இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0006



பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:6)

பொழிப்பு (மு வரதராசன்): ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

மணக்குடவர் உரை: மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நெகிழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்?
இது சாவில்லையென்றது.

பரிமேலழகர் உரை: பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.
(புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)

நாமக்கல் இராமலிங்கம் உரை: பஞ்சேந்திரிய ஆசைகள் என்பதே இல்லாத இயல்பினன் பகவான் பொய்த்தல் இல்லாத அந்த இயல்பை உணர்ந்து அதற்கான நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து நடக்கின்றவர்கள் அந்த இயல்பின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரம் ஆவார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார்.

பதவுரை: பொறி-ஐம்பொறி (மெய்,வாய்,கண்,மூக்கு,செவி); வாயில்-வழி; ஐந்து-ஐந்து (இங்கு ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகிய ஐந்து புலன்களைக் குறிக்கும்); அவித்தான்-பண்படுத்தியவன், பக்குவப்படுத்தியவன், அறுத்தவன், அழித்தவன்; பொய்-மெய் அல்லாதது; தீர்-நீங்கிய; ஒழுக்கநெறி-ஒழுக்கமுறை; நின்றார்-நின்றவர்; நீடு-நெடிது; வாழ்வார்-நன்கு வாழ்வார், நிலைபெற்றிருப்பவர்.


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார்::

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறிகளின் வழியாக வரும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐந்தின்கண்ணுஞ் செல்லும் மன நெகிழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே;
பரிதி: சத்த பரிச ரூப ரச சுத்தம் என்கிற பொறியை வழியாக உடையவற்றிற்கு மனசைப் போக்காமல் காக்க வல்லார்;
காலிங்கர்: சுவை,ஒளி, ஊறு,ஓசை, நாற்றம் என்கின்ற ஐம்பொறிகளை நுகர்வதற்கு வழிக்கருவியாகிய மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என்கிற ஐம்பொறிகளையும் அகத்தடக்கியவன் இறைவனது உபதேசமுறைமையாகின்ற நல்லொழுக்கத்தின் கண் வழிப்பட்டு நின்றவர்;
பரிமேலழகர்: மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார்;
பரிமேலழகர் குறிப்புரை: புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல.

'பொறிவாயில் ஐந்தவித்தான்' என்றதற்கு மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தான் என்றபடியே அனைத்து பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ஆனால் அவன் யார் என்பதைச் சொல்வதில் இவர்கள் வேறுபடுகின்றனர். மணக்குடவரும், பரிமேலழகரும் ஐந்தவித்தான் என்ற சொல்லுக்குக் கடவுள் எனப் பொருள்படும்படியாக உரை காண்கின்றனர். பரிதி 'புலன்களைக் 'காக்கவல்லார்' என்ற பொருள்படும்படி உரை செய்திருப்பதாலும் காலிங்கர் 'ஐம்பொறிகளையும் அகத்தடக்கியவன், (கடவுள் கூறிய நல்லொழுக்க நெறியில் நின்றவர்)' என்று மொழிந்ததாலும் இவர்கள் இருவரும் ஐந்தவித்தான் என்பது மனிதர்களைக் குறிப்பதாகிறது. 'மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார்' என்றதற்கு இறைவனது ஒழுக்க நெறியிலே நின்றார் என்று மணக்குடவரும் பரிமேலழகரும் கூறுகின்றனர். காலிங்கர் 'இறைவனது உபதேசமுறைமையாகின்ற நல்லொழுக்கத்தின் கண் வழிப்பட்டு நின்றவர்' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஐம்புலனையும் அழித்தவனது மெய்ந் நெறியைக் கடைப் பிடித்தவர்', 'ஐம்பொறிகளின் வழியாக எழும் ஐவகை அவாவும் அற்றவனது மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர்', 'ஐம்பொறிகளின் வழியாக எழும் ஐந்துவகை ஆசைகளும் இயல்பாகவே இல்லாது அடங்கப்பெற்ற கடவுளை யடைதற்குரிய நிலைபெற்ற நல்லொழுக்க முறையைப் பற்றியவர்கள்', 'மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாகவுடைய ஐந்து விருப்பங்களையும் கெடுத்தவனாகிய கடவுளின் பொய்யை நீக்கிய ஒழுக்கவழியின்கண் தவறாது நின்றவர்கள்' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஐம்பொறிகளின் வழியாக எழும் ஐவகை அவாவினையும் பக்குவப்படுத்தியவனாகி, மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நீடுவாழ் வார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: நெடிது வாழ்வார்.
மணக்குடவர் குறிப்புரை: இது சாவில்லையென்றது.
காலிங்கர்: முத்தராவர். [முத்தர்- வினைக்கட்டிலிருந்து விடுபட்டவர்]
பரிதி: இகபரம் இரண்டிலும் நெறிநின்று அநேக காலம் வாழ்வர் என்றவாறு. [இகபரம்-இம்மை, மறுமை]
பரிமேலழகர்: பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது.

