இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0051மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:51)

பொழிப்பு: இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.

மணக்குடவர் உரை: தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல்வாழ்க்கைத் துணையாவள்.

பரிமேலழகர் உரை: மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை- அதற்குத்துணை.
(நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: இல்லறத்துக்கு ஏற்ற பண்புடையவளாய்த் தன்னை மனைவியாகக் கொண்ட கணவனது வருவாய்க்குத் தக்க குடும்பம் நடத்துபவள் வாழ்க்கைத் துணையாவாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.


மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள்:
பதவுரை: மனை-மனையறம்; தக்க-தகுந்த; மாண்பு-பண்பாடு; உடையள்=உடையவள்; ஆகி-ஆய்; தன் -தன்னை; கொண்டான்-கொண்டவன்; வள-வருவாய்க்கு; தக்காள்-தகுதியுடையவள்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள்;
பரிப்பெருமாள்: தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள்;
பரிப்பெருமாள் கருத்துரை: இது ஒழுக்கமும் பகுதிக்குத் தக்க செலவும் உடையளாக வேண்டும் என்றது.
பரிதி: இல்லறத்தின் வரவாற்றிற்குத் தக்க இல்லறம் நடத்துவாள் தன் பத்தாவின் பெருமையை நடத்துவாள் என்றவாறு.
பரிமேலழகர்: மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்;
பரிமேலழகர் விரிவுரை: நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.

'தான் பிறந்த குடிக்குத்தக்க ஒழுக்கத்தைக் கொண்டு வருவாய்க்குத் தக்க செலவினை உடையவள்' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள் இத்தொடர்க்கு உரை நல்கினர். பரிதி 'வரவுக்கேற்ற இல்லறம் நடத்துபவள் கணவனின் பெருமையை நடத்துவாள்' என்று பொருள் கூறினார். பரிமேலழகர் மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செயலகளைக் கொண்டு கணவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள் என்று உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடும்பப் பண்பினள்; கணவன் வருவாய்க்கேற்ப வாழ்பவள்', 'மனையற வாழ்க்கைக்குரிய குணநலன்களைப் பெற்று தன்னைக் கொண்ட தலைவனின் வருவாய்க்குத் தக்கவாறு வாழ்க்கையை நடத்துகிறவள்', 'இல்லறத்துக்குரிய உயர்ந்த பண்புடையவளாய்த் தன் கணவனது வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்து வாழ்கிறவள்', 'மனையறத்திற்கு ஏற்ற நற்குண நற்செயல்கள் உடையவள் ஆகித் தன்னை மனைவியாகக் கொண்ட கணவனுடைய வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையவள்' என்ற பொருளில் உரை தந்தனர்.

இல்லறத்துக்குரிய உயர்ந்த பண்புடையவளாய்த் தன்னை மனைவியாகக் கொண்டவனுடைய வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை நடத்துபவள் என்பது இத்தொடரின் பொருள்.

வாழ்க்கைத் துணை:
பதவுரை: வாழ்க்கை-வாழ்தல்; துணை-உதவி.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்வாழ்க்கைத் துணையாவள்.
பரிப்பெருமாள்: இல்வாழ்க்கைத் துணையாவள்.
பரிமேலழகர்: அதற்குத்துணை.

'இல்வாழ்க்கைத் துணை ஆவாள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாழ்க்கைத்துணை', 'வாழ்க்கைத் துணை', 'இல்வாழ்க்கைக்குச் (சிறந்த) துணையாவள்', 'சிறந்த வாழ்க்கைத் துணைவியாவாள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

வாழ்க்கைத் துணையாவாள் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
மனைமாட்சியில் தேர்ந்து குடும்பப் பொருள்நிலைக்குத் தக வாழ்வுமுறையை மாற்றிக் கொள்பவள் வாழ்க்கைத் துணை என்னும் பாடல்.

இல்லறத்துக்குரிய உயர்ந்த பண்புடையவளாய்த் தற்கொண்டானது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை நடத்துபவள் வாழ்க்கைத் துணையாவாள் என்பது பாடலின் பொருள்.
'தற்கொண்டான்' என்றால் என்ன?

மனைத்தக்க என்பது மனையறத்திற்கு ஏற்ற என்ற பொருள் தரும்.
மாண்புடையள் ஆகி என்பதற்கு மாட்சிமையுடையவளாய் ஆகி என்பது பொருள்.
வளத்தக்காள் என்ற தொடர் வருவாய்க்குத் தக்க வாழ்வைத் தகுதி செய்து கொள்பவள் என்பதைக் குறிக்கும்.

இப்பாட்டில் இரண்டு பண்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒன்று மனைத்தக்க மாண்புடையளாதல்; மற்றொன்று தற்கொண்டான் வளத்தக்காளாதல். இவ்விரண்டும் உடைய பெண் வாழ்க்கைத் துணையாவாள்.

