இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0071



அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:71)

பொழிப்பு (மு வரதராசன்): அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

மணக்குடவர் உரை: அன்பினை யடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்.

பரிமேலழகர் உரை: அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ - அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ?; ஆர்வலர் புன்கணீ¦ர் பூசல் தரும் -தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியத்தூற்றும் ஆதலான்.
(உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை. கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: அன்பு என்பது மூடிவைக்க முடியாத உணர்ச்சி. ஒருவர் அன்புடையவர் என்பதை அவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு நம்மையறியாமலும் கண் கலங்குவதே காட்டிவிடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.

பதவுரை: அன்பிற்கும்-அன்புக்கும், உள்ள நெகிழ்ச்சிக்கும்; உண்டோ-உளதோ; அடைக்கும்-அடைத்து வைக்கும்; தாழ்-தாழ்ப்பாள், அடைப்பு; ஆர்வலர்-முதிர்ந்த அன்புடையவர்; புன்கணீர்- துன்பத்தில் தோன்றும் கண்ணீர்; பூசல்-ஆரவாரம், பேரொலி; தரும்-கொடுக்கும்..


அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்பினை யடைக்குந்தாழுமுளதோ?
பரிப்பெருமாள்: அன்பினையும் அடைக்குந் தாழுமுளதோ?
பரிதி: அன்பு மனத்திலே இருந்தால் அதனைப் புறத்திலே புறப்படாமல் அடைக்கும் தாழும் இல்லை;
காலிங்கர்: நெஞ்சினால் ஒருவர்மாட்டு ஒருவர் அன்புடையராயின் மற்றதற்கும் உண்டோ பயன்படாமல் அடைப்பதோர் கருவி;
பரிமேலழகர்: அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ? [தாழ்-தாழ்ப்பாள்] .
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை சிறப்பின்கண் வந்தது.

'அன்பினை அடைக்கும் தாழும் உளதோ?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்புக்கும் அடைப்பு உண்டோ?', 'அன்பிற்கும் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் உண்டோ?', 'அன்பினை அடைத்து வைக்குந் தாழ்ப்பாளும் உண்டோ? (இல்லையென்பது கருத்து)', 'பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தடை அன்பிற்கும் உளதோ? இல்லை.' என்ற பொருளில் உரை தந்தனர்.

அன்பினை அடைத்து வைக்கத் தாழும் உளதோ? என்பது இப்பகுதியின் பொருள்.

ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்.
பரிப்பெருமாள்: அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அன்பு என்பது யாதோ என்றார்க்கு அன்புடையார்மாட்டுக் கண்ணீர் தோன்றும். அதனானே, அறிந்து கொள்க என்றவாறு. இதனானே இன்பத்திற்கும் இயைந்தவாறு கூறினார் என்று கொள்ளப்படும்..
பரிதி: அன்பு இருந்த இடம் கண்ணீர் காட்டிக் கொடுக்கும் என்றவாறு.
காலிங்கர்: அதனால் ஒருவர்மாட்டு உள்ளத்து விருப்பமுடையவரது மென்கண்மை தானே பலரறியும் பூசலைத் தரும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: பூசல் என்பது விசேஷம். புன்கண் என்பது கிருபை. கண்ணீர் என்பது பெருமை.
பரிமேலழகர்: தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியத்தூற்றும் ஆதலான்.
பரிமேலழகர் குறிப்புரை: ஆர்வலரது புன்மை. கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது. [அனுமான அளவை-இதனைக் குறி ஆராய்ச்சி என்பர். இது கண்ணாற் காணாது சில குறிப்பினால் உணர்தற்குரியது]

'அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியக் காட்டும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'தம்மால் 'அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி' என்பதை வருவித்து உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்புடையவர் கண்ணீரே உள்ளத்தைக் காட்டிவிடும்', 'அன்புடையார் படும் துன்பத்தால் ஒருவர்க்குத் தோன்றும் கண்ணீரே அவரது அன்பினை எல்லாரும் அறியக் காட்டிவிடும்', 'அன்பிற்குரியாரது துன்பங் கண்டபோது அன்பர்களுடைய கண்கள் பொழிகின்ற சிறுமையான கண்ணீரே (அன்பினை மறையாத வண்ணம்) அதனை எல்லாரும் அறியச் செய்யும்', 'அன்புடையார் சொட்டும் சிறு கண்ணீரே உள்ளத்தில் கொண்ட அன்பினை வெளிப்படுத்திவிடும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அன்புசெய்யப்பட்டார் துன்பம் கண்டபோது அன்பால் முதிர்ந்தாரின் கண்ணில் தோன்றும் நீர்ப்பெருக்கே அவர் உள்ளத்தில் கொண்ட அன்பினை ஆரவாரத்துடன் வெளிப்படுத்திவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்பினை அடைத்து வைக்கத் தாழும் உளதோ? அன்பால் முதிர்ந்தாரின் புன்கணீர் பூசல் தரும் என்பது பாடலின் பொருள்.
'புன்கணீர் பூசல் தரும்' என்றால் என்ன?

அன்பு செய்யப்பட்டார் துன்பம் உறுதலைப் பொறுக்கமாட்டாமல் அன்பால் முதிர்ந்தார் கண்ணீரும் கம்பலையுமாய் ஆகிவிடுவர்.

ஒருவர் பிறர்மீதுள்ள அன்பினை மறைத்துத் தாழ்ப்பாள் இட முடியாது. தான் அன்பு கொண்டுள்ளவர் துன்பப்படுவதைக் காணும்போது அவருடைய கண்களிலிருந்து வெளிவரும் கண்ணீரே அவர்மீதுள்ள அன்பைக் காட்டிவிடும்.
அன்பை வெளிக்காட்டாமல் பூட்டிவைத்து மறைக்க இயலாது. ஒருவர்மீது அன்பு பாராட்டுவதைப் பிறர் அறியாமல் மூடிவைப்பதற்கு அடைப்பு என்று எதுவும் இல்லை. அந்த அன்பை வெளிப்படாமல் காத்துக்கொண்டு இருப்போம் என்பதும் இயலாது; அன்பு செய்யப்பட்டார் துயருறுவதைக் கண்டவுடனே கலுழ்கின்ற கண்ணீரே அவரது அன்புள்ளத்தை எல்லோருமறியக் காட்டிவிடும்.
அன்பு என்பது உறவு, நட்பு முதலான தொடர்புடையார்கண் விளைவது. ஆர்வலர் என்ற சொல்லுக்கு முதிர்ந்த அன்புடையார் என்று பொருள்கூறுவர். அன்பீனும் ஆர்வமுடைமை என்ற வள்ளுவரே மொழிந்துள்ளதால் அன்பின் முதிர்ச்சியே ஆர்வம் என்றாகிறது. அன்பு செய்யப்பட்டாரைக் கண்டபோதோ, அவரை நினைக்கும் போதோ அல்லது அவர் பற்றிய செய்திகளைக் கேட்கும்போதோ அன்புடையார் கண் கலங்குவர். கண்ணில் பெருகும் நீரைக் கட்டுப்படுத்த முயன்றாலும் அது அவர் அறியாமலேயே உடைத்துக் கொண்டு வரும். அவர் வடிக்கும் கண்ணீரே அவரிடத்து அன்புடையவர் என்பதைப் புலப்படுத்தும். அன்பு என்பது அடைத்து வைக்க முடியாத உணர்ச்சி; அது கண்ணீராக வெளிப்படும்.

அன்புப் பெருக்கும் அதன் வெளிப்பாடும் இக்குறளில் சொல்லப்படுகின்றன.
அன்பின் வடிவத்தைக் கண்ணீர் வழியாகக் காணலாம். தம்மால் அன்பு செய்யப்பட்டாரை நீண்டகாலத்திற்குப்பின் காணும் போது முகம் மலர்ந்து மகிழ்ச்சியில் கண்ணீர் வரும். அதுபோலவே அவர்க்கு ஏதேனும் இடர் வந்தபோது அது தமக்கே வந்தது போல நினைந்து வருந்தி கண்ணீர் சிந்துவர். அன்பின் வெளிப்பாடே கண்ணீர்.