நெடிது வாழ்வார் என்ற பொருளில் மணக்குடவரும் பரிதியாரும் உரை கூறினர். 'இகபரம் இரண்டிலும்' என்றதால் பரிதியார் உரை இம்மை மறுமை இரண்டிலும் அநேக காலம் வாழ்வார் என்றவாறு அமைந்துள்ளது. காலிங்கர் 'முத்தராவர்' என்கிறார். பரிமேலழகர் 'பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்' என்றுரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெடுங்காலம் வாழ்வர்', 'நெடிது வாழ்வார்', 'எக்காலத்தும் செவ்விதின் வாழ்வார்கள்', 'எக்காலத்தும் வாழ்வார்கள்', என்ற பொருளில் உரை தந்தனர்.

நெடுங்காலம் நன்கு வாழ்வார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஐம்பொறிகளின் வழியாக எழும் ஐவகை அவாவினைப் பக்குவப்படுத்தியவனாகி, பொய்தீர் ஒழுக்க நெறியில் நிற்பவர், நெடுங்காலம் வாழ்வார் என்பது பாடலின் பொருள்.
'பொய்தீர் ஒழுக்க நெறி' குறிப்பது என்ன?

ஒழுக்கத்தின்வழி நின்று கடவுள் வணக்கம் செய்க.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஐம்பொறிகளின் வழியாக ஏற்படும் உணர்வுகளைப் பக்குவப்படுத்தியவனாகி, மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர், நெடுங்காலம் இவ்வுலகின்கண் நெடுங்காலம் இனிது இருப்பர்.

