இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0015கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:15)

பொழிப்பு: பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

மணக்குடவர் உரை: பெய்யாது நின்று எல்லாப் பொருளையுங் கெடுப்பதும் அவை கெடப் பட்டார்க்குத் துணையாய்த் தான் பெய்து பொருள்களெல்லாவற்றையும் அவ்விடத்தே யுண்டாக்குவதும் மழை.
இஃது இரண்டினையுஞ் செய்யவற்றென்றவாறு.

பரிமேலழகர் உரை: கெடுப்பதூஉம் - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச்சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை - இவை எல்லாம் வல்லது மழை.
('மற்று' வினை மாற்றின்கண் வந்தது, ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு என்றார்'. 'எல்லாம்' என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.)

இரா சாரங்கபாணி உரை: பெய்யாதும் மிகுதியாகப் பெய்தும் கெடுத்தலும் கெடுத்தவர்களுக்குத் துணையாய், அளவாய்ப் பெய்து வாழ வைத்தலும் ஆகிய எல்லாம் செய்வது மழை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம்:
பதவுரை: கெடுப்பதூஉம்-இடர் உண்டாக்குவதும்;; கெட்டார்க்கு-துயருற்றவர்க்கு; சார்வாய்-துணையாய்; மற்று-ஆனால்,பின்; ஆங்கே-அதுபோல; எடுப்பதூஉம்-மேலோங்குவிப்பதும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெய்யாது நின்று எல்லாப் பொருளையுங் கெடுப்பதும் அவை கெடப் பட்டார்க்குத் துணையாய்த் தான் பெய்து பொருள்களெல்லாவற்றையும் அவ்விடத்தே யுண்டாக்குவதும்;
பரிதி: வாழ்வாரைக் கெடுப்பதுவும், கெட்டாரை வாழ்விப்பதுவும்;
காலிங்கர்: தான் பருவத்து வழங்காது யாவரையும் கெடுப்பதுவும், அங்ஙனம் கெட்டார்க்குப் பின்னும் செலசார்வாகிய உறுதுணையாய் வந்து அப்பொழுதே உற்றார்க்கு நட்டார்போல எடுத்துக்கொண்டு பாதுகாப்பதுவும்; [செலசார்வு-நடைமுறை பற்றுக்கோடு]
பரிமேலழகர்: பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல எடுப்பதூஉம்;
பரிமேலழகர் விரிவுரை: 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது, ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு' என்றார்.

'மழை பெய்யாது நின்று வாழ்வாரைக் கெடுப்பதுவும் பின் அப்படிக் கெட்டாருக்குத் துணையாய் முன் கெடுத்தாற்போல பொருள்களையெல்லாம் உண்டாக்குவதும்' என்றபடி இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உழவர்களைக் கெடுக்கவும் துணைநின்று ஆக்கவும் வல்ல', 'பஞ்சத்தால் உலக மக்களைத் தவிக்கச் செய்வதும் அப்படித் தவிக்கின்றவர்களின் துன்பங்களை நீக்கித் துணை புரிந்து தூக்கி விடுவதும்', 'பெய்யாமலாவது மிகுதியாகப் பெய்தாவது கெடுதி செய்வதும், கெட்டுப் போனவர்கட்கு ஆதரவாய் நின்ற அவர்களை முன் கெடுத்த்து போலப் பின் வறுமையினின்று மேலெடுப்பதும்', 'உலகில் வாழ்வாரை அழிப்பதும் அழிந்தவர்க்குத் துணையாய் நின்று ஆக்குவதும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெய்யாமலும் மிகையாகப் பெய்தும் இடர் உண்டாக்குவதும் துயருற்றார்க்கு உதவியாய் மேலோங்குவிப்பதும் என்பது இப்பகுதியின் பொருள்.

எல்லாம் மழை:
பதவுரை: எல்லாம்-அனைத்தும்; மழை-மழை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மழை.
மணக்குடவர் கருத்துரை: இஃது இரண்டினையுஞ் செய்யவற்றென்றவாறு.
பரிதி: மழை.
காலிங்கர்: மழை.
பரிமேலழகர்: இவை எல்லாம் வல்லது மழை.
பரிமேலழகர் விரிவுரை: 'எல்லாம்' என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.

'இவை இரண்டினையிஞ் செய்ய வல்லது மழை' என்பது இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்களின் உரையாகும்.

