இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0059



புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:59)

பொழிப்பு (மு வரதராசன்): புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

மணக்குடவர் உரை: புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை.
ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.

பரிமேலழகர் உரை: புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை - தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை.
('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: புகழை விரும்பிய மனைவியைப் பெறாதார்க்கு இகழ்ந்து பேசும் பகைவன்முன் காளைபோல் நடந்துசெல்லும் பெருமிதமில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை இல்லை.

பதவுரை: புகழ்-புகழ்; புரிந்த-விரும்பிய; இல்-இல்லாள், இல்லம்; இலோர்க்கு-இல்லாதவர்க்கு; இல்லை-இல்லை; இகழ்வார்முன்-தூற்றிப் பேசுவோர்முன், பழித்துரைப்போர்முன்; ஏறு-ஆண்சிங்கம், காளை; போல்-நிகராக; பீடு-பெருமிதம்; நடை-நடத்தல்.


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு;
பரிப்பெருமாள்: புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு;
பரிதி: இன்னாள் 'பதிவிரதை' என்று சொல்லும் சொல் பெறாத மடவரை மனையாளகவும் உடையான்;
காலிங்கர்: கற்பினால் பெரிதும் புகழ் தங்கப்பட்ட இல்லாளை இல்லாதவற்கு;
பரிமேலழகர்: புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு;
பரிமேலழகர் குறிப்புரை: 'புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது.

'புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவி புகழ் காவாவிடின்', 'பெண்களுக்குப் புகழ் தரும் கற்புக்குணம் இல்லாத பெண்ணை மனைவியாகக் கொண்டுவிட்ட ஒருவனை', 'கற்பினால் வரும் புகழினை விரும்பி நடக்கும் மனையாளில்லாதவருக்கு', 'புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு' என்ற பொருளில் உரை தந்தனர்.

புகழ் விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு என்பது இத்தொடரின் பொருள்.

இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்லையாம் தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை.
மணக்குடவர் குறிப்புரை: ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.
பரிப்பெருமாள்: இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை.
பரிப்பெருமாள் குறிப்புரை: மனையாள் ஒழுக்கக் குறைபாட்டால் அறத்திற்கு வரும் குற்றம் என்ன? என்றார்க்கு, அதனானே தலையிறக்கம் வரும். வந்தாற்பின் வாழ்க்கைத் தருமம் செல்லாது என்பது.
பரிதி: தன்னை வேண்டார் முன்னே 'இன்னார் ரிஷபம் போல திரிகின்றான்' என்று ஏசுதற்கு இடமாவான் என்றவாறு. [வேண்டார்-பகைவர்; ரிஷபம்-காளைமாடு]
காலிங்கர்: இல்லை ஏறுபோன்றுள்ளதோர் பெருமை ஒழுக்கம் என்றவாறு.
பரிமேலழகர்: இல்லை தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை.
பரிமேலழகர் குறிப்புரை: பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது. [நடையான் -நடையினால்]

'தம்மை இகழ்ந்துரைப்பார்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர் முன் காளைபோன்ற நடை கணவனுக்கு இராது', 'அதற்காக யாரேனும் ஏளனம் செய்தால் அப்படி ஏளனம் செய்கிறவர்களுக்கு முன்னால் அவன் ஆண்பிள்ளைக்குரிய கம்பீரத்தோடு நிமிர்ந்து நடக்க முடியாது', 'தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னே ஆண்சிங்கம் போல நடக்கும் பெருமித நடை இல்லை', 'தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர் முன்னிலையில் ஏறு போன்ற பெருமித நடை கிடையாது. (கற்பில்லா) மனைவியைப் பெற்றவன் வெட்கத்தால் தலைகுனிந்து நடக்க வேண்டி வரும்', என்றபடி பொருள் உரைத்தனர்.

தம்மை இகழ்ந்துரைப்பார்முன் ஆண் சிங்கம் போல நடக்கும் பெருமித நடை இல்லை என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
புகழ்புரிந்த இல் இல்லோர்க்குத் தம்மை இகழ்ந்துரைப்பார்முன் ஆண் சிங்கம் போல நடக்கும் பெருமித நடை இல்லை என்பது பாடலின் பொருள்.
'புகழ்புரிந்த இல் இல்லோர்' யார்?