நீர்த்தேக்கங்களில் மதகு என்னும் நீர் வடிவுப்பகுதி உண்டு. அதைக் கதவு (பலகை) கொண்டு தாழிட்டு வைப்பர். தேவையானபோது மதகைத் திறந்து நீரைப் பயன்படுத்திக்கொள்வர். தாழைத் திறந்து விடும்போது மதகு வழியாக நீர் விரைந்து இரைச்சலுடன் ஓடிவரும். நீர் வெளியே வரும் வழியை தாழிட்டு அடைத்தல் இயலும். ஆனால் உள்ளத்திலுள்ள அன்பு தானாகவே வெள்ளமாகக் கண்கள்வழி வெளிவரும்; அதை எதனாலும் அடைத்துத் தடுக்கமுடியாது.

ஆர்வலர், அடைக்கும் தாழ், புன்கணீர், பூசல் முதலிய சொற்களை நோக்கும்போது, அன்பு செய்யப்பட்டார் இவ்வுலகில் இருந்து மறைந்த சமயம் அதாவது இறந்த வேளை அன்பின் முதிர்ச்சி கொண்ட ஒருவர், அத்துன்பம் தாங்கமாட்டாது கண்ணீரும் கம்பலையுமாய் உள்ள காட்சி நினைவுக்கு வரலாம்.

'புன்கணீர் பூசல் தரும்' என்றால் என்ன?