மனைத்தக்க மாண்புகள் என்றது மனைமாட்சியைக் குறிக்கும். இதற்கு 'மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் என்பது பொருள். நற்குண நற்செய்கைகள் இல்லத்துக்கு இல்லம் மாறுபடும் தன்மையன. வாழ்க்கைத்துணையாக கணவன் இல்லம் செல்லும் பெண் தான் பிறந்த குடிப்பெருமை பேணுவாளா அல்லது புகுந்த இடத்து அதாவது கணவன் இல்லத்து குடிப்பெருமை காப்பாளா? சொல்லப்பட்ட இரண்டு குடும்ப பண்பாட்டு நிலைகளுக்குள்ளும் ஏற்றத் தாழ்வு இருக்கும். இரண்டிலிருந்தும் சிறந்தனவற்றைத் தெரிந்து அவை இரண்டும் ஒன்றுபட்ட பண்பாட்டை இருவரும் பேணுதல் வேண்டும் என்பதே உலக நடையாய் அமையும்.
பொதுவாக மனையறத்துக்குரிய பண்புகளாக இன்புறு காதல் வாழ்க்கை நிகழ்த்துதல், நல்வாழ்வுக்கு வேண்டும் பொருள்களை அறிந்து அவற்றில் உறுதி கொள்ளல், உலக நடையை அறிந்து நடத்தல், சமையல் திறமை, விருந்தினர்/சுற்றம் பேணுதல், இல்லாதார்மாட்டு அருள் காட்டுதல், பழி வராத வாழ்க்கை நடத்துதல் முதலாயினவற்றைக் கொள்ளலாம்.
'மனைத்தக்க மாண்புடையள் ஆகி' என்று கூறியிருத்தலுக்கு இல்லறப் பண்புகளில் பயின்று வந்தவளாகி என்று பொருள் கொள்ள வழியுண்டு.

தற்கொண்டான் வளத்தக்காளாதல் என்பது தன்னை வாழ்க்கைத்துணையாகக் கொண்டவனது பொருட்செல்வத்தை அதாவது கைஇருப்பையும் வரும் பொருளையும் முறையாகப் பங்கீடு செய்து குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி எதிர்காலச் சேமிப்புக்கும் வழிவகுக்கும் நிதி நிலை மேலாண்மையைக் குறிப்பது.
'வளத்தக்காள்' என்றதற்கு வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கை நடத்துபவள் என்று பொருள் கூறுவர்.
பெண்ணானவள் பெருகிய செல்வ நிலையில் பிறந்து வளர்ந்தவளாக இருந்தாலும் சரி, அல்லது எளிய சூழலில் வளர்ந்தவளாக இருப்பினும் புகுந்த வீட்டின் பொருள் நிலைக்குத் தகுந்தவாறுத் தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவளாக இருக்க வேண்டும். புகுந்த வீட்டின் வளத்துக்குத் தக்க தன்னை மாற்றிக் கொள்வதையும் 'வளத்தக்காள்' என்ற் சொல் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இத்தொடர்க்கு 'கணவனை வளப்படுத்தத்தக்கவள்' எனவும் உரை கண்டுள்ளனர்.

கணவனுக்குத் துணை நின்று அறம் வளர்க்கும் குடும்பத்தலைவி, நல்ல பண்புகளையும், நல்ல செயல்களையும் உடையவளாக இருப்பாள்; இல்லத்துப் பொருளாதார நிலைக்குத் தக்கவாறு, தன் குடும்பச் செலவைச் செய்பவள் அவள். இவ்விரு நன்மைகளையும் உடையவளே, இல்வாழ்க்கை மேற்செல்லத் துணையாக இருப்பவள்.

'தற்கொண்டான்' என்றால் என்ன?

தற்கொண்டான் என்பதற்குத் 'தன்னைக் கொண்டவன்' என்பது நேர் பொருள். தன்னை வாழ்க்கைத்துணையாகக் கொண்டவன் அதாவது இல்லாள் என்பதைக் குறிப்பது.
இத்தொடர்க்குத் 'தன்னைக் காதலால் அகங்கொண்டவன்' என்று பொருள் கூறித் 'தன்னையன்றிப் பிறரை மனைவியாகக் கொள்ளாதவன் என்பது குறிப்பு' என்ற கூடுதல் விளக்கமும் தருவார் திரு வி க.

தற்கொண்டான் என்பது தன்னை முழுமையாக உரிமையாக்கிக் கொண்டவன் என்பதைக் குறிப்பது என்று சொல்லி, இது பெண்ணடிமைத்தனத்தை உணர்த்தவந்த தொடர் என்று பெண்ணுரிமைபேசுவோர் கூறி வருகின்றனர். 'தற்கொண்டான்' என்றால் அப்பெண்ணை விற்கும் உரிமையும் பெற்றவன்; அவன் பயனற்ற சோம்பேறியாக இருந்தால் அவளை விற்கவும் செய்வான் என்ற வாதத்தையும் முன்வைப்பர். மனைவியைக் குறிக்கத் தற்கொண்டாள் என்ற சொல்லாட்சியும் குறளில் இல்லை என்பதையும் இவர்கள் சுட்டிக் காட்டுவர்.
ஆனால் பெண்ணை இல்லத்தின் மிக உயர்ந்த இடத்தில் ஏற்றிப் போற்றியவர் வள்ளுவர். அவர் பெண்ணில் பெண்மையைக் காண்பவர். பெண்மையில் ஆண்மையைக் காண விரும்பும் பெண்ணியவாதி அல்லர் அவர். தற்கொண்டான் என்பதை தன்னை உள்ளத்தில் கொண்டான் என்று ஏன் ஏற்கக்கூடாது? எப்படியாயினும் இது பெண்ணைத் தாழ்த்தவந்த தொடர் அல்ல என்பது உறுதி.

இல்லறத்துக்குரிய உயர்ந்த பண்புடையவளாய் ஆகி, தன்னை மனைவியாகக் கொண்டவனுடைய வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையவள் வாழ்க்கைத் துணையாவாள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இல்லறமாட்சி கற்று குடும்பத்தின் பொருள்நிலைக்குத் தக வாழ்வுமுறையை மாற்றிக்கொள்பவள் மனைவி என்று வாழ்க்கைத்துணை நலம் கூறும் பாடல்.

பொழிப்பு

இல்லறத்துக்கு ஏற்ற பண்புடையவளாய் ஆகித் தன்னை மனைவியாகக் கொண்டவனது பொருள்நிலைக்குத் தக்க குடும்பம் நடத்துபவள் வாழ்க்கைத் துணையாவாள்.