இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0062எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

(அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:62)

பொழிப்பு: பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

மணக்குடவர் உரை: எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.

பரிமேலழகர் உரை: எழுபிறப்பும் தீயவை தீண்டா - வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா; பழி பிறங்காப் பண்பு உடை மக்கட்பெறின் - பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின்.
('அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான் ஆயின்' என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: 'ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து' தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின், 'பண்பு' என்னும் காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது.)

இரா சாரங்கபாணி உரை: பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய மக்களை ஒருவன் பெறுவானாயின், அவனுக்கு ஏழு பிறப்பிலும் துன்பங்கள் நெருங்கா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.


எழுபிறப்பும் தீயவை தீண்டா:
பதவுரை: எழு-ஏழுவகையாகிய; பிறப்பும்-தோற்றமும்; தீயவை-துன்பங்கள்; தீண்டா-சென்றடையா.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா:
பரிப்பெருமாள் கருத்துரை: அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் பயக்கும் என்பார் முற்பட தீயவை தீண்டா என்று கூறினார். அன்றியும் தன்னளவும் பிறந்த முன்புள்ள எழுவர்க்கும் எனினும் அமையும்.
பரிதி: தேவர், மனிதர், மிருகம், ஊர்வன, நீர்வாழ்வன, பட்சி, தாவரம் என்னும் எழுபிறப்பிற் சென்றாலும் ஏழுநரகத்திற் சென்றாலும் துன்பம் வராது;
பரிமேலழகர்: வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா;

'ஏழு பிறப்புக்களிலும் துன்பங்கள் சென்றடையா' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர். பரிதி ஏழு பிறவிகள் எவை எனச் சொல்கிறார். இவர் பிறப்பு என்பதற்குப் பிறவி, நரகம் என இருபொருள் கூறுகிறார். பரிப்பெருமாள் உரை பின்புள்ள எழுவர்க்கும் அல்லது முன்புள்ள எழுவர்க்கும் என்றமைகிறது.

இன்றைய ஆசிரியர்கள் 'பெற்றோரை எப்பிறவியும் தீயவை நெருங்கா', 'ஒருவனை எழுவகைப் பிறப்பிலுந் துன்பங்கள் (சென்று) அடையமாட்டா', 'பிறப்பின் ஏழு பருவங்களிலும் துன்பங்கள் நெருங்கா', 'தாய் தந்தையர் அவர்களுடைய அடுத்த ஏழு பிறப்புகளிலும்கூடத் துன்பம் இல்லாதவர்களாக இருப்பார்கள்' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஏழு பிறப்புகளிலும் துன்பம் நெருங்கா என்பது இத்தொடரின் பொருள்.

பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்:
பதவுரை: பழி-பழிக்கப்படுதல்; பிறங்கா-உண்டாகாத; பண்புடை-குணமுடைய; மக்கள்-புதல்வர்; பெறின்-அடைந்தால்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.
பரிதி: நல்ல புத்திரனைப் பெற்றவர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின்.
பரிமேலழகர் விரிவுரை: 'அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான் ஆயின்' என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: 'ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து' தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின், 'பண்பு' என்னும் காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது.

'பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவாராயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பழியில்லாப் பண்புக் குழந்தைகளைப் பெற்றால்', 'பழிப்பிறங்கிடமில்லாத நற்குணங்களையுடைய குழந்தைகளை பெறுவானாயின்', 'பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களையுடைய மக்களைப் பெற்றால்', 'பழி பாவங்களுக்கு ஆளாகிவிடாத நல்ல குணமுடைய மக்களைப் பெற்றால்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பழி உண்டாகாத பண்புள்ள மக்களைப் பெற்றாரனால் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
குழந்தைகள் பண்புள்ளவர்களாக வளர்க்கப்பட்டால் பெற்றோருக்கு தீமைகள் நேரா என்று சொல்லும் பாடல்.

பழி உண்டாகாத பண்புள்ள மக்களைப் பெற்றாரானால், எழுபிறப்பும் துன்பம் நெருங்கா என்பது பாடலின் பொருள்.
'எழுபிறப்பும்' என்றால் என்ன?

