இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0019தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:19)

பொழிப்பு: மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.

மணக்குடவர் உரை: தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின்.
இது தானமும் தவமுங் கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின்.
(தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.)

வ சுப மாணிக்கம் உரை: மேலுலகம் நீரை வழங்காவிட்டால் தானமும் தவமும் மறைந்து விடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வானம் வழங்கா தெனின் வியன்உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா.


தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்:
பதவுரை: தானம்-கொடை; தவம்-நோன்பு; இரண்டும்-இரண்டும்; தங்கா-உளவாகமாட்டா; வியன்-அகன்ற; உலகம்-நிலவுலகம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா அகன்ற வுலகத்துக்கண்;
பரிதி: தானம் தன்மம் தவசு உண்டாகா பூலோகத்தில்;
காலிங்கர்: தானமும் தவமும் ஆகிய இவை இரண்டும் இவ்உலகத்து நிலைபெறா;
பரிமேலழகர்: அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா;
பரிமேஎலழகர் விரிவுரை: தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.

தானம்,தவம் ஆகிய இரண்டு அறங்களும் அகனற உலகத்தின்கண் உளவாகா என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கண்டனர். பரிமேலழகர் தானத்திற்கும் தவத்திற்கும் விளக்கம் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இல்லறத்துக்குரிய தானமும் துறவறத்துக்குரிய தவமும் ஆகிய இரண்டும் நிகழமாட்டா', '(வானவர்க்குப் பூசை செய்வது மட்டுமல்ல) மனிதனுக்கு மனிதன் உதவி செய்யும் தான தர்மங்களும் மனிதன் தனக்கே நன்மையென்று செய்கின்ற தவமும் நடைபெறா', 'அகன்ற உலகத்திலே, பிறர்க்கு வேண்டுவன கொடுக்கும் கொடையும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் நிலைபெறமாட்டா ', 'இப்பெரிய உலகத்தில் கொடை தவம் (தன் துயர் தாங்கிப் பிறிது உயிர்க்குத் துன்பம் செய்யாமை) என்னும் இரண்டும் அவற்றைச் செய்வார் இல்லாமல் நீங்கும். ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தானம் கொடுத்தலும் தவம் செய்தலும் இவ்வகன்ற நிலவுலகின்கண் நிலைபெறா என்பது இப்பகுதியின் பொருள்.

வானம் வழங்கா தெனின்:
பதவுரை: வானம்-முகில்; வழங்காது-பெய்யாது; எனின்-என்றால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மழை பெய்யாதாயின்.
மணக்குடவர் கருத்துரை: இது தானமும் தவமுங் கெடுமென்றது.
பரிதி: மழை வழங்காவிடில் என்றவாறு.
காலிங்கர்: மற்றும் விண்ணுலகமானது மழையை வழங்காதாயின் என்றவாறு.
பரிமேலழகர்: மழை பெய்யாது ஆயின்.

'மழை பெய்யாவிட்டால்' என்று அனைத்து பழைய ஆசிரியர்களும் இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பரந்த உலகில் மழைபொழியாவிடில்', 'உலகத்தில் மழையில்லாவிட்டால்', 'மழை பெய்யாதாயின்', 'மழைபெய்யாது என்றால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

வானம் மழையைக் கொடுக்காவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறங்கள் தழைக்கவும் மண்ணுலகில் மழைபெய்தல் இன்றியமையாதது என்னும் பாடல்.

வானம் மழையைக் கொடுக்காவிட்டால் தானம் கொடுத்தலும் தவம் செய்தலும் இவ்வகன்ற நிலவுலகின்கண் நிலைபெறா என்பது பாடலின் பொருள்.
மழைக்கும் தானம், தவம் இவற்றிற்கும் உள்ள தொடர்பு என்ன?

தங்கா என்ற சொல்லுக்கு நிலைத்து நிற்கா என்பது பொருள்.
வியன்உலகம் என்ற சொல் விரிந்த உலகம் என்ற பொருள் தரும்.
வானம் என்பது வானிலிருந்து பொழியும் மழையை இங்கு குறிக்கும்.
வழங்காதெனின் என்பது நல்காவிட்டால் என்ற பொருளது.

'மழைபொழியாவிடில்' அகன்ற நிலவுலகில் கொடை, நோன்பு இரண்டும் உளவாகமாட்டா .

