இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0068தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

(அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:0068)

பொழிப்பு: தம்மிலும் தம்மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது, உலகத்துப் பெற்றோர் எல்லார்க்கும் இனிமை

மணக்குடவர் உரை: தம்மக்க ளறிவுடையாரானால் அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம்.

பரிமேலழகர் உரை: தம் மக்கள் அறிவுடைமை - தம் மக்களது அறிவுடைமை; மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது - பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம்.
(ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது ஈண்டு அறிவுடையார் மேல் நின்றது. அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: தம்மைவிடத் தம்மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது உலகத்திலுள்ள எல்லா மனிதருக்கும் இயற்கையாக இன்பம் தருவது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.


தம்மின்தம் மக்கள் அறிவுடைமை:
பதவுரை: தம்மின்-தம்மைக் காட்டிலும்; தம்-தமது; மக்கள்-புதல்வர்; அறிவுடைமை-அறிவு உடையனாந் தன்மை.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மக்க ளறிவுடையாரானால்;
பரிதி: தம்மிலும் புதல்வர் அறிவினராகில்;
காலிங்கர்: தம் புதல்வர் அறிவுடைமையின் மிகுதியைக் கண்டுதாம் இன்புறுவது அன்றி;
பரிமேலழகர்: தம் மக்களது அறிவுடைமை;
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை.

'தம் மக்கள் அறிவுடையரானால் தம்மின் (இனிது)' என்று பொருள் கண்டவர்கள் மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர். 'தம்மக்கள் தம்மின் அறிவுடைமையரானால்' எனப் பொருள் கண்டார் பரிதி.

இன்றைய ஆசிரியர்கள் 'தம் குழந்தைகளைப் பேரறிவுடையவர் ஆக்குவது', 'தம் மக்கள் அறிவுடைமை', 'தம்மைப் பார்க்கிலுந் தம்முடைய மக்கள் கல்வியறிவுடையராயிருப்பது', 'தன் மக்களுடைய அறிவுடைமை தம்மைவிட' என்ற பொருளில் உரை தந்தனர்.

தமது பிள்ளைகள் தம்மைவிட அறிவுடையர்கள் ஆவது என்பது இத்தொடரின் பொருள்.

மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது:
பதவுரை: மா-பெரிய; நிலத்து-பூமியின்கண்; மன்-நிலைபேறு; உயிர்க்கு-உயிருக்கு; எல்லாம்-அனைத்தும்; இனிது-நன்றானது.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்புதல்வரைக் கற்பிக்க வேண்டும் என்றார். அதனால் பயன் என்னை என்றார்க்கு அவர் நன்னெறி ஒழுகுதலானே தமக்கும் பிறர்க்கும் இனிமையுண்டாம் என்று கூறப்பட்டது.
பரிதி: உலகத்தார்க்கு எல்லாம் இனிமையாம் என்றவாறு
காலிங்கர்: மாநிலத்து மன்னுயிர்கட்கு எல்லாம் இன்புறத்தக்க இனிமையைக் கொடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'மன்னுயிர்' என்றது ஈண்டு அறிவுடையார் மேல் நின்றது. அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.

'உலகத்தார்க்கு எல்லாம் இனிமையாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெற்றோர்க்கும் எல்லோர்க்கும் இனிது', 'இவ்வுலகத்து மக்கட்கெல்லாம் தம்மைப் போல இனிது', 'இப்பெரிய நிலவுலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியைத்தரும்', 'உலகத்து உயிர்கட்கு இனிமையைத் தரும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பெரிய நிலவுலகலத்து உயிர்களுக்கெல்லாம் இனிமை என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
தம் குழந்தைகளை அறிவுடைமைப் படுத்துதலே பெற்றோரின் வளர்ப்பு நோக்கமா இருத்தல் வேண்டும் என்னும் குறள்.

தமது பிள்ளைகள் தம்மைவிட அறிவுடையர்கள் ஆவது மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிமை என்பது பாடலின் பொருள்.
'மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம்' குறிப்பது என்ன?

அறிவுடைமை என்ற சொல் அறிவுடையராய் இருத்தல் என்ற பொருள் தரும்.
மாநிலத்து என்பது பெரிய உலகில் உள்ள என்ற பொருளது.
மன்னுயிர்க்கெல்லாம் என்ற தொடர் நிலைபெற்ற உயிகட்கு எல்லாம் எனப் பொருள்படும்.
இனிது என்ற சொல்லுக்கு இனிய்தாகும் என்பது பொருள்.

'தம்' என்ற சொல் பெற்றோர் இருவரையும் குறிக்கும்.
இக்குறளின் தொடக்கத்திலுள்ள 'தம்மின்' என்ற சொற்றொடர் 'தம்மில் அறிவுடைமை' என்றவாறு 'அறிவுடைமை'யைச் சேர்ந்து வருவது என்று ஒருசாராரும், 'தம்மின் இனிது' என்று கூட்டிப் படிக்கப்படும்படி 'இனிது' என்ற சொல்லுடன் சேர்ர்ந்து வருவது என்று இன்னொரு சாராரும் பொருள் கூறினர். இதனால் 'தன்னை விடவும் தம் பிள்ளைகள் அதிக அறிவுடன் விளங்குதல் உலகத்திலுள்ள எல்லா மனிதருக்கும் இனிது' என்றபடி ஒருகருத்தும், 'தம் மக்கள் அறிவுடையாரதல், தன்னை விட மற்ற உயிர்களுக்கு மிகவும் இனிமையானது' என்று மற்றொரு கருத்தும் இக்குறட்கு உருவாயின.