தீயவை என்ற சொல் தீமைகள் குறித்தது.
தீண்டா என்பதற்கு நெருங்கா என்பது பொருள்.
பழிபிறங்கா என்றது பழிப்புக்கு ஆளாகாத என்ற பொருள் தரும்.

தாய் தந்தையர் கடமையான குழந்தை வளர்ப்புமுறையைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறள் என்பது தெளிவு. நல்ல பிள்ளைகளாக வளர்த்துக் கொண்டுவருதல் பெற்றோர் பொறுப்பாகும்.
அறிவார்ந்த பிள்ளைகளாக அமைவது பெரும்பேறு என்று முந்தைய பாடலில் (குறள் 61) கூறப்பட்டது. இங்கு பண்புள்ள மக்களைப் பெற்றவர்களைத் தீமைகள் வந்து சேரா என்று சொல்லப்படுகிறது.
எப்படி பிறக்கும் பொழுதே அறிவுடையராகப் பிறக்கமுடியாதோ அப்படியே பண்பாளராகவும் பிள்ளைகள் பிறப்பதில்லை; குழந்தைகள் பண்பு கொண்டவர்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பது இங்கு சொல்லப்படுகிறது.

நன்மக்கட்பேறு தீயவை தீண்டாதவாறு தாய் தந்தையரை ஏழ் வகைப் பிறவிக்கும் காக்கும் என்கிறது இக்குறள்.
நன்மக்களைப் பெறுதற்கும் பெற்றோரைத் தீமைகள் தீண்டாமைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.
(நாலடியார் 197)
(பொருள்: கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை, அதன் விழுது அதனைத் தாங்கும் வன்மையுடையதாய் ஊன்றி நின்றாற்போல, தன் தந்தையினிடத்தில் தளர்ச்சி தோன்றினால், அவன் பெற்றெடுத்த மகன் பாதுகாக்க அது நீங்கும்) என்று நாலடியார் கூறுவது போல, நடைமுறையிலும் பெற்றோர் உறும் தீங்கு தேயும் என்பது சாத்தியமே.
தீயவை தீண்டல் ஊழால் வருவது; பண்புநலமிக்க பிள்ளைகளால் இப்பிறப்பிலே பெற்றோருக்கு ஒரு தீமையும் நடவாது என்பது அறிய வேண்டிய கருத்து.

'கற்பென்னும் திண்மையுண்டாகப் பெறின்;, 'பண்புடை மக்கட்பெறின்' என்பன எல்லாம் இவற்றையாக்கிக் கொள்ளுதற்குரிய பெரு முயற்சியைக் குறித்து நின்றன என்பார் மு கோவிந்தசாமி. தம் மக்கள் பண்புடையவர்களாக விளங்க பெற்றோர் பெருமுயற்சி கொள்ளல் வேண்டும் என்பதுவே செய்தி.

'எழுபிறப்பும்' என்றால் என்ன?

