இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0070



மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்

(அதிகாரம்:மக்கட்பேறு குறள் எண்:70)

பொழிப்பு (மு வரதராசன்): மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்..

மணக்குடவர் உரை: மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம் இவன் தந்தை என்ன தவஞ்செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல்.
இது நெறியினொழுகுவாரை உலகத்தார் புகழ்வாராதலான், மகனும் ஒழுக்கமுடையனாக வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி - கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் - தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல்.
('சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன் காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ் சொல்ல வொழுகல்.இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது)

இரா இளங்குமரனார் உரை: மகனொருவன் தனக்குப் பலவகையாலும் உதவிய தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு 'இவனை மகனாகப் பெற இவன் தந்தை என்ன நற்பேறு செய்தானோ' என்று சொல்லும் சொல்லைத் தருவதே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்.

பதவுரை: மகன்-புதல்வன்; தந்தைக்கு-தகப்பனுக்கு; ஆற்றும்-செய்யும்; உதவி-உதவி; இவன்-இவனது; தந்தை-தகப்பன்; என்-என்ன; நோற்றான்-நோன்பு இயற்றினான்; கொல்-(ஐயம்); எனும்-என்று கூறப்படும்; சொல்-மொழி (சொல்லை உண்டாக்குதல்).


மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம்;
பரிதி: புதல்வர் தந்தைக்குச் செய்யும் உதவி;
காலிங்கர்: மற்று இங்ஙனம் தன்னைக் கல்வியாலும் மற்றறிவுடைமையாலும் உணர்வுடைமையனாகச் செய்த தந்தைக்குப் புதல்வன் செய்யும் கைம்மாறு யாதோ எனின்;
பரிமேலழகர்: கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது;

'மகன் தந்தைக்குச் செய்யும் உதவி' என்று மணக்குடவரும் பரிதியும் கூற, 'கல்வியாலும் மற்றறிவுடைமையாலும் உணர்வுடைமையனாகச் செய்த தந்தைக்குப் புதல்வன் செய்யும் கைம்மாறு' எனக் காலிங்கரும் 'கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு' எனப் பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மகன் கடமை', 'அவைக்கு முந்தி இருக்கச் செய்த தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு யாதெனின்', 'மகன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் உதவி (கைம்மாறானது) யாதெனில்', 'மகன் தன் தகப்பனுக்குச் செய்யும் உதவியாவது' என்ற பொருளில் உரை தந்தனர்.

மகன் தந்தைக்குச் செய்யும் உதவி என்பது இப்பகுதியின் பொருள்.

இவன்தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவன் தந்தை என்ன தவஞ்செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல்.
மணக்குடவர் கருத்துரை: இது நெறியினொழுகுவாரை உலகத்தார் புகழ்வாராதலான், மகனும் ஒழுக்கமுடையனாக வேண்டுமென்றது.
பரிப்பெருமாள் கருத்துரை: இவ்வதிகாரத்துப் புதல்வரைக் கற்பிக்க என்றதனானும், புதல்வனும் உலகத்தார் புகழுமாறு ஒழுக என்றதானும் நால்வகை ஆச்சிரமத்தில் இல்வாழ்வான் இலக்கணம் அன்புடைமை முதலாகக் கூறுகின்றார். ஆதலானும் இவ்வதிகாரத்தான் முற்படப் பிரம்சரிய இலக்கணம் கூறியவாறாயிற்று.
பரிதி: இவரைப் பிள்ளையாகப் பெறும்படி இவர் தந்தை என்ன தவம் செய்தாரோ என்று சொல்லும்படியாக அறிவுடையனாதல் என்றவாறு.
காலிங்கர்: மற்று, இவன் தந்தையானவன் இவனைத் தனக்குப் புதல்வனாகப் பெறுதற்கு, 'முன்பு என்ன தவம் செய்தானோ' என்று உலகத்தார் ஏத்தி எடுத்து உரைக்கும் சொல் என்றவாறு.
பரிமேலழகர்: தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன் காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ் சொல்ல வொழுகல். இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது

'இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தானோ' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எத்தவஞ் செய்து பெற்றான் இவன் தந்தை என்று பலர் சொல்லும்படி நடப்பதே', ''இவன் தந்தை இவனைப் பெற என்ன தவம் செய்தானோ' என்று கண்டவர் பாராட்டும் புகழுரையை உண்டாக்குதல்', 'தன் கல்வியறிவொழுக்கங்களைக் கண்டவர்கள் இவனுடைய தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தானோ என்று சொல்லுஞ் சொல்லாகும்', ''இவன் தகப்பன் இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ?' என்னும் சொல்லை உண்டாக்குதல்' என்றபடி பொருள் உரைத்தனர்.

இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று சொல்லும்படி நடப்பது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மகன் தந்தைக்குச் செய்யும் உதவி, இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று சொல்லும்படி நடப்பது என்பது பாடலின் பொருள்.
மகன் தகப்பனுக்குச் செய்வது உதவி ஆகக் கூடுமா?

மகன் பெருமை கொண்டவனாக ஆனது தந்தையின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லும் பாடல்.
'இப்படி ஒரு மகன் கிடைக்க இவன் தந்தை தவம் செய்திருக்கவேண்டும்' என்று பிறர் சொல்லக் கேட்டபொழுது தந்தை மிகப்பெருமிதம் கொள்வான். இந்தப் பெருமையைப் பெற்றுத் தருவதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவி என்கிறார் வள்ளுவர்.

உலகத்தார் வியக்கத்தக்க வகையில் நல்லவனாகவும் வல்லனாகவும் வளர்ந்து ஒழுகி நடக்கிறான் மகன். அவன் உயர்ந்த புகழ் நிலையை அடைந்திருக்கும்போது- அதைக் கண்டு மற்றவர் பாராட்டும்போது- மிகுந்த மகிழ்வு கொள்கிறான் தந்தை. சிறந்தநிலையை அடைந்த ஒருவனைக் கண்டால் 'இவனைப் பெறுவதற்கு இவர் பெற்றோர் என்ன தவம் செய்தனரோ' என்று சொல்வது ஓர் வழக்கு- இதைத் தான் இப்பாடல் 'சொல்' என்று குறிப்பிடுகிறது. இச்சொல் ஊரார் வாயினின்று தானாக வருவது. இவ்விதம் ஊரார் சொல்லும் அளவு மகன் வளர்ச்சி அடைந்தது கண்டு தந்தை பெருமை கொள்கிறான். அவ்வாறு புகழப்படும் நிலையை உருவாக்குதலே மகன் தந்தைக்குச் செய்யும் எதிரீடாகிய உதவியாகும்.

‘இவன் தந்தை என்னோற்றான்’, என்பது பிறரது கூற்று. 'இவனைப் பெற்றவன் என்ன நோற்றானோ' என்பது பொருள்.
நோன்பு மேற்கொண்டோரை தவம் செய்வார் என்றும் குறிப்பிடுவர். தவம் என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. முயற்சியால் வரும் துன்பங்களைப் பொறுத்தல் என்ற பொருளிலும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை என்ற பொருளிலும் வள்ளுவர் இச்சொல்லைக் குறளில் ஆள்கிறார். தவம் என்பதைத் தம் கருமம் எனக் கொண்டால், அவரவர்க்கு அவரவர் விரும்பிய கருமம் தவமாகிறது. தம் கருமத்தில் வெற்றி பெற தவம் அவசியமாகிறது. தடைகளையெல்லாம் தாண்டி, வரும் துன்பங்களையெல்லாம் ஏற்றுப் பொறுத்து எதிர்கொண்டு, வெற்றி என்ற இலக்கை வைத்து முயல்பவனே நோற்பான் ஆவான். நோற்றல் என்பது மனவுறுதியையும் செயல் வன்மையையும் காட்டுவது. ஒரு தந்தை தன் மகன் சிறந்த, வெற்றிகரமான குடிமகனாக உருவாக வேண்டும் என்ற நோக்கம் கொண்டால், அந்த மகன் சான்றாண்மையையும் சிறந்த கல்வி அறிவையும் பெறுவதற்கு திட்டம் இட்டு அரிது முயன்று மன உறுதியோடு வளர்ப்பான். அப்பொழுதுதான் அந்த மகன் உலகத்தார் மெச்ச உயர்வான். இதை அவன் தனது கடமை என்று கூறக் கருதாமல் தன் மகன் நன்றாக வர வேண்டும் என்ற பெருநோக்குடன் செய்வான்.
ஒருவனிடம் நல்லன கண்டவேளைப் பாராட்டுவதும் தீயன கண்டபொழுது இகழ்வதும் உலக மாந்தர் இயல்பு. பெற்றோரால் நல்ல முறையில் வளர்க்கப்பட்ட பிள்ளை பண்பாளனாய், சிறந்த அறிவுடையோனாய், வினைத்திறம் கொண்டவனாய் ஊருக்கும் உலகுக்கும் உதவி செய்யும் ஒரு உயர்ந்த குடிமகனாய், சமுதாயத்தில் திகழ்வான். அவன் நற்குண நற்செய்கை கொண்டவனாய், பழிக்கஞ்சி, பல்லோர் பாராட்ட வாழ்வான்.
இவ்வாறு, அவன் தனது பிறப்பிற்குக் காரணமாகி, கல்வியாலும் மற்றறிவுடைமையாலும் உணர்வுடைமையனாகத் தன்னை ஆளாக்கி உலக அரங்கில் முந்தியிருக்கச் செய்த தன் தந்தைக்கு உதவி செய்கிறான் என்கிறது இப்பாடல்.
எப்படித் தந்தை நோற்றானோ அவ்விதம் மகன் பெற்ற புகழில் நிலைத்து நிற்பதும் அரிய செயலாகும். பெருமை கொள்ளும் நேரத்தில் பாராட்டு நிலையை நீட்டிக்கச் செய்வதுவும் மகன் தந்தைக்கு செய்யும் உதவியாகக் கருதப்படும். உதவி என்றமையால், இவன் தந்தை எந்நோற்றான் கொல் என்ற சொல்லைப் பிறர் கூறுமாறு மகனது உயர்ந்த நிலையைத் தந்தை வேண்டி நிற்கின்றான் என்பதும், அதனால் அந்த உதவியைத் தந்தைக்கு மகன் தவறாது செய்யக் கடன்பட்டுள்ளான் என்பதும் பெறப்பட்டன.

