இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0058



பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:58)

பொழிப்பு (மு வரதராசன்): கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப் பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.

மணக்குடவர் உரை: பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.

பரிமேலழகர் உரை: பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.
(வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: தன்னைத் தனக்குரிய மனைவியாகப் பெற்ற கணவனை, தான் தனக்குரிய கணவனாகவும் பெற்று இணைந்து வாழும் வாழ்வு பெற்றால், அப்பெண்டிர் இவ்வுலகில் மட்டுமன்று, தேவர்கள் வாழும் உலகிலும் பெருஞ்சிறப்புப் பெறுவர்.
உரியராகப் பெறுதல் அத்துணை ஒருவருக்கொருவர் உறவுரிமையுடயராதல். இங்கு மட்டுமென்ன; தேவருலகிலும் சிறப்புண்டாகும் என்ற உலகியல் நடை இது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெற்றார்ப் பெறின் பெண்டிர் புத்தேளிர் வாழும் உலகுபெருஞ்சிறப்புப் பெறுவர்.

பதவுரை: பெற்றார்- (தம்மை)அடைந்தவர்; பெறின்-(தனக்கு உரியவராக வாழ்வு) பெற்றால்,அடைந்தால்; பெறுவர்-எய்துவர்; பெண்டிர்-பெண்கள், மகளிர், (இங்கு) மனைவியர்; பெரும்-பெரியதாகிய; சிறப்பு-பெருமை; புத்தேளிர்-வானவர், தேவர்கள்; வாழும்-வாழ்கின்ற; உலகு-உலகம்.


பெற்றார்ப் பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('பெற்றார்ப்' பாடம்): பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின்;
பரிப்பெருமாள்: பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின்;
பரிதி: தன்பத்தாவும் பூலோகமும் இவள் பதிவிரதை என்ன மனமகிழ்ந்த கற்பினாள்;
காலிங்கர்: தம்மை மணமகளிராகப் பெற்ற கணவரையே தாமும் கணவராகப் பெறுவாராயின்;
பரிமேலழகர் ('பெற்றான்' பாடம்): தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்;
பரிமேலழகர் குறிப்புரை: வழிபடுதல் என்பது சொல்லெச்சம்.

மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் 'தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குக் கணவராகப் பெற்றால்' என்றும் பரிதி 'கற்புடையாள் எனப் பெயர் பெற்றவள்' என்றும் பரிமேலழகர் 'தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்' என்றும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கணவனது அன்பைப் பெறும்', 'பண்புகள் பெற்ற கணவன்மாரைப் பெற்றால்', 'தம்மையடைந்த கணவர்களை வழிபட்டு அவர்களது அன்பிற்கு உரியராகப் பெறுவாராயின்', 'தன் கணவனைக் காதலால் வழிபடுதல் செய்வாராயின்' என்ற பொருளில் உரை தந்தனர்.

பெற்றாரைத் (கணவரைத்) தனக்கே உரியவராகப் பெற்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெண்டிர் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.
பரிப்பெருமாள்: தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதனானே அதனின் மாறுபட ஒழுகினார் நரகம் புகுவர் என்றவாறு. இது மறுமைப் பயன் கூறிற்று. இவை மூன்றினானும் பெண்டிர் இலக்கணமும் அவர் பெறும் பயனும் கூறப் பெற்றன.
பரிதி: பெறுவள் தேவர்கள் செய்யும் சிறப்பை என்றவாறு.
பரிதி குறிப்புரை: இதற்கு ஒப்பனைகள் கண்ணகியாரைக் கண்டுகொள்க என்றவாறு.
காலிங்கர்: மற்று அவர் பெறுவர் இம்மை ஆக்கமும், மிகவும் சிறப்புடைத்தாகிய தேவர்கள் வாழும் உலகினையும் என்றவாறு.
பரிமேலழகர்: பெண்டிர் புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.
பரிமேலழகர் குறிப்புரை: இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.

