இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0073அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:73)

பொழிப்பு: அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.

பரிமேலழகர் உரை: ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்.
(பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.)

சி இலக்குவனார் உரை: பெறுதற்கரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்பு (பிறந்தது) அன்போடு பொருந்திய நெறியின் பயன் என்று கூறுவர். (இருவர் கொண்ட அன்பால் பிறந்தோம். நாமும் அன்புடையராய் வாழ்வோம்)


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு..


அன்போடு இயைந்த வழக்கென்ப:
பதவுரை: அன்போடு-அன்புடன்; இயைந்த-பொருந்திய; வழக்கு-வாழ்க்கையின் பயன்; என்ப-என்று சொல்லுவர்..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்;
பரிதி: உயிர்க்கும் அன்பினாலே ஆதாரம் பெறில் நிலைபெறும் என்றவாறு.
காலிங்கர்: உலகத்தின்கண் பல உயிர்கட்குத் தான்வைத்த அன்பொடு பொருந்திய உயிர்கள் முறைமை என்று சொல்லுவர் சான்றோர்.
பரிமேலழகர்: அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்.

மணக்குடவர் முற்பிறப்பில் கொண்ட அன்போடு இணைத்துப் பொருள் காண்கிறார். பரிதி உயிர்க்கு ஆதாரம் அன்பாக இருக்கவேண்டும் என்று எழுதினார். காலிங்கர் பல உயிர்களுக்கு அன்புடன் உயிர்த்தொடர்பு உண்டு என்கிறார். பரிமேலழகர் பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என எதிர்காலம் நோக்கி விளக்குகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இருவர் அன்புத்தொடர்பால் வந்தது என்பர்.', 'அன்போடு பொருந்திய நெறியின் பயன் என்பர். (பெற்றோர் கொண்ட அன்பே மக்கட்பிறப்புக்குக் காரணம் என்பது கருத்து.)', '(அன்புடைமைதான் மனிதனை மனிதனாக்குவது) அன்போடு கூடிய வாழ்க்கைதான்.', 'அன்போடு பொருந்திய ஒழுக்கத்தின் பொருட்டே யாமென்று அறிஞர் கூறுவார்கள்.' என்ற பொருளில் உரை தந்தனர்.

அன்பின் கூட்டுறவால் உண்டான வாழ்வு என்று கூறுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு.:
பதவுரை: ஆருயிர்க்கு-அருமையான உயிருக்கு; என்போடு-உடம்போடு; இயைந்த-உண்டாகிய; தொடர்பு- தொடர்ச்சி (நட்பு)).

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.
பரிப்பெருமாள் குறிப்புரை: என்பு ஆகுப்பெயர். இது நெடிது வாழ்வர் என்றவாறு.
பரிதி: உடலாவது நவதாதுவினால் ஆதாரம் பெற்ற தன்மைபோல .
காலிங்கர்: அது எங்ஙனம் எனின் அன்புடையாளனுக்குத் தன் உட்ம்பொடு பொருந்திய உயிரினது தொடர்ச்சியினைப் போல என்றவாறு
அல்லதூஉம் அன்புடைமை நிறைய வருமளவும், உடம்புக்கும் உயிருக்கும் உறவாய் நின்று பின்பு வீட்டின்பத்தைப் பெறும் என்றவாறு.
பரிமேலழகர்: பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை;
பரிமேலழகர் கருத்துரை: பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.)

''பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை' என்று மணக்குடவர் பொருள் தருகிறார். ஆனால் இப்பிறப்பு என்றது மூலத்தில் சொல்லப்படவில்லை. பரிதி உடலுக்கு 'எலும்பு போன்ற தாதுக்கள் ஆதாரம் போல' என்று பொருள் கூறுகிறார். காலிங்கர் குறளில் இல்லாத வீட்டின்பத்தைத் தொடர்புபடுத்திக் கூறுகிறார். பரிமேலழகர் தொடர்பு என்ற சொல்லுக்குத் தொடர்ச்சி என்று கொண்டு உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயிர் உடம்பினைப் பெற்ற தொடர்பு', 'மக்களுயிர்க்கு உடம்போடு உண்டாகிய இயைபினை', 'அரிய பிறவியாகிய மனிதப் பிறவிக்கு அதன் எலும்போடு பிறந்த குணம்.', 'உடம்பு எடாதபோது அறிவதற்கு அரிய உயிர்க்கும் எலும்பினை அடிப்படையாக உடைய உடம்பிற்கும் உண்டாகிய தொடர்பு,' என்றபடி பொருள் உரைத்தனர்.

அரிய உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உடலுக்கும் உயிருக்கும் தொடர்பு உண்டாக்குவது அன்புதான் எனச் சொல்லும் பாடல்.

அரிய உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்பு அன்போடு இயைந்த வழக்கென்ப என்பது பாடலின் பொருள்.
'அன்போடு இயைந்த வழக்கென்ப' என்றால் என்ன ?