எழுபிறப்பு என்பதற்கு ஏழு பிறப்பு என்பது பொருள். எழுபிறப்பு என்பது எழுவகைப் பிறப்பைக் குறிக்கும். இது செடிகொடிகள், ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, விலங்கு, மானுடர், தேவர் என்பனவற்றைக் குறிக்கும் என்பர்.
எழுபிறப்பு என்பதற்கு இனிவரும் பிறப்பு அதாவது இனி உண்டாகப்போகிற பிறவி என்று பொருள் கூறுவோரும் உண்டு. இனிவரும் பிறப்பு அல்லது எழுந்த பிறப்பு என்றாலும் இரண்டுமே பிறப்பு-இறப்புத் தொடர்கள் அதாவது மறுபிறவி, பலபிறவி, பற்றிக் கூறும் சமயக்கருத்து பற்றியது ஆகும். ஒருவர் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு பல பிறவிகள் உண்டு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உண்டானது.
வள்ளுவர் கூறியது சமயக் கருத்து என்பதை உடன்படாதவர்கள் எழுபிறப்பு என்பது வழிவழிப் பிறப்பு, பல தலைமுறை, ஏழு பரம்பரை, என்னும் விளக்கங்களைக் கூறுவர். இவையனைத்தும் அடுத்தடுத்த தலைமுறையையே குறிக்கும். அதாவது இன்னொருவகையில் மறுபிறப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாகிறது.
'ஒரு வமிசத்தில் ஒருவன் நல்ல பிள்ளைகளைப் பெற்றால் அவ்வமிசத்தில் முன்னேழு, பின்னேழு, நடுவேழு என்னும் இருபத்தொரு தலைமுறையார்க்கும் தீவினைகள் தொடரா' என்றும் உரை செய்தனர்.
எழு பிறப்பு என்பதற்கு 'ஒரு பிறப்பிலேயே அடையும் ஏழு வகை (ஏழு பருவங்கள்) மாற்றங்கள் என்று கருதலாம்' எனவும் பொருள் கூறினர். ஆனால் பருவமும் பிறப்பும் வெவ்வேறானவை ஆகும் என்பது எளிதில் புரிந்துகொள்ளப்படும்.
>வ சுப மாணிக்கம் எழுபிறவி என்பதற்கு எப்பிறவியாயினும் எனப் பொருள்கொண்டார்.
புலவர் குழந்தை 'நாலைந்து எடு, ஏழெட்டுப்பேர்' என்னும் வழக்குப் போல எழுமை என்னும் எண்ணுப் பெயரைப் பல என்னும் பொருளிலேயே ஆளுகின்றார் வள்ளுவர் என்றார்.

எழுபிறப்பு என்பது, மேலே சொல்லப்பட்ட, மரபு வழி வந்த ஏழு பிறவிகள் பற்றிய எண்ணத்தை அறிவிப்பது என்பது பொதுவான கருத்து.
"'எழு பிறப்பு' 'எழுமை' என்ற நம்பிக்கை நெடுங்காலமாகத் தமிழ் மக்களுக்குள் பழக்கதிலிருந்து வருகிற பதங்கள். பாவ புண்ணியங்களின் பலன்களை நினைப்பூட்ட வேண்டிய சந்தர்ப்பங்களிலெல்லாம் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அதனால்தான் பாமர மக்களும் 'ஏழு பிறப்புகள்' என்பது என்ன என்ற ஆராய்ச்சி இல்லாமலேயே நல்வினை தீவினை என்பவைகளையும் மறுபிறப்புகளையும் நம்பி நடக்கிறார்கள்" என்பது சி இலக்குவனார் கருத்துரை.

மறுபிறவி உண்டெனக் கொண்டாலும், ஒரு பிறப்பில் நிகழ்ந்தன பற்றி மறு பிறப்பில் எவரும் அறிதல் இல்லை. ஒருவர் இறந்தபின் உண்டாகும் பிறப்புகளில் என்ன நடக்கும் என்பதையும் ஒருவர் அறியமுடியாது.
எழுவகைப் பிறப்பில் வள்ளுவர்க்கு உறுதியில்லை என்று கூற இயலாது. எனினும் இக்குறளில் ஏழ் பிறப்பு என்றது உயர்வு நவிற்சியாகவே, நீண்ட காலத்தைக் குறிப்பதற்காக, என்பது எளிதில் புலப்படும். நன்மக்களைப் பெறுவதின் நன்மையை எழுபிறப்புகளிலும் துன்பங்கள் நெருங்காது என்ற கருத்தை வலியுறுத்துவதற்கு அது மிகைப்படுத்திக் கூறப்பட்டது.
உலகவழக்கு நோக்கி ஏழு பரம்பரை அல்லது தலைமுறையை இத்தொடர் குறிக்கும் எனக் கொள்ளலாம்.

பழி உண்டாகாத பண்புள்ள மக்களைப் பெற்றாரானால், ஏழு பிறப்புகளிலும் துன்பம் நெருங்கா என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நல்ல புதல்வரைப் பெறுதல் பெற்றோரை நீண்ட நெடிய காலம் துன்புறாமல் காக்கும் என்னும் பாடல்.

பொழிப்பு

பழிக்கப்படாத பண்புள்ள மக்களைப் பெற்றாருக்கு ஏழு பிறப்பிலும் துன்பங்கள் நெருங்கா.