பொறிவாயில் ஐந்தவித்தான்
பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது மெய்வாய்‌ கண்‌ மூக்குச்‌ செவி என்னும்‌ ஐம்பொறிகளின்‌ வழியாக வரும்‌ ஊறு, சுவை, ஒளி, நாற்றம்‌, ஒசை என்னும்‌ ஐந்து புலன்களின் இயக்கத்தை முறைப்படுத்தி, நெறிப்படுத்தி வாழ்ந்தவன் எனப் பொருள்படும்.
இக்குறளில் சொல்லப்பட்டுள்ள ஐந்தவித்தான் இறைவனே என்று ஒரு சாராரும் மனிதர்தான் என்று மற்றொரு சாராரும் கூறுவர். ஐந்தவித்தான் என்பதை அடுத்து 'பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார்' என்ற தொடர் வருகிறது. இந்த இரண்டாவது தொடரை விளக்குவதற்காகவே முதலில் உள்ள ஐந்தவித்தான் என்பதற்கு இறைவன் என்று பொருள் கூறினர் எனத் தோன்றுகிறது. இவ்விரண்டையும் இணைத்து இறைவன் சொன்ன நெறிகள் என்று கொண்டு ஐந்தவித்தானாகிய இறைவன் கூறிய நெறிகள் என்று செய்யுள் படைக்கப்பட்டதாகப் பலரும் கூறுவர். இவர்கள் கூற்றுப்படி ஐந்தவித்தான் என்ற சொல் இறைவன் குறித்தது ஆகும். இறைவன் அதாவது கடவுள் என்னும்போது உருவம், அருவம், அருவுருவம் எல்லாவற்றையுங் கடந்தவன்; அவன் பிறப்பிறப்பு இல்லாதவன் என்றே புரிந்து கொள்கிறோம். இப்படிப்பட்ட இறைவனுக்கு பொறிகள்-புலன்கள் உண்டா? அவனுக்குப் பொறி/புலன் இருக்க முடியாது. பொறி/புலனேயில்லாத ஒன்றைப் புலனை அவித்தவன் என்று சொல்ல இயலாது. ஐந்தவித்தான் என்பது இறைவனுக்குப் பெருமை சேர்க்கும் சொல் அல்ல; அது எந்தவகையிலும் அவனுக்குப் பொருந்தாது. எனவே ஐந்தவித்தான் என்ற சொல் இறைவனைச் சுட்டுவது அல்ல. வேறு சிலர் அடியார்களின் அவாவை அடக்குகின்ற இறைவன் என்றும் ஐந்துவகை ஆசைகளும் இயல்பாகவே இல்லாது அடங்கப் பெற்ற கடவுள் என்றும் கூறினர். இவையும் இச்சொல்லை விளங்கவைப்பதாக இல்லை.
அடுத்து, ஐந்தவித்தான் என்பது மனிதனாகப் பிறந்து ஐம்பொறிகளையும் அவற்றினால் உண்டாகும் ஐம்புலன்களையும் அவித்துத் தெய்வ நிலையை அடைந்தவர்க்குப் பொருந்தும் என்றனர் சிலர். சமண சமய நம்பிக்கையின்படி ஐம்பொறிகளையும் ஐம்புலன்களையும் உடைய மனிதனாகப் பிறந்து மனிதனாக வளர்ந்து ஐம்புலன்களையும் அடக்கித் தவம் செய்து பிறவித் துன்பத்தை நீக்கி வீடுபேறு என்ற உயர்ந்த நிலையை அடைந்தவர் தெய்வமாகக் கருதப்படுவர்; அவர்தான் அருகக் கடவுள் என்றும் தீர்த்தங்கரர் என்றும் கூறப்படுபவர்; இவரைத்தான் பொறிவாயில் ஐந்தவித்தவன் என்று இக்குறள் கூறுகிறது என்பர் சமண சமயத்தைச் சார்ந்தோர். அதுபோலவே, புத்தரும் மனிதனாகப் பிறந்து வளர்ந்து தம்முடைய புலன்கள் ஐந்தையும் அவித்துப் போதி ஞானம் பெற்றுப் புத்த பதவியை அடைந்தவர். ஆகையால் ஐந்தவித்தான் என்பது புத்தரைக் குறித்தது என்பர் புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள்.
வள்ளுவர் எச்சமயத்தையும் உடம்பட்டவர் அல்லர். பொதுமை நூல் இயற்றியவர் சமயங்கள் தோன்றக் காரணமாக இருந்த சான்றோர்களை மனதில் நிறுத்தி கடவுள் வாழ்த்தில் கூறினார் என்பது ஏற்கக் கூடியதே அல்ல.
இறைவன் இல்லை, இறைநிலை பெற்றவர் இல்லை. பின் யார் இந்த ஐந்தவித்தான்? ஐந்தவித்தான் என்பதற்கு ஐம்புலன்களையும் அடக்கிஆளப் பக்குவப்பட்டவன் என்பது பொருள். ஐம்புலன்களை அடக்குவதற்கு அருகன், புத்தன் போன்ற மாமனிதர்களாகத்தாம் இருக்க வேண்டுமென்பதில்லை. ஐந்தடக்கல் மாந்தராகப் பிறந்த அனைவருக்கும் இயலக்கூடியதுதான். ஐந்தவித்தான் என்ற சொல் ஐந்தவித்த மாந்தர் குறித்தது.

பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்
'பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்' என்பது பாடலின் அடுத்த பகுதி. இது மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர் என்ற பொருள் தருவது.
பொய்தீர் என்ற சொல்லுக்குப் பொய்ம்மை நீங்கிய, பொய்யற்ற, அல்லது பொய்யில்லாத என்பது பொருள். அதாவது மெய்யான ஒழுக்க நெறியே பொய்தீர் ஒழுக்க நெறி. குறளின் சொல்லமைப்பு, ஒழுக்கநெறிகள் பல உள்ளன என்பதாகவும் அவற்றுள் மெய்யான ஒழுக்க நெறி எதுவென்பதைத் தெளிந்து, அந்நெறியில் நின்று ஒழுகுபவர் என்று சொல்வதுபோல் உள்ளது.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் என்றதைத் தெளிவுபடுத்தக் காலிங்கரது உரை உதவுகிறது. அவ்வுரை 'ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்கின்ற ஐம்பொறிகளை நுகர்வதற்கு வழிக்கருவியாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற ஐம்பொறிகளையும் அகத்தடக்கியவன் இறைவனது உபதேசமுறைமையாகின்ற நல்லொழுக்கத்தின் கண் வழிப்பட்டு நின்றவர்' என்கிறது. இவ்வுரையின்படி ஐந்தவித்தான் தனிச் சொல்லாகவும் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் தனியாகவும் அமைகின்றன. அதாவது 'ஐந்தவித்தான், இறைவனது ஒழுக்கநெறியின் வழுவாது நிற்பாராயின் அவர்கள் நீடுவாழ்வார்கள்' என்பது காலிங்கர் உரைக்கருத்து. ஐந்தவித்தான் மனிதரைக் குறிப்பது என்கிறார் காலிங்கர். இறைவன் என்றோ உபதேசம் என்றோ இக்குறளில் சொல்லாட்சிகள் இல்லை; அவை இவரது உரையில் வருவித்துத் தரப்பட்டவைதாம். ஆனாலும் காலிங்கர் உரையே இக்குறளுக்குத் திறவாக அமைகிறது. ஆனால் இங்கும் ஒரு தடை உண்டு. ஐந்தவித்தான் என்ற தொடர் ஒருமையையும், 'நின்றார்', 'வாழ்வார்' என்பன பலர்பாலும் உணர்த்துததால் இடர்ப்பாடு நேர்கிறது. காலிங்கர் உரைக்கு மேற்கண்டவாறு பொருள்கொள்வதற்குக் குறள் 'பொறிவாயில் 'ஐந்தவித்தார்' பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்' என இருத்தல் வேண்டும். ஆனால் செய்யுளோ பொறி வாயில் ஐந்தவித்தலை ஒருமையில் 'ஐந்தவித்தான்' என ஒருவர் செயலாகக் கூறுகிறது. இதற்குத் தண்டபாணி தேசிகர் 'ஐந்தவித்தான் ஆகி என ஆண்பால் எழுவாய், ஆகி என்ற வினைஎச்சத்தை ஏற்க, அங்ஙனம் அவித்த பலர் ஒழுக்கநெறி நின்றாராயின் நீடு வாழ்வார் எனச் சில சொல் வருவித்து முடிக்க இவ்விடர்ப்பாடு அகலும்' என்று இலக்கண அமைதி காணமுடியும்' எனச் சொல்லி 'ஐந்தவித்தானது ஒழுக்கநெறி நின்றார்' என்று கொள்ளாமல், 'ஐந்தவித்தான் ஆகி ஒழுக்கநெறி நின்றார்' என உரை கொள்ளலாம் என்வும் கூறுவார்.
எனவே காலிங்கர் உரை ஐந்தவித்தான் என்பது ஐந்தடக்கல் ஆற்றும் மனிதரைக் குறிக்கிறது எனவும் பொய்தீர் ஒழுக்க நெறி என்றது 'இறைவனது உபதேசமுறைமையாகின்ற நல்லொழுக்கம்' பற்றியது எனவும் அறியலாம். இவ்வுரையால் அதிகார இயைபு அமைந்ததோடு குறட்பொருளும் தெளிவு பெறுகிறது. பொய்தீர் ஒழுக்க நெறி என்பது வழிவழியாக உபதேசமுறையான் வருவது; அதுவே நல்லொழுக்கம் பேண உதவுவது; அது தவறுகட்கு இடந்தராதது என்று பின்வந்தவர்கள் காலிங்கர் உரையை வழிமொழிந்தனர்.
இனி, கடவுள் வாழ்த்தில் எஞ்சிய குறட்பாக்களெல்லாம் கடவுளின் குணங்களைக் குறிக்க, இக்குறள் மட்டும் மனிதர் பற்றிப் பேசுவது என்பது பொருந்துமா என்று கேள்வி எழுப்பினர். ஒழுக்க நெறியில் நிற்கும் மாந்தர் இறைவனது வழியில் நிற்கின்றார் என்பது குறள் கூற வரும் செய்தி ஆதலால் இங்கு கடவுள் ஏன் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்பது ஆராயப்பட வேண்டியதில்லை.