நற்பெயர் பெற்ற இல்லாளைப் பெற்றவர் வீறு கொண்ட நடை போடுவார்.

நல்லபெயர் விரும்பும் மனைவியைப் பெறாதவர் தம்மை இகழுவோர் முன்னே சிங்க ஏறுபோலப் பெருமிதத்தோடு நடக்க முடியாது.
சென்ற பாடல் (குறள் 58) தனக்கே உரியவனாகக் கணவனை அடைந்த பெண் சொர்க்க உலகத்தில் உள்ளது போன்று உணர்வாள் எனப் பாலியல் ஒழுக்கம் கொண்ட ஆடவனைப் பெற்ற மனைவியின் பேற்றைச் சொன்னது. இக்குறள் பாலியல் ஒழுக்க வரம்பு மீறும் பெண் எத்தகைய தாக்கத்தைத் தன் கணவனது வாழ்வியலில் உண்டாக்குவாள் என்பதைக் கூறுகிறது.
புகழ் பெறாத மனைவி இல்லாத குடும்பம் சமுதாயத்தில் மதிப்பிழக்கும்.
கணவனுக்கு உண்மையாக இருத்தல் கற்பு எனப்படுகிறது. அக்கற்பு பேணப்படவில்லையென்றால் மனைவியானவள் குடும்பத்துக்கு இழுக்கு உண்டாக்குகிறாள். குடும்பத்துக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் இல்லாள் நடந்து கொள்ளவில்லையென்றால் கணவனுக்கு தலையிறக்கம் வரும்; ஒழுக்கக் குறையுடை மனைவியரைக் கொண்டதற்காக உலகோர் அவனைப்பற்றி மிகவும் இழிவுபடப் பேசுவார்கள். அவனுக்குத் தம்மை இகழ்ந்துரை கருதுவார்முன் ஏறுபோல் பீடுநடை இல்லை. வேறு எதற்காகவும் ஒருவன் ஏளனம் செய்யப்பட்டால் அதை அவன் புறக்கணிக்கலாம் அல்லது எதிர்த்துப் பேசவும் துணிச்சல் இருக்கும். ஆனால் ஒழுக்கக் குறைவான மனைவியைப்பற்றி யாரேனும் இகழ்ந்துரைத்தால் அவன் தலை நிமிர்ந்து உலவமுடியாது. இவ்வாறாக வாழ்க்கைத்துணை நலம் எதிர்மறை நடையால் விளக்கப்பட்டது.
குறளின் பிற்பகுதிக்கு 'தம்மை இகழ்வார்முன் ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை' என்பது பொருள். இதை அசைவும் தலை எடுப்பும் பொருந்திய நடை என்று அழகுற விளக்கினார் மணக்குடவர். பரிதி குறள் நடையை உடன்பாட்டில் மாற்றி, இன்னார் மனையாள் என்ற சொல் பெறும்படி நடவாதவளை உடையவனை, அவனை வேண்டாதார் '(அவள் அப்படி இருக்கிறாள்,) இவன் மாடு மாதிரி திரிகின்றான் பார்' என்று இகழ்வர் என எழுதினார். இவ்வுரை புதுமையாய் இருக்கிறது.

'குறளின் இரண்டு பகுதிகளுக்கும் இடையிலே அமைந்த 'இல்லை' என்னும் சொல் ஒருவகை அழுத்தம் ஒலிக்க இரண்டு பகுதிகளையும் இணைத்துக் காட்டும் நடைப்பாங்கு குறிப்பிடத்தக்கது' என்பார் இ சுந்தரமூர்த்தி.

'புகழ்புரிந்த இல் இல்லோர்' யார்?

