இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0060மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:60)

பொழிப்பு: இல்லறத்தின் பெருமையை மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.

பரிமேலழகர் உரை: மங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை.
('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: இல்லறத்தின் பெருமையே ஒருவனுக்கு நன்மை தருவது. அவ்வில்லறத்தின் அணிகலன் போன்றது நல்ல மக்களைப் பெறுதல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு.


மங்கலம் என்ப மனைமாட்சி:
பதவுரை: மங்கலம்-பொலிவு; என்ப-என்று சொல்லுவர்; மனை-இல்லறம்; மாட்சி-பெருமை.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை;
பரிதி: பதிவிரதைக்கு அழகாவது இல்லறம் நடத்தல்;
காலிங்கர்: வாழ்க்கைத்துணைக்கு நன்மையாவது, கற்பினால் மாட்சிமை பெறுதல்;
பரிமேலழகர்: ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை;
பரிமேலழகர் குறிப்புரை: 'அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது.

'மனைவி ஒழுக்கமுடையளாதல் கணவனுக்கு அழகு என்பர்' என்று மணக்குடவரும், 'கற்புடைய மனைவிக்கு அழகாவது இல்லறம் நடத்தல்' என்று பரிதியும், 'கற்பினால் மாட்சிமை பெறுதல் வாழ்க்கைத் துணைக்கு நன்மை' என்று காலிங்கரும் 'மனையாளது நற்குண நற்செய்கை கணவனுக்கு நன்மை என்று சொல்வர்' என்று பரிமேலழகரும் இத்தொடர்க்கு உரை நல்கினர். யாருக்கு மங்கலம் என்பதிலும் மனைமாட்சி என்பதை விளக்குவதிலும் அனைவரும் வேறுபடுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவியின் பண்பே குடும்பத்துக்கு மங்கலம்', 'இல்லறப் பண்பினை மங்கல அணி (தாலி) என்பர்', 'மனைவியின் மாண்பே வீட்டிற்கு மங்கலமெனப் படுவது என்றும்', 'குடும்பத்துக்கு எல்லா நன்மைகளையும் உண்டாக்கக்கூடிய மங்கலப் பொருள் மனனயாளின் பெருமைதான்' என்ற பொருளில் உரை தந்தனர்.

இல்லறத்திற்கேற்ற மாண்பே குடும்பத்துக்குப் பொலிவு தருவது என்று சொல்வர் என்பது இத்தொடரின் பொருள்.

மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு:
பதவுரை: மற்று-(அசைநிலை); அதன்-அதனுடைய; நன்-நல்ல; கலம்-அணி; நன்-நல்ல; மக்கள்-மக்கள்; பேறு-பெறுதல்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.
பரிதி: அதுவன்றியே அவளுக்கு ஆபரணம் நல்லபுதல்வரைப் பெறுதல் என்றவாறு.
காலிங்கர்: அவர்க்கு அணிகலமாவது, சான்றோரால் மதிக்கப்பட்ட அறிவினையுடைய புதல்வரைப் பெறுதல் என்றவாறு.
பரிமேலழகர்: அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை.
பரிமேலழகர் குறிப்புரை: 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

'நல்ல மக்களைப் பெறுதல் அதற்கு அணிகலன் ஆகும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குழந்தைப் பேறே குடும்பத்தின் நல்லணி', 'அதற்கு நல்ல அணிகலம் நன்மக்களைப் பெறுதல் என்பர்', 'அதன் சிறந்த அணிகலன் நல்ல மக்களைப் பெறுவதென்றும் அறிஞர் சொல்லுவார்கள்', 'அந்தப் பெருமைக்கு அழகு தரும் ஆபரணம் நல்ல மக்களைப் பெறுவதுதான்' என்றபடி பொருள் உரைத்தனர்.

மேலும் அதற்கு அழகு சேர்ப்பது நல்ல மக்களை உருவாக்குவது என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
அதிகாரத்து முடிவுரையாய் அமைந்த இப்பாடல், இல்லாள், இல்வாழ்வான் இருவரும் ஒருவர்க்கொருவர் வாழ்க்கைத் துணையாய் இருந்து மனையறத்துக்கு பொலிவு சேர்த்து நல்ல மக்களை உருவாக்கி அதற்கு அணி சேர்ப்பர் என்கிறது.

இல்லத்து மாண்பே மங்கலம் என்பர்; மேலும் அப்பெருமைக்கு அழகு சேர்ப்பது நல்ல மக்களை உருவாக்குவது என்பது பாடலின் பொருள்.
மங்கலம் என்பது என்ன?

மனைமாட்சி என்றது இல்லறத்தின் மாண்பைக் குறிக்கும்.
நன்கலம் என்பது நல்ல அணிகலன் என்ற பொருள் தரும்.
நன்மக்கட் பேறு என்ற தொடர் நல்ல மக்களைப் பெறுதலைக் குறிக்கும்.

மங்கலம் என்பது என்ன?

