இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0077என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:77)

பொழிப்பு (மு வரதராசன்): எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

மணக்குடவர் உரை: என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.

பரிமேலழகர் உரை: என்பு இலதனை வெயில் போலக் காயும் - என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்; அன்பு இலதனை அறம் - அன்பில்லாத உயிரை அறக்கடவுள்.
('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.)

வ சுப மாணிக்கம் உரை: எலும்பில்லாப் புழுவை வெயில் வருத்தும். அன்பில்லா உயிரை அறம் வருத்தும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
என்பு இலதனை வெயில்போல அன்பு இலதனை அறம் காயுமே.

பதவுரை: என்பு-எலும்பு; இலதனை-இல்லாததை; வெயில்-ஞாயிற்றின் வெப்பம்; போல-ஒத்திருப்ப; காயுமே-எரிக்குமே, கருக்கிவிடுமே; அன்பு-அன்பு, உள்ள நெகிழ்ச்சி; இலதனை-இல்லாததை; அறம்-அறம்.


என்பு இலதனை வெயில்போலக் காயுமே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்;
பரிப்பெருமாள்: என்பிலாத உயிரினை வெயில் சுடுமாறு போற் சுடும்;
பரிதி: என்பிலாத ஆத்துமாவை ஆதித்தகிரணம் காயும் அத்தன்மை போல ;
காலிங்கர்: தனக்குள் உறுதியில்லாது முழுதும் குழைந்து இருக்கும் உருவுடைத்தாகிய சிறுபுழுவினை வெயிலானது உருவழியக் காயுமாப்போல்;
பரிமேலழகர்: என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்;

'என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எலும்பில்லாத புழு முதலிய உயிர்களை வெயில் காய்ந்து அழிப்பது போல', 'அறக்கடவுள் வெயிலிற் சிக்கிய புழுவைப்போல் துடிக்கச் செய்துவிடும்.', 'வெயிலானது எலும்பில்லாத புழு முதலியவற்றைச் சுடுவது போல', 'புழுவை வெயில் வருத்துவதுபோல் வருத்தும். (என்பு இலது-புழு).' என்றபடி உரை தந்தனர்.

எலும்பில்லாததை வெயில் சுடுவது போல என்பது இப்பகுதியின் பொருள்.

அன்பு இலதனை அறம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்பிலாதவுயிரினை அறம்.
பரிப்பெருமாள்: அன்பிலாதவுயிரினை அறம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: என்றது என்சொல்லியவாறோ எனின் என்புள்ளதனுக்கு வெயில் குளிர்தீர்த்தல் முதலான இன்பத்தைப் பயக்கும். அவ்வாறன்றி என்பிலாதவற்றிற்கு வெயில் இறந்துபட்டு எல்லையான துன்பத்தைப் பயக்கும்; ஆதலால், ஒருதன்மையாக எரித்த வெயில் உடம்பு வேறுபாட்டான் இன்பமும் துன்பமும் பயந்ததுபோல அறமாகிய கடவுளும் பிறர்மாட்டு அன்பு செய்தார்க்கு இன்பமும் அஃதிலார்க்குத் துன்பமும் பயக்கும் என்றவாறு ஆயிற்று. இதனானே அன்பு வேண்டும் என்றாராம்.
பரிதி: அன்பிலாதாரை அறங்காயும் என்றவாறு.
காலிங்கர்: யாவர்மாட்டும் வைக்கப்பட்ட அன்பிலாதானை அறமானது காயும் என்றவாறு.
பரிமேலழகர்: அன்பில்லாத உயிரை அறக்கடவுள்.
பரிமேலழகர் குறிப்புரை: 'என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம். அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.

'அன்பிலாத உயிரினை அறம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பற்ற உயிர்களை அறக்கடவுள் அழிக்கும்.', 'தர்மத்துக்கு ஒவ்வாத காரியத்தை அன்பென்று செய்தால், செய்கிறவர்களை', 'அறக்கடவுள் அன்பில்லாத உயிரை வருத்தித் தண்டிக்கும்', 'அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அன்பிலாததை அறம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எலும்பில்லாததை வெயில் சுடுவது போல அன்பிலாததை அறம் (காயும்) என்பது பாடலின் பொருள்.
'அறம் காயும்' என்றால் என்ன?

அன்பில்லாதவரை அறம் ஒறுக்கும்.

