டாலாகின்ற இது; .
பரிமேலழகர்: தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்;;

'விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'வந்த விருந்து வெளிப்புறம் இருக்க', 'விருந்தினர் வெளியே இருக்க.', 'ஏதானாலும் பிறருக்கும் கொடுத்து உண்ணவேண்டும்', 'தன்னிடம் வந்த விருந்தினர் வீட்டுக்கு வெளியே இருக்கத் தானே தனியாக உண்டல்' ,என்ற பொருளில் உரை தந்தனர்.

விருந்து தன்கடைப் புறத்து இருக்கத் தானே உண்பது என்பது இப்பகுதியின் பொருள்.

சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று:
பதவுரை: சாவா-சாவாமை; மருந்து-மருந்து; எனினும்-என்றாலும்; வேண்டல்-விரும்புதல்; பாற்று-முறைமையுடையது; அன்று-இல்லை..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.
பரிப்பெருமாள்: சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: சாவா மருந்தாவது தன்னளவிற்கும் குறைந்து இதனானே இவ்வுயிர் கிடக்கும். இதனிற் குறையிற்சாம்; என்னும் அளவிற்றாய சில்லுணவு இதனை உலகத்தார் உயிர்போகாக் கஞ்சி என்பர். அமிழ்து என்பாரும் உளர். இது வாழ்வோர்க்கேயன்றி வாழாதாரும் விருந்து ஓம்பிட வேண்டும் என்றது.
பரிதி: நஞ்சாகிலும் கூடவிருந்து புசிப்பது நன்று என்றவாறு.
காலிங்கர் சாவாப்பதன் தருவதாகிய அமரர் உலகத்து அமுதமே ஆயினும் தான் விரும்பும் பான்மை நன்றன்று.
காலிங்கர் குறிப்புரை தானுண்டு சாகின்ற சோற்றினை மற்றில்லறத்திற்கு நல்வழிப்பாடாகிய விருந்து தன்கடைப் புறத்ததாகப் பெற்று வைத்து மற்றிதனைத் தானுண்டல் எக்கூற்றினிடத்தோ அறிகிலேன் என்றவாறு.
பரிமேலழகர்: உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் விரும்புதல் முறைமையுடைத்து அன்று.
பரிமேலழகர் குறிப்புரை: சாவா மருந்து : சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.

'சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் விரும்புதல் முறைமையுடைத்து அன்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள்' ,தனக்குச் சாவாமருந்து கிடைப்பினும் உண்ணல் ஆகாது.', 'கிடைத்தற்கரிய அமிழ்தமே ஆயினும் தான் மட்டும் தனியே உண்டல் விரும்பத்தக்கது அன்று', 'சாகாமல் இருக்கச் செய்வதான தேவாமிர்தத்தை உண்பதானாலும் விருந்தாளி இல்லாமல் தானே உண்பது விரும்பத்தக்கதல்ல', 'உண்ணப்படும் பொருள் சாவைப் போக்கும் அமிழ்தமாக இருந்தாலும் விரும்பத்தக்கது அன்று 'என்றபடி பொருள் உரைத்தனர்.

சாகாமல் இருக்கச் செய்வதான மருந்தேயானாலும் விரும்பத்தக்கது அல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சாவா மருந்தேயானாலும் விருந்தினரோடு உண்க என்று சொல்லும் குறட்பா.

சாவா மருந்தேயானாலும், விருந்து தன்கடைப் புறத்து இருக்கத் தானே உண்பது விரும்பத்தக்கது அல்ல என்பது பாடலின் பொருள்.
'சாவா மருந்து' என்றால் என்ன?

விருந்து என்ற சொல் விருந்தினரைக் குறித்தது,
புறத்ததுஆ என்றதற்குப் வெளிப்புறத்தில் இருப்ப என்று பொருள். 'புறத்தது ஆக'' என்பது 'புறத்ததா' எனக் குறைந்து நின்றது.
தான் உண்டல் என்றது தான் மட்டும் தனியாக உண்ணுதல் என்ற பொருள் தரும்.
வேண்டல் என்ற சொல்லுக்கு விரும்புதல் என்பது பொருள்.
பாற்று என்றது பான்மைத்து அதாவது தன்மைத்து எனப் பொருள்படும்.

உணவுக்காகத் தன்னை நாடிவந்து உதவி கேட்கும் விருந்து வெளியே காத்திருக்க, தான் மட்டும் உண்ணுதல் கூடாது - தாம் உண்ணும் அது சாகாமை வழங்கும் அரிய மருந்தென்றாலும்

விருந்தினரை விடுத்து உண்ணல் முறைமை ஆகாது எனக் கூறுகிறது இப்பாடல்.
'விருந்து புறத்ததா' என்பதில் விருந்தினரை விடுத்து உண்ண எப்படி மனம் இசையும் என்ற இரக்கக் குறிப்பிருப்பதாக திரு வி க கூறி, விருந்தினரை விடுத்துத் தனியே உண்பதை 'வேண்டற்பாற் றன்று' என்று நாகரிக மொழியால் கடிந்திருத்தலையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் உண்ட பீன்னர் விருந்தினரைப் பேணுதல் கூடாது என்பதும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.. முற்காலத்தில் வீட்டின்முன் உள்ள புறத்திண்ணையில் விருந்துநாடி வருவோர் அமருவர். வீட்டிலுள்ளோர் உண்ணப்போகும்போகும் முன்னர் வெளியில்வந்து யாராவது விருந்தினர் அத்திண்ணையில் காத்திருக்கிறாரா என்று பார்த்துவிட்ட பின்னரே உண்ணச் செல்வது வழக்கமாயிருந்ததாம்..
.இல்லத்திலுள்ள உணவு எத்தகையதாக இருந்தாலும், தான் உண்ணும் அளவு மட்டும் கொஞ்சமாகவே உள்ளது என்றாலும்-, அதையும் விருந்துடன் பகிர்ந்து உண்ண வேண்டும்.; தன்னைக் கருதி வந்த விருந்தினரை வெளியில் உட்கார வைத்து விட்டுத் தான் மட்டும் உள்ளே மறைவாக உண்ணுவது இழிவான செயலாகக் கருதப்படுல்..

