இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0023இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:23)

பொழிப்பு: பிறப்பு இறப்பு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

மணக்குடவர் உரை: பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது. இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.

பரிமேலழகர் உரை: இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: வாழ்வின் இருவேறு நிலைகளை ஆராய்ந்து துறந்தவர் பெருமையே உலகில் விளங்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை உலகு பிறங்கிற்று.


இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை:
பதவுரை: இருமை-இரண்டிரண்டு; வகை-கூறுபாடு; தெரிந்து-ஆராய்ந்து; ஈண்டு-இப்பிறப்பில்; அறம்-நல்வினை; பூண்டார்-மேற்கொண்டவர்; பெருமை-உயர்வு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை;
பரிதி: புண்ணிய பாவத்தின் வழியறிந்து தன்மத்தின் வழிநின்றார் பெருமையினால்;
காலிங்கர்: கீழ்ச் சொன்ன பரிசே இம்மை மறுமை இரண்டினது குற்றத்தன்மையைத் தெரிந்து மிக்கிருந்துள்ள அறம் பயனாகிய வீட்டின்பத்தை மேவியுள்ளாரது பெருந்தன்மையையே;
பரிமேலழகர்: பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே;
பரிமேலழகர் விரிவுரை: தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது.

'பிறப்பு-வீடு என்ற இரண்டினது கூறுபாட்டை ஆராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை' என மணக்குடவரும் பரிமேலழகரும், 'புண்ணியம்-பாவம் வழி அறிந்து தன்மத்தின் நெறி நின்றார் பெருமை' எனப் பரிதியும் இம்மை-மறுமை என்ற இரண்டினது தன்மையைத் தெரிந்து வீட்டின்பப் பெருந்தன்மையை என்று காலிங்கரும் இப்பகுதிக்கு உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நன்மை தீமைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்து இங்குத் துறவு பூண்ட நீத்தாரின் பெருமை', 'பிறப்பு இறப்பு என்ற இரண்டின் தத்துவங்களை உணர்ந்து தர்ம வாழ்க்கை நடத்திய மகான்களின் பெருமையினால் தான்', 'உலகியல், வீட்டுநெறி யென்னும் இரண்டின் கூறுபாட்டையும் அறிந்து இப்பிறப்பிலேயே துறவறத்தை மேற்கொண்டாரது பெருமையானது (துறவறம் நன்றென்று காணல் எளிது மேற்கோள்ளுதல் அரிது.ஆதலின் இவ்வாறு கூறினார்)', 'இன்பம் துன்பம் என்னும் இிரண்டினது தன்மைகளை அறிந்து இவ்வுலகில் துறவற நெறியை மேற்கொண்டார் பெருமை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இருவேறு நிலைகளை ஆராய்ந்து தந்நலத் துறவு மேற்கொண்டார் பெருமை என்பது இப்பகுதியின் பொருள்.

பிறங்கிற்று உலகு:
பதவுரை: பிறங்கிற்று-உயர்ந்தது; உலகு-உலகம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தில் மிக்கது.
மணக்குடவர் கருத்துரை: இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.
பரிதி: உலகம் விளங்கும் என்றவாறு.
காலிங்கர்: மிகுத்துக் கூறியது இவ்வுலகம் என்றவாறு.
பரிமேலழகர்: உலகின்கண் உயர்ந்தது.
பரிமேலழகர் விரிவுரை: இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.

பிறங்கிற்று உலகு என்பதற்கு உலகத்தில் மிக்கது என்று மணக்குடவரும் உலகம் விளங்கும் என்று பரிதியும் மிகுத்துக் கூறியது இவ்வுலகம் என்று காலிங்கரும் உலகின்கண் உயர்ந்தது என்று பரிமேலழகரும் உரை கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவ்வுலகில் விளங்கித் தோன்றும்', 'இந்த உலகம் ஞான ஒளி பெற்றிருக்கிறது', 'உலகத்திலே எவற்றினும் உயர்ந்து விளங்கும் இயல்பிற்று', 'உலகின்கண் உயர்ந்தது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

உலகில் விளங்கித் தோன்றும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இருவேறு நிலைகளை ஆராய்ந்து தந்நலத் துறவு என்ற உயர்ந்த அறத்தை மேற்கொண்டார் பெருமையால் இந்த உலகம் ஒளிர்கின்றது என்னும் பாடல்.

இருவேறு நிலைகளை ஆராய்ந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமையால் உலகம் விளங்கித் தோன்றுகிறது என்பது பாடல் கருத்து.
'ஈண்டறம் பூண்டார்' குறிப்பது என்ன?

