இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0007



தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:7)

பொழிப்பு (மு வரதராசன்): தனக்கு ஒப்புமை இல்லாதவனுடைய திருவடியைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

மணக்குடவர் உரை: தனக்கு நிகர் இல்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கு அல்லது மனத்துண்டாம் கவலையை மாற்றுதல் அரிது.
வீடு பெறுதலாவது 'அவலக் கவலைக் கையாற்றின்' நீங்கிப் புண்ணிய பாவம் என்னும் இரண்டினையும் சாராமல் சாதலும் பிறத்தலும் இல்லாததொரு தன்மையை எய்துதல். அது பெறும் என்பார். முற்படக் கவலை கெடும் என்றார்; அதனால் எல்லாத்துன்பமும் வருமாதலின்.

பரிமேலழகர் உரை: தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது.
("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: எவ்வகையாலும் தனக்கு ஒப்புமை இல்லாதவனின் திருவடியை இடையறாது நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு மனக்கவலையை விலக்க முடியாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

பதவுரை: தனக்கு-தனக்கு; உவமை-ஒப்பு; இல்லாதான்-இல்லாதவனது; தாள் சேர்ந்தார்க்கு--அடி அடைந்தவர்க்கு, இடைவிடாது நினைந்தவர்க்கு; அல்லால்-அன்றி; மனக்கவலை-மனத்தின்கண் நிகழும் துன்பம்; மாற்றல்-மாற்றுதல், நீங்குதல்; அரிது-அருமையானது, கடினம்.


தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு நிகர் இல்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கு அல்லது;
பரிதி: தனக்கு ஒருவரும் நிகர் இல்லாதவன் ஸ்ரீபாதத்தைச் சேராதவர்;
காலிங்கர்: எவ்வுயிக்கும் உயிர்பொருள் ஆகின்றவனாகிய முதற்பொருளாம் தன்மைக்கு இணையில்லாதவன் தனது அடியினை உண்மையாகச் சேர்ந்தவர்க்கு அல்லது;
பரிமேலழகர்: ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது;

'தனக்கு நிகர் இல்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கு அல்லது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உவமை கடந்தவன் அடியை நினைந்தாலன்றி', 'தனக்கு நிகரில்லாதவனாகிய பகவானைப் பணிந்தால்தான் நாம் ஓரளவேனும் ஆசைகள் குறைந்து மனக் கவலை இல்லாமல் இருக்கலாம்', 'எவ்வகை நலத்திலும் தனக்கு நிகரில்லாத கடவுளுடைய திருவடிகளை அடைந்தவர்களுக்கல்லாது', 'தனக்கு ஒப்பில்லாதவன் எனப்படும் கடவுளுடைய அடிகளை அடைந்தவர்க்கு அல்லாமல்' என்ற பொருளில் உரை தந்தனர்.

தனக்கு ஒப்புமை இல்லாதவனின் திருவடியை இடைவிடாது நினைப்பவர்க்கு அல்லாமல் என்பது இப்பகுதியின் பொருள்.

மனக்கவலை மாற்றல் அரிது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனத்துண்டாம் கவலையை மாற்றுதல் அரிது.
மணக்குடவர் குறிப்புரை: வீடு பெறுதலாவது 'அவலக் கவலைக் கையாற்றின்' நீங்கிப் புண்ணிய பாவம் என்னும் இரண்டினையும் சாராமல் சாதலும் பிறத்தலும் இல்லாததொரு தன்மையை எய்துதல். அது பெறும் என்பார். முற்படக் கவலை கெடும் என்றார்; அதனால் எல்லாத்துன்பமும் வருமாதலின். [அவலம்-வருத்தம் தோன்றி நிற்றல்; கவலை-யாது செய்வல் என்றல்]
காலிங்கர்: மற்றி யாவர்க்கும் தமது நெஞ்சத்துக் கவலை நீக்குதற்கு அரிது.
பரிதி: மனத்துயரம் மாற்றுவார் அல்லர். அவர் மனத்துயரம் மாற்றமாட்டார்.
பரிமேலழகர்: மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது.
பரிமேலழகர் குறிப்புரை: "உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.

