இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0072அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:72)

பொழிப்பு: அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்

மணக்குடவர் உரை: அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர்.
அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று.

பரிமேலழகர் உரை: அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர்.
(ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்' (புறநா.43) முதலாயினார் கண்காண்க.)

இரா சாரங்கபாணி உரை: அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன் கொள்வர். அன்புடையார் அப்பொருள்களே அன்றித் தம் உடம்பாலும் பிறர்க்குப் பயன்படுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. .


அன்பிலார் எல்லாம் தமக்குரியர்:
பதவுரை: அன்பிலார்-உள்ள நெகிழ்ச்சி இல்லாதவர்; எல்லாம்-அனைத்தும்; தமக்குரியர்-தங்களுக்கு உரிமையுடையார்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்:
பரிதி: மனத்தில் அன்பில்லாதார் எல்லாவற்றாலும் தமக்குரியர்.
காலிங்கர்: ஒருவர்மாட்டும் தன்நெஞ்சில் அன்பிலாதவர் யாவரே அவரே தம் உடம்பைப் பேணி பிறர்க்கும் ஈயாது பின்பும் நகைப்புக்கு உரியராவர்; .
பரிமேலழகர்: அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்;

'அன்பிலாதார் எல்லாப் பொருளையும் தமக்கு உரிமையாக உடையர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பிலார் எல்லாம் தமக்கே கொள்வர்', 'அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களும் தமக்கே உரிமை தாமே அநுபவிக்க வேண்டுமென்று எண்ணுவார்கள்.', 'அன்பில்லாதவர்கள் தம்பொருட்டே எல்லாவற்றையுந் தேடித் தமக்கே உரியதாக்கிக் கொள்ளுவர்', 'அன்பில்லாதார் எல்லாவற்றையும் தமக்கே உரிமையாக்கிக் கொள்வர்' என்ற பொருளில் உரை தந்தனர்.

அன்பு இல்லாதவர்கள் எல்லாவற்றையும் தமக்கே உரியதாக்கிக் கொள்ளுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.:
பதவுரை: அன்புடையார்-அன்புடையவர்; என்பும்-உடம்பும்; உரியர்--உரிமையுடையார்; பிறர்க்கு-மற்றவர்க்கு..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர்.
மணக்குடவர் கருத்துரை: அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று.
பரிதி: அன்புடையர் என்பும் பலர்க்கும் பிரயோசனப்படும் என்றவாறு.
காலிங்கர்: மற்று இவ்வாறு அன்றிப் பிறர்மாட்டு அன்புடையார் தமது பொருள் எல்லாம் கொடுப்பதும் அன்றித் தமது உடம்பு தானும் பிற உயிர்க்கு ஓர் இடுக்கண்வரின் ஈந்துப் புகழினைப் பெறுவர் என்றவாறு.
பரிமேலழகர்: அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர்.
பரிமேலழகர் குறிப்புரை: ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்' (புறநா.43) முதலாயினார் கண்காண்க.

'அன்புடையார் பொருளேயன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பினர் உடம்பையும் பிறர்க்கு வழங்குவர்', 'அன்புடையவர்கள் தம்முடைய உடலையும் பிறருக்கு உதவியாகத் தந்துவிடுவார்கள்', '.அன்புடையோர் தம்முடைய எலும்பையும் மற்றவர்களுக்கு உரியதாக்குவர்', 'அன்புடையார் தம் உடலையும் பிறர்க்கு உரிமையாக்குவர்.' என்றபடி பொருள் உரைத்தனர்.

அன்புடையார் தம் உடம்பாலும் பிறர்க்குப் பயன்படுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்புள்ளம் கொண்டவர் தன்னலம் கருதாதவராயிருப்பர் என்னும் பாடல்.

அன்பு இல்லாதவர்கள் எல்லாவற்றையும் தமக்கே உரியதாக்கிக் கொள்ளுவர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பது பாடலின் பொருள்.
'என்பும் உரியர் பிறர்க்கு' என்றால் என்ன?

