இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0065மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

(அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:65)

பொழிப்பு: மக்கள் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்; அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தருவதாகும்.

மணக்குடவர் உரை: தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம்: அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம்.

பரிமேலழகர் உரை: உடற்கு இன்பம் மக்கள்மெய் தீண்டல் - ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் - செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல்.
('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.)

இரா சாரங்கபாணி உரை: தம் குழந்தைகள் உடம்பைத் தீண்டுதல் உடம்புக்கு இன்பம். அவர்களின் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உடற்கின்பம் மக்கள்மெய் தீண்டல் மற்று செவிக்கு இன்பம் அவர் சொற்கேட்டல்.


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்:
பதவுரை: மக்கள்-புதல்வர்; மெய்-உடம்பு; தீண்டல்-தொடுதல்; உடற்கு-மெய்க்கு; இன்பம்-மகிழ்ச்சி.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம்;
பரிதி: 'தீண்டில்', 'சொற்கேட்கில்' என்பன பாடம். தன் புதல்வர் மெய்தீண்டில் உடற்கு இன்பம்;
காலிங்கர்: இனிய புதல்வர் வளர்ந்தும் தளர்நடையிட்டும் வந்து ஏறி, மற்று அவர் மெய்யினைத் தீண்ட, அதுவே இல்வாழ்வோர்க்கு உடற்கின்பமாவது.
பரிமேலழகர்: ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்;

மணக்குடவரும் காலிங்கரும் 'தமது குழந்தை தமது உடம்பினைத் தீண்டல் இன்பமாம்' என்றனர். பரிமேலழகர் 'பெற்றோர் தமது மக்களைத் தீண்டுதல் மெய்க்கு இன்பம் என்றுரைத்தார். பரிதி இரண்டிற்கும் பொதுவாக 'மெய்தீண்டில் உடற்கு இன்பம்' என்று எழுதினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'குழந்தை மேனிபடுவது உடலுக்கு இன்பம்', 'குழந்தைகள் பெற்றோரது உடம்பைத் தொடுதல் அவர் உடலுக்கு இன்பம் தருவதாகும்', 'தம் குழந்தைகள் உட்லைத் தீண்டுதல் (தழுவும்போது) உடலுக்கு இன்பம் தரும்', 'தாம் பெற்ற குழந்தைகளின் உடல் தம் உடலைத் தீண்டுவது உடலுக்கும் இன்பமளிக்கும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

தமது மக்கள் தம் உடம்பைச் சார்தல் உடலுக்கு இன்பம் தரும் என்பது இத்தொடரின் பொருள்.

மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு:
பதவுரை: மற்று-பின்னும்; அவர்-அவர்; சொல்-மொழி; கேட்டல்-கேட்பது; இன்பம்-மகிழ்ச்சி; செவிக்கு-காதுக்கு.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதுவரை இருகுறள்களால் ஊறும் ஓசையும் இனிதாம் என்றார். ஒளியும் நாற்றமும்2கூறாராயினர் செயற்கையானும் விளைதலின்.
பரிதி: அவர் வார்த்தை கேட்கில் ஐம்புலத்துள் ஒன்றான செவிக்கு இன்பம் என்றவாறு.
காலிங்கர்: பின்பு அறிவுடையராயின விடத்து எழுத்தோடு புணர்ந்த சொல் பிறந்ததாயின் மற்றவர் எழுத்தோடு புணர்ந்த சொற்கேட்டல் முன்பினும் தமது செவிக்கு இனிய இன்பமாம் என்றவாறு.
பரிமேலழகர்: செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.

'அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பமாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மழலைச் சொல் கேட்பது காதுக்கு இன்பம்', 'அவர்களது குதலைச் சொல்லைக் கேட்டல் அவர் செவிக்கு இன்பம் பயக்கும்.', 'அவர்கள் மழலைச் சொல்லைக் கேட்டல் செவிக்கு இன்பம் தரும்', 'தாம் பெற்ற குழந்தைகளின் பேச்சைக் கேட்பது காதுக்கு இன்பமளிக்கும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பின்னும் அவர் சொல்லைக் கேட்பது காதுக்கு இன்பமாம் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
தமது உடம்பில் சாய்ந்து உரைக்கும் குழந்தைகளின் குதலை மொழி கேட்பது உடம்பிற்கும் செவிக்கும் இன்பம் தரும் என்னும் பாடல்.

மக்கள்மெய் தீண்டல் உடலுக்கு இன்பம் தரும்; பின்னும் அவர் சொல்லைக் கேட்பது காதுக்கு இன்பம் என்பது பாடலின் பொருள்.
'மக்கள் மெய்தீண்டல்' என்றால் என்ன?

மெய் என்ற சொல் உடல் என்ற பொருளைக் குறிக்கும்.
தீண்டல் என்பதற்குத் தொடுதல் என்பது பொருள்.