நீடு வாழ்வார்:
நீடு வாழ்வார் என்று சொல்லிப் பாடல் முடிகிறது. 'நீடு நிலமிசை வாழ்வார்' என்று இவ்வதிகாரத்து மற்றொரு குறளில் (3) கூறப்பட்டதால் இங்கு 'நீடுவாழ்வார்' என்பதற்கு மண்ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் நிலைத்து வாழ்வார் என்று பொருள் கூறினர்.
ஐம்பொறிகளையும் அகத்தடக்கி நன்னெறியில் ஒழுகுபவர் நீண்ட நாள் நன்கு வாழ்வர் என்கிறது இக்குறட்பா. கட்டுப்பாடுடைய இவர்கள் உடல் நலமும் உளநலமும் பெற்றவர்களாயிருப்பதால் நெடிய வாழ்வு கொள்வர் என்பதை மருத்துவ அறிவியல் உலகமும் உடன்பட்டுக் கூறும். இவர்கள் கவலை, பிணி, கட்டு, துயர் இன்றி நிலமிசை நீடு வாழ்வார்.

மக்கள் ஐந்தவித்தார் ஆகி ஒழுக்கநெறியின் நிற்பாராயின் நிலமிசை நீடுவாழ்வார் என்னும் உரையே இக்குறட்பாவிற்குச் சிறப்புடையதாகும். முற்குறட்பாக்களில் இறைவனை நினைத்தலும் புகழ்ந்தேத்துதலும் கடவுள் வாழ்த்தாகச் சொல்லப்பட்டன. ஒழுக்கநெறி நிற்றலும் கடவுள்வாழ்த்தாகும் என்பது இக்குறள் வழங்கும் நுண்ணிய கருத்து. இவ்வாறாக, நினைத்தல், வாழ்த்தல், ஒழுக்கநெறி நிற்றல் என்பன மனமொழிமெய்கள் என்னும் மூன்றன் செயல்களைக் கடவுள்வாழ்த்தாகக் குறள் குறிப்பனவாகின்றன.
'ஐந்தவித்தான்' என்பது பேராற்றலையும் ''ஒழுக்கநெறி'' என்பது ஆற்றலை நெறிப்படுத்தும் தூய்மையையும் ஒருங்கு கூட்டி நிற்பக் காண்மின்!! வினையாற்றலும் மனத்தூய்மையும் இக்குறட்கண் வள்ளுவர் உறுத்தும் பிரிவில் இறைக்கூறுகள் அல்லவா? இறைநெறியைப் பலர் உளறுமாப் போல அறிவுக்கு விளங்கா நெறியாக்காது, வாழ்வுக்குப் பின்னெறி யாக்காது, அறிவுநெறியாக, வாழ்க்கைச் செயல் நெறியாக, நன்றாகக் குறிக்கொண்மின் - ஒழுக்கநெறியாகக் காண்பது வள்ளுவ இறைமை. பல்வேறு ஒழுக்கத்துள்ளும் வாய்மை நெறியாக -பொய்தீர் நெறியாகத் துணிவது இறை வள்ளுவம்" என்று இக்குறளுக்குச் சிறந்த விளக்கவுரை தந்துள்ளார் வ சுப மாணிக்கம்.

'பொய்தீர் ஒழுக்க நெறி' குறிப்பது என்ன?

'பொய்தீர் ஒழுக்க நெறி' என்றால் என்ன? ''பொய்தீர் ஒழுக்க நெறி' என்ற தொடர் மெய்யான ஒழுக்கநெறி எனப்பொருள்படும். இத்தொடர்க்குக் 'கடவுளது நெறி, குற்றமற்ற ஒழுக்கநெறி, தவறுகட்கு இடங்கொடாத நெறி, யாங்கணும் பொய்ம்மையில்லாத வழி, 'பொய்த்தல் அறியாத ஒழுங்கான இயல்பை உணர்ந்து அடக்குகிறவர்கள்' என்று பலவாறாக உரை கூறினர். பெரும்பாலான உரையாசிரியர்கள் இத்தொடரின் முன்னால் வரும் ஐந்தவித்தான் என்ற சொல்லுக்கு இறைவன் என்று பொருள் கொண்டவர்கள். இவர்கள் இத்தொடரை அதனுடன் சேர்த்து வாசித்து 'பொய்தீர் ஒழுக்க நெறி' என்றதற்கு இறைவனது ஒழுக்க நெறி என்று பொருள் கூறினர். இக்குறளில் இறைவன் என்ற சொல் இல்லையென்றாலும், அது இறைவனது ஒழுக்க நெறியைக் குறிப்பது எனவே கொண்டனர். 'இறைவனது ஒழுக்க நெறி அல்லது இறைவன் கூறிய ஒழுக்க நெறி' என ஒன்று உள்ளதா? அப்படி ஒன்று இருந்தால் அதை எப்பொழுது யாருக்கு இறைவன் கூறினார்?

மெய்யான ஒழுக்கநெறியை விளக்கப் புகுந்த சில உரையாசிரியர்கள் அது இறைவனால் வகுப்பப்பெற்ற அல்லது இறைவனோடு தொடர்புடைய ஒழுக்கநெறி என்றனர். ஒழுக்கநெறி என்றதால் திருக்குறள் போன்ற அறநூல்களில் கூறப்பட்ட நெறியைக் குறிக்கலாம் என்றும் தொன்மக்கதைகளில் காணப்படும் இராமனாக வந்து நடந்து காட்டியருளிய ஒழுக்கநெறியாக இருக்கலாம் என்றும் கூறினர்.
'இறைவனது ஒழுக்க நெறி' என்றவர்கள் அதற்குச் சமயங்கள் கூறும் உபதேசங்கள் என்று பொருள் கூறி, அது சமய நூல்களான நான்குமறைகள் (வைதீகம்), பரமாகமம் (சமணம்) புத்தர் போதனைகள் போன்றவற்றில் சொல்லப்பட்ட ஒழுக்க அறிவுரையாகவும் இருக்கலாம் என்று கூறினர். வெவ்வேறு சமயங்கள் வெவ்வேறு நெறிகளை, இறைவன் பெயரால் அல்லது இறை தொடர்பானவற்றால் கூறி வருகின்றன. இவ்வாறு இறைவனோடு தொடர்புடைய ஒழுக்க நெறியைச் 'சமயம்' என்றும் 'மதம்' என்றும் 'கடவுள் நெறி' என்றும் அழைக்கின்றனர். இதையே குறள் பொய்தீர் ஒழுக்க நெறி என்கிறது என்பது இவர்கள் தரும் விளக்கம்.
இவ்வாறு அறநூல்களும் தொன்மங்களும் சமயங்களும் பலவகையான நெறிகளை வகுத்து வழங்குகின்றன. இன்னும் எவையெல்லாம் வழிவழியாக உபதேசமுறையான் வருவனவோ அவை அனைத்தும் ஒழுக்க நெறிகளாம். இவற்றுள்ளும் பொய்தீர் ஒழுக்க நெறி என்று தெளிவு பெற்றன எவை என அறிந்து அவற்றின்படி ஒழுக வேண்டும் என்கிறார் வள்ளுவர். 'பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண்', 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு' - இவற்றுள் எது மெய்யான உபதேச நெறி? 'பிறப்பாலேயே சிறப்பு', 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - இவற்றில் எது பொய்தீர் நெறி? என்பதை அறிந்து தெளிதல் வேண்டும் என அவர் உணர்த்துகிறார்.

கடவுளின் இருப்பில் நம்பிக்கை கொண்டு, உலகப் படைப்பின் உட்பொருளை உணர்ந்து ஒழுகும் வாழ்க்கை நெறியைக் 'கடவுள் நெறி' என்று பொதுவாகக் கூறுவது மரபு (க த திருநாவுக்கரசு). பொய்ம்மை தீர்த்த ஒழுக்கநெறியைக் கடைப்பிடித்து வாழ்தலும் கடவுள் வழிபாடுகளில் ஒன்று என்கிறது குறள்.

மக்கள் ஐந்தவித்தான் ஆகி பொய்யற்ற ஒழுக்கநெறியில் வழுவாது நிற்பாராயின் நீடுவாழ்வார் என்பது இக்குறள் கூறும் கருத்து.



அதிகார இயைபு

நல்லொழுக்கம் பேணுதலும் கடவுள் வாழ்த்துவகையில் ஒன்று.

பொழிப்பு

பொறிகளுக்கு வாயிலாகிய சுவை, ஒளி, ஓசை,ஊறு, நாற்றம், ஆகிய ஐந்தையும் பக்குவப்படுத்தியவன், மெய்யான ஒழுக்கநெறியில் நின்றார், நெடுநாள் வாழ்வர்.