இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0022துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:22)

பொழிப்பு: பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.

மணக்குடவர் உரை: காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின் உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும்.
இது பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.

பரிமேலழகர் உரை: துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும்.
(முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.)

இரா சாரங்கபாணி உரை: பற்றற்ற துறவிகளின் பெருமைக்கு அளவு கூறின், அஃது உலகத்துப் பிறந்து இறந்தவர்களை எண்ணி அளவு காணப் புகுவது போல அரிதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.


துறந்தார் பெருமை துணைக்கூறின்:
பதவுரை: துறந்தார்-பற்றினை விட்டவர்; பெருமை-உயர்வு; துணை-அளவு; கூறின்-சொன்னால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின்;
பரிதி: காமக் குரோத லோப மோக மத மாச்சரியங்களையுந் துறந்தபேருக்கு உவமை கூறின்;
காலிங்கர்: இங்ஙனம் நீத்தாரது பெருமைக்கு உவமைகூறின்;
பரிமேலழகர்: இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்;

இப்பகுதிக்குப் பழைய ஆசிரியர்கள் 'துறந்தார் பெருமைக்கு உவமை கூறப் புகுந்தால்' என்ற பொருளில் உரை கூறினர். காலிங்கர் மட்டும் 'நீத்தாரது பெருமைக்கு உவமை கூறின்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'துறவிகளின் பெருமையை அளக்க முடியாது', 'முற்றுந் துறந்த அம்மகான்களின் பெருமை அளவிட முடியாதது. அதைக் கணக்கெடுப்பது', 'துறவிகளின் பெருமையை இவ்வளவினதென்று கூறலுற்றால்', 'தம் நலம் துறந்தவருடைய பெருமையை அளவிட்டுக் கூற முயன்றால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

'நீத்தாரது பெருமை இவ்வளவினது என்று சொல்லப்புகுந்தால்' என்பது இப்பகுதியின் பொருள்.

வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று:
பதவுரை: வையத்து-உலகத்தில்; இறந்தாரை-செத்தவரை; எண்ணி-எண்ணிக்கையிட்டு; கொண்டு-கொள்வது; அற்று-அத்தன்மைத்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும்.
மணக்குடவர் கருத்துரை: இது பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.
பரிதி: பூமியில் இறந்த செனனம் எத்தனையுண்டு அத்தனை அறிந்தால் அவர்கள் பெருமை அறியலாம் என்றவாறு.
காலிங்கர்: மற்று இவ்வுலகத்தின்கண் துறவாராகப் பிறந்து இறந்தாரை எண்ணிக்கொண்ட அவ்வளவிற்று என்றவாறு.
பரிமேலழகர்: இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும்.
பரிமேலழகர் கருத்துரை: முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.

பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிமேலழகரும் 'உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி அறிதல் போல' என்றும் பரிதி 'பூமியில் இறந்தோர் எத்தனை என்று அறிந்தால்' என்றும் காலிங்கர் 'இவ்வுலகத்தின்கண் துறவாராகப் பிறந்து இறந்தாரை எண்ணிக்கொண்ட அளவு' என்றும் இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகில் இறந்தவர்களை எண்ண முடியுமா?', 'உலகத்தில் எவ்வளவு மனிதர்கள் பிறந்து இறந்தார்கள் என்பதைக் கணக்கெடுக்கப் புகுவதற்கு ஒப்பாகும்', 'இவ்வுலகத்திலே இறந்தவர்களை எண்ணியளவிடக் கருதினாற் போலும்!', 'அது உலகத்தில் இறந்து போனவர்களை எண்ணிக் கூற முயன்றதை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

உலகத்தில் இறந்து போனவர்களை எண்ணிக் கொள்வதை ஒக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நீத்தார் பெருமையை இறந்தாரை எண்ணி அறிந்து கொள்க என்னும் பாடல்.

நீத்தாரது பெருமையை அளந்து சொல்வது, உலகத்தில் இறந்தவரை எண்ணிக் கொண்டு அற்று என்பது பாடலின் கருத்து.
'எண்ணிக் கொண்டு' என்பதன் பொருள் கணக்கெண்ணுதலா அல்லது நினைத்துப் பார்த்தலா?

துறந்தார் என்ற சொல்லுக்கு நீத்தார் என்பது பொருள்.
பெருமை என்றது சிறப்பு குறித்தது.
துணைக்கூறின் என்ற தொடர் அளவு சொல்ல வேண்டுமானால் என்ற பொருள் தரும்.
வையத்து என்ற சொல் உலகத்தில் எனப் பொருள்படும்.
இறந்தாரை என்ற சொல்லுக்கு இறந்தவர்களை என்று பொருள்.
அற்று என்ற் சொல் 'போல' என்ற பொருளது.