'பெண்டிர் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்/தேவர்கள் செய்யும் சிறப்பைப் பெறுவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவியர் மேலுலகிலும் பெருஞ்சிறப்புப் பெறுவர்', 'மகளிர் தேவர்கள் வாழும் உலகில் அவர்களால் பெருஞ்சிறப்புப் பெறுவர்', 'மகளிர் தேவர்கள்வாழ்கின்ற உலகத்திலே மிக்க மேம்பாட்டை யடைவர்', 'பெண்கள் தேவர் வாழும் உலகில் உள்ள பெருஞ்சிறப்பினை அடைவர்' என்றபடி பொருள் உரைத்தனர்.

மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெற்றாரைப் பெறின் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர் என்பது பாடலின் பொருள்.
'பெற்றார்ப் பெறின்' என்ற தொடர் குறிப்பது என்ன?

நல்ல கணவன் அமைவது மகளிர்க்கு மணமகிழ்வையும் சிறப்பையும் தரும்.

தனக்கே உரியவனாகக் கணவனைப் பெற்றால் பெண்டிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.
இப்பாடலிலுள்ள பெண்டிர் என்ற சொல் இல்லறத்திலுள்ள மனைவி குறித்தது. முன்னர் கற்புடைய மனைவியை அடைந்த பேறு பெற்ற கணவன் பற்றிச் சொல்லப்பட்டது (குறள் 54). இக்குறளில் கற்புள்ள ஆடவரைக் கணவனாகப் பெற்ற மனைவி அடையும் புத்தேளிர் வாழும் உலகின் பெருஞ்சிறப்பு கூறப்படுகிறது.
புத்தேளிர் வாழும் உலகு என்பது புலவர் புனைவால் உருவாக்கப்பட்ட வானவருலகமாம். எல்லார்க்குமானதாக இல்லாத அவ்வுலகம் இந்நிலவுலகினும் மேம்பட்டதாக எண்ணப்படுவது. இன்பம் மட்டுமே நிறைந்த அவ்வுலகில் இங்கு காணப்படும் துன்பங்கள், துயரங்கள், குறைபாடுகள் ஒன்றும் இல்லை. அப்படிப்பட்ட உலகத்தில் வாழும் பெருமைக்குரிய சிறப்பை நல்லொழுக்கம் கொண்ட ஆடவனைக் கணவனாகப் பெற்ற பெண் பெறுவாள் என்கிறது பாடல்.
இங்கேயே அதாவது நிலவுலகிலேயே அச்சிறப்பைப் பெறுவாள் என்றும் இப்பாடலுக்குப் பொருள் உரைத்தனர். மேலுலகம் என்பது பேரின்பத்தின் நிலைக்களன் என்றே உலகோர் எண்ணுகின்றனர். எனவே பெருஞ்சிறப்பு பெறுவர் என்பதற்கு அந்த இன்ப உலகத்தில் வாழ்பவர் போல் உணர்வர் எனப் பொருள் கொள்ளலாம். தனக்கு மட்டுமே உரியவனாக உள்ள ஓர் கணவனுடன் இல்வாழ்க்கை நடத்துவது இவ்வுலகத்திலேயே சொர்க்கலோக இன்பத்தில் அதாவது துன்பமே இல்லாத நல்வாழ்வில் திளைப்பது போன்று மனைவி உணர்வாள் என்பது கருத்து.