'புகழ்புரிந்த இல் இல்லோர்' என்ற தொடர்க்குப் புகழ் பொருந்தின மனையாளை இல்லாதார், இன்னாள் 'பதிவிரதை' என்று சொல்லும் சொல் பெறாத மனைவியை உடையான், கற்பினால் பெரிதும் புகழ் தங்கப்பட்ட இல்லாளையில்லாதான், புகழை விரும்பிய இல்லாளையில்லாதார், நல்ல பதிவிரதத்தையும் கீர்த்தியையும் உடைய பெண்சாதியை இல்லாதவன், புகழை விரும்பிய மனையாளை இல்லாதவர், புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர், தன்னை உலகம் புகழ்ந்து போற்ற வேண்டுமென்ற விருப்பமிக்க மனைவியைப் பெறாதார், புகழுக்குரியவளாக வாழ்க்கைத் துணைநலம் அமையாத தலைவன், புகழை விரும்பிய மனைவியைப் பெறாதார், பெண்களுக்குப் புகழ் தருவதான கற்பு என்ற குணம் இல்லாத பெண்ணை மனைவியாகக் கொண்டுள்ள ஒருவன், பெருமை மிக்க செயல்களைச் செய்யும் மனைவியை அடையாத கணவர், கற்பினால் வரும் புகழினை விரும்பி நடக்கும் மனையாளில்லாதவர், நற்பண்புகளாலும் செயல்களாலும் புகழார்ந்த நன்மனைவி அமையாதவர், தனக்கும் தன் கணவனுக்கும் புகழை விரும்பிய மனைவியில்லாதார், கற்பென்னும் புகழை விரும்பிய மனைவி இல்லாதவர், (கற்புடையாள் என்னும்) புகழைச் செய்த இல்லாள் இல்லாத கணவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பாட்டின் முதல் பகுதியிலுள்ள இல்லிலோர்க்கு என்றதில் உள்ள 'இல்' என்ற சொல்லுக்கு இல்லம் என்றும் இல்லாள் என்றும் இருவகையாகப் பொருள் கூறலாம். அதிகாரம் 'வாழ்க்கைத்துணை நலம்' ஆதலால் துணையாகிய மனைவியின் கடமையே புகழ் புரிதல் ஆகிறது. மேலும் ஏறு என்ற சொல் ஆண் சிங்கம் அல்லது காளை என்ற பொருள்தருவது; ஆதலால் இது கணவனுக்கு உண்டாகும் இழுக்கு பற்றிச் சொல்வதாகக் கொள்வதே பொருத்தம். எனவே 'இல்' என்ற சொல்லுக்கு இல்லாள் என்று பொருள் கொள்வதே நேரியது.

இரா சாரங்கபாணி 'புரிந்த+ இல்லிலோர்-புரிந்தில்லிலோர் என வந்தது. இதில் புரிந்த என்ற பெயரெச்சத்தின் ஈற்றிலுள்ள அகரம் கெட்டது. பெரிய+அப்பா=பெரியப்பா என வழங்குவதுபோல' என விளக்கினார். மேலும் இவர் ''புகழ் புரிந்து இல்லிலோர்’ எனப் பிரித்துப் பொருள் கொள்ளின், புகழ் புரிதல் கணவன் செயலாகும். வாளா இல்லிலோர்க்கு எனக் கூறின் வாழ்க்கைத்துணை நலத்தினது சிறப்புக் கூறுதலாக அமையாமல் அதிகாரப் பொருத்த மின்றிப் போம். ஆகவே, புகழ் புரிந்த இல்லிலோர் எனப் பிரித்து புகழை விரும்பிய மனைவியை இல்லாதார் எனப் பொருள் காண்பதே இயல்பாகும்' என்பார்.
புகழ் புரிந்த என்றதற்கு புகழ் பொருந்திய என்றும் புகழ் விரும்பிய என்றும் பழம் ஆசிரியர்கள் பொருள் கொள்வர். பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள் 5) என்ற தொடர் கொண்ட பாடலிலும் புகழ்புரிந்தார் என்பதற்கு அவ்வாறே (புகழ் பொருந்திய, புகழ் விரும்பிய) என்றவாறே அவர்கள் பொருள் கொண்டனர்.
'புகழ்புரிந்த இல் இல்லோர்' என்ற தொடர்க்குப் 'புகழ் விரும்பும் மனைவியைப் பெறாதவர்' என்பது நேர்பொருள். புகழ் பொருந்தா மனைவி என்றால் பாலியல் கட்டுப்பாடுகளை மீறும்- கற்பில் குறைந்த- பெண் என்று பலரும் பொருள் உரைத்தனர்.
வாழ்க்கைத் துணையாகிய மனைவியின் கடமையே புகழ் புரிதல் ஆகிறது. புகழ் என்பது நற்பெயருடன் விளங்குவதைச் சொல்வது. குடும்பத்திற்கு நற்பெயர் மனைவி கற்புடனும் மற்ற இல்லற நற்பண்புகளுடனும் ஒழுகுவதால் உண்டாகும். அவளுக்குக் கற்புத்திறன் இல்லையென்றால் தலைவனுக்குச் சமுதாயத்தில் மதிப்பும் புகழும் இல்லை என்கிறது இக்குறள். 'கற்புடைய இல்லாள் தானே புகழை விரும்பமாட்டாள். புகழ் தானே விரும்பி அவளை அணைந்து சிறப்புறும். இந்நுட்பம் 'புகழ் புரிந்த இல்' என்பதில்விளங்குதல் காண்க' என்பார் திரு. வி.க.
புகழ் புரியும் பிற நற்பண்புகள் கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்றுவது, சீராகக் குடும்பத்தை நடத்தி செல்வ வளம் காத்தல். கணவனைத் தன்பால் ஈர்த்து அவனையும் நல்லொழுக்கத்தில் நிலை நிறுத்தி இருப்பது போன்றன.