வேப்பங்காயாய் இருந்தாலும் கொடுத்தே உண்பேன்’ என்பது உலகவழக்கு. இக்குறள். 'உண்டிக் கழகு விருந்தோடுண்டல்' என்ற பழமொழியையும் நினைவூட்டும்..
புகழ்பெற்ற சங்கச்செய்யுள் ஒன்றும் கிடைத்தற்கரிய உணவு ஒன்றையும் பகிர்ந்துண்ணும் பண்பை இவ்விதம் பாடுகிறது:
உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதுஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே;;.....
(புறநானூறு.182)
(பொருள்: உண்டேகாண் இவ்வுலகம்;இந்திரர்க்குரிய அமிழ்தம் தமக்கு வந்துகூடுவதாயினும் அதனை இனிதென்றுகொண்டு தனித்து உண்டலுமிலர்.......; )

'சாவா மருந்து' என்றால் என்ன?

சாவா மருந்து’ என்பதற்கு சாவாமைக்கு உண்ணும் மருந்து', அமரர் உலகத்து அமுது, அமிழ்து, சரீரத்திலே பதினெட்டுக்குட்டமும் தீரப்பொசிக்கிற அமிர்தம், உயிர்போகாக கஞ்சி என்று உரையாளர்கள் பொருள் கூறியுள்ளனர்.
இவ்வுரைகளிலிருந்து இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள 'சாவா மருந்து' என்பது மருந்து போன்ற உணவாகவோ. அமிழ்தாகவோ நோய் தீர்க்கும் மருந்தாகவோ இருக்கலாம் என்பது அறியப்படும்.
.நோவா மருந்து, மூவா மருந்து, சாவா மருந்து என்னும் மூவகை மருந்துகளுள் சாவா மருந்து தலை சிறந்தது; சாவா மருந்து சாவாமைக்குக் கரணியமாகிய மருந்து.(தேவநேயப் பாவாணர்)..
பரிதியார் 'சாவு ஆம்' மருந்து எனக் கொண்டு 'நஞ்சாகிலும் கூட இருந்து புசிப்பது நல்லது' என உரை கண்டார். இச்சொற்சிதைவும் இவரது கருத்தும் ஏற்கத்தக்கதாக இல்லை..
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாம் (சாவையொக்கும்). அங்ஙனம் உண்பது சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று என்று பிரித்துக் கண்ட உரையும் உள்ளது.

சாவா மருந்து- என்பதற்குப் பல உரையாசிரியர்கள் தொன்மங்களில் கூறப்பட்டுள்ள அமிர்தம் என்றே கொண்டனர். அமிர்தம் அமுதம் என்றும் அமிழ்தம் என்றும் அழைக்கபடும். இது தேவர்களாலும் அசுரர்களாலும் பாற்கடல் கடையப்பட்ட போது உண்டானது; இதை அருந்தியோர்க்கு மரணம் உண்டாவதில்லை அதாவது மரணத்தையே நீக்கி சாவா வாழ்வளிக்கும் உணவு என்று கூறப்படுவது.. அமிழ்தமே சாவா மருந்து என இக்குறளில் குறிப்பிடப்பட்டது என்பர். உறுதோர்றுயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்’ என்னும் குறடபாவில் (1106) அமிழ்து உயிர் தளிர்க்கச் செய்வது என்று சொல்லப்பட்டுள்ளதால் அவ்வியல்பு கொண்ட சாவா மருந்தும் அமிழ்தும் ஒன்றுதான் எனக் கொள்வதில் தவறில்லை.

பரிப்பெருமாள்: 'சாவா மருந்தாவது தன்னளவிற்கும் குறைந்து இதனானே இவ்வுயிர் கிடக்கும். இதனிற் குறையிற்சாம் (குறைந்தால் சாவு உண்டாம்)' எனப் பொருள் கூறுகிறார். இதன் கருத்து: 'ஒரு கவள அளவு சிறிய உணவு உள்ளது. அதனையுண்டால்தான் தன் உயிர் நிலைக்கு மென்றாலும் அதனையும் விருந்தினர் வந்தால் பகிர்ந்துண்க' என்பது. .. மேலும் 'இது வாழ்வோர்க்கேயன்றி வாழாதாரும் விருந்து ஓம்பிட வேண்டும் என்றது' என்றும் அவர் உரை கூறும். தேவருலக அமிழ்தம் என்ற காணாப் பொருளைக் கொள்வதினும் 'உயிர்போகாக் கஞ்சி' என்ற பொருள் நடைமுறை சார்ந்தது. இவரது உரையே இக்குறட்குச் சிறந்து காணப்படுகிறது.

சாகாமல் இருக்கச் செய்வதான மருந்தேயானாலும், விருந்து தன்கடைப் புறத்து இருக்கத் தானே உண்பது விரும்பத்தக்கது அல்ல என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எத்தகைய உணவாயினும் அதை விருந்தினரை விடுத்து உண்ணுதல் கூடாது என்னும் விருந்தோம்பல் பாடல்
பொழிப்பு

விருந்து வெளியே இருக்க, தனக்குச் சாவாமருந்து கிடைப்பினும் தான் மட்டும் அதை உண்பது விரும்பத்தக்கது அன்று