இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0079புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பில் அவர்க்கு

(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:79)

பொழிப்பு: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?

மணக்குடவர் உரை: உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.

பரிமேலழகர் உரை: யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - யாக்கை அகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்.?
புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின் 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன 'யாக்கையின் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு' என்று உரைப்பாரும் உளர்.அதற்குஇல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக.

வ சுப மாணிக்கம் உரை: அன்பாம் உறுப்பு அகத்தில் இல்லையெனின், புறத்து உறுப்பெல்லாம் இருந்தும் என்ன?


பொருள்கோள் வரிஅமைப்பு:
யாக்கை அகத்துறுப்பு அன்பு இலவர்க்கு, புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும்?


புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும்? :
பதவுரை: புறத்து-வெளியில்; உறுப்பு-அங்கம்; எல்லாம்-எவையும், அனைத்தும்; எவன்-என்ன? செய்யும்-செய்யும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.
பரிதி: புறத்துறுப்பாகிய மெய், வாய், கண், மூக்குச் செவி அலங்காரமாயிருந்தும் என்ன பிரயோசனம்?
காலிங்கர்: ஒருவர் தமக்கு யாக்கையினது புறத்துறுப்பாகிய மார்பும் தோளும் முகமும் மயிர்முடியும் பிறவும் சால நல்லது எனினும் அவை அங்ஙனம் தோன்றிக் கெடுத்தல் அல்லது;
பரிமேலழகர்: ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்.?
பரிமேலழகர் கருத்துரை: புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின் 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன

'புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். புறத்துறுப்புக்கள் எவை என்று விளக்கியதில் தொல்லாசிரியர்கள் வேறுபடுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புறத்துறுப்பாகிய கை கால் முதலியவை என்ன உதவியைச் செய்யும்?', 'வெளியே காணப்படும் மற்ற அங்கங்கள் எல்லாம் அழகாக அமைந்திருந்தாலும் அவற்றால் என்ன பயன்?', 'அவர்கள் உடம்பின் புறத்தே உள்ள உறுப்புக்களெல்லாம் என்ன நன்மையைச் செய்யும்?', 'இடம் பொருள் ஏவல் போன்ற பல உறுப்புக்கள் இருந்தும் பயனைத் தரா' என்ற பொருளில் உரை தந்தனர்.

புறத்தே உள்ள உறுப்புக்களெல்லாம் இருந்தும் என்ன? என்பது இப்பகுதியின் பொருள்.

யாக்கை அகத்துறுப்பு அன்பு இலவர்க்கு:
பதவுரை: யாக்கை-உடம்பு; அகத்துஉறுப்பு - உள் உறுப்பு;; அன்பு--உள்ள நெகிழ்ச்சி; இலவர்க்கு-இல்லாதவர்க்கு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்கு..
பரிப்பெருமாள் கருத்துரை: அன்பின்றாயினும் பத்துவகைப்பட்ட இந்திரியங்களும் உளவாயின், அதனானே அறமும் பொருளும் இன்பமும் எய்தலாகும் மார்க்கமில்லையோ என்றார்க்கு அவையுளவாயினும் பயன்படா என்று கூறியவாறு..
பரிதி: அகத்துறுப்பாகிய அன்பிலாதவற்கு ஞானமில்லாதவனும் மரப்பாவையும் ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: அகத்துறுப்பாகிய அன்புபோல இவர்க்கு ஒரு நன்மை செய்வதில்லை என்றவாறு.
பரிமேலழகர்: யாக்கை அகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு;
பரிமேலழகர் கருத்துரை: 'யாக்கையின் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு' என்று உரைப்பாரும் உளர்.அதற்குஇல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக.

'உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்கு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பில்லாதார்க்கு', 'உடலின் உள்ளே அமைய வேண்டிய அங்கமாகிய அன்பு இல்லாதவர்களுக்கு', 'உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு', 'அன்பு என்ற உடலின் உள் உறுப்பு இல்லாதவர்க்கு' என்றபடி பொருள் உரைத்தனர்.

'உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பில்லாதார்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்பு என்ற உறுப்பே இல்லற வாழ்வைப் பயனுள்ளதாக்கும் என்னும் குறள்.

'உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பில்லாதார்க்கு புறத்தே உள்ள உறுப்புக்களெல்லாம் இருந்தும் என்ன? என்பது பாடலின் பொருள்.
அன்பற்றவர்களும் புறஉறுப்புக்களால் இன்பமடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பின் ஏன் எவன்செய்யும் எனக் கேட்கிறது குறள்?

புறத்துறுப்பு என்பதற்கு வெளியிலேயுள்ள உறுப்பு என்று பொருள்.
எவன்செய்யும்? என்ற தொடர்க்கு என்ன செய்யும்? என்பது பொருள்.
யாக்கை என்ற சொல்லுக்கு உடல் என்பது பொருள்.
அகத்துறுப்பு என்பது உள்ளுறுப்பாகிய உள்ளத்தைக் குறிக்கும்.
அன்பு இலவர்க்கு என்றது அன்பு இல்லாதவர்க்கு என்ற பொருள் தரும்.