இருமை என்ற சொல்லுக்கு இங்கு இருநிலைகள் என்பது பொருள்.
வகைதெரிந்து என்ற தொடர் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து என்ற பொருள் தரும்.
பெருமை என்ற சொல் சிறப்பு குறித்தது.
பிறங்கிற்று என்றதற்கு விளங்கித் தோன்றுகிறது என்று பொருள்.
உலகு என்ற சொல் உலகம் என்ற பொருள் தருவது.

இருவேறு கூறுபாடுகளை ஆராய்ந்து கூடிவாழும் வாழ்க்கையில் தந்நலம் நீத்தல் என்ற அறம் பூண்டவரின் பெருமை இவ்வுலகில் விளங்கித் தோன்றும்.

இருமை வகை தெரிந்து என்றதற்கு இரண்டு கூறுபாடுகளை ஆராய்ந்து என்பது பொருள். இருமை என்பது இரண்டன் தன்மை என்று பொருள் படாது இரண்டு என எண்ணுப் பொருள் தந்தது என்று கூறி, இதை விளக்க, பரிமேலழகர் தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல் திரட்டு 4. வையை: பொருள்: ஆராயப்பட்ட மாட்சிமையுடைய இயல், இசை, நாடகமென்னும் மூன்று தமிழையும் உடைய தெற்கிலுள்ள அழகிய பொதிய மலையை உடையவன்). என்ற பாடலை மேற்கோள் காட்டுவார். அதாவது மும்மை என்பது மூன்று கூறுகள் என்ற பொருளில் வந்ததுபோல இருமை என்பது இரண்டு கூறுகளைக் குறிக்கும் என்பது பரிமேலழகர் உரையாகும்.
இரண்டு கூறுபாடுகள் என்பதற்கு இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகள் என்று விளக்குவர். உலக இயற்கையின் இருவேறு எதிரிடைத் தன்மைகளாக உள்ள இரண்டிரண்டானவைகளையே குறள் குறிக்கிறது என்பர் சிலர். பிறப்பு - வீடு, நன்மை - தீமை, அறிவு - அறியாமை, உயர்வு - தாழ்வு, அறம் - மறம், ஆக்கம் - கேடு, தோற்றம் - அழிவு, இன்பம் - துன்பம், உடல் - உயிர், நிலைப்பது -அழிவது, மெய்-பொய், உலகியல்-வீட்டுநெறி, இல்லறம் துறவறம் என்பனபோல பல இருமைக் கூறுகளை உரையாசிரியர்கள் தந்துள்ளனர். கருத்து முதல் வாதம் - பொருள் முதல் வாதம் என்ற இருகூறுகளும் இருமையாகச் சொல்லப்பட்டன.

பெரும்பன்மையினர் பிறப்பு-வீடு அதாவது இம்மை-மறுமை என்பதையே இருமையாக வள்ளுவர் குறிப்பிடுகின்றார் என்று சொல்வர். இக்கூற்றின்படி துறவறநெறி நின்று அறம் செய்பவர் பற்றிய பாடல் இது என்றாகிறது. இது பொருத்தமாகப்படவில்லை.
பொதுத் தொண்டு புரிவோரும் தந்தலம் கருதுவோருமாக இரு நிலையில் உள்ள மாந்தரை நாம் காண்கிறோம். தந்நலம் - பொதுநலம் என்ற இருமை பற்றி இக்குறள் பேசுகிறது எனக் கொள்ளமுடியும். தந்நலம் நீத்தாரது பொதுநலத் தொண்டு என்ற அறம் என்பதையே வள்ளுவர் கூறியிருக்கலாம் என்று தோன்றுகிறது. 'அறம்பூண்டார்' என்ற சொல்லாட்சி நோக்கத்தக்கத்து. இத்தொடர் 'அறத்தைக் கடமையாக ஏற்றுக் கொண்டவர்கள்' என்ற பொருள் தரும். தொண்டு செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் இவர்கள் என்பது கருத்து.
அறப்பணி மேற்கொள்வோரையே நீத்தார் என்று குறிப்பதாக இவ்வதிகார குறட்பாக்கள் அமைந்துள்ளன. இங்கும் அதுவே சொல்லப்படுகிறது. தனித்து இயங்காமல் சமுதாயத்துடன் கூடி வாழ்ந்து பொதுத்தொண்டு என்ற உயர்ந்த அறம் மேற்கொண்டோருடைய செயல் உலகத்தை நிலைநிற்கச் செய்து, உயிர்களின் பெருமையை உயர்த்துவதால், உலகம் ஒளிர்கிறது என்ற பொருளில் அமைந்தது இக்குறட்பா.
பிறங்கிற்று என்பதற்கு 'மிக்கது', 'மிகுத்துக் கூறியது', 'உயர்ந்தது', 'பெருகிற்று', 'விளங்கிற்று', 'சிறந்தது', 'விளக்கமுற்றது', 'உயர்ந்து விளங்கும்' என்றவாறு பொருள் கூறினர். இவற்றுள் 'விளக்கமுற்றது' என்ற பொருள் சிறந்தது. அறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு’ நீத்தார் பெருமை உலகில் சிறந்து விளங்கியது என்ற உரை சிறக்கும்.

