இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0081இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:81)

பொழிப்பு: வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவிசெய்யும் பொருட்டே ஆகும்.

மணக்குடவர் உரை: இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.

பரிமேலழகர் உரை: இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு.
(எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: வீட்டில் தங்கிப் பொருளைப் போற்றி இல்லறம் நடத்துவதெல்லாம் விருந்தினரைப் பேணி உதவி செய்தற் பொருட்டேயாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு..


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்:
பதவுரை: இருந்து-இருந்துகொண்டு; ஓம்பி-போற்றி;- இல்-மனை; வாழ்வது-வாழ்தல்; எல்லாம்-அனைத்தும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம்;
பரிதி: (இராதசரீரத்தை இருப்பது என்றும், நில்லாத செல்வம் நிற்பதென்றும் வாழ்வர்;
காலிங்கர்: ஒருவன் இல்லறத்திருந்து இல்வாழ்க்கையைப் பாதுகாக்கும் காரணம் யாதோவெனின்........
பரிமேலழகர்: மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்;

'இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'குடும்பமாக இருந்து சிறந்து வாழ்வதெல்லாம்', 'வீடுவாசலோடு இருந்துகொண்டு பொருள்களைப் பாதுகாத்து மனைவிமக்களுடன் குடும்பம் நடத்துவதன் நோக்கமெல்லாம்', 'மனைவியுடன் வீட்டிலிருந்து பொருள்களைப் போற்றி வாவதெல்லாம்', 'இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்' ,என்ற பொருளில் உரை தந்தனர்.

குடும்பமாக இருந்து சிறந்து வாழ்க்கை நடத்துவதெல்லாம் என்பது இப்பகுதியின் பொருள்.

விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.:
பதவுரை: விருந்து-விருந்தினர்; ஓம்பி-பேணி; வேளாண்மை-உதவுதல்வி (திட்பம்); செய்தற்பொருட்டு-செய்வதற்காக..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.
பரிப்பெருமாள் குறிப்புரை: எல்லாம் என்றது வாழ்க்கைப் பன்மை. இஃது இல்வாழ்க்கையின் பயன் விருந்தோம்பல் என்றது..
பரிதி: இதனை அறியாமல் விருந்து செய்தல் வேளாண்மை செய்வதற்கு ஒக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு.
(பரிமேலழகர் கருத்துரை: எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.

'விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விருந்துபேணி உதவி செய்தற்கே.', 'வீட்டுக்கு வந்தவர்களை உபசரித்து உலகத்துக்கு உபகாரமாக இருப்பதற்காகத்தான்', விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவிசெய்தற் பொருட்டேயாம்'', 'விருந்தினரைப் பேணி அவர்க்கு உதவி செய்யும் பொருட்டு' என்றபடி பொருள் உரைத்தனர்.

விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவிசெய்தற் பொருட்டே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இல்லறம் நடத்துவது விருந்தினரைப் பேணுவதற்கே என்னும் பாடல்.

குடும்பமாக இருந்து சிறந்து வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவிசெய்தற் பொருட்டே என்பது பாடலின் பொருள்.
இல்லறவாழ்வின் நோக்கமே விருந்து பேணுவது தானா?

இருந்து என்பதற்கு நிலைபெற்று இருந்து அல்லது தங்கி இருந்து என்று பொருள் கொள்வர்.
முதலில் உள்ள ஓம்பி என்ற சொல்லுக்கு பாதுகாத்து என்றும் இரண்டாவதான ஓம்பி என்பதற்கு போற்றி என்றும் பொருள்.
இல்வாழ்வதெல்லாம் என்றது இல்லறத்தில் வாழ்வதெல்லாம் எனப் பொருள்படும்.
விருந்து என்ற சொல் -விருந்தினரைக் குறிக்கும்.
வேளாண்மை என்ற சொல் உதவிசெய்தல் என்ற பொருள் தரும்.
செய்தற் பொருட்டு என்றது செய்தற்காகவே. என்ற பொருள் குறித்தது.

நிலைபெற்ற குடும்ப வாழ்க்கை உடையவர்கள். இல்லறநெறி போற்றி வாழ்தல் வரும் விருந்தினரைப் போற்றி அவர்கட்கு உதவி செய்வதற்குத்தான்.

'இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்' என்ற தொடர்க்குக் கா அப்பாத்துரை 'ஆர்ந்தமர்ந்து நீடித்துத் திட்டமிட்டுக் காத்துக் கணவன் மனைவியராக மனையறத்திலிருந்து ஒழுங்குபட வாழும் வாழ்வு முழுவதுமே' என்று உரை செய்துள்ளார். '
விருந்து என்பது உறவு நட்பு ஆகிய சார்புகள் இல்லாத, ,புதியதாக அறிமுகம் ஆகியவர்களைக் குறிக்கும்.' விருந்தோம்பல் என்பது அவர்களை மகிழ்வோடு வரவேற்று அவர்களுக்கு உணவு, அளித்தல் ஆகும். '
பசி தீர்த்தல் மிகச் சிறந்த அறம் என்று சொல்லும் வள்ளுவர், .விருந்தோம்பலை இல்வாழ்வாருக்குரிய தலையாய அறக்கடமையாக விதிக்கிறார். இல்லறத்தைப் போற்றிக் காத்து வாழ்தல் எதற்கென்றால், நல்ல விருந்தோம்பல் செய்து, மனம் மகிழத்தான் என்பது இக்குறள் தரும் செய்தி..

இல்லறத்தில் ஈடுபட்டுப் பொளீருட்டி வாழ்வதும் மற்றவர்க்கு நன்மை செய்யவே என்னும் உயரிய நிலையைக் கூறும் இக்குறட்கருத்து ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற அறவாணர்களின் உள்ளத்தைத் தொட்ட ஒன்றாகும்.

பொருட்டு என்னும் பின்னுருபைப் பயன்படுத்தியது புதிய ஆட்சி என்றும் இந்நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு புதிய வரவாகும்.என்றும் கூறுவார் இ சுந்தரமூர்த்தி.

இல்லறவாழ்வின் நோக்கமே விருந்து பேணுவது தானா?

ஒருவன் இல்லறம் மேற்கொள்வதே விருந்தாளிகளை வரவேற்று உதவி செய்வதற்குத்தான் என்று இப்பாடல் கூறுவது இன்றைய வாழ்க்கை முறைக்குப் பொருந்துமா?

இக் காலத்திற்போல் உண்டிச் சாலைகளும் தங்கல் விடுதிகளுமில்லாத பண்டைக் காலத்தில், பணம் பெற்றேனும், இல்லறத்தாரையன்றி விருந்தினரைப் பேண ஒருவரு மின்மையின், இல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் விருந்தோம்பலே என்றார்' என்பது இப்பாடலுக்கான பாவாணர் உரை.
குடும்ப அமைப்பில்லாமல் வாழ்பவராக இல்லாமல் இருந்தால் அவர்களை இல்லறத்தாராகக் கருத மாட்டார்கள் அவரை நாடி விருந்தினர் செல்வதுமில்லை. விருந்தோம்பல் என்ற கேள்வி எழுவதுமில்லை. ஆனால் இல்லறத்தில், காதல் வாழ்வைத் தொடங்கிய ஆணும் பெண்ணும் மக்கட்பேறு அடைந்து அன்புடைமையால் தம்மொடு தொடர்புடையார்கண் நெகிழ்ச்சி கொண்டு அதன அடுத்த நிலையான விருந்தோமலுக்குச் செல்கின்றனர். பிறர்க்கு உதவி செய்யத் தொடங்குகின்றனர். இல்லையென்றால் அவர்கள் மேற்கொள்ளும் காதல் வாழ்வில் பயனிருக்காது. இல்லறம் மேற்கொள்வோர் சமுதாய உணர்வுகொண்டு உதவி தேவைப்படுவோர்க்கு அதைச் செய்தே ஆகவேண்டும் என்றும் முன்னாட்களில் விதிக்கப்பட்டது.

'இன்றைய சமூக-பொருளாதார அமைப்பில் விருந்தினர் பேணுதலுக்குத் தேவை மிகை இல்லை..
விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு' என்று இப்பாடலில் வரும் தொடர் விருந்தோம்பல் என்பது பிறர்க்கு உதவி செய்தல் என்ற பொருளைத் தருவதாகும். அன்பு முதிர்ந்து ஆரவமுடைமை நிலையில் மலர்வது விருந்தோம்பல். விருந்து என்பதை இக்காலத்து மணவிழா போன்ற மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் அளிக்கப்படும் உயர்வகை உணவு என்று கொள்ளாமல், தேவைப்படுவோர்க்கு உதவி செய்தல், (பசியாற்றல்) என்னும் அறமாக நோக்கினால் இக்குறட்கருத்து இன்றைக்கும் பொருந்துவதே.

குடும்பமாக இருந்து சிறந்து வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவிசெய்தற் பொருட்டே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இல்லறத்தின் சிறப்பியல் விருந்தோம்பல் என்பதைச் சொல்லும் பாடல்.

பொழிப்பு

வீட்டில் தங்கி சிறந்து வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்துபேணி உதவி செய்வதற்கேயாம்