குழந்தைகளைத் தொடுகை அல்லது குழந்தைகள் தம்மேலணைதல் பெற்றோர்களது உடலுக்கு இன்பமாகும்; பிள்ளைகளின் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாகும்.

முந்தைய குறளான ...சிறுகை அளாவிய கூழ்(குறள் 64) என்பதில் காட்டியது போல் இங்கும் இன்னொரு காட்சி படைக்கப்படுகிறது.
தத்தித் தளர்நடையிட்டு தாய் தந்தையரைத் தேடிவரும் குழந்தை அவர்களைக் கண்டதும் தன் மெல்லிய பூவுடலை அவர்கள் மெய்யுடன் சார்ந்து ஏதோ சொல்ல முனைகிறது. பெற்றோர் அச்சொற்களின் மீது முழு மனம் செலுத்தி வேட்கையுடன் கேட்கின்றனர். குழந்தையின் இச்செயல்கள் அவர்களைப் பேருவகை கொள்ள வைக்கிறது. தம் பிள்ளையைக் கட்டித் தழுவிக் அதனுடன் கொஞ்சிப் பேசுகின்றனர். குழந்தை உடல் பட்டவுடன் பெற்றவர்கள் மெய் சிலிர்க்கிறது; மழலைப் பேச்சைக் செவிகுளிரக் கேட்டு இன்புறுகின்றனர்.

தம் மக்களால் பெற்றோர் பெறும் ஊற்றின்பமும் செவியின்பமும் கூறப்பட்டன. மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் என 'உடல்', 'மெய்' என்ற ஒரு பொருள் இருசொற் பெய்யப்பட்ட பாடல் இது. குழந்தைகளின் குதலை உரை தாய் தந்தையரை மகிழ்விப்பதும் சொல்லப்பட்டது.
பெற்றோர் குழந்தைகளை அரவணைப்பது அதற்குப் பாதுகாப்பு உணர்வை அளிக்கும் என்று உளநூல் அறிஞர் கூறுவர். குழந்தைகளும் பெற்றோர் பண்பாட்டில் சிறப்புடன் வளர்வதற்கும் இது துணை செய்யும் என்பர். மக்களின் சொற்களைக் கேட்பதின் மூலம் குழந்தைகளிடத்தில் தன்னம்பிக்கையயும் பேசும் ஆறறலையும் வளர்க்கலாம். குழந்தைகளிடத்து முழுக் கவனத்தையும் செலுத்துதல் இன்பம் பயப்பது மட்டுமல்லாமல், அது அவர்களின் வளர்ச்சிக்கும் நல்லது.

'மக்கள் மெய்தீண்டல்' என்றால் என்ன?

இத்தொடர்க்குக் குழந்தைகள் தம் பெற்றோர் உடம்பினைச் சார்தல் என்றும், பெற்றவர் தம் மக்களது உடலைத் தொடுதல் என்றும் இருவகையாகப் பொருள் கொள்ளலாம்.

குழந்தைகள்-பெற்றோர் உறவு ஒவ்வொரு பருவத்திலும் வேறு வேறுவிதமாக இருக்கும். தவழும் குழந்தையை வாரிஎடுத்து அணைத்து மகிழ்வர் பெற்றவர்கள். அதற்கு அடுத்த பருவத்தில் தளர்நடை நடந்து வரும் குழந்தைகள் அவர்களாகவே தாய் தந்தையரைத் தேடிவந்து தீண்டி இன்பம் தருவர். இன்னும் வருகிற பருவங்களில் மகிழ்ச்சியின் நிலை வேறுசூழலில் இருக்கும். வள்ளுவர் முதல் இருவகை இன்பத்தையும் எண்ண வைப்பவராகத் தொகைச் சொல்லால் கூறியுள்ளார். ஆனாலும் 'அவர் சொற்கேட்டல்' என்ற அடுத்த தொடர் பிள்ளைகளின் சொல்லைப் பெற்றோர் கேட்பதையே குறிப்பதாகும். இதையும் இணைத்து நோக்கும்போது இக்குறளில் தளிர்நடைப் பருவத்துக் குழந்தையை மனதில் இருத்தியே பாடல் யாக்கப்பட்டது என அறியலாம்.

தமது மக்கள் தம் உடம்பைச் சார்தல் உடலுக்கு இன்பம் தரும்; பின்னும் அவர் சொல்லைக் கேட்பது காதுக்கு இன்பம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தளிர்நடைக் குழந்தைகள் பெற்றோரை மெய்சிலிர்க்கவைப்பது பற்றிய புதல்வரைப் பெறுதல் பாடல்.

பொழிப்பு

தம் குழந்தைகள் மெய் தீண்டுவது உடம்புக்கு இன்பம்; அவர்களின் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம்