இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0063



தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்

(அதிகாரம்:மக்கட்பேறு குறள் எண்:63)

பொழிப்பு (மு வரதராசன்): தம் மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

மணக்குடவர் உரை: தம்முடைய பொருளென்று சொல்லுவர் உலகத்தார் தம்மக்களை: அம்மக்களுடைய பொருள் தத்தமுடைய வினையோடே கூடவருதலான்.

பரிமேலழகர் உரை: தம் மக்கள் தம் பொருள் என்ப - தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அவர் பொருள் தம் தம் வினையான் வரும் - அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான்.
('தம்தம் வினை' என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, 'முருகனது குறிஞ்சிநிலம்' என்புழிப் போல உரிமைப் பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப் 'பொருள்' என உபசரித்தார். இவை இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது.)

சிற்பி பாலசுப்பிரமணியம் உரை: பெற்றோர்க்குச் செல்வம் பிள்ளைகளே. அப்பிள்ளைகளுக்கு உரிய செல்வம் அவர்களின் நற்செயல்களால்தான் உருவாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தம் மக்கள் தம்பொருள் என்ப; அவர்பொருள் தம்தம் வினையான் வரும்.

பதவுரை: தம்-தமது; பொருள்-உடைமை; என்ப-என்று சொல்லுவர்; தம்-தமது; மக்கள்-புதல்வர்; அவர்-முற்குறிப்பிட்டவர்; பொருள்-சொத்து, செல்வம்; தம்தம்-அவரவர்; வினையான்-செயலால்; வரும்-சேரும், உண்டாகும்.


தம்பொருள் என்பதம் மக்கள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்முடைய பொருளென்று சொல்லுவர் உலகத்தார் தம்மக்களை:
பரிப்பெருமாள்: தம்முடைய பொருளென்று சொல்லுவர் உலகத்தார் தம்மக்களை:
பரிதி: தமக்கு அழியாத உடைமையாவர் புதல்வர்;
காலிங்கர்: குணச்செல்வம் குலச்செல்வம் பொருட்செல்வம் செவிச்செல்வம் என்றிவை முதலாக உலகத்து எண்ணிவருகின்ற செல்வங்கள் அனைத்தினும் இனிய செல்வமாவது அறிவுடைய புதல்வரைப் பெறுதல்;
பரிமேலழகர்: தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்;

'தம்மக்களை தம்முடைய பொருள் என்று சொல்வர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இப்பகுதியிலுள்ள பொருள் என்ற சொல்லுக்கு பரிதி 'அழியாத உடைமை' என அடைதந்து தம்பொருள் தம்மக்கள் என்பதைத் தமக்கு அழியாத உடைமையாவர் புதல்வர் என விளக்குவார். 'குணச்செல்வம் குலச்செல்வம் பொருட்செல்வம் செவிச்செல்வம் என்றிவை முதலாக உலகத்து எண்ணிவருகின்ற செல்வங்கள் அனைத்தினும் இனிய செல்வமாவது அறிவுடைய புதல்வரைப் பெறுதல்' என்று இப்பகுதிக்கு விரிவான உரை வரைந்தார் காலிங்கர். யார் சொல்வர் என்பதற்கு மணக்குடவர் உலகத்தார் என்றும் பரிமேலழகர் அறிந்தோர் என்றும் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குழந்தைகளே பெற்றோரின் பொருளாவார்', 'தம் மக்களைத் தம்பொருள் என்று சொல்வார்கள்', 'மனிதர் தம்முடைய குழந்தைகளைத் தமது அருமையான உடைமை (அல்லது செல்வம்) என்று கூறுவர்', 'தம் மக்களைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர்' என்ற பொருளில் உரை தந்தனர்.

உலகோர் தம்மக்களைத் தம்முடைய உடைமை என்று சொல்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

அவர்பொருள் தம்தம் வினையான் வரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அம்மக்களுடைய பொருள் தத்தமுடைய வினையோடே கூடவருதலான்.
பரிப்பெருமாள்: அம்மக்களுடைய பொருள் தத்தமுடைய வினையோடே கூடவருதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மக்களுக்கு உண்டான பொருளும் தமக்கு உண்டான பொருளோடு ஒத்த இயல்பிற்றால் இம்மை மறுமைக்கன் இன்பம் பயத்தலின், பொருளாவாரும் மக்கள் என்று கூறிற்று.
பரிதி: அந்தப் புதல்வர் என்னும் பேறு தாம்தாம் செய்த விதிவசத்தால் வரும் என்றவாறு.
காலிங்கர்: புதல்வர்க்குச் செல்வமாவது பெரிய தகையாகிய தவத்தினால் வருவது என்றவாறு.
பரிமேலழகர்: அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான்.
பரிமேலழகர் குறிப்புரை: 'தம்தம் வினை' என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, 'முருகனது குறிஞ்சிநிலம்' என்புழிப் போல உரிமைப் பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப் 'பொருள்' என உபசரித்தார். இவை இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது.

அவர்பொருள் என்றதற்கு மணக்குடவர் அம்மக்களுடைய பொருள் என்று கூற காலிங்கர் புதல்வர்க்குச் செல்வம் என்றார். பரிமேலழகர் புதல்வர் செய்த பொருள் என்று உரை தருகிறார். இப்பகுதிக்கு மணக்குடவர் தம் மக்களுடைய பொருள் அவர்களது வினையால் வரும் என்கிறார். பரிதி மக்கட்பேறு தாம் செய்த விதிவசத்தால் வரும் என்றார். காலிங்கர் மக்களது செல்வம் அவர்களது தவத்தினால் வரும் என்று உரை செய்கிறார். பரிமேலழகர் மக்கள் செய்த பொருள் தம்மை நோக்கி வரும் என்று உரைக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம் நல்வினையால் குழந்தைகள் பிறத்தலின்', 'பெற்றோரின் செல்வமாகிய மக்கட்பேறு அவரவர் செயல்களுக்கேற்ப உண்டாகும் ('மனந்தூயார்க்கு எச்சம் நன்றாகும்' என்பது கருத்து)', 'அவரவர்கள் செல்வம் தாம் செய்யும் நல்வினையால் ஏற்படுவது', 'அம்மக்களின் புகழ் தம்மை நோக்கி அவர் செய்யும் நற்கடமையால் தம்பால் வந்து சேரும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அம்மக்களுடைய செல்வம் அவரவர் செயல்திறனால் வரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலகோர் தம்மக்களைத் தம்முடைய உடைமை என்று சொல்வர்; அவர்பொருள் தம்தம் வினையான் வரும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

பிள்ளைகள் அவரவர் காலில் நிற்கப் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்பதை அறிவுறுத்தும் பாடல்.