மகன் தகப்பனுக்குச் செய்வது உதவி ஆகக் கூடுமா?

தன்மகனை உலக அரங்கில் (அவையத்து) முந்தியிருப்பச் செய்வது தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி என்று இவ்வதிகாரத்திலுள்ள முந்தைய பாடல் ஒன்று (குறள் 67) கூறியது. இப்பாட்டு மகன் தந்தைக்காற்றும் உதவி என்கிறது. அங்கே 'நன்றி' இங்கே 'உதவி'. பொருளில் இரண்டு சொல்லும் நெருங்கிய தொடர்புடையன. அந்நன்றியும் இவ்வுதவியும் பயன் கருதா வழியில் நிகழ்வன.
சில உரையாசிரியர்கள், தந்தை மகனுக்கு செய்வதை உதவி என்றும், மகன் தந்தைக்கு செய்வதை நன்றி என்றும் எழுதியுள்ளனர். முதல் வாசிப்பில் இதுதான் முறையானதாக இருக்கும் என்பது போல் தோன்றுகிறது. ஆனால் தந்தை மகற்காற்று நன்றி என்பதிலுள்ள நன்றி என்ற சொல்லுக்கு நேர் பொருள் நன்மை என்பதுவே; அக்குறளில் நன்மை என்ற பொருளிலேயே அது ஆளப்பட்டது. எனவே தந்தை மகனுக்குச் செய்ததை நன்றி என்றதே சரியானது.
தந்தை மேற்கொண்ட முயற்சிகளுக்கு -நோற்றலுக்கு- பயனாய் விளைந்தது மகன் உலகோர் பாராட்டும் உயர்ந்த நிலை எய்தியது. நன்றி (நன்மை)செய்த தந்தைக்கு நற்சொல்லையுண்டாக்குதல் மகன் செய்வது எதிரீடாகிய கைம்மாறு என்று சொன்னால், அது பெற்றவனுக்குப் பழிப்பெயரைப் பெற்றுத் தரலாமாதலால் அதை உதவி என்றார் வள்ளுவர்.

மகன் தந்தைக்குச் செய்யும் உதவி, இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று சொல்லும்படி நடப்பது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மகன் உயர்ந்த நிலை எய்தி நிலைநிற்பதே தந்தை அவனிடம் எதிர்பார்ப்பது என்னும் மக்கட்பேறு பாடல்.

பொழிப்பு

தந்தைக்கு மகன் செய்யும் உதவி, 'இவனைப் பெற என்ன நோற்றானோ' என்று உலகோர் சொல்லும்படி நடப்பது.