அதிகாரம் நீத்தார் பெருமை. அறம் பூண்டார் பெருமையென்பது நீத்தார் பெருமையைச் சுட்டும். ஆகவே, இக்குறட்கு தந்நலம்-பொதுநலம் இவற்றின் கூறுபாடுகளை ஆராய்ந்து கூடிவாழ்ந்து பொதுநலம் என்ற உயர்ந்த அறம் பூண்ட நீத்தாரின் பெருமை இவ்வுலகில் விளங்கித் தோன்றும் என்பது கருத்து.

'ஈண்டறம் பூண்டார்' குறிப்பது என்ன?

ஈண்டு என்ற சொல்லுக்கு இங்கு/ இவ்விடம் அல்லது இப்பொழுது என்பதுவே பொதுவான பொருள். அப்பொருள் கொண்டால் 'ஈண்டறம் பூண்டார்' என்பது 'இங்கு அறம் மேற்கொண்டவர்' என்றாகிறது. 'இங்கு' என்பதற்கு இவ்வுலகில் என்றும் இப்பிறப்பில் என்றும் விளக்கம் கூறினர். ஈண்டு என்பதற்கு இல்லறவியலில் எனவும் பொருள் கொள்ள இயலும். கு ச ஆனந்தன் 'உலக இயற்கையின் இருவேறு எதிரிடைத் தன்மைகளைத் தெரிந்து, தம் எண்ணம், சொல், செயல் அனைத்திலும் பெருகிய அறத்தையே அணியாகவும், வாழ்க்கை நெறியாகவும் மேற்கொண்டு ஒழுகுபவர் 'இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்' என்றார். இவர் உரைப்படி ஈண்டறம் என்பதற்கு பெருகிய அறம் என்பது பொருள். இச்சொல்லுக்கு 'மிகுந்த அறம்' எனவும் பொருள் கூறுவர். நாகை தண்டபாணி 'உயர்ந்த அறம்' எனப் பொருள் உரைத்தார். திரு வி க 'ஈண்டறம்' என்பதற்கு 'ஈண்டும் அறம் - கூடிவாழும் அறம்' எனப் பொருள் காண்பார். இதற்குச் சான்றாக 'கூளியுங் கூட்டமும்....ஈண்டலும்...' என்ற பிங்கலப் பகுதியையும், 'ஈண்டகன் கிடக்கை' என்னும் புறப்பாட்டுப் (19:1) பகுதியையும் மேற்கோள் காட்டுவார். இக்கருத்தை 'அறம் இன்னது என்பதை விளக்கும்போது மனமாசகன்று இயற்கைவழி நின்றொழுகுவோர் என்பதால் மாசகற்றி வாழும் இல்லறத்தானும் நீத்தார் ஆகக்கருதப்படுவர் என்பதை எண்ணச் செய்கிறது' எனப் பொருந்த விளக்குவார் தண்டபாணி தேசிகர். மனமாசகற்றி கூடிவாழும் இல்லறத்தானே அறவோர்- துறவோர் -நீத்தாராவர். எனவே இல்லற்றத்திலிருந்தே பொதுப்பணி ஆற்றுபவர்களையே அறம்பூண்டார் என்று இக்குறள் கூறுகிறது என்பது திரு வி க வின் கருத்து. 'ஈண்டறம் பூண்டார்' என்ற தொடர்க்கு 'இல்லறவாழ்வில் இருந்தே தந்நலம் நீத்துப் பொதுப்பணி ஆற்றும் அறவோர்' என்ற பொருள் கிடைக்கிறது.

'ஈண்டறம் பூண்டார்' என்றதற்கு இல்லறத்தில் கூடி வாழ்ந்திருந்தே அறத்தை வாழ்க்கைப் பணியாகக் மேற்கொண்டவர்கள் என்பது பொருள்.

இருவேறு நிலைகளை ஆராய்ந்து இல்லறவாழ்வில் இருந்தே தந்நலம் நீத்துப் பொதுப்பணி மேற்கொண்டார் பெருமையால் உலகம் விளங்கித் தோன்றுகிறது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நீத்தார் பெருமை உலகத்துக்கு ஒளி காட்டும் என்னும் குறள்.

பொழிப்பு

உலக இயற்கையின் இருவேறு நிலைகளை ஆராய்ந்து தெளிந்து அறம் மேற்கொண்டோர் பெருமையே உலகில் விளங்கித் தோன்றும்.