உலகத்தார் தமது உடைமை என்று சொல்லிப் பெருமை கொள்ளக்கூடியது அவரது பிள்ளைகள்தாம் என்று சொல்வர்; அப்பிள்ளைகளுடைய செல்வம் அவரவரது வினைமுயற்சியால் பெறப்படும்.
பெற்ற குழந்தைகளை மக்கள் என்று கூறுவது வழக்கு.
நல்வாழ்வுக்கு ஆக்கம் தருவது பொருள் என்று அறியப்படும். இங்கு அச்சொல் உடைமை (சொத்து), செல்வம் என்ற பொருள்களில் ஆளப்பட்டுள்ளது. செல்வங்கள் அனைத்திலும் இனிய செல்வம் தாம் பெற்ற குழந்தைகளே; தம் மக்களைத் தமது அரிய உடைமைகள் என்று பெற்றோர்கள் கூறிப் பெருமை கொள்வர், பெற்றோர்க்குப் பிள்ளை செல்வம் போல்வான் ஆதலால், பெற்றோர் தம்குழந்தையைக் கட்டியணைத்து, 'என் கண்ணே, மணியே, என் செல்வமே' என்று கொஞ்சுவதை எங்கும் காணலாம்.
இவ்வாறாகப் பாடலின் 'தம்பொருள் என்ப தம்மக்கள்' என்ற முற்பகுதியின் பொருள்: தம் பொருள் என்று பெருமையாகச் சொல்லப்படுவது தம் மக்களே என்பதாகிறது. வருங்காலத்தில் தம் மக்கள் தமக்குச் செய்யக்கூடிய நன்மையை எள்ளளவும் எதிர்நோக்காதே, தம் மக்களைத் தம் செல்வமென்று பெற்றோர் பாராட்டுவர்.
குறளின் பிற்பகுதியிலுள்ள 'பொருள்' என்னும் சொல் செல்வம் என்றும் 'வினை' என்ற சொல் செயல் என்றும் பொருள்படுவன. 'அவர்' என்ற சொல் பிள்ளைகளைக் குறித்தது. எனவே பாடலின் இறுதிப்பகுதி 'அம்மக்களது அதாவது பிள்ளைகளது செல்வம் அவர்கள் வினைமுயற்சியால் உண்டாவது' என்ற கருத்தைத் தரும். பிள்ளைகள் அவரவர் செயற்பாடுகளின் மூலம் முயற்சி செய்து வருந்திப் பொருள் சேர்க்கவேண்டும்; பெற்றோரின் பொருளை நம்பி வாழ்தல் கூடாது என்பது செய்தி.

முந்தைய இரண்டு குறள்களில் தம் மக்கள் அறிவார்ந்தும், நல்ல குணங்களுடனும் விளங்கவேண்டும் என்று கூறிய பின் இங்கு அவர்கள் செயல்திறன் மிக்கவர்களாகவும் திகழவேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

பாடலின் முதற்பகுதி தெளிவாக உள்ளது; ஆனால் பிற்பகுதி மயக்கம் தருவதாக உள்ளது. இறுதிப்பகுதியிலுள்ள 'அவர்பொருள்', 'வினையான்' என்பனவற்றை விளக்குவதில் கருத்து மாறுபாடுகள் உண்டாயின. இரண்டு பகுதிகளையும் இயைபுபடுத்துவதில் பெரும் வேறுபாடுகள் எழுந்தன. 'அவர் பொருள் தந்தம் வினையான் வரும்' என்ற பின்பகுதி ‘தம்பொருள் என்ப தம் மக்கள்’ என்பதற்குக் காரணமாக அமையவேண்டும் என்பதாக குறட்போக்கு காணப்படுகிறது எனக்கூறி அக்கோணத்தில் பாடலின் கருத்தை விளக்குவதிலும் இடர் உண்டாயிற்று.

'அவர் பொருள்' என்பது பிள்ளைகள் பொருளா அல்லது பெற்றோர் பொருளா? 'அவர்பொருள்' என்பதற்கு மக்களின் பொருள் என்று சிலரும், பெற்றோர் பொருள் என்று வேறு சிலரும் பொருள் கண்டனர். மக்களின் பொருள் எனக் கொண்டவர்கள், 'மக்கள் ஈட்டிய செல்வத்தைத் தன் வினைப் பயனால் பெற்றோர் துய்ப்பர்', 'அம்மக்களின் மகச்செல்வம் அவரவர் வினைக் கேற்றவாறு வரும்' 'தமக்குத் தம்மக்கள் பொருளாதல் போல, மக்களின் பொருள் நன்மகப்பேறு; அது அவர்கள் செய்த வினைவயத்தான் வரும்', 'பிள்ளைகளின் பொருள் அவரவர் தவத்திற்கு ஏற்ப அமையும்'. 'நன்மக்கட்பேறு தாய் தந்தையரின் நன்னடக்கையைப் பொறுத்து நிற்றலான் அவர் பொருள் தத்தம் வினையால் வரும்' என்றபடி பிற்பகுதிக்கு உரை எழுதினர். பெற்றோர் பொருள் அதாவது மக்களாகிய செல்வம் எனக் கொண்டவர்கள் 'மக்கட்பேறு முன்வினைப் பயனால் பெற்றோர்க்கு வாய்க்கும்', 'மக்கட்பேறானது பெற்றோர்தம் நன்னடத்தையைப் பொறுத்து இப்பிறப்பில் அமையும்' என்று உரைத்தனர். இவற்றில் 'அவர் பொருள்' என்பது மக்களது அதாவது பிள்ளைகளது பொருள் என்பதே இங்கு பொருந்தும்.