'தமது நெஞ்சத்துக் கவலை நீக்குதற்கு இல்லை' என்றபடி இப்பகுதிக்கான பழம் ஆசிரியர் உரைகள் அமைந்தன.

இன்றைய ஆசிரியர்கள் 'மனக்கவலையை மாற்றமுடியாது', 'இல்லாவிட்டால் மனக் கவலைகளை மாற்றிக் கொள்ள முடியாது', 'மற்றவர்களுக்கு மனக்கவலையை யொழித்தல் கூடாது', '(பிறரால்) மனத்தின் கண் தோன்றும் கவலைகளைப் போக்க முடியாது', என்ற பொருளில் உரை தந்தனர்.

மனக்கவலையை மாற்றுதல் கடினம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தனக்கு ஒப்புமை இல்லாதவனின் திருவடியை இடைவிடாது நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்களுக்கு மனக்கவலைகளை மாற்றுதல் கடினம் என்பது பாடலின் பொருள்.
கடவுளை நினைப்பதால் மனக்கவலை எவ்விதம் மாறும்?

உவமைகளுக்கு அப்பாற்பட்ட, எல்லாம்வல்ல, இறைவனால் மட்டுமே தீராக் கவலைகளுக்கு மாற்றம் தர முடியும்.

தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனை இடைவிடாது சிந்திப்பவர்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் எளிதல்ல.
ஒப்பார் மிக்கார் இல்லாத தனித்த பொருள் இறை. அது இன்ன தன்மையினது என்று உரைக்கத்தக்க உவமைகளுக்கு அப்பாற்பட்டது. கடவுளுக்கு உவமையாக எதையுமே கூறமுடியாது. தனக்கு நிகராக வேறு எவருமில்லை என்ற பெருமை பொருந்தியவன் அவன். அவனை நினைப்பவர்கள் மனவருத்தம் நீங்கப் பெறுவர்; நினைக்காதவர்களுக்கு மனக்கவலையை நீக்குதல் கடினம் என்று கூறப்பட்டது.

திருக்குறள் பக்தியின் சிறப்பும் ஆன்மீகப் பயனும் கூறும் நூல் அல்ல. ஆனால் இக்குறள் கடவுளை அடைக்கலம் அடைந்தவரைத் தவிர மற்றவர்க்கு மனக் கவலைகளை நீக்குதல் அரிது என்று சொல்வதால் இறைவனை நாடுவோர் மட்டுமே துன்பத்தினின்றும் நீங்கப் பெறுவர் என வள்ளுவர் உணர்த்தினார் என்றுமாகிறது. இப்பாடலை நுனித்து நோக்கும்போது ஒருவகையில் இது ஊழின் பெருவலியையே சொல்வது போல் தோன்றுகிறது. இதனால்தான் தனக்கு உவமை இல்லாதான் என்று, எல்லாம் வல்ல தன்மை புலப்படும்படி கடவுளை இங்கு குறிக்கிறார் வள்ளுவர். இதை உணர்ந்தே பரிமேலழகரும் தமது உரையில் நாலடியார் பாடல் ஒன்றைத் தொட்டுக் காட்டுகிறார். அப்பாடல்:
ஈண்டு நீர் வையத்துள், எல்லாரும், எள்துணையும்
வேண்டார்மன், தீய; விழைபமன், நல்லவை;-
வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பால
தீண்டாவிடுதல் அரிது.
(நாலடியார்.109 பொருள்: மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில், யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாதொழிதல் இல்லை. ஒருவன் எய்துதற்குரிய இன்பதுன்பங்கள் அவனைச் சென்றடையாமல் நீங்குதல் இல்லை).

வேண்டுதல்‌ வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு யாண்டும்‌ இடும்பை யில (4) அதாவது இறைவனடி சேர்ந்தார்க்குத் துன்பம் இல்லை என்று இவ்வதிகாரத்து மற்றொரு குறள் கூறுகிறது. இப்பாடலில் (7) அவனது அடி சேராதார்க்கு மனக்கவலை மாற்றல் கடினம் எனச் சொல்லப்படுகிறது.
குடும்ப - சமூக அழுத்தங்கள், பொருள் குறைபாடு, உடல்நோய் போன்ற பல காரணங்களால் மனக்கவலை எழலாம். பகை-சினம்-அழுக்காறு ஆகிய குணங்களால் விளைந்த சிதைந்த எண்ண ஓட்டங்களாலும் கவலைகள் ஏற்படும். சில சமயங்களில் தீயூழ் எதிர்பாராமல் வந்து தாக்கும்போது நாம் நிலை தடுமாறி திகைத்து நிற்க நேரிடுவதை உணர்வோம். அது சமயம் மனத்தின்கண் வருத்தம் தோன்றி நின்று கவலைகள் சூழ்வது இயற்கை. யாது செய்வேன் என்று துயர் உறுகிறோம். அத்துயரினின்று நீங்க பலவழிகளிலும் முயல்கிறோம். பலரைச் நாடிச் செல்கிறோம். ஆனாலும் ஒரு பயனும் ஏற்படாமல் போகிறது. எவ்வழி முயன்றாலும் மனக்கவலை விலகாதபோது, எல்லாருக்கும் மேலாக அவனுக்கு மேல் எவரும் இல்லாதவனாக உள்ள இறைவனிடத்தில் அடைக்கலம் புகுந்தால்தான் அந்த மனக்கவலை மாறும் எனச் சொல்கிறார் வள்ளுவர். அது போன்ற சமயங்களில் 'இறைவனைது தாள் சேர் அதாவது கடவுளை மறவாமல் நினைத்துக் கொண்டே இரு; அது ஒன்றுதான் துன்பத்திலிருந்து மீட்சி தந்து கவலைகளையும் போக்கும்' என்கிறார்.
'அரிது' என்ற சொல்லாட்சி மற்றவர்களால் தீர்வு காண்பது கடினம் என்பதைத் தெரிவிப்பது. பின்வரும் ஆள்வினை, பெருமுயற்சி போன்ற அதிகாரங்களில் ஊழையும் உப்பக்கம் காண வழி சொல்வார் வள்ளுவர். எனவேதான் இயலாது என்று கூறாமல் கவலை மாற்றல் அரிது எனக் கூறினார்.

கடவுள் அடி சேர்ந்தார்க்கு மனக்கவலை இல்லை என்பதுடன், இறைவனடி சேராதார்க்கு மனக்கவலை உண்டு என்றவாறும் குறள் அமைந்துள்ளது. அப்படி ஏன் சொல்லப்பட்டது? இதற்கு சொ. தண்டபாணிப்பிள்ளை தரும் விளக்கம்: 'இறைவனடி. சேராதார்க்கு மனக்கவலை எய்‌துமென்பது என்னை என்றார்க்கு, அவர்‌ அறநெறியிற்‌ செல்லும்‌ ஆற்றல்‌ இலராய்வழீ இப்‌பிறநெறி புகுந்து பாவக்‌ கடலில்‌ விழுந்து தம்மைச்‌ தாங்கிச்‌ கரைசேர்க்கவல்லான்‌ ஒருவனது துணையைப்‌ பெறுதற்குக்‌ கூடாமை பற்றிச்‌ துன்புறுவராதலின்‌ என்பது வருங்‌ குறள்‌.'

தண்டபாணி தேசிகரின் 'இவ்வதிகாரத்து (கடவுள் வாழ்த்து), 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்' என்ற குறிப்பு இங்கு எண்ணத் தகுந்தது.

கடவுளை நினைப்பதால் மனக்கவலை எவ்விதம் மாறும்?

மனக் கவலையைப் போக்க நாம் என்ன செய்கிறோம்? மனதிலே வலி தோன்றும்போது நம் நண்பர்களிடமோ, சுற்றத்தினரிடமோ அல்லது நமக்குப் பழக்கமானவர்களிடமோ சென்று அவர்கள் கூறும் வழி முறைகளில் அந்த வலியைப் போக்க முயல்கிறோம். நமது மனக்கவலையை நீக்க, உலகில் அவர் இவர் எனத் தேடி அலைவது ஓரளவே பயனளிக்கலாம். தியானம் அல்லது யோகப் பயிற்சி ஆகியன ஒருவரது கவனத்தைத் திசை திருப்புமே தவிர, அவற்றால் மனக்கவலை தீராது. இன்னும் சிலர் கள்ளுண்ணல் போன்ற தீயபழக்கங்களுக்கு அடிமையாகி மன வேதனைகளை விலக்க முயன்று சீரழிவர்.
வாழ்க்கையில் மனக்கவலைகளை உண்டாக்கும் சில சிக்கல்களுக்குக் காரணம் தெரிவதில்லை. ஒருவருடைய விருப்பு வெறுப்புகளுக்கோ செயற்பாடுகளுக்கோ எத்தகைய தொடர்பும் இல்லாமல் நிகழ்வுகள் நடந்தேறிவிடுகின்றன. இவை ஊழின் வலியால் நிகழ்வன. மனிதனால் மாற்ற முடியாத மாபெரும் ஆற்றலினால் நேர்வன. இவற்றிற்கு அறச்செயல்களாலோ பொருட்செலவுகளாலோ தீர்வு காணுதல் இயலாது. மற்றவர்கள் மூலமோ தாங்களே கண்டறிந்த வழிமுறைகள் மூலமோ கிடைக்கப் பெறும் பயன் ஒன்றும் இல்லை. எவ்வளவுதான் முயன்றாலும் கவலைகள் தீராதவையாகவே உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் கவலையுற்றோர் மன நலம் பெறுவதற்கு கடவுளின் மேல் நம்பிக்கை வைத்துத் தொழுதல் என்பது ஒன்றுதான் வழி என்கிறது இப்பாடல்.
கடவுள் நம்பிக்கை உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுகின்றது; மனம் தூய்மையாக இருந்தால் கவலைகள் நீங்கிப்போகும். கடவுளது திருவடிகளைச் மறவாமல் நினைக்கும் போதே, மனம் ஒரு பண்பட்ட நிலையைக் கடக்கிறது; அது மேலும் உயர்ந்து, மனக்கவலை இன்மை என்னும் நிலையை அடைகிறது. அந்த நிலையில் துன்பமும் அதன் விளைவான கவலையும் மறைந்துவிடும். உலக வாழ்க்கையில் நமக்கு உண்டாகின்ற மனக்கவலைகளை மாற்றவேண்டுமாயின் கடவுளை மறவாது நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

'மனக்கவலை மாற்றல்' என்று குறள் சொல்கிறது. 'மாற்றல்' என்ற சொல்லுக்கு மாற்றுதல், நீக்குதல், ஒழித்தல், போக்கடிப்பது, போக்குதல், விலக்குதல், போக்கிக் கொள்வது, மாற்றிக் கொள்தல், விடுபடல். என்று உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.
கடவுளைத் தொடர்ந்து நினைந்து கொண்டிருப்பது மாந்தர் தம்‌ மனதில்‌ கிளைக்கும் கவலைக்கு மாற்றலாக அமையும். கடவுளை நினைப்பவர் கடவுளே தம்முடன் இருப்பதாக - தம் பக்கம் இருப்பதாக உணர்வர். அப்பொழுது அவரது மனம்உரம் பெறும். உரம் பெற்ற மனம் பெறுவதால் எந்தவிதமான கவலையும் தானாகாவே மாறி மறைந்து உளநலம் உண்டாகும்.

தனக்கு ஒப்புமை இல்லாதவனின் திருவடியை இடைவிடாது நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்களுக்கு மனக்கவலைகளை மாற்றுதல் கடினம்என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கடவுள்வாழ்த்துச் சொல்வதன் பெரும்பயன் மனக்கவலைக்கு மாற்றாவது.

பொழிப்பு

தனக்கு எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாதவனுடைய தாளை நினைப்பவர்களுக்கு அன்றி மற்றவர்களுக்கு மனத்தில் உண்டாகும் துன்பங்களை மாற்ற முடியாது.