இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0075



அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:75)

பொழிப்பு: உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.
இது போகம் துய்ப்பர் என்றது.

பரிமேலழகர் உரை: அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை.
('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.)

குன்றக்குடி அடிகளார் உரை: இவ்வுலகில் இன்பம் துய்ப்பவர்களாகச் சிறப்புற்றவர்கள் பிறரிடத்தில் அன்புடையராய்ப் பொருந்தி வாழ்ந்ததனால் அமைந்த வழக்கமாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து. இன்புற்றார் எய்தும் சிறப்பு.


அன்புற்று அமர்ந்த வழக்கென்ப:
பதவுரை: அன்புற்று-உள்ள நெகிழ்ச்சியுடன்; அமர்ந்த-பொருந்திய; வழக்கு-நெறியின் பயன்; என்ப-என்று சொல்லுவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்;
பரிதி: சென்ம சென்மங்களிலே தினையத்தினை அன்புண்டான பலன் என்றவாறு.
காலிங்கர்: அனைத்துயிர்க்கும் பொருந்திய முறையினால் மிக அன்பு செய்த அதுவே.
பரிமேலழகர்: அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்;
'பரிமேலழகர் குறிப்புரை: வழக்கு' ஆகுபெயர்.

முற்பிறவியோடு அன்பைத் தொடர்புபடுத்திக் கூறுகிறார் மணக்குடவர். 'பல்வேறு பிறவிகளிலும் சிறுது சிறிதாகத் தோன்றிய அன்பே' என்று பரிதி எழுதுகிறார். 'அனைத்துயிர்க்கும் பொருந்திய முறையினால் மிக அன்பு செய்தது' என்றார் காளிங்கர். 'அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன்' என்பது பரிமேலழகர் உரைக்கருத்து.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்போடு வாழ்ந்ததால் வந்தது என்பர்.', 'இல்லறத்தில் அன்போடு கூடி வாழ்ந்த நெறியின் பயன் என்பர்', 'அன்பினைப் போற்றி அதில் நிலைத்து அவர் வாழ்ந்த வாழ்வின் பயனென அறிந்தோர் கூறுவர்', 'அன்பு உடையவராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர்.' என்ற பொருளில் உரை தந்தனர்.

அன்புடையராய் அமைந்த இல்வாழ்க்கை நெறியின் பயன் என்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு:
பதவுரை: வையகத்து-மண் உலகத்தில்; இன்புற்றார்-மகிழ்ச்சியடைந்தவர்; எய்தும்-அடையும்; சிறப்பு-துறக்கம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.
மணக்குடவர் குறிப்புரை: இது போகம் துய்ப்பர் என்றது.
பரிதி: எண்பத்து நான்கு நூறாயிரம் பேதத்தீர் பிறவாமல் மானிட யாக்கையிலே பிறந்த தன்மை
காலிங்கர்: வையத்து இன்புற்றரவராய் வாழ்கின்றனர் எய்தும் செல்வச் சிறப்பு என்றவாறு,
பரிமேலழகர்: இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை.
பரிமேலழகர் கருத்துரை:. இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.

மணக்குடவர் இப்பிறப்பில் உலகத்தில் இன்பமுற்றார் எய்தும் சிறப்பு என்கிறார். பரிதி மற்றப் பிறவி தவிர்த்து மானிடப் பிறந்த சிறப்பு என்பார். காலிங்கர் உலகத்தில் இன்பமாய் வாழ்வோர் எய்தும் செல்வச் சிறப்பு என்றெழுதினார். பரிமேலழகர் இவ்வுலகத்தில் இன்பமும் மேலுலகி பேரின்பமும் எய்துவர் என்று உரை செய்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தில் காதலர்கள் அடையும் சிறப்பு', 'இவ்வுலகத்து இன்பம் எய்தினார் பெறும் சிறப்பெல்லாம்', 'இவ்வுலகத்தில் இன்பமடைந்து வாழ்பவர் பெறும் சிறப்புகள் எல்லாம்', 'உலகத்தில் இன்பம் அடைந்தவர் எய்தும் சிறப்பினை' என்றபடி பொருள் உரைத்தனர்.

உலகின்கண் இன்பம் அனுபவித்தார் அடையும் சிறப்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்புடையாரே இன்பச் சிறப்பு அடைகின்றனர் என்னும் பாடல்.

அன்புடையராய் அமைந்த இல்வாழ்க்கை நெறியின் பயனே உலகின்கண் இன்பம் அனுபவித்தார் அடையும் சிறப்பு ஆகும் என்பர் என்பது பாடலின் பொருள்.
இன்புற்றார் என்ன சிறப்புப் பெறுகின்றனர்?

அன்புற்று என்ற சொல்லுக்கு அன்பின் வழியே அல்லது அன்பில் ஒன்றுதல் என்பது பொருள்.
அமர்ந்த என்ற சொல் பொருந்திய என்ற பொருள் தரும்.
வழக்கு என்ற சொல்லுக்கு நெறி, வழி, பழக்க முறை, பயன், முறைமை, பண்பு மரபு என்று பலவாறாகப் பொருள் கூறுவர். வழக்கு என்பது வழங்கும் நெறி என்பதுமாம். இங்கு வாழ்க்கை நெறியின் பயன் என்று பொருள் கொள்வர். வழக்கு என்பது அதனாலாய பயனைக் குறித்தலால் இது காரண வாகுபெயர.
வையகத்து என்பது உலகத்திலே எனப் பொருள்படும்.
இன்புற்றார் என்பது இன்பம் நுகர்ந்தோரைக் குறித்தது.
எய்தும் என்பதற்கு அடையும் என்பது பொருள்.

இவ்வுலகில் இன்பம் எய்துவது ஒரு சிறப்புத்தான். அது உயிர்களிடத்தில் காட்டப்படும் அன்பாலே அமைகிறது என்று அறிஞர் கூறுவர். அன்பின்மையானால் வாழ்க்கையில் சிறப்பில்லை இன்பப் பேறு அன்பார்ந்த இல்வாழ்க்கையைப் பொறுத்து அமைகிறது. உலகத்தில் இன்பமாக வாழும் பேறு பெற்றவர்கள் அடைந்துள்ள சிறப்புக்குக் காரணம் அன்பு பொருந்தி வாழும் வாழ்க்கையே. ஓரோ வழியன்றி இடையீடின்றி எப்பொழுதும் தொடர்ச்சியாக அன்புடையராதலைக் குறிக்க வழக்கு- வழக்கம் என்ற சொல் ஆளப்பட்டது.. 'உலகத்தில் காதலர்கள் அடையும் சிறப்பு அன்போடு வாழ்ந்ததால் வந்தது.' என்பது வ சுப மாணிக்கம் உரையாகும். காதலர் என்று சொல்வதால் அவர்கள் ஒருவர்க்காக மற்றவர் என்று அன்பு செலுத்தி வாழ்பவர்கள் என்பது பெறப்படுவதால் இக்குறட்கு இவ்வுரை சிறந்து காணப்படுகிறது. முற்பிறவியையும் வீடு பேற்றையும் இணைத்து இக்குறளுக்குப் பொருள் காண்பது சிறப்பில்லை.

இன்புற்றார் என்ன சிறப்புப் பெறுகின்றனர்?

அறத்தான் வருவதே இன்பம் என்று சொன்ன வள்ளுவர் அன்பு செய்வதால் இன்பச் சிறப்பு ஏற்படுகிறது என்கிறார் இங்கு. இல்லத்திலுள்ளோரிடத்தும் பிறரிடத்தும் அன்புடையவர்களே வாழ்க்கையில் இன்புறுவதோடு பெருஞ் சிறப்பினையும் பெறுவர். அன்பு செய்வோர் உண்மையான இன்பம் எய்துவர் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தில் உணர்வர். அன்புடையார் பெறும் இன்பமே சிறப்புத்தான்.

அன்புடையராய் பொருந்திய இல்வாழ்க்கை நெறியின் பயன் உலகின்கண் இன்பம் அனுபவித்தார் அடையும் சிறப்பு என்பர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இவ்வுலகில் இன்பம் என்பதே அன்புடைமை கொண்ட வாழ்க்கையால் அமைவதாகும் என்னும் பாடல்.

பொழிப்பு

இல்லறத்தில் அன்போடு கூடி வாழ்ந்தோர் இவ்வுலகத்தில் இன்பச் சிறப்பு எய்தினார் என்பர் அறிஞர்.