முதலில் உள்ள இயைந்த என்பது பொருந்திய என்று பொருள்படும். இரண்டாவது உள்ள இயைந்த என்ற சொல்லுக்கு உண்டாகிய என்று பொருள் கொள்வர்.
என்பு என்ற சொல்லுக்கு எலும்பு என்று பொருள். இங்கு எலும்புடன் கூடிய உடலைக் குறித்தது.
தொடர்பு என்ற சொல்லுக்குத் சம்பந்தம், தொடர்ச்சி, நட்பு என்பன பொருள்.

இக்குறட்கருத்தை, உயிரியல் வளர்ச்சிமுறை கொண்டும், நேர் கருத்தாகவும், முற்பிறவியோடு தொடர்புபடுத்தியும் வேறுவேறுவகையாக உரையாளர்கள் விளக்கினர்.

உயிரியல் வளர்ச்சிமுறைக் கருத்தில் அமைந்த உரைகளில் சில:
ஆருயிர் 'என்போடியைவது அன்போடியைந்து ஒழுகுதற்கு. என்று மொழிந்த திரு வி க, 'மக்கள் பிறவி தாங்குவோர் அன்பொழுக்கப் பேற்றிற்கு இல்வாழ்க்கையில் நின்று வாழ்க்கைத்துணையுடன் கூடி வாழ்ந்து மக்களைப் பெறும் இயற்கை அறத்தை மேற்கொள்ள வேண்டும்; இல்லையேல் மக்கட் பிறவி தாங்கியதன் பயனாகிய அன்போடியைந்து ஒழுகும் பேறு கிட்டாமற் போகும்' என்றார்.
வ சுப மாணிக்கம் உரை 'உயிர் உடம்பினைப் பெற்ற தொடர்பு இருவர் அன்புத்தொடர்பால் வந்தது என்பர்' என்பது.
இதையொட்டிய சி இலக்குவனார் உரை: 'பெறுதற்கரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்பு (பிறந்தது) அன்போடு பொருந்திய நெறியின் பயன் என்று கூறுவர். (இருவர் கொண்ட அன்பால் பிறந்தோம். நாமும் அன்புடையராய் வாழ்வோம்)' என உரை கண்டார். மக்களுயிர் உடம்போடு பிறந்தது அன்போடு பொருந்திய நெறியின் பயன் (பெற்றோர் கொண்ட அன்பே மக்கள் பிறப்புக்குக் காரணம்) என்பது இதன் கருத்து..
குன்றக்குடி அடிகளார் உரை: 'அருமையான உயிருக்கு எலும்புகளால் ஆகிய உடம்புடன் ஏற்பட்ட தொடர்பு அன்பினாலமைந்த வழக்கமாகும். காதலிருவர் கலந்த அன்பினால் உயிருக்கு உடம்பின் தொடர்பு கிடைத்தது. அன்பினால் வந்த வாழ்க்கையை அன்பிற்கே பயன்படுத்துக என்பதாம்''.

அன்பு என்ற குணம் மாந்தரிடம் இயல்பாய் அமைந்துள்ளது என்ற வகையில் குறளுக்கு நேர் பொருளாய் எழுதியவர்களில் சிலர்:
இரா இளங்குமரனார்: அருமையாக வாய்த்த உயிர்க்கு உடலோடு கூடிய உறவு, அன்பு செலுத்துதற்கென்றே அமைந்தது என அறிவுடையோர் கூறுவர்.
நாமக்கல் இராமலிங்கம்: மனிதர்களுக்குத் தான் சேர்ந்து வாழும் சமூக உனர்ச்சி உண்டு. அந்த உணர்ச்சி இயற்கையாகவே மனித சரீரத்தில் எலும்போடு கலந்திருக்கிற அன்புஎன்ற குணத்தினால்தான் உண்டாகிறது. ஆருயிர்க்கு என்றதனால் மனிதப் பிறப்பைக் குறிக்கும்.
அ கு ஆதித்தனார் உரை: கட்புலனுக்குத் தெரியாத உயிர் கண்ணுக்குத் தோன்றும் உடலோடு கூடி ஒன்றிய வாழ்வு அன்போடு கூடிய பழக்க முறையால் ஆனது.
'அன்பு செய்தலே மக்கட் பிறப்பின் நோக்கமும் பயனும் என்றும்.
'அரிய உயிர்க்கு உடம்போடு உள்ள தொடர்பு அன்பை வளர்ப்பதற்காகவேயாகும்' என்றும்
'உடலும் உயிரும் போல், அன்பும் நம் வாழ்வும் பொருந்தியிருக்க வேண்டும்' என்றும்
'அன்போடு இசைந்தொழுகும் வாழ்க்கை வழக்கம் என்பது, உயிருக்கும், எலும்பிற்கும் இயல்பாயமைந்த தொடர்பைப் போன்றது' என்றும்
'உடலுக்கு உயிர் எவ்வளவு இன்றியமையாததோ அது போலத்தான் வழக்கங்களுக்கு (வாழ்க்கை நெறி அல்லது வழக்கு என்பதற்கு) அன்பும்; அன்பில்லாத வாழ்க்கையும் உயிரற்ற உடலும் ஒன்றே!' என்றும் பிறர் உரை கண்டனர்.