இன்றைய ஆசிரியர்கள் 'பேராற்றல் உடையது மழை', 'மழைதான்', 'ஆகிய எல்லாஞ் செய்யவல்லது மழையாகும்.(மக்களைத் தாழ்விப்பதும் வாழ்விப்பதுஞ் செய்ய வல்லது மழையென்றவாறு)', 'செய்யவல்லது மழை' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அனைத்தும் வல்லது மழை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலகத்தை இயங்க வைக்கின்ற மழை சில சமயங்களில் இடர் உண்டாவதற்கும் காரணமாக உள்ளது என்று கூறும் பாடல்.

கெடுப்பதூஉம் துயருற்றார்க்கு உதவியாய் மேலோங்குவிப்பதும் இவை அனைத்தும் வல்லது மழை பாடலின் பொருள்.
மழை என்ன கெடுதல் செய்ய முடியும்?

கெட்டார்க்கு என்ற சொல்லுக்கு இடருற்றவர்களுக்கு என்பது பொருள்
சார்வாய் என்ற சொல் துணையாக அல்லது ஆறுதலாக் என்ற பொருள் தரும்.
ஆங்கே என்ற சொல் அதுபோல எனப்பொருள்படும்.
எடுப்பதூஉம் என்ற சொல்லுக்கு உண்டாகுவதும், வாழ்விப்பதும் என்றவாறு பொருள் கூறினர்.
எல்லாம் மழை என்ற தொடர்க்கு அனைத்தும் மழை என்று பொருள்.

மாந்தர்க்கு இடர் உண்டாக்குவதும் அப்படித் துன்பபட்டவர்களுக்குத் துணை நின்று தூக்கிவிடுவதும் மழையே.

கெடுப்பது என்றதற்கு பெய்யாது கெடுப்பதையும் மிகுதியாகப் பெய்து கெடுத்தலையும் சொல்வர். மழை போதிய அளவு பெய்யாவிட்டாலும் மிகுதியாகப் பெய்தாலும் உடனடிப் பாதிப்பு உழவர்களுக்குத்தான். பின் இந்நிகழ்வுகள் தொடர்ந்தால் விளைச்சல் இன்றி உலக மாந்தர் அனைவரும் இடர்ப்படுவர்; மற்ற உயிரினங்களும் துன்புறும்.
'ஆங்கு' என்பது உவமை குறிக்க வந்த சொல்; அது 'போல' என்னும் பொருள் தருவது. எடுப்பது என்னும் தொழிலுக்கு மாறாகிய கெடுப்பது என்னும் மறுதலைத் தொழிலை உவமையாக, முன் கெடுத்தாற்போல என 'ஆங்கு' என்பது குறிக்கிறது. ஆதலால், 'ஆங்கு' என்பது 'அதுபோன்று அல்லாமல்' என்ற பொருள் தருமாறு வந்தது என்பது பரிமேலழகரின் விளக்கவுரை.
எடுப்பதூஉம் என்பதற்கு காலத்தில் பெய்தும் வேண்டாக் காலத்திற் பெய்யாமலும் அளவாகப் பெய்தும் கெட்டவர்களுக்குக் கொடுத்து அவர்களை உயர்த்தி வைப்பதும் என்பதாகப் பொருள் கொள்வர். வாடிய உயிர்களை வாழவைக்கும் வலிமை கொண்டதும் மழைதான்
எடுப்பதூஉம் எல்லாம் என்பதை கெடுப்பது எல்லாம் எடுப்பது எல்லாம் என்று வாசித்தல் வேண்டும் என்பார் திரு வி க.
எல்லாம் மழை என்ற தொடர் மழையின் ஆற்றலைச் சுருங்கக் கூறி விளங்க வைக்கிறது. 'மழை பெய்தும் கெடுக்கும் பெய்யாமலும் கெடுக்கும். அம்மழையே உயிர்களுக்கு வாழ்வளிப்பதும் ஆகும் என்று கூறப்படுவதால் இவை அனைத்தும் மழையினது விருப்பத்திலும் கட்டுப்பாட்டிலும் இருப்பதாக அமைகிறது இப்பாடல். மழை பெய்யாததினால் எல்லோரையும் இடர்பாடுகளுக்கு உள்ளாக்குவதினாலும் அவ்வாறு துன்பங்கள் உற்றவர்களைப் பிறிதொரு நேரம் பெய்து வாழவைப்பதும் எல்லாமே மழை என்று கூறி, முழு வல்லமையையும் மழையின் மேலேற்றிக் கூறியுள்ளதினாலே உயிரினங்களின் வாழ்வும் தாழ்வும் மழையின் விருப்பப்படி என்பது விளங்கும். “எல்லாம்” என்ற சொல் அந்தக் கட்டுப்பாட்டை இயற்கையின் அதாவது மழையின் ஆணைக்குக் கட்டுப்பட்டதாக ஆக்குகிறது..
வறப்பின் தருவாரும் இல்லை; மாரி அதனைச் சிறப்பின் தணிப்பரும் இல் (நாலடி 104) என்ற நாலடியார் பாடலும் 'மழையைத் தருகின்ற ஆற்றலுடையாரும் தொடர்ந்து பெய்யுங்கால் அதைத் தடுத்து நிறுத்துவாரும் இல்லை என்று இப்பாடலின் கருத்தையே எதிரொலிக்கிறது.
சுகாத்தியர் (Scott) என்ற குறளுரையாசிரியர் 'எல்லாம் எனது எனது என்றிருக்கும் மனிதன் செருக்கினை மழை பெய்யாமல் நின்று அடக்கி உணர்த்துகிறது' என்று மெய்ப்பொருள் விளக்கமாக இப்பாடலுக்கு உரை வரைந்தார்.
மழை இயற்கையின் வல்லமையைச் சொல்கிறது; அது இறைவனின் மொழிகளில் ஒன்று எனவும் கூறுவர்.