'வினை' என்ற சொல் முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயனைச் சுட்டுகிறதா அல்லது இச்சொல் 'செயற்பாடு' என்று பொருள்படுகிறதா? இவ்வேறுபாட்டாலே குறட்கருத்து பலவாறாக உரைக்கப்பட்டது. 'வினை' என்ற சொல்லுக்கு சமயக்கருத்தான வினைப்பயன் என்று பொருள் கொண்டு உரைத்தனர் பலரும். இவர்களது உரைகள் பெரும்பாலும் நன்மக்கட்பேற்றிற்கு முற்பிறவிகளில் நல்வினைகள் செய்திருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் எழுந்தன. ஒருவர் செய்யும் நல்வினைகளால் அவர் மக்கட்பேறு பெறுவது மட்டுமல்ல அம்மக்களுக்குச் செல்வம் முதலிய நற்பேறுகளும் அந்நல்வினைகளால் உண்டாகும் என்றனர். 'பிள்ளைகள் உளராதலும் இலராதலும்; நல்ல பிள்ளைகள் உளராதலும் தீய பிள்ளைகள் உளராதலும் அவரவர் வினைகளின் பயன்களேயாம்' என்று கூறினர். அப்படித் தம் நல்வினையால் குழந்தைகள் பிறத்தலின், வினைப்பயனால், தம் மக்கள் ஈட்டும் பொருள் பெற்றோரின் துய்ப்புக்குரியன என்று உரைத்தனர். 'அந்தப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையாலே தம்பால் வந்தடையும்' என்ற பரிமேலழகர் உரை பேரன் பேத்திகளைக் குறித்து 'திதி' சடங்குமுறையையும் சுட்டிச் செல்கிறது.
வினைப்பயன் அதாவது முற்பிறப்பிலோ இப்பிறப்பிலோ நல்வினை செய்தால்தான் மக்கட்பேறு உண்டாகும் என்பதை ஏற்காதவர்கள், 'வினை'' என்பதை 'கர்மாவின்' பயன் என்று கருதாது 'செயல்' என்னும் பொருளில் உரை செய்தனர். இவர்கள் 'பிள்ளைகளது பொருட்செல்வம் அவரவர்தம் வினைமுயற்சிகளுக்கு ஏற்ப வரும்' என்று பொருள் கொண்டனர். கு ச ஆனந்தன் 'அவர்பொருள் தம்தம் வினையான் வரும்' என்ற தொடர்க்கு 'அம்மக்களுடைய பொருளோ அவரவர் செயல்களால் (தொழில்களால்) வரும்' என்று உரை செய்தார். குழந்தைகட்குச் செல்வம் பெற்றோர் தேடி வைக்கும் பொருளன்று; அவரவருடைய வினைத் திறத்தான் ஈட்டும் செல்வமேயாகும் என்ற கருத்து துலங்கும்படி சி இலக்குவனார் உரை தந்தார். தமிழண்ணல் 'அவர்தம் பொருட்செல்வம் அவரவர்தம் வினைமுயற்சிகளுக்கு ஏற்ப வரும்' என விளக்கம் தந்தார்.

இங்ஙனம் இருதிறமான கருத்துக்கள் கிடைக்கின்றன.
'பெற்றோர்க்குத் தம் முற்பிறவியின் நல்வினைகளால் பிள்ளைப் பேறுகள் கிடைத்தன; பிள்ளைகளது பேறு அவரவர் வினைப்பயன்களால் வரும் என்பது ஒன்று.
மற்றொன்று: 'பெற்றோர்க்குத் தம் பிள்ளைகளே நல்லுடைமையாம்; பிள்ளைகளது செல்வம் அவரவர்களது செயல்திறனால் உண்டாகும்' என்பது.
இரண்டாம் வகையான கருத்து மக்கள் தங்கள் கால்களிலேயே ஊன்றி நிற்கவேண்டும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது, இவ்வதிகாரத்து முதல் பாடல் 'அறிவறிந்த மக்களை'ப் பெறும் நற்பேறு பற்றிக் கூறியது. இரண்டாவது பாடலில் 'குணம் கொண்ட பிள்ளைகள் வேண்டும்' என்று சொல்லப்பட்டது. இங்கு 'தம் பிள்ளைகள் பெற்றோரைச் சாராமல் தாமே இவ்வுலகில் வாழவேண்டும்' என்பது கூறப்படுகிறது. பிள்ளைகள் தங்களுக்கு வேண்டிய செல்வத்தை தங்களது சொந்த முயற்சியில் ஈட்டுவர்; அவர்கள் தத்தம் வினைசெய்யும் திறமையால் முன்னேறி பொருள் தேடி வாழ்வர். பெற்றோரோ முன்னோரோ சேர்த்துவைத்த பொருட்செல்வத்தில் வாழ்தல் அவர்களுக்குப் பெருமையாகாது.
பிள்ளைகளது செல்வம் அவர்களது தொழில்களால்/செயல் திறனால் வரும் அல்லது வரவேண்டும் என்ற இரண்டாவது பொருளே நன்றாகிறது.

மக்கட்பேறானது பெற்றோர் தம் நன்னடத்தயைப் பொறுத்து இப்பிறப்பில் அமையும் என உரைப்பதினும் மக்கட்பேறு என்பது கடவுளது அருட்பேறு எனக் கொள்வது சிறக்கும். அம்மக்களுடைய பொருளோ அவரவர் செயல்களால் -தொழில்களால் வரும். அப்பொருள் வழிமுறைச் சொத்தாகச் செல்லாது. பெற்றவரிடமிருந்து பெறுவது அல்ல, (அம்மக்களுடைய) பொருள். அவரவர் (தத்தம்) செயல்களால்-செய் தொழில்களால் வரக்கூடியது.
மக்களைச் செல்லம் கொடுத்து வளர்த்து அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படாமல் செய்துவிடாதீர்கள் என்பது இங்கு சொல்லப்படும் அறிவுரை. அவர்கள் தம் பொருள் என்ற பெருமிதம் உண்டென்றாலும் அவர்களது பொருளை அவர்களே படைக்குமாறு வளர்க்கவேண்டும் என்பது கருத்து.

பெற்றோர்க்குத் தம் பிள்ளைகளே நல்ல உடைமையாம்; அவர்பொருள் அவர்கள் உழைப்பாலே வர வேண்டும். இது இக்குறள் தரும் செய்தி

உலகோர் தம்மக்களைத் தம்முடைய உடைமை என்று சொல்வர்; அம்மக்களுடைய செல்வம் அவரவர் செயல்திறனால் வரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நன் மக்கட்பேறு என்பது பெற்றவர் பொருளை எதிர்பார்த்து நிற்காது.

பொழிப்பு

தம் மக்களைத் தம் உடைமை என்று சொல்வார்கள்; அம்மக்களது செல்வம் அவரவர்தம் வினைமுயற்சியால் பெறப்படும்.