எலும்பில்லாத உடலையுடையதைக் காய்ந்து வருத்தும் வெயில்போல் அன்பில்லாதவர்களை அறக் கடவுள் வருத்தும்.
என்புஇலது என்பது எலும்பில்லாத உடலையும் அன்புஇலது என்பது அன்‌பில்லாத உயிரையும் குறிக்க வந்தன. ‌ சுடுவெயிலில் புல்லினம் காய்தலும் மற்றும் சில தாவர இனவகைகள் காய்ந்து எரிந்து கரிவதும் உண்டு. ஊர்ந்துசெல்லும் இனத்தைச் சேர்ந்த உயிர்கள் எல்லாம் உடல்முழுவதும் தரையில் கிடத்தியே நகரும். அதனால் வெயில் நேரத்தில், மற்ற உயிரினங்களைக் காட்டிலும், எலும்பில்லா இவ்வுயிர்களை வெப்பம் மிகையாக உடம்பு முழுதும் தாக்கும். தனக்குள் உறுதியில்லாது முழுதும் குழைந்திருக்கும் என்பிலா சிறுபுழுவினை வெயிலானது அதனது உரு துடிதுடிக்கக் காயும்.
எலும்பில்லாத உடல்களைக் கொண்ட உயிர்களான புழுக்கள் போன்றவை ஞாயிற்றின் வெப்பம் தாங்காமல் சுருண்டு துன்புறுவதுபோல அன்பில்லாதவர்கள் அறம் சுட்டெரிக்கும் காய்தலுக்கு ஆளாவார்கள் என்று அன்பின்மையை அறக்கடவுள் வாளா விட்டுவிடாது என்ற அறம் சார்ந்த கருத்து கூறப்பட்டது.

பரிப்பெருமாள் எலும்பில்லாத உயிரான புழுக்களுக்கும் என்புள்ள உயிர்களுக்கும் ஒருதன்மையாக வெயில் எரித்தாலும் என்பிலன துன்பம் எய்துகின்றன; என்புள்ளன குளிர்தீர்த்தல் முதலான இன்பத்தைப் பெறுகின்றன. அதுபோல எல்லாவுயிர்களிடத்தும் சமநோக்குள்ள அறக்கடவுளின் ஆட்சியிலே பிறர்மாட்டு அன்பு செய்தார்க்கு இன்பமும் அன்பு செய்யாதார்க்குத் துன்பமும் கிடைக்கும் என்று இக்குறட் பொருளை நன்கு விளக்கினார்.

'அறம் காயும்' என்றால் என்ன?

அறம் என்பது எல்லாம் வல்ல ஒரு பேராற்றல். அது மிகத் தூயதாய் நடுநிலை பிறழாது நிற்பது; அதைக் கடவுளென்று சமயத்தார் அனைவரும் வெவ்வேறு பெயரால் அழைக்கின்றனர். இங்கு, இறைவன் என்னும் சொல்லைப் பயன்படுத்தாது அறக்கடவுளை அறம் என்ற சொல்லால் வள்ளுவர் சுட்டுகின்றார். அறம் காயும் என்பது அறம் ஒறுக்கும் என்ற பொருளில் வந்தது. அறக்கடவுள் தண்டிக்கும் என்பது குறளில் அரிதாகவே - ஓரிரு இடங்களில் மட்டுமே - காணப்படுகிறது. குறளில் அறக்கடவுள் குறிக்கப் பெறும் மற்ற இடங்களாவன:
கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து(அடக்கமுடைமை 130 பொருள்: சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (தீவினையச்சம் 204 பொருள்: பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும்.)