நீத்தார் பெருமையை அளவிட்டுக் கூறமுயல்வது இது வரையிலும் இந்த உலகத்தில் பிறந்து இறந்து போனவர்கள் எத்தனைபேர் என்று கணக்கிட முயற்சிசெய்வதை ஒக்கும்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் எனத் தொடங்குகிறது பாடல். இவ்வரியிலுள்ள துணைக்கூறின் என்ற தொடர்க்கு அளவு சொல்ல வேண்டுமானால் என்பது பொருள். துணை என்னும் சொல் அளவு என்ற பொருளில் இணைத்துணைத்து என்பதொன்று இல்லை; விருந்தின் துணைத் துணை வேள்விப் பயன்(விருந்தோம்பல் குறள் 87) (பொருள்: விருந்திடுதலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவுடையதென்று கூறமுடியாது. விருந்தினரின் தகுதியே அதற்கு அளவாகும்) என்று மற்றொரு குறட்பாவிலும் ஆளப்பட்டுள்ளது. எத்தனை-எத்துணை-எவ்வளவு; அத்தனை-அத்துணை-அவ்வளவு என்றபடி துணை என்பதற்கு அளவு என்று பொருள்.
எல்லாவற்றிலும் அவாவுற்று வாழும் மாந்தரிடம் பெருமைப்பட என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. நீத்தார் என்ற சொல் தந்நலம் துறந்தார் அல்லது தியாகி என்ற பொருளிலே இவ்வதிகாரத்தில் ஆளப்பட்டுள்ளது. அந்நீத்தார் பெருமையை அளவிட்டுச் சொல்ல வேண்டுமானால் அது இவ்வுலகத்தில் பிறந்து இறந்தாரை எண்ணிக் கொள்வது போல எனச் சொல்கிறது இப்பாடல். எக்காலத்திலிருந்து இறந்தவர் என்று குறிக்கப்படவில்லை ஆதலால் 'உலகம் தோன்றிய நாள் முதல் இதுவரை பிறந்து இறந்தாரை எண்ணி இவ்வளவினர் எனக் கண்டது போன்று' என விளக்கினர். இறந்தார் தொகைமேல் வைத்து நீத்தார் பெருமைக்கு வரம்பின்மை சொல்லப்பட்டது. இவ்வுலகத்தில் பிறந்து இறந்தார்க்கு அளவு உண்டாயின், அவர் பெருமைக்கும் அளவு உண்டு என்பது பெறப்படும்.
நீத்தார் பெருமை அளவிடற்கரியது; அவர்தம் பெருமையை நினைத்துத்தான் பார்க்க வேண்டுமேயல்லாமல் சொல்லால் அளக்க முடியாது என்பதும் கருத்து.

'எண்ணிக் கொண்டு' என்பதன் பொருள் கணக்கெண்ணுதலா அல்லது நினைத்துப் பார்த்தலா?

'எண்ணிக் கொண்டற்று' என்ற தொடர்க்கு இரண்டு வகையான விளக்கங்கள் உள்ளன.
பெரும்பான்மையோர் விளக்கமாவது, நீத்தார் பெருமை அளவில் அடங்காது என்று சொல்ல வந்த வள்ளுவர் அதற்கு உவமையாக இறந்தவர்களைக் கணக்கிட்டு அறிவதை ஒக்கும் என்பது. இறந்தவர்களை எண்ணித் தொகுத்தல் என்பது இயலாத செயல். விண்மீன்கள் எத்தனை என்றும் கடற்கரை மணல் எவ்வளவு என்றும் எண்ணிச் சொல்லமுடியுமா? இன்றுள்ள கணித அறிவு/அறிவியல் கருவிகள் மூலம் அவற்றைக் கணக்கிடுவதுகூட ஓரளவு இயலுமே. ஆனால் கடந்தகாலத்தில் இறந்தவர் எத்துணை பேர் என்று அறிவது எப்படி? அது முடியவே முடியாத செயல். துறந்தார் பெருமை அளவிட முடியாதது என்பது சொல்லப்படுகிறது.
இவ்வுலகத்தின்கண் துறவாராகப் பிறந்து இறந்தாரை எண்ணிக்கொண்ட அவ்வளவிற்று என்றும் உலகநலனுக்குத் தன் பங்களிப்பாக ஒன்றும் நல்காமல் மண்ணில் மறைந்தோரை நினைத்துப் பார்த்துத் தந்நலம் கருதாத சாதனையாளர்களான நீத்தார் பெருமையின் அளவைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் இறந்த நீத்தார் பெருமையை எண்ணி அவர்போல் செயற்கரிய செய்து புகழுடன் வாழவேண்டும் என்றும். இதுவரை இறந்தவரின் பெருமைகளை யெல்லாம் ஒருங்கிணைத்து எண்ணினால் எவ்வளவு பெருமை நலம் ஏற்படுமோ அத்தகைய பெருமையை உடையவர் நீத்தார் என்றும் துறந்தார் ஒருவரின் பெருமைக்குப் பலருடைய பெருமைகளை இணைத்து ஒப்புமை காணலே ஏற்புடையதாய்க் காணப்படுகிறது என்றும் கூறுவர் இரண்டாம் வகையினர்.
‘இறந்தாரை’ என்பதற்கு இறந்தவரின் பெருமைகளை எனப் பண்புப்பொருள் கொள்வதும் ஈண்டைக்கு இயையாது. ‘எண்ணிக் கொண்டற்று’ என்பதிலுள்ள எண்ணி என்பதற்கு நினைத்து எனக் கொள்ளாது ஒன்று இரண்டு முதலாக எண்ணலளவையாக எண்ணி எனக்கொண்ட உரையே பொருந்தும் என்றார் இரா சாரங்கபாணி.
இங்கு சொல்லப்பட்ட உவமை உச்சமான உயர்வுநவிற்சியாகும். இந்த அளவு வள்ளுவர் வேறு எப்பொருளையும் உயர்த்திப் பேசவில்லை.

இவ்வளவுபேர் என்று அளவிடும் கணித எண்ணுதலே 'எண்ணிக் கொண்டு' என்பதற்குப் பொருத்தமான பொருள்.

நீத்தாரது பெருமையை அளந்து சொல்வது, உலகத்தில் இறந்து போனவர்களை எண்ணிக் கொள்வதை ஒக்கும் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

நீத்தார் பெருமையைச் சொல்லால் அளக்க முடியாது.

பொழிப்பு

நீத்தார் பெருமை இவ்வளவினதென்று கூறுதல் இவ்வுலகத்திலே பிறந்து இறந்தாரை எண்ணி அளவு காணப் புகுவது போல.