மழை என்ன கெடுதல் செய்ய முடியும்?

மழையைத் தெய்வமாக மதிப்பவர்கள் நம் மக்கள். மாரியம்மன் என்ற மழைக்கடவுளை வெகு காலமாக சிறப்புடன் வழிபட்டு வருகின்றோம். மாரி என்ற சொல்லுக்கு மழை என்பதுவே பொருள். மழை எப்படிக் கெடுதல் செய்ய முடியும்?
கெடுப்பதூஉம் மழை என்கிறது இப்பாடல். கெடுப்பது என்றால் எதனால் கெடுப்பது என்று குறிப்பாகச் சொல்லப்படவில்லை. கெடுப்பது அல்லது கேடுஉண்டாக்குவது எதனாலும் இருக்கலாம். விண்ணின்று பொய்ப்பின்............ என்று முன்னர் குறள் எண் 13-இல் கூறப்பட்டது. மழை இன்மையால் வரும் கெடுதல் தவிர்த்து மிகுபெய்தலாலும் விளையும் கேட்டையும் இப்பாடல் சொல்கிறது எனக் கொள்ளவேண்டும்.
பருவகாலத்தில் பெய்யாது பஞ்சத்தால் உலக மக்களைத் தவிக்கச் செய்வதும், மிகுதியாகப் பெய்து வெள்ளப்பெருக்கால் அறுவடைக்குக் காத்திருக்கும் வயல் பயிரை அழித்தும் பயிருக்குப் பதிலாக மணல்திட்டுகளை வயல்வெளிகளில் குவித்தும் கெடுதல் உண்டுபண்ணுவதும் மழையே. பெருமழையால் உயிர், சொத்து ஆகியவற்றையும் அழித்துக் கேடு விளைவிக்கவல்லது.
கெடுப்பது என்றதற்கு தேவநேயப் பாவாணர் 'பெய்யாது நின்று பண்பாட்டிலும் தொழிலிலும் மக்களைக் கெடுப்பது' என்று சிறப்புரை தந்து 'தனக்கு மிஞ்சித் தானம்' ஆதலால், வளமில்லாக் காலத்தில் வள்ளன்மை இல்லாதாரின் பண்பாடு கெடுவதும், விளை பொருளும் கருவிப் பொருளும் இல்லாக் காலத்தில் வணிகர், கைத்தொழிலாளர் ஆகியோரின் தொழில் கெடுவதும் இயல்பு' எனக் கேடு எவ்வெவ்வகையில் மாந்தர்க்கு உண்டாகிறது என்பதை விளக்கினார்.

பொழியாது அல்லது மிகையாகப் பொழிந்து கெடுதல் செய்வதும், பிறகு வளத்தை எடுத்துக் கொடுப்பதும் மழையே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வாழவைப்பதும் தாழ்வுக்கு வழியாவதும் மழையே என்னும் வான்சிறப்பு பா.

பொழிப்பு

பெய்து கெடுப்பதும் கெடுத்தவர்களுக்குத் துணையாய்ப் பெய்து வாழ வைத்தலும் ஆகிய எல்லாம் செய்வது மழை.