இல்லாளின் கற்புத் திறனும் மற்ற நல்லபண்புகளும் கணவனுக்குப் பெருமையளிப்பன என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்தே. சங்கப்புலவர்கள் வேந்தர்களை கற்புள்ள பெண்ணின் தலைவனே என்று விளித்து வாழ்த்தினர். செயிர்நீர் கற்பின் சேயிழை கணவ (புறநானூறு 3.6 பொருள்: குற்றமற்ற கற்பினையுடைய சேயிழைக்குத் தலைவ) என்றும், கடவுள் சான்ற கற்பிற் சேயிழை மடவோள் பயந்த மணிமரு ளவ்வாய்க் கிண்கிணிப் புதல்வர் பொலிகென் றேத்தி (புறநானூறு 198.3-5 பொருள்: தெய்வத்தன்மை யமைந்த கற்பினையும் செய்ய ஆபரணத்தையுமுடைய உன்னுடைய மடவோள் பெறப்பட்ட பவழமணிபோன்ற அழகிய வாயையும் கிண்கிணியையு முடைய புதல்வர் பொலிக வென்று வாழ்த்தி) என்றும் அரசியரின் கற்பு மேம்பாட்டை புகழ்ந்துரைத்தனர். மற்றொரு பாடலில் மன்னனைப்பற்றி பெருமித உணர்ச்சி தோன்றப் பாடி விடைபெறுங் கவிஞர் ஒருவர் பரிசில் நல்காத அல்லது நீட்டித்தவனை நோக்கி ...நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்மெல்லியற் குறுமக ளுள்ளிச் செல்வ லத்தை சிறக்கநின் னாளே (புறம். 196 14-15 பொருள்: நாணல்லது வேறில்லாத கற்பினையும் குறுமகள் உள்ளி ஒளியை யுடைத்தாகிய நுதலினையும் மெல்லிய இயலினையுமுடைய குறுமகளை நினைந்து போவேன்; உன் வாழ்நாட்கள் மிகுவதாக) என்றார்.

புகழ்விரும்பும் இல்லாளை இல்லாதார்க்கு தம்மை இகழ்ந்துரைப்பார்முன் சிங்கம் போல நடக்கும் பெருமித நடை இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வாழ்க்கைத் துணைநலம் சிறப்புற அமையவில்லையென்றால் அவன் குறைபாடு உடையவனே.

பொழிப்பு

புகழ்விரும்பும் இல் இல்லாதார்க்குத் தம்மை இகழ்ந்து பேசும் வேண்டாதவர் முன் சிங்கம் போல நடந்துசெல்லும் பெருமிதமில்லை