தவம், தானம் இவை இரண்டையும் இணைத்துக் கூறுதல் மரபாயிருந்துள்ளது.
.................................................................அதனினும் அரிது தானமும் ,தவமும் தான்
செய்தல் அரிது. தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி திறந்திடுமே.
என்றார் ஔவையாரும்.
சென்ற குறளில், மழை பெய்யாதாயின் தெய்வங்களுக்கு எடுக்கப்படும் விழாக்களும் வழிபாடுகளும், இல்லாமல் போகும் என்று சொல்லப்பட்டது. இல்வாழ்வார் அறங்களில் மேம்பட்டது தானம். துறந்தார் ஒழுக்கங்களிற் சிறந்தது தவம். தானம் என்பது வறியவர்களுக்கும் காணார், கேளார், கால் முடப்பட்டோர் முதலிய ஊனமுற்றோர்க்கும் வழங்குதல், தக்கார்க்குக் கொடுக்கப்படுவது போன்ற எல்லாவகை ஈகையையும் குறிக்கும். தவம் என்பது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு நோன்புகளால் உணவு சுருக்கல் முதலான முயற்சிகள் செய்வது. உலக நன்மைக்காக தவம் மேற்கொள்ளப்படும் என்பர். மழையின்றேல் இவை இரண்டும் நிகழமாட்டா. ஈகை, தவம் என்பன குறளில் தனித்தனி அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளன.
வியன் உலகம் என்பது அகன்று பரந்த உலகம் என்ற பொருள் தரும். வெறும் வியன்மை தானத்தையும் தவத்தையும் நிகழ்த்த வல்லதாகுமா? தானத்துக்கும் தவத்துக்கும் மழை தேவை. மழையின் மாண்பை விளக்க 'வியன்' என்றார். வியன் உலகுக்கும் மழை வேண்டும் என்றபடி (திரு வி க.).

தானம், தவம் என்ற இரண்டும் முறையே பிறர்க்கு உதவியாகவும் உலக நன்மை நாடியும் செய்யப்படுவன என்பர். உயர் மனித பண்பிற்கான வெளிப்பாடுகளான இவை அடிப்படையில் மழையினாலேயே அமைகின்றன என்று அவற்றின் மூலக் காரணத்தைச் சொல்லி, மழை இன்றிப் போனால் கேட்காமல் கொடுக்கும் தானமும், பசியை வெல்லும் தவமும் கூட பொய்த்துப் போகும் என்கிறது பாடல். நாமக்கல் இராமலிங்கம் தானம் கொடுக்கிற புண்ணிய எண்ணமும், தவம் செய்யவேணும் என்கிற ஆன்ம விசாரணையும் தோன்றா என இக்குறளுக்கு விளக்கம் செய்வார்.

மழைக்கும் தானம், தவம் இவற்றிற்கும் உள்ள தொடர்பு என்ன?

மழையே சமுதாயத்தினரின் பொருள்நிலைக்கு ஆதாரம். இதனால்தான் வறுமை நீக்கத்துக்கு மழை வேண்டுமென்று வான் சிறப்பு அதிகாரத்தின் பல குறள்கள் பகர்கின்றன. மழை இல்லையேல் உலகில் உணவு வளம் இல்லை. உணவு இல்லையேல் பிறருக்கு வழங்கும் பண்பும் வற்றிவிடும். தவம் மேற்கொள்வார் உயிர்வாழவும் இல்லறத்தாரையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. மக்கள் பொருள்நிலை சிறவாதிருக்கும்போது தானம் தவம் என்ற இவ்விரண்டு அறங்களும் தடைபடும். ஆகவே வறுமையுள்ளவிடத்தில் தானமும் தவமும் நிகழ்தல் அருமை. மழைபெய்து வறுமை யொழிந்து வளம் சிறக்கின் தானமும் தவமும் மீண்டும் நடைபெறும்.

பரந்த இவ்வுலகில் மழைபொழியாவிடில் தானமும் தவமும் ஆகிய இரண்டும் நிகழமாட்டா என்பது இப்பாடலின் பொருள்.அதிகார இயைபு

மழை இல்லையேல் சிறந்த மனிதப் பண்புகளும் மறையும் என்னும் வான்சிறப்பு பாடல்.

பொழிப்பு

வானுலகம் நீரை வழங்காவிட்டால் அகன்று விரிந்த இவ்வுலகில் தானமும் தவமும் மறைந்து விடும்.