அன்பிலார் என்ற சொல் அன்பு இல்லாதவர் எனப் பொருள் தரும்,
தமக்குரியர் என்பது தமக்கு உரியனவாகக் கொள்வர் என்று பொருள்படும்.
அன்புடையார் என்ற சொல்லுக்கு அன்புடையவர் என்பது பொருள்

இப்பாடல் அன்பியலை அன்பிலார் வழியும் அன்புடையார் வழியும் விளக்குகிறது. அன்பின்மையின் சிறுமையை முதலில் கூறி அதன்பின் உடன்பாட்டில் அன்பின் பெருமையை வைத்துப் பாடப்பட்டது. அன்பு இல்லாதவர்கள் எல்லாமே தமக்கு மட்டுமே உரியது என்ற எண்ணம் கொண்ட தன்னலம் மிகுந்தவர்கள். இவர்கள் எல்லா வளங்களும் தம் நன்மைக்காகவே இருப்பதாகக் கொள்வார்கள். அன்புள்ள் நெஞ்சம் கொண்ட தன்னலமற்றவர்கள். தம் உடம்பு கூட பிறர் நன்மைக்காக இருப்பதாகக் கருதுவார்கள் என்கிறது பாடல்..
எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ள நினைக்கும் நெஞ்சில் அன்பு ஊறாது. பொருட்களின்பால் மிகுந்த பற்றுக் கொள்வோர் நெஞ்சத்தில் அன்பு வற்றிப்போகிறது. மாறாக அன்புடையோர் பொருட் பற்றற்ற நிலையில், அன்பு மேலிட, பொருளை மட்டுமல்ல தமது உடல் உழைப்பையும் அன்பு செய்யப்பட்டார்க்குத் தரத் தயங்கமாட்டார். அன்பிலார் எதையும் தனதாக்கிக் கொண்டு தமது நலங்கருதி வாழ்வோர் ஆவர். அன்புடையார் தமது உடைமைகளைப் பங்கிட்டுத் துய்க்க விரும்புவர்.

அன்புடைமையின் உச்சம் அன்பு செய்யப்பட்டார்க்கு உதவி செய்யத் தன்னிடத்திலுள்ள எதையும் கொடுத்துவிட எப்போதும் தயங்காத நிலையாகும். அன்பில்லாதவர்கள் தமக்கும் பிறர்க்கும் உரியதான பொருளை தமக்கே உரிமை கொண்டாடுவர்; ஆனால் அன்புடையார் தமக்கே உரிய உடம்பானும் பிறர்க்கு உரியர் ஆகிறார். இங்கே உடம்பானும் என்பது உடல் உழைப்பைக் குறித்தது. ஆகவே என்பும் உரியர் பிறர்க்கு என்பதற்கு உடம்பின் உழைப்பையும் பிறர்க்கு உரியராக்குவர் என்று கொள்வது பொருத்தமாயிருக்கும்.

இக்குறட்கருத்துக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக ஐந்திணை ஐம்பது பாடல் காட்சி ஒன்றினைக் குறிப்பிடலாம். காட்டில் வாழும் மான் இணைகள் தங்களுக்குக் கிடைத்த சிறிதளவு நீரையும் ஒன்று மற்றொன்றிற்காக விட்டுக் கொடுப்பதைக் காட்டும் அப்பாடல்:
சுனை வாய்ச் சிறு நீரை, ‘எய்தாது’ என்று எண்ணி
பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமா தன்.
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்.
உள்ளம் படர்ந்த நெறி.
(ஐந்திணை ஐம்பது 38)
(பொருள்: சுனையின்கண் உள்ள சிறிய நீரைப் பிணக்கு உண்ண நிரம்பாது என்று எண்ணிப் பிணைமான் இனிதாக உண்ண வேண்டி. கலையாகிய மாத் தனது கள்ளத்தினானே பொய்யே உறிஞ்சும் சுரமென்று சொல்வர் ; நங்காதலர் தம் அகத்தினாற் போயின நெறி.)

'என்பும் உரியர் பிறர்க்கு' என்றால் என்ன?