அன்பிலரை அறம் காயும் என்கிறது பாடல். அன்பில்லாதவர் யார்? குறளில் குறிக்கப்பெறும் அன்பு இல்லறத்தில் நெருங்கிய தொடர்புடையாரிடத்துச் செல்வது. கணவன்-மனைவி, பெற்றோர்-மக்கள், உடன் பிறந்தோர், உற்றார், உறவினர், நட்பினர் இவர்களுடனான உறவு ஆகியன பொதுவாகத் தொடர்புடையன என அறியப்படுவது. இவ்வுறவுகளில் தொடர்பு நீங்கி இருப்போர் அன்பிலார் என்று சொல்லப்படுவர். கணவன்-மனைவி உறவில் யாராவது அன்பின்றி அதாவது இருவருக்குள் ஒருவர் மற்றவர் மீது அக்கறை இல்லாமல் நடந்து கொள்வது; பிள்ளைகள் வயது முதிர்ந்த பெற்றோரைப் புறக்கணித்து அவர்களைப் பேணாமல் விடுவது போன்றவை அன்பின்மைக்குக் காட்டுகளாம். நெஞ்சில் ஈரமற்று தொடர்புடையார் வருந்தும் சமயம் உதவிக்கரம் நீட்டாமை போன்றன அன்பற்ற செயல்களாம். அழுவோரைத் தேற்ற எண்ணாத நெஞ்சமுடைமை, ஆதரவற்றிருக்கும் அவரை அரவணைக்க நினைக்காமை போன்றவை அன்பில்லாமையைக் காட்டுவன.
அன்பு காட்டாதவர்கள் ஒறுக்கப்படவேண்டும் என அறநெஞ்சினர் எண்ணுவர். அரசு அமைப்புகளால், அன்பின்மைக்குத் தீர்வு தர இயலாது. சமுதாயமும், சமுதாயப் பெரியவர்களும் இங்கு ஓரளவே துணை செய்யமுடியும். பின் யார் ஒறுப்பது? அன்பிலாதாரை 'உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய அறம்' காய்ந்து தண்டிக்கும் என்கிறார் வள்ளுவர்.

வெயில் உலக இயக்கத்திற்கு இன்றியமையாதது. அது பொதுப்படக் காய்வது; கதிரவன் காய்தல் செய்வது அழித்தற்காக அல்ல. புழு எலுமில்லா உடம்பைக் கொண்டதானது அதன் இயற்கையமைப்பு. அது தன் இயல்பால் ஆக்கந்தரும் வெயிலின்முன் சென்று ஆற்றாது கெடுகிறது.
அறமும் நடுநிலை காப்பது. அறம் வெப்பமுடையதல்ல; அதன்கண் வேண்டுதல் வேண்டாமையில்லை. அது நேரே காய்வதில்லை. பிழை செய்யும் உயிர் தாமே காயப்பெறும். இதனை விளக்கவே 'வெயில் போல' எனச்சொல்லப்பட்டது. அன்பு உடல் கொள் உயிர்க்குணம். உயிர்கள் தம்மியல்பை மாற்றிக் கொண்டு அன்பில ஆகின்றன. அவ்விதம் மாறுபட்டு நடக்கும் உயிர் தானாகவே காயப்பெறுகிறது. என்பிலவும் அன்பிலவும் தம்மியல்பால் கெடுகின்றன. கண்ணுக்குத் தெரியாத சூட்டில் எவ்விதம் புழு துடிதுடிக்குமோ, அது போல் உயிர்க்குணமான அன்பில்லாதவன் அறத்தால் வருத்தமுறுவான். அன்பென்ற ஒன்று இல்லையென்றால் தன்னலம் மேலோங்கி உலகும் வாழ்வும் சுடுகாடாய் மாறிவிடும்.
அறம் காய்தல் என்பதற்கு திருக்குறளார் வீ முனிசாமி தரும் கருத்து 'உலக மக்கள் வெறுப்பார்கள், உலகம் தண்டிக்கும் என்பதும் மனச்சாட்சியே கண்டிக்கும் என்பதுமாம்' என்பது .

அறம், அன்பிலதனைக் காயும் என்பதே தலைமை வாக்கியம். வள்ளுவர் என்பிலதனை வெயில் காயும் என்று சொல்லிவிட்டு அன்பிலதனை அறம் (காயும்) என்று வாக்கியத்தை முடிக்காமல் விட்டது அந்தக் கடுமையான தண்டனையைக் கூற அவரது அன்புள்ளம் தடுக்கிறது என்பதைக் காட்டுகிறது என நயம் கூறுவர்

'அறம் காயும்' என்றது அன்பற்றவனை அறம் சுடும் என்று பொருள்படும்.

எலும்பில்லாததை வெயில் சுடுவது போல அன்பிலாததை அறம் (வருத்தும்) என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அன்புடைமை இல்லாத உயிர் வாழ்வதற்கு உரிமையற்றது.

பொழிப்பு

எலும்பில்லாததை வெயில் சுடும்; அன்பில்லாததை அறம் வருத்தும்