இக்குறளுக்கு, மேற்கண்ட பொருள்களை அடியாகக் கொண்டு, சிறுசிறு வேறுபாடுகளுடன் நிறைய உரைகள் உள்ளன. அவை அனைத்தையும் கீழ்க்கண்டவற்றுள் வகைப்படுத்தலாம்:
1. தம்மைவிடத் தம்மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது உலகத்திலுள்ள எல்லா மனிதருக்கும் இன்பம் தருவது. இது எளிமையான பொருளாகத் தோன்றினாலும் தம் பிள்ளைகளை அறிவுடையோராக வளர்க்க வேண்டும் என்ற செய்தியைச் செல்வது.
2. தம்மக்கள் தம்மினும் அறிவுடையரானால் அதனைக்கண்டு உலகம் இன்புறும். தம் பிள்ளைகள் அறிவுடைமையோராதல் உலக மக்களுக்கு இனிமை தருமா? புலி எட்டடி பாயப், புலிக்குட்டி பத்தடி பாய்ந்தால் காண்போர் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று இன்புறுவர் என்ற நோக்கில் இவ்வுரை அமைந்தது. உலகம் இன்பம் பெறுதலுக்கு தம்மைவிட அறிவுடைமையாய் இருக்க வேண்டிய தேவை இருக்கிறதா? இது சிறப்பான உரை என்று கொள்ள முடியாது
3. பெற்றோர்களைவிட மக்கள் அறிவில் சிறந்திருத்தல் வேண்டும்; தலைமுறை தோறும் மக்களினம் அறிவில் சிறந்திருத்தலே உள்ளது சிறத்தலாகும்; அவ்வாறு சிறந்து இருத்தலினால் பெற்றோர்க்கு மட்டுமன்றி, உலகுக்கே பெருநன்மை உண்டாக்குவதாகும்; உலகமக்கள் இனிதாவர். இவ்விளக்கம் அறிவியல் கூறுகள் மிகக் கொண்டிருக்கிறது; பொருத்தமாகப் படவில்லை.

பரிதியின் உரை கூறுவது: 'தம்மிலும் புதல்வர் அறிவினராகில், உலகத்தார்க்கு எல்லாம் இனிமையாம்'. இவர் மன்னுயிர்க்கெல்லாம் என்பதற்கு உலகத்தார்க்கு+ எல்லாம் என்று பொருள் கொள்கிறார்.
இவ்வுரை போலவே நாமக்கல் இராமலிங்கம் கூறும் 'தம்மைவிடத் தம்மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது உலகத்திலுள்ள எல்லா மனிதருக்கும் இயற்கையாக இன்பம் தருவது' என்ற உரையும் அமைகிறது.
'தம்மிலும் தம்மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது, உலகத்துப் பெற்றோர் எல்லார்க்கும் இனிமை என்ற பொருளே இப்பாடலுக்கு ஏற்புடையதாகத் தோன்றுகிறது.

'மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம்' குறிப்பது என்ன?

மாநிலத்து என்பது இங்கு உலகத்திலுள்ள என்ற பொருளில் ஆளப்பட்டது.
நாடு மொழி சமய எல்லைகள் கடந்தும் அறிவு பயன்படுவதால் 'மாநிலம்' எனக் கூறப்பட்டது என்பர்.
'மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம்' என்பதற்கு நேர் பொருள் 'இவ்வுலகத்து உயிர்களுக்கெல்லாம்' என்பது.
'மன்னுயிர் என்றது ஈண்டு அறிவுடையார் மேல் நின்றது; அறிவுடைமை ஈண்டு இன்புறுதற் குரியார் அவராகலின' என்பது பரிமேலழகர் உரையில் காணப்படுவது. பரிமேலழகர் உரைப்படி 'மன்னுயிர் என்பது கற்றார் அவையிலுள்ள அறிவுடையாரைக் குறிக்கும்'. ஆனால் இப்பொருளைப் பெரும்பான்மையோர் ஏற்றுக் கொள்ளவில்லை.
'மாநிலத்து மன்னுயிர்' என்றதால் 'தம் மக்கள் உலகமக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது' என்றபடி இக்குறட் பொருளை விளக்கி, இதில் ஒரு பெற்றோர்க்கு தம்முடைய நலத்தைவிடவும், சமுதாயநலத்தில் அக்கறை இருக்கவேண்டும் என்பதை உள்ளுறையாகச் சொல்லியிருப்பதாகக் கூறினர் சில உரையாளர்கள்.

இக்குறள் தம் மக்கள் தம்மைவிட அறிவுடையாராய் இருப்பது குறித்து மகிழ்ச்சி கொள்ளும் பெற்றோர் பற்றியது. உலகத்திலுள்ள எல்லா மனிதரும் (பெற்றோரும்) அவ்வாறே உவகை கொள்வர் என்றதால் 'மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம்' என்று சொல்லப்பட்டது.

தமது பிள்ளைகள் தம்மைவிட அறிவுடையர்கள் ஆவது பெரிய நிலவுலகலத்து உயிர்களுக்கெல்லாம் இனிமை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தம்மைவிடத் தமது பிள்ளைகள் அறிவுடையராய்த் திகழ்வது, அவர்களால் பெறத்தகும் நீடித்த இனிமையாம் என்னும் புதல்வரைப் பெறுதல் குறள்.

பொழிப்பு

தம்மைவிடத் தம்மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது உலகத்திலுள்ள எல்லார்க்கும் இன்பம் தருவது