மனைவிக்கு மட்டுமே உரியவனாகும் கணவனைப் பற்றியது இப்பாடல். தன்னை அவனுக்கு மட்டுமே உரிமையாக்கிக் கொள்பவள், அவனும் தனக்கே உரியவனாக ஆகிவிட்டால் அவள் அடையும் இன்பத்துக்கு எல்லை இல்லை. காதலிலே கட்டுண்ட இவர்களது இல்லறத்தில் கற்பொழுக்கம் நிலைத்து நிற்கும். இவர்களது நெஞ்சங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் உழன்று திரிவதில்லை. புறம்போகாத ஆடவனைக் கணவனாகப் பெற்றதாலும், மனைமாட்சி தன்னிடத்து இருத்தலினாலும், வெற்றியும் புகழும்பெறும் இன்ப வாழ்க்கை நடத்துவாள் இவள்.
கற்பில் சிறந்த மனைவியப் பெற்றதால் அவன் பேறு பெற்றான். அதுபோலவே தான் விரும்பியவாறு பிறன்மனை நோக்காதவனாக கணவன் அமைந்ததால் அவளும் பேறு பெற்றாள். இவ்விருபேறும் ஒரு பேறாய் இணைந்து பெரும்பேறாய்ச் சிறக்கிறது. அந்த நிலையில் புத்தேளிர் வாழும் உலகிலே பெறத்தக்க இன்பச் சிறப்பினை இவ்வுலகிலேயே அடைவர் என்பதில் யாருக்கு ஐயம் பிறக்கும்? இருவரும் பெறும் பேற்றைக் கூறவருகின்ற வள்ளுவர், அதை இவள் மேல் வைத்து ஓதுவது ஏன்? என்றெழும் வினாவிற்கு, 'வளத்தக்காள்' என்பதால் குறிக்கப்பட்டபடி இவளே இல்லறத்திற்கு இன்றியமையாத சிறப்பினள் ஆதலின் என்க' என அமைதி கூறுவார் தெ பொ மீனாட்சி சுந்தரம்.

இனி, 'பெண் பெருஞ்சிறப்புப் பெறுதற்கு அவளது ஒழுகலாற்றினைக் காரணமாகக் கூறவேண்டுவ தன்றி அவள் கணவனது ஒழுக்கத்தை இயைபுபடுத்தல் அறமாகாதாதலால், கணவனது பண்பையும் இயைத்துக் கூறும் உரைகள் பொருத்தமில' எனக் கருத்துரைத்தனர் சிலர். மணந்து கொண்டதால் மட்டும் மனைவியும் கணவனுமாகி விட முடியாது; கணவன் மனைவிக்கே உரியவனாகும் நிலையைத் தம் குணநலங்களாலும் ஒழுக்கத்தாலும் உண்டாக்குபவள் மனைவி; 'பெற்றாரைத் தனக்கேயுரியவனாகப் பெற்றால்' என்பதிலான பெருமையால் பெண்கள் தாமே பெருஞ்சிறப்பெய்துகின்றனர் என்பதில் இழுக்கொன்றும் இல்லை.

'பழைய உரையாசிரியர்கள் சில ஸ்மிருதி மொழிகளை உளங்கொண்டு இப்பாட்டுக்கு உரை கண்டுள்ளரென்று தெரிகிறது' என்பார் திரு வி கலியாண சுந்தரம் (திரு வி க). இவர் சுட்டுவது 'பெண்களுக்கு ஐம்பெரும் வேள்வி, நோன்பு முதலியவற்றில் தனியுரிமை இல்லை. கணவனுக்குப் பணிவிடை செய்வதனாலேயே துறக்கத்தில் அதாவது சொர்க்க உலகில் பெருமை அடைகின்றார்கள்' என்ற மனுநீதியில் உள்ள சுலோகம். இப்போது கணவனை வழிபடும் பெண்களையே, அவர்கள் இறந்தபின் தேவர் சிறப்புச் செய்வர் என அந்த ஸ்மிருதி சொல்கிறது. இதை மனத்தில் கொண்டே பரிமேலழகர் முதலான உரையாசிரியர்கள் 'பெற்றாற் பெறின்' என்ற தொடருக்குத் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின் என்று உரை வகுத்தனர் எனத் தெரிகிறது.
மகளிர் தனிமையாகச் செயல்புரிந்து நேரே துறக்கம் செல்ல முடியாது என்று ஸ்மிருதி கூறுகிறது. வள்ளுவரோ மனைவியால் கணவனும் மேன்மையடைவான் என்ற கருத்துக் கொண்டதுடன், இல்லாளுக்கு புத்தேள் உலகம் செல்லும் உரிமையையும் வழங்குகிறார்.
வேற்றுப் பண்பாட்டு நீதிநெறியால் பாதிக்கப்பட்டு எழுதப்பட்ட உரையான 'தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்' என்ற பிழையான உரையைப் படிப்பவர் ஆணுக்குச் சேவை செய்யப் பிறந்த ஒரு அடிமைதான் பெண் என்பதைத் தாண்டி குறள் கருத்துக் கூறிவிடவில்லை என்பர். மேற்சொன்னபடி, இக்குறளின் உண்மையான பொருளை உணர்ந்தால் இவர்கள் அவ்விதம் பேசமாட்டார்கள்.