அகத்துறுப்பு என்று குறள் குறிப்பிடுவதை உடற்கு உள்ளுறுப்பு என்றும் இல்லறத்திற்கு உள்ளுறுப்பு என்றும் இருதிறமாக விளக்கினர்.. உள்ளத்து உறுப்பாகிய அன்பு ஒரு உயிர்க்குணம். அது எப்படி யாக்கைக்கு உறுப்பாக முடியும் என்ற எண்ணம் உண்டானதால்,பரிமேலழகர் இல்லற இயல் இயைபு நோக்கி 'அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு' என்றதற்கு இல்லறத்திற்கு உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு எனக் கொள்கிறார்.

இக்குறள் கூறும் புறத்துறுப்புக்கள் எவை?
புறத்துறுப்புக்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்றும் பத்துவகைப்பட்ட இந்திரியம் (உணர்வுகளுக்கான ஐம்புலன் கருவிகள் அதாவது தோல், நாக்கு, மூக்கு, கண், காது இவற்றுடன் தொழில்கருவிகளான கைகள், கால்கள், வாய், குதம் மற்றும் பால்குறி மொத்தம் பத்து) என்றும் மார்பும் தோளும் முகமும் மயிர் முடியும், பிறவும் என்றும் உறுப்புப் போன்ற இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின என்றும் வேறுவேறு வகையாக விளக்கம் தந்தனர். இவை அனைத்தும் புறத்துறுப்புக்கள் என்று ஏற்றுக் கொள்ளத்தக்கனவே.

அன்பு என்னும் உடம்பின் உள்ளுறுப்பு இல்லாதவர்க்கு, உடம்பின் புற உறுப்புகள் என் செய்யும்? என வினா எழுப்புகிறார் வள்ளுவர். எல்லா உறுப்புகளினாலும் அழகுநலம் பொருந்திய ஒருவன் தாய் தந்தை மனைவி மக்கள் முதலான தொடர்புடையார் மாட்டு அன்பு கொண்டிராவிடில் அதனால் அக்குடும்பத்துக்கு என்ன ஆக்கம் உண்டாகப் போகிறது? வாழ்வியல் நடைபெறாது அக்குடும்பம் சிதைந்து போகும். ஊள்ளத்தில் அன்பு இல்லையென்றால் எல்லாப் புறத்துறுப்பும் பயனில்லாதொழியும். வேர் கெட்டால் மரத்தின் உறுப்புக்களெல்லாம் பாழ்படுவதுபோல. அகஅன்பே எல்லாவற்றிற்கும் ஊற்று (திரு வி க).
அன்பில்லாத மாந்தரின் புற உறுப்புக்களால் இல்லற வாழ்வின் இனிமைக்குப் பயன் இல்லை. என்பது இக்குறள் தரும் செய்தி.

அன்பற்றவர்களும் புறஉறுப்புக்களால் இன்பமடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பின் ஏன் எவன்செய்யும் எனக் கேட்கிறது குறள்?

அன்புதான் புறத்துறுப்புக்களைச் செயற்படுத்துவது அதாவது அன்பு என்ற பண்புதான் இல்லறத்தான் உடலுறுப்புக்களை உள் நின்று இயக்குகிறது-
பரிப்பெருமாள் உரையில் கண்டபடி அன்பு இல்லையென்றாலும் புறத்துறுப்பு கொண்டவர்கள் எல்லாவகை இன்பங்களையும் அடைந்து கொண்டுவருகிறார்கள்தாம். பின் ஏன் புறத்துறுப்பு என் செய்யும் என்றார் வள்ளுவர்? இல்லறம் செழித்து இன்புற அன்பே உந்து விசையாக உள்ளது. இக்குறளில் 'என் செய்யும்' என்றதை இல்லறவாழ்விற்கு என் செய்யும் என்று கொள்ளவேண்டும். ஒருவனது .தொழில் உறுப்புக்கள் நிறைவாயிருந்தும், அவற்றால் இல்லற நடப்பிற்கு என்ன பயன்? என்று கூட்டிக் கொண்டால் இக்குறள் கூறவரும் பொருள் எளிதில் புலப்படும்.
உடலுக்குத் தொழில் கருவியாக இருக்கும் வெளி உறுப்புக்களை வேலை செய்யத் தூண்டுவது உடலுக்கு உள்ளிருக்கிற உறுப்பாகிய உள்ளம். அந்த உள்ளத்தில் அன்பு இருந்தால்தான் புறஉறுப்புக்கள் பயனுற இயக்கப்பட்டு இல்லற வாழ்வு மேம்படும். அகத்துறுப்பாகிய அன்புபோல இல்லறத்திற்கு நன்மை செய்வது வேறு உறுப்புக்கள் இல்லை என்பது கருத்து.

'உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பில்லாதார்க்கு புறத்தே உள்ள உறுப்புக்களெல்லாம் இருந்தும் என்ன? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இல்லற வாழ்வு மேம்பட அன்புடைமை என்ற அகஉறுப்புத் தேவை என்று சொல்லும் பாடல்.

பொழிப்பு

உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதார்க்குப் புறத்து உறுப்பெல்லாம் இருந்தும் என்ன?