மங்கலம் என்ற சொல்லுக்கு அழகு, பொலிவு, நன்மை, நல்வாழ்வு என்ற பொருள்கள் கூறப்பட்டுள்ளன. 'பொலிவு' அல்லது 'என்றும் நீங்காத அழகு' என்பது பொருத்தமான பொருளாகப்படுகிறது. புனிதம் என்று உரைக்கப்பட்ட பொருளும் கொள்ளத்தக்கதே. 'மங்கலம் என்ப மனைமாட்சி' என்ற தொடர் 'இல்லறத்திற்கேற்ற மாண்பு குடும்பத்துக்கு என்றும் நீங்காத பொலிவு' எனப் பொருள்படும்.

வ உ சி., இக்குறளுக்கான உரையில் மங்கலம் என்பது மங்கல நாணைக் குறிக்கும் என்று எழுதினார். மங்கலநாண் தாலி என்றும் அறியப்படும்.
தண்டபாணி தேசிகர் 'மங்கலம் என்பது மகளிர் கழுத்தில் அணியும் மங்கல நாணைக் குறிக்கும்' என்று கூறி 'தாலி மங்கலப் பொருளாக மதிக்கப் பெற்று மங்கலம் என்றே வழங்கப்பட்டது; மனையாளது மாட்சி தாலியாய் உருவகிக்கப்பட்டுள்ளது; இளங்கோ அடிகளும் கம்பரும் தாலியை மங்கலம் என்றே உணர்த்திப் பாடினர்; மங்கல நாண் கணவன் உள்ளவரை கழற்றக் கூடாத அணி; என்றும் பிரியாத நலம் பயக்கும் குணங்கட்குத் தாலியை ஒப்பிட்டதிலிருந்து மகளிர்க்கு அணிக்கெல்லாம் அணியாக இருப்பது தாலியே என்பது கருத்தாதல் தெளியலாம்; மங்கலநாண் போன்றவை மனையாளது நற்குண நற்செய்கைகள்; நன்கலம் போன்றவர் நன்மக்கள் என்று உரை கொள்ளலாம்' என்று விளக்கினார்.
இரா சாரங்கபாணியும் இதே கருத்துடையவர்தாம். அவர் 'மங்கலம் என்பதற்கு உண்டான பல பொருள்களினும்,மங்கல அணியாகிய தாலி எனும் பொருள் பொருந்துவதாகும் என்று சொல்லி, 'பண்புடைமையை அணியாகக் கூறுதல் வள்ளுவர் நெறி. அவ்வகையில் மனைமாட்சியை மங்கல அனியாகக் கொள்ளுதல் பொருந்துவதே. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி... (குறள் 95) ...நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி (குறள் 115) எனப் பிற இடங்களிலும் பண்பினை அணிகலன்களாகக் கூறுதல் நோக்குக' என்றும் கூறுகிறார்.

மங்கலம் யாருக்கு உண்டாகிறது? கணவனுக்கு என்றும் மனைவிக்கு என்றும் இல்லறத்திற்கு என்றும் பலவாறாகக் கூறப்பட்டிருப்பினும், இல்லறத்திற்கு மங்கலம் கிடைக்கிறது என்பது சிறந்ததாகிறது.
மங்கலம் அதாவது குடும்பத்தின் பொலிவு என்பது இல்லறத்தின் மாண்பு பேணப்படுவதைக் குறிக்கும்; அதற்கு மேலும் பெருமை சேர்ப்பது அவர்கள் பெற்று உருவாக்கித் தரும் மக்களே. இல்லறத்தின் நற்குண நற்செய்கைகள் எவ்வாறு மங்கலமாக அமைகிறதோ, அதைப் போலவே, நன்மக்களைப் பெறுதலும் இல்லறத்திற்கு அணிகலன்களாக அமையும் என்பது கூறப்பட்டது.

நலம், வளம், புகழ், தொடர்ச்சி என்னும் குடிமைச் சிறப்பு எல்லாம் நிகழ்வது மனையில்தான். மனையின் அதாவது இல்லத்தின் மாண்பே மனைமாட்சி. ஒழுக்கமுடைய தலைவனும் தலைவியும் இணைந்து கருத்தொருமித்து இன்புற நடத்தும் வாழ்க்கை இல்லத்திற்குப் பெருமை ஆகும். இது மங்கலமானது; புனிதமானது. அவர்கள் அளவில் நின்றுவிடாமல், மக்கட் பேற்றால் அன்பு வளர்கிறது. நன்மக்களே தலைமுறை தொடர்வதற்கான இணைப்பாகி, மனித குலம் தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கவும் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் காரணமாகின்றனர். எனவே மனமாட்சி என்ற பொலிவுக்கு அவர்கள் நல்ல அணிகலனாக அமைகின்றனர்.

இல்லறத்தின் பெருமையே குடும்பத்துக்குப் பொலிவு தருவது என்று சொல்வர்; அப்பெருமைக்கு அழகு சேர்ப்பது நல்ல மக்களை உருவாக்குவது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மனையறம் பேணி தலைமுறை தொடர மக்களைப் பெறுவது புனிதமானது என்னும் வாழ்க்கைத் துணைநலம் பாடல்.

பொழிப்பு

இல்லறத்தின் பெருமையே குடும்பத்துக்குப் பொலிவு தருவது என்று சொல்வர்; மேலும் அதற்கு அழகு சேர்ப்பது நல்ல மக்களை உருவாக்கித் தருவது.