'புன்கணீர் பூசல் தரும்' என்றதற்குப் புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும், கண்ணீர் காட்டிக் கொடுக்கும், மென்கண்மை தானே பலரறியும் பூசலைத் தரும், கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியத்தூற்றும், கண் பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்ளே நின்ற அன்பினை எல்லாரும் அறிய வெளிப்படுத்தும், கண்ணில்‌ (தோன்‌றும்‌) புல்லிய நீரே (பலரும்‌ கண்டறியத்) தூற்றும்‌, சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும், புல்லிய கண்களில் வழியும் கண்ணீரே 'நான்தான் அன்பு, நான்தான் அன்பு' எனப் பூசலிடுவதுபோல் வெளிப்படுத்திவிடும், கண்ணீரே உள்ளத்தைக் காட்டிவிடும், ஒருவர்க்குத் தோன்றும் கண்ணீரே அவர்து அன்பினை எல்லாரும் அறியக் காட்டிவிடும், துளியளவான கண்ணீரே அதைக் கூச்சலிட்டு அறிவிப்பது போலப் பிறருக்குக் காட்டிவிடும், கண்ணில் துளிக்கும் கண்ணீரே அதை வெளிப்படுத்தி விடும், கண்கள் பொழிகின்ற சிறுமையான கண்ணீரே (அன்பினை மறையாத வண்ணம்) அதனை எல்லாரும் அறியச் செய்யும், சொட்டும் சிறு கண்ணீரே உள்ளத்தில் கொண்ட அன்பினை வெளிப்படுத்திவிடும், அக்கண்ணீரே அவரிடத்துள்ள அன்பைப் பலரும் அறியக் காட்டிவிடும், கண்களில் அது கண்ணீராத் தடையின்றித் தோன்றும், துன்புறுங் கண் சிந்தும் நீரே அவருள்ளத்திலுள்ள அன்பை எல்லாரும் அறியப் பறைசாற்றிவிடும், சிறிய கண்ணில் உள்ள நீர் அவ்வன்பைப் பலர் அறிய வெளிப்படுத்தும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அன்புடையாரது துன்பம் கண்டபோது/கேட்டபோது நாம் அடக்க விரும்பினாலும் கட்டுப்பாட்டை மீறிக் கண்ணீராகப் பொங்கி அன்பு வெளிப்பட்டுவிடும். இதைப் 'புன்கணீர் பூசல் தரும்' என்ற தொடரால் வள்ளுவர் விளக்குகிறார்.
புன் என்பதற்கு புல்லிய அதாவது சிறிய என்றும் துன்பம் என்றும் பொருள் கூறுவர். எனவே புன்கணீர் என்பதைப் புன்கண்+ நீர் என விரித்து 'சிறிய கண்ணில் தோன்றும் நீர் அல்லது சிறு கண்ணீர்' என்றும் 'துன்பத்தால் தோன்றும் நீர்' எனவும் இரு திறமாகப் பொருள் கொண்டனர். இங்கு 'புன்' என்றதற்குத் துன்பம் என்ற பொருள் பொருத்தமாக அமையும். எனவே புன்கணீர் என்பது துன்பக் கண்ணீர் என்று பொருள்படும் எனலாம்.
ஒருவர்க்கு கண்ணீர் வரும்போது கண் சிறுத்துவிடும். வெளிவரும் கண்ணீரைத் தடுப்பதற்காகவே கண் சுருங்குகிறது. அன்புள்ளம் கொண்டவர்கள் கூடும்பொழுது அல்லது பிரியும்பொழுது அன்புப் பெருக்கால் வரும் கண்ணீர் தடுப்பை மீறி வெளிவருகின்றது. இன்பக்காலத்திலும் துன்பக்காலத்திலும் கண்ணீர் தோன்றும் என்றாலும் அது பெரிதும் வெளிப்படுவது அன்பு செய்யப்பட்டார் துன்புறும்பொழுதுதான்.
பூசல் தரும் என்றதற்கு ஆரவாரத்தை உண்டாக்கும் அல்லது உரத்துச் சொல்லிவிடும் என்று பொருள் கொள்வர். 'பூசல் தரும்' என்பது உள்ளத்தில் தோன்றும் பொருதலையும் ஆரவாரத்தையும் குறிக்கின்றன. அன்பு செய்யப்பட்டார் தொடர்பான செய்தி கேட்டபோதோ அவரைக் காணும்போதோ அன்புடையார் உள்ளத்தில் தாமாகத் தோன்றும் படபடப்பையும் சலசலப்பையும் பூசல் என்ற சொல் விளக்கும். அன்புடையாரின் கண்ணீர் ஆர்ப்பரித்து வெளிவருவதே புன்கணீர் பூசல் தருவதாகும். மதகு திறக்கப்படும்போது எவ்விதம் நீர் வீறுகொண்டு ஆரவாரத்துடன் பாய்கிறதோ அதுபோல அன்புள்ளம் கொண்டோர் உள்ளத்தில் பூசல் உண்டாக்கிய அன்புநீர் கண்கள் வழியே பெருக்குடன் வெளியே வரும்.
கண்ணீர் சொரிய துன்பத்துடன் ஆரவாரமாக அழுதல் என்பதாகப் 'புன்கணீர் பூசல் தரும்' என்பதற்குப் பொருள் கொள்ளலாம்.

'புன்கணீர் பூசல் தரும்' என்றது துன்பத்தால் தோன்றும் நீர் எல்லாரும் அறிய வெளிப்படும் என்ற பொருளது.

அன்பினை அடைத்து வைக்கத் தாழும் உளதோ? அன்புசெய்யப்பட்டார் துன்பம் கண்டபோது அன்பால் முதிர்ந்தாரின் கண்ணில் தோன்றும் நீர்ப்பெருக்கே அவர் உள்ளத்தில் கொண்ட அன்பினை ஆரவாரத்துடன் வெளிப்படுத்திவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஆர்வலர் மாட்டுப் பீறிட்டு வரும் கண்ணீரில் அன்புடைமை வெளிப்படும்.

பொழிப்பு

அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் உண்டோ? அன்பிற்குரியாரது துன்பம் கண்டபோது முதிர்ந்த அன்புடையாரின் கண்ணில் தோன்றும் நீரே ஆரவாரத்துடன் தெரிவிக்கும்.