அன்பை உயிர் மலர்ச்சி முறையோடும் முற்பிறவியோடும் தொடர்பு படுத்திக் காட்டி விளக்க முனைந்த சமயவாத உரைகள் இவ்விதம் அமைந்தன:
பிறவி என்பது உடலும் உயிரும் இணைதல் ஆகும். பிறவிதோறும் உடம்போடு கூடி உயிர் அன்பினைப் பெருக்கிக் கொள்கிறது. அன்பு தோன்றி விளக்கம் பெறுதற்கு உடலோடு உயிர் இயைதல் தேவையாகின்றது. உடலோடு உயிர் இனணந்த பின்பேதான் அன்பு தோன்றி விளக்கம் பெறுதல் முடியும்.
'முற்பிறப்பில் அன்போடு இயைந்து வாழ்ந்த வாழ்வின் முறையே இப்பிறப்பில் மக்கள் உடம்போடு உயிர் கூடிவாழும் தொடர்பு' என்பர் இவர்கள்.
அதாவது (முற்பிறப்பில்) அன்புடன் பொருந்திய பயனே இப்பிறப்பில் உயிர்களாய்த் தோன்றியமைக்கான காரணமாகும்'.
முற்பிறப்பின் நல்வினைப்பயனே, இப்பிறப்பில் கிடைத்தற்கரிய மானிடப் பிறவி என்பன இவர்கள் கூறவருவன. ஆனால் இக்குறளில் இக்கருத்துக்களுக்கு இடமில்லை.

உயிர், உடம்பு இரண்டும் எதற்காகப் பொருந்துகின்றன என்பதை ஆராயும் பாடல். உயிர் உடம்பு இரண்டும் முறையாக எப்படிப் பொருந்துகின்றன என்ற ஆராய்ச்சி காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விடைதான் காணமுடியவில்லை; காணமுடியுமா என்பதையும் அறுதியிட்டு யாராலும் சொல்ல முடியாது. ஆனால் இந்த இரண்டும் கூடியதால் உண்டான பயன் ஒன்று உண்டு என்பதை அறிந்துகொண்டார்கள். அப்பயன் என்ன? அதுதான் அன்பு. அன்பு தோன்றுவதற்காகத்தான் உயிரும் உடலும் கூடின என்று முடிவு செய்தார்கள். அதனால் உடலும் உயிரும் கூடுவது அன்பு என்னும் பயன் கருதியே என்பது தெளிவானது என்று ஆன்றோர் கூறினர். இதையே வள்ளுவரும் இப்பாடலில் என்ப எனக் கூறிச் செல்கிறார்.

'அன்போடு இயைந்த வழக்கென்ப' என்றால் என்ன ?

வழக்கு என்ற சொல்லுக்கு நெறி, வழி, பழக்க முறை, பயன், முறைமை, பண்பு மரபு என்று பலவாறாகப் பொருள் கூறுவர். வழக்கு என்பது வழங்கும் நெறி என்பதுமாம்.

அன்போடு இயைந்த வழக்கு என்பதற்கு 'அன்பைப் பெறுவதற்காக வந்த நெறியின் பயன்' என்றும் 'அன்போடு பொருந்திய நெறி' என்றும் அன்போடு பொருந்தி வந்த வழியின் பயன்' என்றும் உரை விளக்கங்கள் உண்டு. உயிர் உடலோடு கூடிய வாழ்வு அன்போடு கூடிய பழக்க முறையால் ஆனது என்னும் அ கு ஆதித்தனார் பொருள் நன்று.. வ சுப மா வின் ' இருவர் அன்புத் தொடரால் வந்தது' என்னும் உரை குறட்பொருளைத் தெளிவுபடுத்துகிறது. இதையே சி இலக்குவனார் 'அன்போடு பொருந்திய நெறியின் பயன்' அதாவது இருவர் கலந்த அன்பால் பிறந்தோம். ஆதலின்' என இன்னும் விரிவாக்கி விளக்கினார்.

அரிய உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்பு அன்பின் கூட்டுறவால் உண்டான வாழ்வு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அன்புடைமை யின் விளைவே உடலும் உயிருமாகப் பிறப்பு எடுத்துத் தோன்றியது என்னும் பாடல்.

பொழிப்பு

உயிர்க்கும் உடம்பிற்கும் உண்டாகிய தொடர்பு (மக்கட்பிறவி), (பெற்றோரின்) அன்புத் தொடர்பால் வந்தது என்பர்.