என்பும் உரியர் என்று சொல்லப்பட்டதற்கு தொன்மக் கதை மாந்தர், வரலாறு கண்ட மனிதர்கள், முதலியோரை உரையாளர்கள் எடுத்துக்காட்டினர், அவர்களில் சிலர்:
தேவர்களுடைய துன்பங்களை நீக்க- விருத்தாசூரனை வெல்ல- வச்சிராயுதஞ் செய்வதற்காக, இந்திரனுக்குத் தன் முதுகெலும்பைக் கொடுத்த ததீசி
தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்காகத் தன் தசையையும் உடம்பையும் அளித்த சிபி
தனக்கு நேரப்போகும் சாவையும் நினைக்காமல் தன் உடன் பிறந்த கவச குண்டலங்களை இந்திரனுக்குக் கொடுத்த கர்ணன்.
தன் தம்பியால் தன் நாடு கொள்ளப்பட்டுக் காட்டிற்போய்த் தங்கியிருந்தபொழுது,, தன்னைப்பாடிய பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர்க்குத் தன்தலையை வெட்டிக்கொண்டுபோய்த் தன் தம்பியிடங் காட்டிப் பெரும் பொருள் பெறுமாறு தன் வாளைக் கொடுத்த குமணன் போன்ற இன்னும் பிறரும்..
இப்பாடல் அன்புடையார் அன்பு செய்யப்பட்டார்க்கு உடலையும் தந்து உதவுவதைச் சொல்வது. அன்புடைமை அதிகாரத்தில் சுட்டப்படும் அன்புடையார் இல்லறத்தில் வாழ்வார் தம் நெருங்கிய தொடர்புடையாரிடம் செலுத்தும் அன்பு பற்றியது. மேலே கண்ட பெருமைக்குரிய செயல்கள் அனைத்தும் அரூளுடைமை காரணமாக அமைந்தவை. எனவே அவை இக்குறட்கருத்துக்கு பொருந்தா.

என்பு என்பதற்கு எலும்பு என்ற பொருள் மட்டுமன்றி உடம்பு என்ற பொருளும் உண்டு. இங்கு இச்சொல் உடம்பு என்ற பொருளிலே பயன்படுத்தப்பட்டது. பிறர்க்கு என்ற சொல் அன்பு செய்யப்பட்டாரைக் குறிக்கும்.
'என்பும் உரியர் பிறர்க்கு' என்ற தொடர்க்கு 'அன்புடையார் தமது உடம்பையும் பிறர்க்கு உரியதாக்குவர்' என்பது பொருள். .தனது எலும்பையோ அல்லது உயிரையோ தருவது என்பதைவிட உடம்பையும் தருவது அதாவது உடல் உழைப்பையும் தருவது என்று கொள்வது ஏற்புடையதாய் இருக்கும். அன்பு செய்யப்பட்டார் துயர் நீக்க, தங்கள் உடம்பின் துன்பத்தையும் கருதாது, தம் உழைப்பு முழுவதையும் அன்புடையார் தரத் தயங்கமாட்டார்கள் என்பது கருத்து.

உடல் உறுப்புகளில் பலவற்றைக் கொடையாக அளிக்க இன்று வசதி உள்ளது. இரத்தம், கண், சிறுநீரகம், இதயம் முதலான பல உடல் உறுப்புக்கள் அன்புடையார் கொடையாக தாம் வாழும்போதோ அல்லது இறந்த பிறகோ பிறர்க்குக் கொடையாக வழங்குகின்றனர். 'என்பும் பிறர்க்கு உரியர்' என்ற தொடர், இன்றைய மருத்துவ உலக உறுப்புக்கொடையை, இக்குறட்கருத்துக்கு இயைபு இல்லாவிட்டாலும், நினைக்க வைக்கும்.

அன்பு இல்லாதவர்கள் எல்லாவற்றையும் தமக்கு உரியதாக்கிக் கொள்ளுவர்; அன்புடையார் தம் உடம்பாலும் பிறர்க்குப் பயன்படுவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தன்னலமில்லா உயரிய அன்புடைமை நிலை பர்றிய குறட்பா.

பொழிப்பு

அன்பில்லாதவர் எல்லாவற்றையும் தமக்கே கொள்வர்; அன்புடையார் தம் உடம்பாலும் பிறர்க்குப் பயன்படுவர்