'பெற்றார்ப் பெறின்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'பெற்றார்ப் பெறின்' என்றதற்குப் பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின், தன்பத்தாவும் பூலோகமும் இவள் பதிவிரதை என்ன மனமகிழ்ந்த கற்பினாள் பெறுவள், தம்மை மணமகளிராகப் பெற்ற கணவரையே தாமும் கணவராகப் பெறுவாராயின், பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின், ஸ்திரீகள் தங்களைக் கொண்ட புருஷன் சொன்னபடியே நடந்து நற்குணங்களை உடையவர்களாய் இருந்தால், தன்னைக் கொண்ட கணவனைப் பெருஞ்சிறப்புச் செய்யப்பெற்ற பெண்டிர், கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப் பெற்றால், (மனைவியராகிய) மகளிர்‌ (தம்மைக்‌) கொண்ட கணவனைப் (பேணுதல்‌) பெறுவாராயின்‌, தன்னைத் தனக்குரிய மனைவியாகப் பெற்ற கணவனை, பெண்மைக்குரிய சிறப்பியல்புகளை அடைந்து சிறப்புறும் பெண்ணை ஒருவர் வாழ்க்கைத் துணைநலமாகப் பெறின், கணவனது அன்பைப் பெறும் மனைவியர், மகளிர் பண்புகள் பெற்ற கணவன்மாரைப் பெற்றால், பெண்களுக்குப் பெருஞ் சிறப்புத் தருவதாகிய கற்பு என்ற மன உறுதியுள்ள பெண்ணை கணவன் மனைவியாகப் பெறுவானாயின், தம்மைப் போன்ற நற்குண நற்செயல் அமைந்த கணவரைப் பெற்றால், மகளிர் தம்மையடைந்த கணவர்களை வழிபட்டு அவர்களது அன்பிற்கு உரியராகப் பெறுவாராயின், பெண்கள் தன் கணவனைக் காதலால் வழிபடுதல் செய்வாராயின், தம் கணவரை முறையோடு உபசரிக்கும் இயல்பினைப் பெற்ற மனைவியர், மாண்புமிகு கணவரைப் பெண்கள் பெறுவார்களானால், கணவரை மனவுறுதி உடையராகப் பெற்றால். பெண்டிர் தம் கணவனுக்குத் தொண்டு செய்தலைப் பெறுவாராயின், நல்ல குண நலனுடைய பெண்ணை மனைவியாகப் பெற்றவர், (தம்மை வாழ்க்கைத் துணையாகப்) பெற்றவனை (மேற்கூறியபடி) பேணின் எனப் பலவாறாக உரை கண்டனர்.

இக்குறளுக்கான உரைகாண்பதில் இத்தொடர் இடர் உண்டாக்கிற்று. பெற்றாற் என்றதற்குப் 'பெற்றார்' எனவும் 'பெற்றான்' எனவும் இருதிறமாகப் பாடம் கொண்டு உரை கூறியுள்ளனர்.
முதலில் மணக்குடவர், ('பெற்றார்ப்' எனப் பாடம் கொண்டு) 'தம்மை (மனைவியராகப்) பெற்றவரையே தமக்குத் (தலைவராகப்) பெறின்' என விளக்கினார், பின்வந்த காலிங்கர் 'தம்மை மணமகளிராகப் பெற்ற கணவரையே தாமும் கணவராகப் பெறுவாராயின்' என்றார். இவர்கள் கூற வருவது 'ஒருவன் ஒருத்தியை மனைவியாகப் பெற்ற பிறகு அவளுக்கே அவன் கணவனாக இருந்தால்' என்பது. அதாவது அவன் புறத்தொழுக்கம் இல்லாதவனாக இருந்தால் எனச் சொல்கின்றனர். தன்னைப்போலவே நல்லொழுக்கம் கொண்ட கணவரைப் பெற்றால் என்பது பொருள். இவர்களது உரை சிறப்பாக உள்ளது.
இவர்களைப் பின்பற்றி காமாட்சி சீனிவாசன் 'தன்னைத் தனக்கேற்ற மனைவியென உளமார்ந்த அன்புடன் தெரிந்து கொண்ட கணவனைப் பெற்றுத் தானும் அவ்வாறே அவனைத் தனக்கேற்ற கணவன் முழு அன்புடன் ஏற்கும் நிலையை ஒருத்தி அடைவாளாயின், குடும்பத்தில் இருவரிடமும் ஒத்த அன்பு இருக்குமாயின்' என விளக்கினார். கா அப்பாத்துரை 'இவளை அழகுத் தெய்வமாகப் பூசிக்கும் காதலனையே உளங் கொள்ளப் பூசிக்கும் வீரத் தெய்வமாகப் பெண்டிர் பெற்றால்' என உரை வகுத்தார்.
பின்வந்த பரிமேலழகர் 'பெற்றான்' எனப்பாடங்கொண்டு பெற்றான் பெறின் என்றதற்குப் பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின் எனப் பொருள் கூறினார். மாதர்களுக்கு ஐம்பெரும் வேள்வி, நோன்பு முதலியன செய்தற்கு உரிமை இல்லை. இவைகளைச் செய்வதால் ஆகிய பயனாகிய துறக்கத்தை அடையும் பெருமையைக் கணவனுக்குப் பணிவிடை செய்வதாலேயே அடைகிறார்கள் என்ற மனுநூற் கொள்கையைப் பின்பற்றியது இவரது உரை.
'பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர்' என்னும் இத்தொடரில் உள்ள 'பெண்டிர்' என்ற உயர்திணைப் பன்மைப் பெயர் முடிவை நோக்கப் 'பெற்றார்' என்ற பன்மைச் சொல் இருப்பதே இலக்கண முறைமைக்கு ஏற்புடையதாதலால் பெற்றார் என்ற பாடமே பொருத்தம் என்பர்.

'பெற்றார்ப் பெறின்' என்ற தொடரை தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் என்று விளக்குவர். இதற்குத் 'தன்னைப் பெற்றாரைத் தனக்கே உரிய கணவராகப் பெற்றால்' என்பது பொருள். கற்பு இருபாலரிடத்தும் விளங்க வேண்டுமென்பதை வள்ளுவர் விரும்புபவர். தனக்கே உரிய கணவர் என்பது தன்னைத் தவிர வேறு பெண்களை நோக்காதவர் அதாவது புறம்போகாத ஆடவரைக் குறிக்கும். தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி (தனிப்படர்மிகுதி 1191 பொருள்: தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவர்) என்னும் பாடலில் இடம்பெற்ற 'பெற்றவர் பெற்றாரே' எனவரும் தொடரில் உள்ள பொருளில்தான் 'பெற்றார் பெறின்' என இங்கு அமைந்துள்ளது.

'பெற்றார்ப் பெறின்' என்ற தொடர் 'தன்னைப் பெற்றாரைத் தனக்கே உரியவராகப் பெற்றால்' என்ற பொருள் தரும்.

பெற்றாரைத் (கணவரைத்) தனக்கே உரியவராகப் பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புறம்போகாதவர் வாழ்க்கைத் துணைநலம் ஆக அமையப் பெற்ற பெண் பேறு பெற்றவள்.

பொழிப்பு

தான் கணவராகப் பெற்றாரைத் தனக்கே உரியவராகப் பெற்றால் பெண்டிர் பெருஞ்சிறப்புடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.